மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி அம்மன் திக்விஜயம்

மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக ஐதீகம். மதுரை சித்திரை திருவிழாவில் எட்டாவது நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. மறுநாள், ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மனின் திக்விஜயம் நடைபெறுகிறது. பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் "மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் கிடையாது.

பட்டாபிஷேகதிற்குப் பிறகு, மீனாட்சி அம்மன் மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார். கையில் வில்லும் அம்பும் ஏந்தி, பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார். பல நாடுகளையும் தனது குடையின் கீழ் கொண்டு வந்தார். திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வென்றாள். பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.

இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திக்விஜயம் 01.05.2023 திங்கட்கிழமையன்றும், மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 02.05.2023 செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மன் திக்விஜயம் (2022)

Previous
Previous

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Next
Next

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்