மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன்

மீனாட்சி அம்மன், மீன் போன்ற கண்களை உடையவர் என்பதால், மீனாட்சி என்று பெயர் பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளை, தனது பார்வையாலேயே பொரியச்செய்து பின் பாதுகாப்பது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக் கிடப்பது போலவே. மீனாட்சி அம்மனும் கண்ணிமைக்காது உலகைக் காத்து வருகிறாள் இவருக்கு, மரகதவல்லி, தடாதகை, அபிராமவல்லி, பாண்டிப் பிராட்டி எனப் பல பெயர்கள் உள்ளன. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், ஒன்றான இத்தலத்தில், சுமங்கலியாக இருந்து அருள் புரிகிறார்..

மரகத்தினாலான ஆன திருமேனி உடைய அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில், இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாகக் காட்சி தருகிறார். அம்மன் கையில் உள்ள கிளி, பக்தர் அம்மனிடம் வைக்கும் கோரிக்கையைக் கேட்டு, அதை திரும்பத் திரும்ப அம்மனுக்குச் சொல்லி, பக்தர் துயர் களைய உதவுகிறதாம். இத்தலத்தில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்கே செய்யப்படுகின்றது. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, தன் கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்பதால், கணவர் எழுவதற்கு முன்னமே தன் அபிஷேகத்தை முடித்துத் தயாராகிறாள். இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும்.

அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலத்தை ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலத்தின் தாழம்பூ குங்குமப் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - புதுத்தாலி மாற்றிக் கொள்ளும் சுமங்கலிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்றாலும் 8,9,10 ஆம் நாட்களில் நடைபெறும் பட்டாபிஷேகம், திக்கு விஜயம், அதையடுத்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், இன்று (21.04.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும். திருமண மேடை ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, பல லட்சம் ருபாய் மதிப்புள்ள வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். இந்தத் திருக்கல்யாணத்தைக் காண திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய்பெருமாள் ஆகியோர் புறப்பட்டு வருவார்கள். வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் தூவப்படும். அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் போது புது தாலிச்சரடு மாற்றிக் கொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இப்படி ஒரு நடைமுறை, வேறு எந்த கோவில் திருவிழாவிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.

திருக்கல்யாணம் முடிந்தபின் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில், கோவிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள், மதுரைக்கு திரண்டு வருவார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை சிறப்பு

பொதுவாக கோவில்களில் நடக்கும் ஒவ்வொரு பூஜையும் சிறப்புக்குரியது. காலை பள்ளியறை பூஜை துவங்கி, இரவு பள்ளியறை பூஜை வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு பலன் உண்டு. ஆனால் அவற்றில் சகல நலன்களையும் பெற்று தருவதும், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியதுமான முக்கிய பூஜை, இரவு பள்ளியறை பூஜை ஆகும். மேலும், சிவன் கோவில்களில் நடக்கும் பள்ளியறை பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும். அதாவது சுவாமி, தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதியில் எழுந்தருளி, சிவ சக்தி ஐக்கியமாக நடத்தப்படுவது தான் இந்த பள்ளியறை பூஜை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினசரி நடைபெறும் பள்ளியறை பூஜையை காண்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும் . மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பள்ளியறை, அம்மன் சன்னிதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து இருப்பார்கள். இரவு பள்ளியறைக்கு சுந்தரேசுவரரின் வெள்ளி பாதுகைகள் சுவாமி சன்னிதியில் இருந்து பள்ளியறைக்கு வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி, அதாவது மூக்குத்தி தீபாராதனை நடைபெறுகிறது. அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும். அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும்போது மிகத் தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னிதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாகத் தள்ளப்பட்டு விடும். மூக்குத்தியானது ஒரு செயினு டன் இணைக்கப்பட்டு அந்த செயினில் இன்னொரு பகுதி அம்மனின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு செய்த பிறகு அன்னையின் சார்பாக பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதன்பின்னர் அம்பிகையின் சன்னிதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை , பால், பழங்கள், பாடல்கள், இசை என்று சகல உபச்சாரங்களுடன் இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பள்ளியறை பூஜையை காண முடியும்.

பள்ளியறை பூஜை தரிசன பலன்கள்

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும் கணவனின் நோய் தீரவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

அற்புதமான வாரிசுகளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமை அன்று நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசனம் செய்ய வேண்டும்.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், சண்டை நீங்கி சமாதானம் ஏற்படவும் ஞாயிறு அன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

பள்ளியறை பூஜைக்கு பால் வாங்கித் தருபவர்கள், நைவேத்தியம் செய்து தானம் கொடுப்பவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த பிள்ளைகள் பிறப்பார்கள். பல தலைமுறைக்கும் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும்.

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிகள் பங்கேற்று பசுவிற்கு பழங்கள் கொடுத்து வர சுகப்பிரசவம் ஏற்படும். நெய்வேத்திய பாலை தானும் குடித்து மற்றவர்களுக்கும் தானம் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

பள்ளியறை பூஜை முடிந்து அன்னதானம் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி அடையும். லாபம் பல மடங்கு கிடைக்கும்.

பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களின் கண் பிரச்னைகள் தீரும்.

பள்ளியறை பூஜையை தினமும் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஆடி முளைக்கொட்டு விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பனிரெண்டு மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும்.

உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் இருக்கும் அதிசயம் மதுரையில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.

'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பதால் விவசாயிகள், ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விளைநிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக்கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு விழா 20.7.2023 வியாழக்கிழமையன்று துவங்குகிறது. விழாவின்

முதல் நாள் -சிம்ம வாகனம்

2ம் நாள்- அன்ன வாகனம்

3ம் நாள்- காமதேனு வாகனம்

4ம் நாள்- யானை வாகனம்

5ம் நாள் -ரிஷப வாகனம்

6ம் நாள்- கிளி வாகனம்

7ம் நாள்- மாலை மாற்றுதல்

8ம் நாள் -குதிரை வாகனம்

9ம் நாள்- இந்திர விமானம்

10ம் நாள்- கனகதண்டியல் வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் பவனி வரும் மீனாட்சி அம்மன்

திருவிழாவின் ஆறாம் நாளன்று, கிளியை தனது கையில் வைத்திருக்கும் அன்னை மதுரை மீனாட்சி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பது விசேஷமான ஒன்று.

Read More
மதுரை மதனகோபாலசுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மதுரை மதனகோபாலசுவாமி கோவில்

சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த மதன கோபாலன்

மதுரை நகரத்தின் மேல மாசி வீதி - தெற்கு மாசி வீதி சந்திப்பில், 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மதனகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கூடல் அழகர் கோவிலுக்கும் இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கும் மிக அருகில் உள்ளது. இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர் மதனகோபால சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து, இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூபக் கண்ணனாகப் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர். மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.

தல வரலாறு

ஒரு முறை சிவபெருமான், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் சிவலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவபெருமான், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவபெருமானின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம், சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவபெருமான் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்' என்றார். மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவபெருமானையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.

ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரைத் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.

பிரார்த்தனை

இசைதுறையில் மேன்மையடைய விரும்புபவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.. இத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள நாக தேவி, ஹரிஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் இராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

Read More
திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்

பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம்

மதுரை – மேலூர் சாலையில், மதுரைக்கு வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருமோகூர். மூலவர் காளமேகப் பெருமாள். தாயாரின் திருநாமம் மோகனவல்லித் தாயார். கருவறையில் மூலவர் காளமேகப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில், உயரமான வடிவில் காட்சியருள்கிறார்.இங்குள்ள கருடன் பெரிய வடிவில் எழிலான தோற்றத்தில் காட்சி தருகின்றார்.

இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் இவரை வணங்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது. நரசிம்மரின் நான்கு கைகளிலும் நான்கு சக்கரங்கள் உள்ளன. சங்கு கிடையாது. சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, நோய்கள், வியாபார அபிவிருத்தி, செய்வினைக் கோளாறு, கடன் தொல்லை, வழக்குகள் என்று பல பிரச்சினைகளுக்கு சக்கரத்தாழ்வார் ஆறுதலும் தீர்வும் அளிக்கிறார்.

ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இத்தலம் நவகிரக தோஷங்களை போக்கக் கூடிய தலம். திருமோகூர் ராகு கேது தலமாகும். ராகு கேதுவால் உண்டாகும் தோஷங்களுக்கு திருமோகூர் பரிகார தலமாக விளங்குகிறது.

Read More
கள்ளழகர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கள்ளழகர் கோவில்

மதுரை சித்திரை திருவிழா - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்

மதுரை சித்திரை திருவிழாவில், சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளழகரை காண பல லட்சம் மக்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள்.

16ஆம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார் சென்று அங்கே அலங்காரம் செய்து கொண்டு தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாராம். சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தாராம். மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினாராம் திருமலை நாயக்கர். தங்கை மீனாட்சி கல்யாணத்தைக் காண சீர்வரிசைகளுடன் மதுரைக்கு புறப்பட்டு வரும் அழகர், மீனாட்சி திருமணம் நடந்து முடிந்து விட்டதால் சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கி பின்னர் தன் கோவிலுக்கு திரும்பி விடுவதாக வழக்கம்.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக உடுத்தும் ஆடைகள், அணியும் தங்க நகைகள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வெள்ளை மற்றும் நீலப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் பேரழிவு ஏற்படும் என்கின்றனர். அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காதாம். பச்சைப்பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிக்க நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு, 05.05.2023 வெள்ளிக்கிழமையன்று தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகரை குளிர்வித்திடும் தீர்த்தவாரி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி அம்மன் திக்விஜயம்

மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக ஐதீகம். மதுரை சித்திரை திருவிழாவில் எட்டாவது நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. மறுநாள், ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மனின் திக்விஜயம் நடைபெறுகிறது. பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் "மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் கிடையாது.

பட்டாபிஷேகதிற்குப் பிறகு, மீனாட்சி அம்மன் மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார். கையில் வில்லும் அம்பும் ஏந்தி, பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார். பல நாடுகளையும் தனது குடையின் கீழ் கொண்டு வந்தார். திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வென்றாள். பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.

இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திக்விஜயம் 01.05.2023 திங்கட்கிழமையன்றும், மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 02.05.2023 செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறுகிறது.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

பக்தனுக்காக மடப்பள்ளியில் சமையல் செய்த மீனாட்சி அம்மன்

மிகவும் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில், இறைவன் சொக்கநாதரும் அன்னை மீனாட்சியும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் குறித்த செய்திகள் பலவும், புராணங்களிலும் வரலாற்றிலும் காணப்படுகின்றன. மதுரை நகரைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாவம்சம் என்ற நூலிலும் மதுரை பற்றிய தகவல் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ரோமாபுரியை ஆண்ட அகஸ்டசிடம் தம் தூதரை அனுப்பிய வரலாறு உள்ளது.

அன்னை மீனாட்சியால் நடந்த அற்புதங்கள் ஏராளம். அந்த அற்புத நிகழ்வுகளுக்குச் சான்றாக இப்போதும் பல பொருள்கள், இடங்கள் உள்ளன. அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நலமளிக்கும் தெய்வமாகவே அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார். தன் பக்தனுக்காக மீனாட்சி அம்மன் மடப்பள்ளியில் சமையல் செய்த அற்புத நிகழ்வை இப்பதிவில் காணலாம்.

ஒருகாலத்தில், மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளியில் ஸ்ரீநிவாசன் என்பவர் பணி புரிந்தார். மீனாட்சி அம்மன் மேல் தீவிர பக்தி கொண்டவர். அம்பிகைக்கு சமர்பிக்கப்படும் தினசரி நைவேத்திய உணவுகளை தயாரிப்பது அவர் வழக்கம். அன்னையின் அருளால், நைவேத்தியம் சமைப்பதைப் போலவே, அருந்தமிழில் கவிதை சமைக்கவும் திறன் பெற்றிருந்தார். அங்கயற்கண்ணியின் மீது அருந்தமிழில் பாடல்கள் இயற்றினார். ஒருநாள் இரவு உறங்கப்போவதற்கு முன் அவர், மறுநாள் அதிகாலையில் சமைக்க வேண்டியிருந்ததால், மீனாட்சி அம்மனை நோக்கி, 'என்னை சீக்கிரம் எழுப்பிவிடம்மா' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார். அயர்ந்து உறங்கிவிட்டார். உழைத்த களைப்பில் உறங்கும் குழந்தையை எழுப்ப எந்த அன்னைக்கு மனம் வரும்? ஸ்ரீநிவாசனை எழுப்பாமல், மீனாட்சி அம்மனே நைவேத்தியங்களை அவருக்கு பதிலாகச் சமைத்து வைத்தார். இரவில் சமைக்க வெளிச்சம் வேண்டுமல்லவா, அதற்காகத் தன் மூக்குத்தியை, கழற்றிவைத்தவள், உலகத்தவருக்கு ஸ்ரீநிவாசனின் பக்தியின் பெருமையை உணர்த்த அந்த மூக்குத்தியை தடயமாக அதை விட்டுப் போனாள்.

மறுநாள் காலையில் கோவில் சிப்பந்திகள் எழுப்பி விட்ட பிறகுதான் ஸ்ரீநிவாசன் எழுந்தார். தாம் பிரசாதங்கள் தயாரிக்காமல் உறங்கி விட்டோமே என்று பதைப்புடன் எழுந்தவருக்கு அங்கு பிரசாதங்கள் தயார் நிலையில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார்.

பின்னர் நைவேத்திய உணவு பொருட்கள் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு நெய்வேத்தியம் ஆனது. அதன் பின்னர் கற்பூர ஆரத்தி நடக்கும் போதுதான் அம்மனின் முகத்தில் மாணிக்க மூக்குத்தி இல்லாததைக் கண்டு கவலையும் பதட்டமும் அடைந்தார்கள். தொலைந்த மூக்குத்தியை தேடத் தொடங்கினார்கள். அப்போது அம்மன் சன்னதியில் ஒரு அசரீரி கேட்டது. 'யாரும் கவலைப்பட வேண்டாம். என் மகன் ஸ்ரீநிவாசன் உடல் அசதியால் என்னை எழுப்பச் சொல்லி விட்டு உறங்கச் சென்றான். அவனை காலையில் எழுப்பி விட நானே சென்றேன். அவன் அயர்ந்து உறங்குவதை கண்டு, அவனை எழுப்ப மனமில்லாமல் நான் மடப்பள்ளிக்குச் சென்றேன். மடப்பள்ளியில் வெளிச்சம் இல்லாததால் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் எனது நைவேத்தியங்களை நானே சமைத்தேன். குழந்தை உறங்குவதை கண்ட தாய் அவனை எழுப்புவாளோ? அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது. மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள். அங்கு எனது மூக்குத்தி இருக்கும்' என்று அசரீரி ஒலித்தது. மீனாட்சி அம்மனின் திருவிளையாடலை நினைத்து அங்கிருந்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

Read More
திருவாப்புடையார் கோவில்

திருவாப்புடையார் கோவில்

மர ஆப்பு சிவலிங்கமான அதிசயம்

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே செல்லூர் எஎன்னும் இடத்தில் , வைகைக் கரைக்கு அருகில் தேவாரத்தலமான திருவாப்புடையார். கோவில்  அமைந்திருக்கிறது. இறைவன் திருநாமம் திருவாப்புடையார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை.

சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தன்.  அவன் எப்போதும் சிவபூஜை செய்ந பின்தான் சாப்பிடுவான். ஒரு முறை அவன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் வெகு நேரம் வேட்டையாடியதால் களைப்படைந்து பசியால் வாடினான். மன்னனுடன் சென்ற அமைச்சர், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ' சிவபூஜை செய்த பின்பே உணவு  சாப்பிடுவேன்' என்று சொல்லி மறுத்து விட்டான்.

 அமைச்சர், மன்னன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ;அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்' என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது மர ஆப்பு என்று தெரிந்தது.

அதை நினைத்து வருந்திய மன்னன், 'இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்' என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்' என்றானது.

ஆற்று மணல் அன்னமாக மாறிய விநோதம்

இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று  தலபுராணம் கூறுகிறது.

சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்' என்கிற பெயர் ஏற்பட்டது..

இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சாற்றுவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என லிங்கத் திருமேனியை அலங்கரிப்பார்கள். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நமபிக்கை.

Read More