திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
பெருமாள் மீசையோடு காட்சி தரும் திவ்ய தேசம்
சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். கருவறையில் மூலவர் பார்த்தசாரதி பெருமாள், தன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் இந்தப் பெருமாள் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். ஒன்பது அடி உயரம் உள்ள இந்த பெருமாள், சாரதிக்குரிய மீசையோடு காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். அதற்கு காரணம் மகாபாரதப் போரின் தொடக்கத்தில், இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோவில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோவில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோவிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்.
சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் இருக்கும் அரிய காட்சி
சென்னை மண்ணடி பகுதியில், லிங்கி செட்டி தெருவில் அமைந்துள்ளது மல்லிகேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பாள். வட சென்னையில் உள்ள மிகப் பெரிய கோவில் கோபுரங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. 17 ஆம் நூற்றாண்டில், ஒரு சில பிரிட்டிஷ் நாளேடுகளிலும் இந்த கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
சோழ மன்னன் ஒருவன், இந்தப் பகுதியில் வேட்டையாடச் சென்றபோது, மல்லிகைப் புதர்கள் மண்டி இருந்ததாக தலபுராணம் கூறுகின்றது. களைகளை அகற்றி, மல்லிகைச் செடிகளைச் சுற்றி அழகான தோட்டம் அமைக்குமாறு அரசர் தனது வீரர்களுக்குக் கட்டளை இட்டார். இதைச் செய்யும்போது, மணலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் சிவலிங்கத்தைக்கண்டெடுத்தார்கள். எனவே இந்த இடத்திற்கு மண்-ஆதி என்று பெயர். மன்னன் உடனே லிங்கத்தைச் சுற்றி கோவில் கட்ட உத்தரவிட்டான். மல்லிகைப் புதர்களுக்கு மத்தியில் சிவலிங்கம் கிடைத்ததால். இறைவன் மல்லிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மல்லிகேஸ்வரர் கோவில், நம் முன்னோர்களின் கட்டிடக்கலை திறனுக்கு ஒரு உதாரணமாக திகழ்கின்றது. கோவில் கோபுரம் கலைநயம் மிக்கது. வளாகத்திற்குள் நுழைந்தவுடன், சிறிய சிற்பங்கள் நிறைந்த தூண்களுடன் கூடிய மண்டபத்தைக் காணலாம். .பொதுவாக சிவாலயங்களில்சிவாலயங்களில் நவக்கிரகங்கள் தனியாகத் தான் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலின் நவக்கிரக சன்னதி தனித்துவமானது. ஒன்பது நவக்கிரகங்களும், அவர்களின் வாகனங்களுடனும், சூரிய பகவான் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் அமர்ந்தும் காட்சி தருகிறார்கள். நவக்கிரக சிலைகள் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோவில் ஒன்பது பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
செந்தூர்புரம் வடசெந்தூர் முருகன் கோவில்
வடக்குத் திருச்செந்தூர் என்று போற்றப்படும் முருகன் தலம்
சென்னை-பூந்தமல்லி சாலையில் காட்டுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே அரை கி.மீ. தொலைவில் உள்ளது செந்தூர்புரம். திருச்செந்தூரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் அவன் அருள் கிடைக்க எண்ணிய பக்தர்கள் காஞ்சி முனிவரிடம் சென்று தம் எண்ணத்தைத் தெரிவித்தனர். “நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் திருச்செந்தூர் செந்திலாண்டவனை தாராளமாக பிரதிஷ்டை செய்யலாம்” என்று அவர் அருளாசி வழங்கினார். கூடவே, சுமார் 6 அடி உயரமுள்ள அழகான முருகன் சிலையை வைக்க ஏற்பாடும் செய்து கொடுத்து, இத்தலத்தின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்றும் ஆலோசனையும் தெரிவித்தார். அவருடைய அறிவுரைப்படி, இந்தக் கோவில் அமைந்தது. கருவறையில் மூலவர் வடசெந்தூர் முருகன் ஆறடி உயர திருமேனியுடன் வலது கையில் வஜ்ரம், இடது கையில் ஜபமாலை மற்றும் அபய வரதக் கரங்களோடு அருட்பாலிக்கிறார். மூலவருக்கு கிருத்திகை அன்று ராஜ அலங்கார உடையும், சஷ்டி நாளில் சந்தன அலங்காரமும் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயம் உருவாகுவதற்கு முன் பல அதிசய நிகழ்வுகள் இத்தளத்தில் நிகழ்ந்தன. இந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்ற ஒரு பெண்மணி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருசமயம் இவ்வழியே சென்ற அவள், வழியில் ஆறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டாள். ஒரு குழந்தை அவளிடம் வந்து வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்தது. அதை வியப்பு கலந்த அன்போடு பெற்றுக்கொண்ட அந்தப் பெண், அதில் பாதியைத் தான் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்தக் குழந்தைக்கே கொடுத்துவிட்டாள். பிறகு அந்த ஆண் குழந்தையை ஆசையோடு முத்த மிட்டு, 'எங்கள் வீட்டுக்கு வருகிறாயா?' என்று கேட்டாள். 'நிச்சயமா ஒருநாள் உங்கள் மகனாகவே வருவேன்' என்றதாம் அந்தக் குழந்தை.. குழந்தை பேறில்லாத அவள் கண்களில் நீர் பெருகிட அந்தக் குழந்தையை அள்ளி உச்சி முகர்ந்தாள். பிறகு அந்த இடத்தைவிட்டுச் செல்ல அவள் முயன்றபோது அவளுடைய புடவை ஒரு முள் செடியில் சிக்கியது. அதை விடுவித்துவிட்டு திரும்பினால், அந்தக் குழந்தைகளை காணவில்லை. இந்த அதிசயத்தை அவள் ஊர்ப் பெரியோர்களிடம் தெரிவித்தாள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் தனக்காக ஒரு வீடு கட்டும் பணி தொடங்கிய போது, அங்கே முருகன் சந்நதி அமையப் போகிறது என்ற அசரீரி உத்தரவும் அவளுக்கு கிடைத்தது.
பிரார்த்தனை
முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதிரிகள் எளிதாக விலகுவர். ஞாயிற்றுக்கிழமைகளில் 'வித்யாசர்வண பிரார்த்தனை' நடைபெறுகிறது. தங்கள் பிள்ளைகள் கல்வியில் உயர்வடைய வேண்டுமென்று எண்ணும் பக்தர்கள் இந்த வித்யாசர்வண பூஜையில் கலந்து கொண்டு பஞ்சாமிர்த பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள்.
சௌகார்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெண் கருடனும், பெண் குரங்கும் தாயாருக்கு வாகனங்களாக விளங்கும் சிறப்பு
சென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெருவில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். திருப்பதி ஏழுமலையானை நினைவுபடுத்தும் வெங்கடேச பெருமாளே இங்கு மூலவர். அருகில் தனிச் சந்நிதியில் அலர்மேல்மங்கை தாயார்.
சுமார் 420 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோவிலில், ராமர்தான் மூலவராக இருந்தார். லால்தாஸ் என்ற ஒரு சந்நியாசி, லாகூரில் இருந்து கி.பி.1,800-ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். வட மாநிலங்களில் இருந்து யாத்திரை வரும் பக்தர்கள் வசதிக்காக ஒரு மடம் கட்டினார். பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் முறையான வசதிகளை ஏற்படுத்தினார். பிறகு இந்த இடத்தை விட்டுச் செல்ல மனமின்றி, இவரும் இங்கேயே தங்கி இறைப் பணியில் ஈடுபடலானார். பின்பு பெருமாளின் திருவுளப்படி, வெங்கடேச பெருமாளுக்கும், அலர்மேல்மங்கை தாயாருக்கும் சன்னதிகள் அமைத்தார். 'பைராகி' என்றால் சந்நியாசி என்று அர்த்தம். சந்நியாசி லால்தாஸ் அமைத்த கோவில் என்பதால் இக்கோவிலுக்கு 'பைராகி மடம்' என்ற பெயரும் உண்டு.
மூலவர் வெங்கடேச பெருமாளின் உயரம் சுமார் ஆறரை அடி. திருமலை திருப்பதியில் அமைந்துள்ள பெருமாளின் கோலத்தை நினைவுபடுத்தும் அதே அமைப்பு. பரந்து விரிந்த திருமார்பு. அதில் உறையும் சொர்ண லட்சுமி. சங்கு- சக்கரதாரி. திருப்பதியில் நடப்பது போலவே அனைத்து உற்சவங்களும் இங்கு நடந்து வருகின்றன. திருச்சானூரில் நடக்கும் உற்சவங்கள் இங்கே தாயாருக்கும் நடந்து வருகின்றன. அவற்றுள், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பஞ்சமி தீர்த்த உற்சவம் விசேடம். உற்சவ காலத்தில் தாயாருக்கான கருட வாகனம் பெண் சொரூபமாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விசேடமாகும். சாதாரணமாக கருட வாகனம் என்றால், பிற கோவில்களில் மீசை முறுக்கிய கோலம், திரண்ட தோள்கள் போன்றவற்றுடன் கூடிய கருட வாகனம் இருக்கும். ஆனால் அத்தகைய ஆண் கருட வாகனம் இங்கு தாயாருக்கு இல்லை. கருடனின் மணைவியான கருடி எனப் பெயர் பெற்ற, காதணி, மூக்கணி, புடவை அணிந்த கோலத்தில் உள்ள பெண் கருட வாகனத்தில், தாயாரின் புறப்பாடு நடக்கும். தாயாருக்கான அனுமந்த உற்சவத்தின்போதும் பெண் குரங்கு வாகனத்தில்தான் புறப்பாடு நடக்கும். இப்படி தாயாருக்கான வாகனங்களில் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் பெண் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
சென்னை கந்தசாமி கோவில்
வேத மந்திரங்களால் முருகன் விக்கிரகத்தை சீர் செய்த அற்புதம்
சென்னை பாரிமுனைப் பகுதியிலுள்ள ராசப்ப தெருவில் அமைந்ததுள்ளது, சுமார் 450 ஆண்டுகள் பழமையான கந்தசாமி கோவில். மூலவர் கந்தசாமி. உற்சவர் முத்துக் குமாரசுவாமி. சிதம்பர சுவாமி , பாம்பன் குமரகுரு பரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிய தலம்.
தல வரலாறு
வேளூர் மாரிச்செட்டியார்,பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற முருக பக்தரகள், ஒவ்வொரு கிருத்திகையன்றும, சென்னையிலிருந்து திருப்போரூக்கு நடைப் பயணமாகச் சென்று திருப்போரூர் கந்தசாமியை வழிபடும் வழக்கம் உடையவர்கள். அப்படி ஒரு சமயம், 1673ம் ஆண்டு மார்கழி மாதம் கிருத்திகையன்று, திருப்போரூர் கந்தசாமியை வணங்கி விட்டு சென்னை திரும்பும் வழியில், செங்கண்மால் ஈசுவரன் கோவில் என்ற இடத்தில் அசதியில் படுத்து உறங்கி விட்டார்கள். அப்போது அவர்கள் இருவர் கனவிலும் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள், இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப் பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஒரு போலவே கனவு வந்தபடியால்,வந்து சொன்னது முருகனே என்று மகிழ்ந்தார்கள். சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள் அருகில் முருகன் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும்வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்திலேயே முருகருக்கு கோவில் கட்டினார்கள்.
சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.
உற்சவர் முத்துக் குமாரசுவாமி
ஒரு சமயம் , முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கோயிலுக்கு உற்சவ விக்கிரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர் . சிற்ப சாஸ்திரத்தில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரைத் தேர்வு செய்தனர் . சிற்பியிடம், உற்சவ முருகனாகப் பஞ்சலோகத்தில் விக்கிரகம் ஒன்றை வார்த்துக் தரும்படி ஒப்படைத்தனர் . சிற்பியும் புடம் போட்டு எடுத்தபின், வார்ப்படத்தைப் பிரித்தபோது விக்கிரகம் 'மினு மினு' வென மின்னியது . அதன் ஒளிச் சிதறல்கள் கண்களை கூசச் செய்தது . ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள் போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் அனைவருமாகச் சேர்ந்து சிற்பியிடம், சிற்பம் நல்லா வந்திருக்கிறது ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.
சிற்பியும், சரி! துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்கிரகத்தைத் தொட்டார் . அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாங்கியவர் போல் தூரப்போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பியை தூக்கி வைத்து ஆசுவாசப்படுத்தி, என்ன ஆயிற்று ஐயா என்றனர். சிற்பியோ, என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது என வாய் குழறி குழறிக் கூறினார் . இந்த விக்கிரகம் நீறு பூத்த அனலாக இருக்கிறது. இதைச் சுத்தம் செய்யும் தகுதியோ, சக்தியோ எனக்கில்லை என்றார். என்னால் முடியாது என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.அந்த விக்கிரகத்தை தீண்டப்பயந்து வழிப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பாக வைத்துப் பூட்டி விட்டனர் . இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.
ஒருநாள் காசியிலிருந்து சாம்பையர் எனும் துறவி கந்தக்கோட்டம் வந்தார். அவர் மூலவரை தரிசித்து முடித்தவுடன் உற்சவர் எங்கே என்று விசாரித்தார். அவருக்கு உற்சவர் இருந்த பெட்டியை காண்பித்தனர். கொஞ்ச நேரம் அந்த விக்கிரகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாம்பையர், மயக்கம் போட்டு விழுந்தார். பிறகு எழுந்தவர் சந்தோஷத்தில், மூலவருக்கு எவ்வளவு சான்னித்தியம் உள்ளதோ, அதே சாந்நித்தியம் இந்த உற்சவர் சிலைக்கும் உள்ளது என்று சொன்னார். இப்படி அமைவது மிக மிக அபூர்வம் என்றார். ஆத்ம சக்தியினால் மட்டுமே இந்த உற்சவரை சுத்தம் செய்யமுடியும். எந்த கருவிகளாலும் சுத்தம் செய்ய முடியாது என்றார். அவரே சிலையின் முன் அமர்ந்து வேத மந்திரங்களை சொல்லி அந்த சிலையை சுத்தம் செய்தார். அவர் உற்சவர் திருமேனியில் இருந்த பிசிறுகளையெல்லாம் நீக்கினார். ஆனால் முகத்தில் இருந்த பிசிறுகளை நீக்க முடியவல்லை. இன்று நாம் உற்சவராக தரிசிப்பது இந்த பொன்னிற முருகனைத்தான். ஆனால் முகத்தில் மட்டும் பிசிறுகள் இருக்கும்.
காளிகாம்பாள் கோவில்
வாழ்வில் உயர்வு தரும் காளிகாம்பாள் குங்குமப்பிரசாதம்
சென்னை பாரிமுனை பகுதியில் தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோவில். 3000 ஆண்டு பழமையான இக்கோவில் முதலில் கடற்கரைக்கருகில் இருந்ததாகவும் பின்னர் 1639-ம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டதாகவும் கோவில் வரலாறு சொல்கின்றது. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமானவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காளி அம்மன் எப்போதும் உக்கிரமாகக் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன், ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்னை காளிகாம்பாளை வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள். அது போல காளிகாம்பாள் கோவிலில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்
குழந்தை பாக்கியம் தரும் மஞ்சள் அபிஷேகம்
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் காளிகாம்பாளுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும். காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வீர சிவாஜி தரிசித்த காளிகாம்பாள்
3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வ்ந்து அம்மனை தரிசனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றிய போது இந்த காளியை வந்து மனமுருகி வழிபட்டு நிறைய காளியை போற்றும் கவிகளை இயற்றினார். அவர் பாடிய 'யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய் காளி!' என்ற பாடலில் வருவது அம்மன் காளிகாம்பாள்தான்.
400 ஆண்டு சரித்திரச் சிறப்பு வாய்ந்த வெண்கலக் கிண்ணித் தேர்
இத்தலத்தில் பூந்தேர், வெண்கலக் கிண்ணித் தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்தியாவிலேயே இக்கோவில் வெண்கலக் கிண்ணித் தேர்தான் மிகப் பெரியது. இந்த வெண்கலக் கிண்ணித் தேரோட்டம் 400 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோவிலில் நடைப் பெற்று வருகிறது. பல ஆங்கிலேய கலெக்டர்கள் இத்தேரின் வடம் பிடித்திருக்கின்றனர்.இத்தேர் ஓடும்போது வெண்கலத் தட்டுக்கள் எழுப்பும் ஒலி ஆங்கிலேயர்களை மயக்கியது. நமமூர் மக்கள் பரவசமடைந்தனர்.
கரிவரதராஜ பெருமாள் கோவில்
"தேன் உண்ட பெருமாள்
சென்னை பாரிமுனையில் இருந்து 17 கி.மீ., தொலைவில் மாதவரம் உள்ளது.இங்குள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்.நாம் உணவு உண்ணும்போது ஜனார்த்தனன் என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது பத்மநாபன் என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்ல நேரிட்டால் நரசிம்மன் திருநாமத்தையும், மலையேறும்போது ரகுநந்தன் என்னும் திருநாமத்தையும் உச்சரித்துச் சொல்வது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது மாதவபுரம் என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம் செய்து வரம் பெற்ற தலம் என்பதால், ‘மகாதவபுரம்’ என்று பெயர் பெற்று, அதுவே நாளடைவில் மருவி ‘மாதவரம்’ என்றாயிற்று.மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். திருமலையில் எழுந்தருளி வரும் திருவேங்கடமுடையான் போல், இடக்கரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், ‘வேங்கடவரதன்’ எனவும் வழங்கப்படுகிறார்.ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாயருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக் கொண்டாராம். இதனால் இவருக்கு தேன் உண்ட பெருமாள் என்ற பெயரும் உண்டு.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமான் சிவபூஜை செய்த தலம்
சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. 84 படிகள் கொண்ட குன்றின் மீது சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது.முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் 'கந்தழீஸ்வரர்' என்ற பெயரில், தனிக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் என்ற வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் இருக்கிறது.திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
கந்தசாமி கோவில்
பாஸ்போர்ட், விசா பெற ஏற்படும் தடைகளை தகர்க்கும் முருகப்பெருமான்
திருப்போரூர் கந்தசாமி கோயில் முருகன் சந்நிதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.
கந்தசாமி கோயில்
ஓம்கார அமைப்பில் அமைந்த திருப்புகழ் தலம்
சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூர் கந்தசாமி கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இக்கோவில் ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். அதனால்,சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது, சந்நிதியில் இருந்து நாம் பார்த்தால், நமக்கு முன்னே சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்பவர்களைப் பார்க்கமுடியாதபடி நுட்பமாக அமைக்கப்பட்டு உள்ளது.
ரவீஸ்வரர் கோயில்
சூரிய ஒளிக்கதிர்கள் மூன்று வேளையும் சிவலிங்கத்தை தழுவும் ஆலயம்
சென்னை வியாசர்பாடியிலுள்ள ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ரவீஸ்வரர் ஆலயத்தில், காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தைத் தழுவும். சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது மாலை போல விழுகின்றன.
கந்தசாமி கோயில்
முருகப்பெருமான் அசுரர்களோடு வான்வெளியில் போரிட்ட தலம்
முருகப்பெருமான் அசுரர்களோடு நடத்திய போர் தரைவழி, கடல்வழி, வான்வெளி என்ற மூன்று நிலைகளிலும் நடந்தது..இதில் தரைவழிப் போர் திருப்பரங்குன்றத்திலும், கடல்வழிப் போர் திருச்செந்தூரிலும் நடைப்பெற்றது. வான்வெளிப் போர் நிகழ்ந்த தலம்தான் திருப்போரூர். போர் நடந்ததால் இத்தலத்திற்கு திருப்போரூர் (திரு + போர் + ஊர்) என்ற பெயர் வந்தது. கந்த சஷ்டி கவசத்தில் வரும் 'சமராபுரி வாழ் சண்முகத்தரசே' என்று வரும் வரிகளிலுள்ள (சமர் என்றால் போர், புரி என்றால் ஊர் என்று அர்த்தம்) சமராபுரி என்னும் சொல் இத்தலத்தையே குறிக்கின்றது.
பார்த்தசாரதி கோவில்
குடும்பத்துடன் கிருஷ்ணர் காட்சி தரும் திவ்ய தேசம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில்,மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர்.இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள்.வலப்புறத்தில் அண்ணன் பலராமர்,இடதுபுறத்தில் தம்பி சாத்யகி,மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.
காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில்,நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது.மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.
கந்தசாமி கோயில்
திருப்போரூர் ஆலயத்தின் வித்தியாசமான கொடி மர அமைப்பு
ஆலயங்களில் கொடி மரம் பொதுவாக கோபுரத்தைக் கடந்த பின்தான் அமைந்திருக்கும். ஆனால் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் வித்தியாசமாக,கொடி மரம் கோபுரத்திற்கு முன்னதாக அமைந்துள்ளது.
கபாலீசுவரர் கோயில்
இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்
பொதுவாக ஆலயங்களில் ஒரு கொடிமரம்தான் இருக்கும்.ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில்,சுவாமி சன்னதிக்கு எதிராக ஒரு கொடிமரமும் சிங்காரவேலர் சன்னதிக்கு எதிராக மற்றொரு கொடிமரமும் என இரண்டு கொடிமரங்கள் அமைந்துள்ளன.