கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்
மூன்று கால்கள் மட்டுமே உள்ள அபூர்வ நந்தி
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தாயம்மை. கொல்லிமலை, நாமக்கல்லில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கொல்லிமலைக்குப் போய் வர, அதிகக் கொண்டையூசி வளைவுகள் கொண்ட மலைப் பாதை உள்ளது.
திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் இது. கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார்.
கொல்லிமலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி எனும் மன்னன் ஆண்ட பகுதியாகும். மூலிகை பொருட்களுக்கு பெயர் போன கொல்லிமலையில் நிறைய மர்மமான விஷயங்கள் இருப்பதாகவும், இம்மலையில் சித்தர்கள் குகைகளில் தங்கித் தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இக்கோவில் நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உள்ளன. இவருக்கு பின்புற வலது கால் கிடையாது. இது பற்றி ஒரு புராணக் கதை உள்ளது. இந்த நந்தி, இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ் சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச் செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்கு சென்றது. இதனை அறிந்த காவலர்கள், நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து நந்தி அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி. விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக் காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.
சிவராத்திரியின் போதும், பிரதோஷ காலத்தின் போதும் இந்த நந்தீஸ்வரரை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோவில்
பூவை விழுங்கும் விநாயகர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இறைவன்
திருநாமம் புராதனவனேசுவரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.
இக்கோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியை வலம் வரும் இடத்தில், பூவிழுங்கி விநாயகர் என்ற பெயரில் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார்.
அம்மன் சன்னதியை வலம் வருவோர் இவரது செவியில் உள்ள துவாரங்களில் தமது வேண்டுதல்களை மனதில் நினைத்து பூக்களை வைக்கிறார்கள். காதில் வைக்கப்படும் பூவை இவ்விநாயகர் காதுக்குள் இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். காரியங்கள் நிறைவேறாது என்றால் செவிகளில் வைத்த பூக்கள் அப்படியே வைத்தவாறே இருக்கும்.பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூ வைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த விநாயகரால் இத்தலத்தின் பெயரே பூவிழுங்கி விநாயகர் கோவில் என்றே மருவி வருகிறது.
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
ஸ்ரீசக்கரத்தின் மீதே சன்னதி எழுப்பப்பட்ட தனிச்சிறப்புடைய கல்யாண காமாட்சி
தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முதன்மையான இடத்தை பெறுகிறது கல்யாண காமாட்சி கோவில். இந்த கோவில், கோட்டை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி. 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவில், ஒரு தேவார வைப்பு தலமாகும் .
கருவறையில் சுயம்பு மூர்த்தியாக இறைவன் மல்லிகார்ஜுனேஸ்வரர் 36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் எழுந்தருளி இருக்கிறார். இது சிவாகமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது.
அம்பாளின் சன்னதி ஈசனின் சன்னதியை விட உயரமாக உள்ளதால், 18 படிகள் ஏறித்தான் அன்னையை தரிசிக்கவேண்டும். இங்கு அம்பாள் கல்யாண காமாட்சி, சிவசக்தி ஐக்கிய சொரூபமாக , பிரம்மா விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் நான்கு கால்களாக, சதாசிவர் மேற்பலகையாக இருக்கும் பஞ்ச பிரம்ம ஆசனத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு, நான்கு கரங்களோடு, அபய வரத ஹஸ்த கோலத்தில் அருள் புரிகிறாள். மாங்காட்டில் தபசு காமாட்சியாகவும் , காஞ்சிபுரத்தில் யோக காமாட்சியாகவும் , இத் தகடூரில்( தர்மபுரி) ஐக்கிய காமாட்சியாகவும் காட்சி தருகிறாள்.
பதினெட்டு கல்யாண குணங்களை நாம் கடைபிடித்தால்தான் கல்யாண காமாட்சியின் அருளும் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும் என்பதை இந்த 18 படிகள் உணர்த்துகின்றன. இந்த 18 படிகளையும் மலர்களால் அலங்காரம் செய்து மஞ்சள் குங்குமமும் இட்டு புடவைச்சாத்தி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில், சிற்பவடிவில் 18 யானைகள், தங்களின் தலையின் மேல் அம்பாளின் சன்னதியை தாங்கிக் கொண்டு இருக்கின்றன.
அமாவாசையன்று பெண்கள் மட்டுமே நடத்தும் திருப்படி பூஜை
ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும், பெண்கள்தான் பதினெட்டுத் திருப்படிகளிலும் திருப்படி பூஜை செய்கிறார்கள். அதுமட்டும் இல்லாது அம்மனின் உற்சவ திருமேனியை சுமந்து, திருப்பாதம்தாங்கிகளாக, திருக்குடை ஏந்தியவர்களாக கோவிலினுள்ளே வலம் வருவதும் பெண்கள்தான். இது எந்த கோவிலிலும் நடைமுறையில் இல்லாத தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் அம்பிகைக்கு முதலிடம் கொடுப்பதாலும், ஆலய அமைப்பு தாய்மையின் பெருமையை உணர்த்துவதாலும், ( தாய்மண், தாய்மொழி என்று கூறுவது போல) தாய்க்கோவில், மாத்ரு மந்திர் என்று போற்றப்படுகிறது.
பிரார்த்தனை
இந்த அம்பிகை, கல்யாண காமாட்சி என்று போற்றப்படுவதற்கான சிறப்பு என்னவென்றால், ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, திருமண வரம் வேண்டுவோர், ஐந்து அஷ்டமி தினங்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், திருமணத் தடை அகல்வதற்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தேய்பிறை அஷ்டமியில் காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரை கல்யாண மாலை பூஜை செய்து, கால பைரவர் சந்நிதியில் கந்தர்வ ராஜ கல்யாண மாலை தருகிறார்கள்.
சுந்தரேசுவரர் கோயில்
குரு பகவானுக்கு 'குருபலம்' வழங்கிய உமாமகேஸ்வரர்
கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் குரு பகவான் உமாமகேஸ்வரரை பூஜித்து மக்களுக்கு குருபலம் அருளும் வரம் பெற்றார்.நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. பொன்னுக்கு ஏமம் என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் குரு, ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் ஏமநல்லூர் என்ற பெயர் முற்காலத்தில் இந்த தலத்திற்கு இருந்தது. குரு பகவான் இத்தலத்தில் இறைவன் சுந்தரேசுவரரை உள்ளன்போடு பூஜை செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு அவருக்கு காட்சி தந்து,.'இந்த தலத்துக்கு வந்து உனது பார்வை பெறும் எல்லோரும் எல்லாவிதமான தோஷங்களும் விலகி 'குரு பலம்' பெற்று அவர்களது இனிய இல்லறம் சிறக்க ஆசிர்வதிக்கிறேன்; என்று அருளினார். இப்படி குரு பகவான் 'குருபலம்' பெற்ற நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். இந்த கோலத்தை தரிசித்த குரு பகவான் தனது வழக்கமான அபய முத்திரை விடுத்து, இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிக்கிறார்.
ரிஷப வாகன உமாமகேஸ்வரரின் அற்புத எழில் கோலம்
இக்கோவில் மகா மண்டபத்தில், ரிஷப வாகன உமாமகேஸ்வரரை நாம் தரிசிக்கலாம். அதி அற்புதமான அழகு உடைய இந்த வடிவம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். ரிஷப வாகனத்தில் அம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி ஈசன் காட்சியளிக்கும் அழகே அலாதியானது. இடபத்தின் (காளையின்) முதுகின் மேலுள்ள அம்பாரியில் அமைந்திருக்கும் ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் சடா மகுட தாரியாக ஒளிவட்டத்துடன் சிவபெருமான் அமர்ந்துள்ளார். அவரது வலப் பின்கரத்தில் திரிசூலம் உள்ளது. வலது முன்கரத்தால் அபயம் காட்டுகின்றார். இடக்கரங்களால் அருகே அமர்ந்துள்ள தேவியை அணைத்துள்ளார். அணிகலன்களும், உத்ரபந்தமும், புரிநூலும் தரித்துள்ள சிவபெருமானின் உடல் சற்றே வளைந்த நிலையில் தேவியைத் தாங்குகின்றதுசிவபெருமானுக்கு மேலே அழகிய மகர தோரணம் காணப் பெறுகின்றது. மகர தோரணத்திற்கு மேலே ஆணும் பெண்ணும் என எட்டு கந்தர்வர்கள் வீணை, உடுக்கை, மத்தளம், குழல், சிறுபறை, கைத்தாளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தவாறு, மிதந்த வண்ணம் திகழ்கின்றனர்.உமாதேவி தன் இடக்காலைக் குத்திட்டவாறு, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளார். இடக்கரத்தில் மலர் ஒன்றினை ஏந்தியுள்ளார். நீண்ட கீழாடையுடன், ஒரு புறம் சரிந்த கொண்டையுடன் தன்னை அணைத்தவாறு அமர்ந்துள்ள சிவபெருமானின் முதுகினைத் தன் வலக்கரத்தால் பற்றியுள்ளார். பெருமானும், அம்மையும் அமர்ந்திருக்கும் மகர தோரணத்தோடு அமைந்துள்ள அம்பாரியின் பின்புறம் ஒரு சிவலிங்கம் புடைப்பு சிற்பமாக அமைந்துள்ளது.சிவபெருமான் உமாதேவி அமர்ந்திருக்கும் அம்பாரியானது, படுத்த நிலையில் உள்ள ஒரு காளையின் திமிலோடு இணைந்து ஒரே சிற்பமாக உள்ளது. காளை சிறிய கொம்புகள், விரிந்த காதுகள் ஆகியவற்றுடன் தோல் மடிப்புகளுடன் உள்ளது. பெரிய உருண்டை கோர்க்கப் பெற்ற கழுத்து கயிறு, சங்கிலி மாலை, மணிச்சக்கரங்கள் கோர்க்கப் பெற்ற பெரிய மாலை காளையின் கழுத்தை அணி செய்கின்றன. உமாமகேஸ்வரரின் அதி லாவண்ய ரூபத்தை தரிசிக்கவாவது, நாம் ஒரு முறை திருலோக்கி செல்ல வேண்டும்.
மன்மதன் மீண்டும் உயிர் பெற்ற தலம்
திருக்குறுக்கை தலத்தில், சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும். ரதி - மன்மதன் இருவரும் உமாமகேச்வரருக்கு எதிரில், ஐந்தடி உயரத்தில், அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர். உடனிருக்க காட்சி தருகிறார்கள். இந்த தெய்வீக காதலர்களின் சிலாரூபம் மிகுந்த நேர்த்தியும், கலைநயமும் உடையது ஆகும். இச்சிலையும் பார்ப்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும்,
இல்லறம் அமைய, இனிக்க அருளும்
தலம்வரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்துபோன தம்பதிகள், திருமணமாகியும் மணவாழ்க்கையில் பிரச்னையுள்ளவர்கள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் இங்கு வந்து உமாமகேச்வரப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து பலன் பெறுகிறார்கள்.தனுசு ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய குரு பரிகாரத் தலம் இது.