மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஆலயத் துளிகள் இணையதளத்தின் 1000வது நாள் பதிவு
வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுகுமார் & பல்லவி
மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை சிறப்பு
பொதுவாக கோவில்களில் நடக்கும் ஒவ்வொரு பூஜையும் சிறப்புக்குரியது. காலை பள்ளியறை பூஜை துவங்கி, இரவு பள்ளியறை பூஜை வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு பலன் உண்டு. ஆனால் அவற்றில் சகல நலன்களையும் பெற்று தருவதும், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியதுமான முக்கிய பூஜை, இரவு பள்ளியறை பூஜை ஆகும். மேலும், சிவன் கோவில்களில் நடக்கும் பள்ளியறை பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும். அதாவது சுவாமி, தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதியில் எழுந்தருளி, சிவ சக்தி ஐக்கியமாக நடத்தப்படுவது தான் இந்த பள்ளியறை பூஜை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினசரி நடைபெறும் பள்ளியறை பூஜையை காண்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும் . மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பள்ளியறை, அம்மன் சன்னிதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து இருப்பார்கள். இரவு பள்ளியறைக்கு சுந்தரேசுவரரின் வெள்ளி பாதுகைகள் சுவாமி சன்னிதியில் இருந்து பள்ளியறைக்கு வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி, அதாவது மூக்குத்தி தீபாராதனை நடைபெறுகிறது. அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும். அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும்போது மிகத் தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.
மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னிதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாகத் தள்ளப்பட்டு விடும். மூக்குத்தியானது ஒரு செயினு டன் இணைக்கப்பட்டு அந்த செயினில் இன்னொரு பகுதி அம்மனின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு செய்த பிறகு அன்னையின் சார்பாக பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதன்பின்னர் அம்பிகையின் சன்னிதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை , பால், பழங்கள், பாடல்கள், இசை என்று சகல உபச்சாரங்களுடன் இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பள்ளியறை பூஜையை காண முடியும்.
பள்ளியறை பூஜை தரிசன பலன்கள்
குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும் கணவனின் நோய் தீரவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.
அற்புதமான வாரிசுகளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமை அன்று நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசனம் செய்ய வேண்டும்.
பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், சண்டை நீங்கி சமாதானம் ஏற்படவும் ஞாயிறு அன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.
பள்ளியறை பூஜைக்கு பால் வாங்கித் தருபவர்கள், நைவேத்தியம் செய்து தானம் கொடுப்பவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த பிள்ளைகள் பிறப்பார்கள். பல தலைமுறைக்கும் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும்.
பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிகள் பங்கேற்று பசுவிற்கு பழங்கள் கொடுத்து வர சுகப்பிரசவம் ஏற்படும். நெய்வேத்திய பாலை தானும் குடித்து மற்றவர்களுக்கும் தானம் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
பள்ளியறை பூஜை முடிந்து அன்னதானம் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி அடையும். லாபம் பல மடங்கு கிடைக்கும்.
பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களின் கண் பிரச்னைகள் தீரும்.
பள்ளியறை பூஜையை தினமும் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும்.