சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமான் சிவபூஜை செய்த தலம்

சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

84 படிகள் கொண்ட குன்றின் மீது சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது.
முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் 'கந்தழீஸ்வரர்' என்ற பெயரில், தனிக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.

இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் என்ற வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர்.

பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் இருக்கிறது.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

 
Previous
Previous

சுந்தரேசுவரர் கோயில்

Next
Next

நீர் வண்ணப் பெருமாள் கோவில்