சௌகார்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெண் கருடனும், பெண் குரங்கும் தாயாருக்கு வாகனங்களாக விளங்கும் சிறப்பு
சென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெருவில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். திருப்பதி ஏழுமலையானை நினைவுபடுத்தும் வெங்கடேச பெருமாளே இங்கு மூலவர். அருகில் தனிச் சந்நிதியில் அலர்மேல்மங்கை தாயார்.
சுமார் 420 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோவிலில், ராமர்தான் மூலவராக இருந்தார். லால்தாஸ் என்ற ஒரு சந்நியாசி, லாகூரில் இருந்து கி.பி.1,800-ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். வட மாநிலங்களில் இருந்து யாத்திரை வரும் பக்தர்கள் வசதிக்காக ஒரு மடம் கட்டினார். பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் முறையான வசதிகளை ஏற்படுத்தினார். பிறகு இந்த இடத்தை விட்டுச் செல்ல மனமின்றி, இவரும் இங்கேயே தங்கி இறைப் பணியில் ஈடுபடலானார். பின்பு பெருமாளின் திருவுளப்படி, வெங்கடேச பெருமாளுக்கும், அலர்மேல்மங்கை தாயாருக்கும் சன்னதிகள் அமைத்தார். 'பைராகி' என்றால் சந்நியாசி என்று அர்த்தம். சந்நியாசி லால்தாஸ் அமைத்த கோவில் என்பதால் இக்கோவிலுக்கு 'பைராகி மடம்' என்ற பெயரும் உண்டு.
மூலவர் வெங்கடேச பெருமாளின் உயரம் சுமார் ஆறரை அடி. திருமலை திருப்பதியில் அமைந்துள்ள பெருமாளின் கோலத்தை நினைவுபடுத்தும் அதே அமைப்பு. பரந்து விரிந்த திருமார்பு. அதில் உறையும் சொர்ண லட்சுமி. சங்கு- சக்கரதாரி. திருப்பதியில் நடப்பது போலவே அனைத்து உற்சவங்களும் இங்கு நடந்து வருகின்றன. திருச்சானூரில் நடக்கும் உற்சவங்கள் இங்கே தாயாருக்கும் நடந்து வருகின்றன. அவற்றுள், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பஞ்சமி தீர்த்த உற்சவம் விசேடம். உற்சவ காலத்தில் தாயாருக்கான கருட வாகனம் பெண் சொரூபமாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விசேடமாகும். சாதாரணமாக கருட வாகனம் என்றால், பிற கோவில்களில் மீசை முறுக்கிய கோலம், திரண்ட தோள்கள் போன்றவற்றுடன் கூடிய கருட வாகனம் இருக்கும். ஆனால் அத்தகைய ஆண் கருட வாகனம் இங்கு தாயாருக்கு இல்லை. கருடனின் மணைவியான கருடி எனப் பெயர் பெற்ற, காதணி, மூக்கணி, புடவை அணிந்த கோலத்தில் உள்ள பெண் கருட வாகனத்தில், தாயாரின் புறப்பாடு நடக்கும். தாயாருக்கான அனுமந்த உற்சவத்தின்போதும் பெண் குரங்கு வாகனத்தில்தான் புறப்பாடு நடக்கும். இப்படி தாயாருக்கான வாகனங்களில் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் பெண் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.