
சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்கள்
சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்கள்
பெருமாள் கோவில் என்றால் அங்கு பொதுவாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெறும். ஆனால் சொர்க்கவாசலே இல்லாத பெருமாள் கோவில்கள் பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறாது. அப்படிப்பட்ட சில பெருமாள் கோவில்களின் விவரங்களை இந்த பதிவில் நாம் காணலாம்.
1. 108 திவ்யதேச கோவில்களில் ஒன்றான கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில், பெருமாள் நேரடியாக வைகுண்டத்தில் இருந்து மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணம் முடிப்பதற்காக வந்ததாக ஐதீகம். வைகுண்டத்தில் தான் எழுந்தருளி இருக்கும் ரதத்துடனேயே வந்து காட்சி தருவதால், இவரை வணங்கினாலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்பதால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.
2. காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் என்னும் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இந்த ஆலத்தில் மூலவர் பெயரே வைகுண்டப் பெருமாள் என்பது தான். இந்த பெருமாளுக்கு பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு. இவரை தரிசித்தாலே சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
3. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் கிடையாது. ராமானுஜர் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூர் நித்ய சொர்க்கவாசல் தலமாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளும் போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது போது மணியால் ஆன கதவுகள் திறக்கப்படும்.
4. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜபெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோவில் பூலோகத்து விண்ணகரம் என்பதால் இந்த கோவிலில் பரமபத வாசல் கிடையாது. இந்த கோவிலே பரமபதமாக கருதப்படுவதால், மற்ற பெருமாள் கோவில்களைப் போல் இங்கு சொர்க்கவாசல் கிடையாது.
5. திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. ஸ்ரீதேவியை மணம் முடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக இங்கு வந்த விட்டதால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக கருதப்படுகிறது. இவரை வணங்கினால் முக்தி கிடைக்கும். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலைப் போன்று இங்கும் தட்சிணாயன வாசல், உத்திராயண வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளது.
காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சிபுரம் பவள வண்ண பெருமாள், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆகிய கோவில்களிலும் சொர்க்கவாசல் இல்லை.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
தமிழகத்திலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைந்துள்ள திருப்புகழ் தலம்
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் வல்லக்கோட்டை. மூலவர் சுப்பிரமணியர் சுவாமி வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும் 7 அடி முருகன் சிலைதான் மிகப் பெரிய முருகன் சிலை ஆகும்.
அருணகிரிநாதர் தல யாத்திரையாக பல ஆலயங்களுக்குச் சென்று வந்தார். திருப்போரூர் முருகனை தரிசித்த அவர், அன்றிரவு அங்கேயே தங்கினார். காலையில் திருத்தணி முருகனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன், ‘கோடைநகர் மறந்தனையே’ என்று சொல்லி மறைந்தார். மறுநாள் காலையில் எழுந்த அருணகிரிநாதர், கனவில் தோன்றிய முருகப்பெருமானை நினைத்தபடி, திருத்தணி செல்லும் வழியில் வல்லக்கோட்டை திருத்தலம் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தார். மேலும் அந்த முருகப்பெருமானின் மீது 8 திருப்புகழ் பாமாலை பாடி மகிழ்ந்தார்.