மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
பக்தனுக்காக மடப்பள்ளியில் சமையல் செய்த மீனாட்சி அம்மன்
மிகவும் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில், இறைவன் சொக்கநாதரும் அன்னை மீனாட்சியும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் குறித்த செய்திகள் பலவும், புராணங்களிலும் வரலாற்றிலும் காணப்படுகின்றன. மதுரை நகரைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாவம்சம் என்ற நூலிலும் மதுரை பற்றிய தகவல் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ரோமாபுரியை ஆண்ட அகஸ்டசிடம் தம் தூதரை அனுப்பிய வரலாறு உள்ளது.
அன்னை மீனாட்சியால் நடந்த அற்புதங்கள் ஏராளம். அந்த அற்புத நிகழ்வுகளுக்குச் சான்றாக இப்போதும் பல பொருள்கள், இடங்கள் உள்ளன. அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நலமளிக்கும் தெய்வமாகவே அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார். தன் பக்தனுக்காக மீனாட்சி அம்மன் மடப்பள்ளியில் சமையல் செய்த அற்புத நிகழ்வை இப்பதிவில் காணலாம்.
ஒருகாலத்தில், மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளியில் ஸ்ரீநிவாசன் என்பவர் பணி புரிந்தார். மீனாட்சி அம்மன் மேல் தீவிர பக்தி கொண்டவர். அம்பிகைக்கு சமர்பிக்கப்படும் தினசரி நைவேத்திய உணவுகளை தயாரிப்பது அவர் வழக்கம். அன்னையின் அருளால், நைவேத்தியம் சமைப்பதைப் போலவே, அருந்தமிழில் கவிதை சமைக்கவும் திறன் பெற்றிருந்தார். அங்கயற்கண்ணியின் மீது அருந்தமிழில் பாடல்கள் இயற்றினார். ஒருநாள் இரவு உறங்கப் போவதற்கு முன் அவர், மறுநாள் அதிகாலையில் சமைக்க வேண்டியிருந்ததால், மீனாட்சி அம்மனை நோக்கி , 'என்னை சீக்கிரம் எழுப்பி விடம்மா' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார். அயர்ந்து உறங்கிவிட்டார். உழைத்த களைப்பில் உறங்கும் குழந்தையை எழுப்ப எந்த அன்னைக்கு மனம் வரும்? ஸ்ரீநிவாசனை எழுப்பாமல், மீனாட்சி அம்மனே நைவேத்தியங்களை அவருக்கு பதிலாகச் சமைத்து வைத்தார். இரவில் சமைக்க வெளிச்சம் வேண்டுமல்லவா, அதற்காகத் தன் மூக்குத்தியை, கழற்றிவைத்தவள், உலகத்தவருக்கு ஸ்ரீநிவாசனின் பக்தியின் பெருமையை உணர்த்த அந்த மூக்குத்தியை தடயமாக அதை மடப்பள்ளியில் விட்டுப் போனாள்.
மறுநாள் காலையில் கோவில் சிப்பந்திகள் எழுப்பி விட்ட பிறகுதான் ஸ்ரீநிவாசன் எழுந்தார். தாம் பிரசாதங்கள் தயாரிக்காமல் உறங்கி விட்டோமே என்று பதைப்புடன் எழுந்தவருக்கு அங்கு பிரசாதங்கள் தயார் நிலையில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார்.
பின்னர் நைவேத்திய உணவு பொருட்கள் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு நைவேத்தியம் ஆனது. அதன் பின்னர் கற்பூர ஆரத்தி நடக்கும் போதுதான் அம்மனின் முகத்தில் மாணிக்க மூக்குத்தி இல்லாததைக் கண்டு கவலையும் பதட்டமும் அடைந்தார்கள். தொலைந்த மூக்குத்தியை தேடத் தொடங்கினார்கள். அப்போது அம்மன் சன்னதியில் ஒரு அசரீரி கேட்டது. 'யாரும் கவலைப்பட வேண்டாம். என் மகன் ஸ்ரீநிவாசன் உடல் அசதியால் என்னை எழுப்பச் சொல்லி விட்டு உறங்கச் சென்றான். அவனை காலையில் எழுப்பி விட நானே சென்றேன். அவன் அயர்ந்து உறங்குவதை கண்டு, அவனை எழுப்ப மனமில்லாமல் நான் மடப்பள்ளிக்குச் சென்றேன். மடப்பள்ளியில் வெளிச்சம் இல்லாததால் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் எனது நைவேத்தியங்களை நானே சமைத்தேன். குழந்தை உறங்குவதை கண்ட தாய் அவனை எழுப்புவாளோ? அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது. மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள். அங்கு எனது மூக்குத்தி இருக்கும்' என்று அசரீரி ஒலித்தது. மீனாட்சி அம்மனின் திருவிளையாடலை நினைத்து அங்கிருந்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.