திருவாப்புடையார் கோவில்

மர ஆப்பு  சிவலிங்கமான அதிசயம்

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே செல்லூர் எஎன்னும் இடத்தில் , வைகைக் கரைக்கு அருகில் தேவாரத்தலமான திருவாப்புடையார். கோவில்  அமைந்திருக்கிறது. இறைவன் திருநாமம் திருவாப்புடையார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை.

சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தன்.  அவன் எப்போதும் சிவபூஜை செய்ந பின்தான் சாப்பிடுவான். ஒரு முறை அவன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் வெகு நேரம் வேட்டையாடியதால் களைப்படைந்து பசியால் வாடினான். மன்னனுடன் சென்ற அமைச்சர், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ' சிவபூஜை செய்த பின்பே உணவு  சாப்பிடுவேன்' என்று சொல்லி மறுத்து விட்டான்.

 அமைச்சர், மன்னன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ;அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்' என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது மர ஆப்பு என்று தெரிந்தது.

அதை நினைத்து வருந்திய மன்னன், 'இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்' என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்' என்றானது.

ஆற்று மணல் அன்னமாக மாறிய விநோதம்

இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று  தலபுராணம் கூறுகிறது.

சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்' என்கிற பெயர் ஏற்பட்டது..

இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சாற்றுவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என லிங்கத் திருமேனியை அலங்கரிப்பார்கள். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நமபிக்கை.

 
Previous
Previous

தலத்தின் தனிச்சிறப்பு

Next
Next

பிரம்மபுரீஸ்வரர் கோவில்