திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்

நரசிம்மரின் மடியில், அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கும் மகாலட்சுமி தாயாரின் அபூர்வத் தோற்றம்

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அமைந்துள்ளது ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில். திருவரங்கம் தலத்துடன் தொடர்புடைய நரசிம்ம தலங்கள் மூன்று ஆகும். அவை காவேரியின் வடகரையில் அமைந்துள்ள காட்டழகிய சிங்கர், காவேரி தென் கரையில் அமைந்துள்ள ஆற்றழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர் ஆகும். ஆற்றழகிய சிங்கர் ஆற்றின் கரையில் இருந்ததால், காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர் என்ற பெயர் வழங்கி நிலைத்தது. எந்தவகையான வெள்ளம் வந்தாலும் காப்பாற்றி கரை சேர்க்கும் ஒரே தெய்வமாக, ஆற்றழகிய சிங்கர் இருக்கிறார். ஆதலால், காவிரிக் ஆற்றைக் கடந்து செல்பவர்களும், வருபவர்களும் அவரை வணங்கி விட்டுச் செல்லுவதும், பலன் பெறுவதும் பழக்கத்தில் இருந்தது.

கருவறையில் மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப்பெருமாள் தன் மடியினில் மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டு, லட்சுமி நரசிம்மராக 'ஆற்றழகிய சிங்கர்' என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். மகாலட்சுமி தாயார் கை கூப்பி, அஞ்சலி ஹஸ்தத்துடன் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.

மகாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இந்த தலமானது பிரார்த்தனை தலமாகக் கருதப்படுகிறது, வைணவ சமயத்தின்படி தாயாரை வணங்கியப் பிறகு, பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். இதில் தாயாரின் பணியாக கூறப்படுவது என்னவென்றால், பக்தர்களின் குறைகளை திருமாலிடம் எடுத்து கூறுவதே ஆகும். ஆதலால், அந்த பரிபூர்ணமான கைங்கர்யம், இந்த தலத்தில் மகாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் செய்து வருவதால், பக்தர்கள் பெருமாளிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை

இத்தலத்தில், திருமணத்தடை நீங்க சனிக்கிழமை 5 வாரம் ஜாதகத்தை வைத்து பூஜையும், வேலை, லட்சுமி கடாட்சம் கிட்டவும், கடன் சுமை நீங்க, குடும்ப ஒற்றுமை, மக்கட்பேறு, வியாபார அபிவிருத்தி போன்றவற்றிற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தகவல் உதவி : திரு. கமலக்கண்ணன், ஆலய பட்டர்

 
Previous
Previous

ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில்

Next
Next

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்