
திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
வித்தியாசமான பஞ்சாம்ச பீடத்தின் மீது எழுந்தருளி இருக்கும் அம்பிகை
காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி.
இத்தலத்து அம்பிகை யோகமுடி தரித்து, நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். இந்த அம்பிகை எழுந்தருளி இருக்கும் பீடமானது சற்று வித்தியாசமாக, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அமைப்பாக இருக்கின்றது.
இந்தப் பீடமானது எட்டு லட்சுமிகள், எட்டு யானைகள், எட்டு நாகங்கள், எட்டு சிங்கங்கள் புடைசூழ நடுவில் மகாமேரு அமைந்துள்ளது. இப்படியான பஞ்சாம்ச பீடத்தின் மீது நின்று அபயம் அளிக்கும் கோலத்தில் அம்மன் எழுந்தருளி இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
எந்த சிவாலயத்திலும் காண முடியாத அகோரமூர்த்தி எழுந்தருளி இருக்கும் தேவார தலம்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.
திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது. சிவபெருமானின் 64 வித உருவங்களில் இது 43 வது உருவம் ஆகும். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால் அகோரமூர்த்தி எனப்படுகிறார். இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவபெருமானின் ஈசானிய முகத்திலிருந்து தோன்றியவர். இக்கோவிலின் மேலை பிரகாரத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவர் கரிய திருமேனி உடையவர். இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார். எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார். சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன், நெற்றிக்கண் நெருப்பைக் கக்க, கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு, மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
இவரை அடுத்துள்ள சன்னதியில் இவரது உற்சவ திருமேனியைக் காணலாம். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரமூர்த்தி பூஜை நடைபெற்று வருகின்றது.
இவரை வணங்கினால் முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

தேன்கனிக் கோட்டை பேட்டராய சுவாமி கோவில்
வேட்டையனாக வந்த பேட்டராய சுவாமி பெருமாள்
ஒசூர் அருகே தேன்கனிக் கோட்டையில் அமைந்துள்ளது பேட்டராய சுவாமி கோவில். தாயார் திருநாமம் சவுந்தர்யவள்ளி. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது
இக்கோவில். கருவறையில் பேட்டராய சுவாமியின் உருவம், திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் வெங்கடேஸ்வரரின் உருவத்தைப் போலவே நிற்கும் தோரணையில் உள்ளது.
அத்ரி மகரிஷி மற்றும் கன்வ மகரிஷி ஆகியோர் யாகம் நடத்தும் போது அதை கலைக்கும் எண்ணத்தோடு புலித்தோற்றத்தில் வருகிறார் யட்சன். இதைப் பார்த்த மகரிஷிகள் புலியை விரட்ட பெருமாளை அழைக்கின்றனர். அப்போது திருப்பதியில் இருந்து வேட்டையன் வடிவத்தில் வருகிறார் பெருமாள். புலியாக நின்ற யட்சனின் தலையில் பெருமாள் தான் வைத்திருந்த கதாயுதத்தை கொண்டு அடிக்க யட்சன் புலி தோற்றத்தை விடுத்து பழைய நிலையை அடைகிறார். கதாயுதத்திற்கு டெங்கினி என்ற நாமும் உண்டு. அதனால் இத்தலத்திற்கு டெங்கினிப்புரம் என்ற பெயர் ஏற்பட்டது. அது பின்னர் தேன்கனிக்கோட்டை என்று மாறியது.
வைணவ சம்பிரதாயத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு முக்கிய தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மேலக்கோட்டை ஆகிய தலங்களில் உள்ளவழிபாட்டு முறைகள் இத்தலத்தில் ஒருங்கே கடைபிடிக்கப்படுகின்றன
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களுக்கும் அருகாமையான பகுதி என்பதால் இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். வேட்டையனாக வந்த பேட்டராய பெருமாளை வணங்கினால், நம் பாவங்கள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
குரங்கு முகத்துடனும், நின்ற கோலத்திலும் இருக்கும் அதிகார நந்தி
காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அதிகார நந்தி குரங்கு முகத்துடனும், நின்ற கோலத்திலும் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இவரை தரிசித்த பிறகே, மூலவரை வழிபடச் செல்ல வேண்டும் என்ற வழிபாட்டு நியதியும் இங்கே உள்ளது.
இவரின் முகம் குரங்காக மாறியதற்கு ராவணன் கொடுத்த சாபம் தான் காரணம். இத்தலத்து இறைவனை தரிசிக்க ராவணன் வரும்போது நந்தியை கவனிக்காமல் சென்றார். இராவணனிடம் நந்தி இறைவன் தியானத்தில் உள்ளார். இப்போது போகாதே என தடுத்துள்ளார். சினம் கொண்ட இராவணன் நந்தியை சபித்ததால் நந்தியின் முகம் குரங்கு முகமாக மாறியது. ராவணன் அப்படி கேட்டதும், நந்தியின் முகம் குரங்காக மாறியது. இதைக் கண்ட நந்தி ராவணா என்னை குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் ஒரு குரங்கால் அழிந்து போகும் என்று சபித்தார். நந்தி கொடுத்த சாபம் ராவணனைத் தொடர்ந்தது. அதனால்தான் ஆஞ்சநேயரால், இலங்கை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.

கோட்டைமேடு பத்ரகாளி கோவில்
சிங்கத்தின் வாயில் எலுமிச்சை வடிவில் சுழலும் கல் உடைய அபூர்வ சிற்பம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - திருச்செங்கோடு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோட்டைமேடு பத்ரகாளி கோவில். 1500 ஆண்டுகள் பழமையான கோவில் இது. இந்த பத்ரகாளியம்மனுக்கு எலுமிச்சை மாலை அல்லது எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா பிரச்னைகளையும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டுகொண்டிருந்த நேரம் அது. ஒரு சமயம் மழை இல்லாமல் ஏரிகள் எல்லாம் வற்றிப் போய் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்துள்ளனர். ஒரு நாள் மன்னன் பாரியின் கனவில் தோன்றி, நான் பத்ரகாளி என்றும், நான் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை காக்க ஏரியின் வலது கரையில் மேடான பாறையின் மேல் குடிகொண்டுள்ளதாகவும், இனி ஏரியில் எப்போதும் தண்ணீர் வற்றாது எனவும் கூறி, எனக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை கட்டி உடனடியாக குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாள், காளி. அகிலத்தையும் காக்கும் நான் மேடான பாறையில் இருப்பேன், இதனால் என்னை மீறி எந்த தவறும் நடக்காது எனவும், நான் தினமும் ஏரியில் குளிக்க வேண்டும் எனவும், அதனால் என்னை தினமும் ஏரிக்கு அழைத்து சென்று குளிப்பாட்ட வேண்டும் எனவும் கூறியிருக்கிறாள்.
மன்னன் உடனடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்ட போது எலுமிச்சை பழம் இருந்துள்ளதை கண்டு, கனவில் வந்தது காளிதான் என்று மக்களிடம் கூறி, உடனடியாக பாறையின் மீது ஒரு ஆலயத்தை கட்டியுள்ளார். இதனால் கருவறையானது பாறை மீது காளி அமர்ந்தவாறு மேடான பகுதியில் அமைந்துள்ளது. எனவே கோட்டை போன்ற வடிவமைப்புடன் மேட்டில் குடிகொண்டுள்ளதால், கோட்டை மேடு பத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறாள். மேலும், இந்த பகுதியில் பலவன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி, தொந்தரவு செய்து வந்துள்ளான். மக்கள் பத்ரகாளியிடம் முறையிட்டு அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டியுள்ளனர். இதனால் அரக்கனை, பல்வேறு ஆயுதங்களை கொண்டு வதம் செய்து அழித்ததால் பத்ரகாளி எட்டு கரங்களுடன், அரக்கனை உக்கிரமாக வதம் செய்யும் காட்சியுடன், கருவறையில் வீற்றிருக்கிறாள்.
காளியின் காவலான சிங்கமானது, அடிக்கடி வனவிலங்குகளையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனை தடுக்க மக்கள் வேண்டியதை ஏற்று, சிங்கத்தின் சீற்றத்தை குறைக்க அதன் வாயில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்ததாகவும், அதனை குறிக்கும் விதமாக ஆலயத்தில் பத்ரகாளியை பார்த்தவாறு பெரிய சிங்கமானது காட்சியளிக்கிறது. சிங்கத்தின் வாயில் பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும் எலுமிச்சை வடிவில், கல் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது மிகவும் அபூர்வமானது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சிலையை காண முடியாது. இது அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக விளங்குகின்றது.
மேலும் இந்த சிங்கத்தின் மீது தினமும் இரவு வேளையில் ஊரை காக்க சலங்கை அணிந்து வலம் வந்ததாகவும், அதனை மக்கள் பார்த்துள்ளதாகவும் பரவசமாக கூறுகின்றனர். இது தவிர காளியின் இரு புறத்திலும், பூதகணங்கள் எனப்படும் இரு காவல் தெய்வங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கப்பட்ட சிலைகளாகும். யானைகள் அடிக்கடி காளியை வணங்கியதாகவும், அதனை குறிக்கும் வகையில் ஆலயத்தின் இருபுறங்களிலும் யானை சிலைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு சஹஸ்ரநாமம்
விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்
சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். திருமாலின் ஆயிரம் திருநாமங்களை சொல்லி போற்றுவது விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். இது மகாபாரத போரின் போது அம்பு படுக்கையில் இருந்த பிதாமகன் பீஷ்மர், தர்மனுக்கு உபதேசித்ததாகும்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் உருவான கதை
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்து கொண்டிருந்த மகாபாரதப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்த நேரம் அது. பிதாமகர் பீஷ்மர் உத்திராயண காலத்தில் தன் உயிர் பிரிய வேண்டும் என்று அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறார். கொடையாளி கர்ணன் கிருஷ்ணரின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். குந்திதேவி இறந்த கர்ணனின் சடலத்தை தன் மடியில் கிடத்தி அவன் தான் தன் மூத்த மகன் என்று உலகறிய கதறுகிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.
அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து 'இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், 'இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப் போகிறாள் அவள்' என்றார்.
தர்மபுத்திரரைப் பயம் சூழ்ந்து கொண்டது. தங்கள் வம்சாவளியினர் நாடாளும் போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. ‘தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்’ என்று கிருஷ்ணனை தர்மர் கேட்க, கிருஷ்ணன் 'அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்' என்றார்.
பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார். 'இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள். அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர்களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள். படித்த வன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது. நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது. பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரி வர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்'
இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார்கள்.
'அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, 'நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்து நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்' என்று சொன்னார்.
அப்போது பீஷ்மரால் சொல்லப்பட்டதுதான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்.
அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை. பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று வியப்படையலாம்.
இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.
உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, 'சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டிதர்களால் சொல்ல முடியலாம். படித்தவர்களா ல் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?' என்று கேட்டாள். சிவபெருமான் புன்னகைத்தார்.'தேவி, நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.'
ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ர நாம தந்துல்யம்
ராம நாம வரானனே
இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்' என்று பார்வதிதேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் சிவபெருமான்.
அனைவருக்கும் நற்பலன்களை தரும் விஷ்ணு சஹஸ்ரநாமம்
விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.
பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும் படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.
ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதியிருக்கிறார்கள்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது இறைவனின் கல்யாண குணங்களை தெரிவிக்கும்படியான திரு நாமாக்கள். பெருமாளுக்குரிய ஏகாதசி, திருவோணம் போன்ற நாட்களில் இந்த ஸ்லோகத்தை படிப்பது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும். இந்த ஸ்லோகத்தை அர்த்தம் புரியாமல் சொன்னாலும் கூட, முழு பலனும் கிடைக்கும். விஷ்ணுவின் திருநாமங்களிலேயே மிகவும் உயர்வானதாக கருதப்படுவது விஷ்ணு சகஸ்ரநாமம்தான். இதை காதால் கேட்டாலும் கூட மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை வாயால் உச்சரித்த பலன் கிடைக்கும். இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். இதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம்.
வைகாசி மாத தேய்பிறை ஏகாதசியின் சிறப்பு
வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி 'வருதினி' என்றும், வளர்பிறை ஏகாதசி 'மோகினி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் விரதம் இருப்பது, இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைத் தரும்.
மார்கழி மாதத்தில் வருகின்ற வைகுண்ட ஏகாதசி பிரதானமான ஏகாதசி திதி என்றாலும், அந்த வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும், இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.

தஞ்சைப் பெரிய கோவில்
நவக்கிரகங்கள் இல்லாத தஞ்சைப் பெரிய கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழன், 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் திராவிட கட்டிடக் கலையின் சிறப்புகளை உலகிற்கு உணர்த்தும் வரலாற்றுச் சின்னமாக திகழ்கின்றது. பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பல சிறப்பு அம்சங்கள் இக்கோவிலில் உள்ளன.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள், ஒரு பீடத்திலோ அல்லது தனி சன்னதியிலோ எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், பிற கோவில்களைப் போல் நவக்கிரகங்கள் அவைகளின் உருவில் இல்லாமல், கோயிலின் மேல் புற வட பகுதியில் லிங்க வடிவிலேயே காட்சி தருகின்றன. தமிழ்நாட்டில் கிரகங்கள் லிங்க வடிவில் காட்சி அளிப்பது இக்கோயிலில் மட்டுமே. மக்கள் தங்கள் குறைகளைக் களைய நவக்கிரகங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை இங்கு நவ லிங்கங்களுக்கு செய்து வழிபடுகின்றனர்.

சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில்
யானையின் துதிக்கையில் அரவணைத்து இருக்கும் வெள்ளந்தாங்கி அம்மன்
சிதம்பரம் நடராசர் கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு காவல் தெய்வங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். அவர்களில் தெற்கு திசையில் அமைந்துள்ள காவல் தெய்வம் வெள்ளந்தாங்கி அம்மன் ஆவார். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் இக் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய கோயிலாகும். கருவறையில் வெள்ளந்தாங்கி அம்மன் மேற்கு நோக்கி உள்ளார். யானையின் துதிக்கையில் அரவணைத்து இருப்பதுபோல் அம்மனின் உருவம் உள்ளது. கருறையில் அம்மனின் வலப்பக்கம் சிவலிங்கமும், இடப்பக்கம் சபரி சாஸ்தாவும் உள்ளனர்.
அம்மனுக்கு வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயர் வந்த கதை
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த ஒரு பெருமழையில் சிதம்பரம் நகரம் பெரும் வெள்ளக்காடாக ஆனது. அப்போது ஒரு பெண் வெள்ளத்தில் நீந்தி வந்தாள். அவளை நோக்கியபடி யானை ஒன்று பிளிறியபடி சென்றது. அது அப்பெண்ணை தன் துதிக்கையால் தூக்கிச் சென்று தில்லை நடராசர் கோயிலின் தெற்குப் பகுதியில் விட்டுச் சென்றது. ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பெண் அங்கு இல்லை. ஆனால் யானையின் துதிக்கையில் ஒரு பெண் இருப்பது போன்ற சிலை ஒன்று இருந்தது. வெள்ளம் வடிந்த பிறகு ஊர் மக்கள் தில்லை அந்தணர்களிடம் நடந்த விசயத்தைக் கூறினர். அவர்களின் ஆலோசனையின்படி அச் சிலையை அங்கேயே பிரதிட்டை செய்து வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயரைச் சூட்டி வழிபடத் தொடங்கினர்.
இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைக் காத்த வெள்ளந்தாங்கி அம்மனை விவசாயம் செய்யும் அனைவருமே பயபக்தியோடு வந்து தாங்கள் விதைக்கப் போகும் விதையை இங்கு வைத்து பூஜை செய்துவிட்டு பிறகுதான் அதை விதைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் இயற்கைப் பேரிடர்களில் இருந்து விவசாயத்தையும், தங்களையும் அம்மன் அரவணைத்து காப்பாற்றுவாள் என்று நம்புகிறார்கள்.

ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில்
காசிக்கு ஈடான அஷ்ட பைரவர் கோவில்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ளது ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. மன்மதன் வழிபட்டதால் இத்தலத்து இறைவனுக்கு காமநாதீஸ்வரர் என்று பெயர். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்.
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என அஷ்ட ( எட்டு) பைரவர்கள் இக்கோவிலில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோவில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோவிலாக ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில் கருதப்படுகிறது. காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள், இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடான பலனைப் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி திதியன்று அஷ்டபைரவர்களுக்கு நடத்தப்படும் வழிபாடு
இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில், நள்ளிரவில் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது. இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து. வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.

மருதூர் நவநீத கிருஷ்ணர் கோவில்
குழந்தை வரம் அளித்திடும் நவநீத கிருஷ்ணர்
நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. மருத மரங்கள் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த ஊர் மருதூர் ஆனது. மருதூர் அணைக்கட்டின் அருகே தாமிரபரணி கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கருவறையில் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.
கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் டைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப்போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தப்படி சென்றான். அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளசுன், மணிக்ரீவன் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் நவநீத கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரம் அளித்திடுவார் என்பது ஐதீகம்.

பெருநா சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன் வேலை தலைகீழாக பிடித்திருக்கும் தலம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. இப்படி, மற்ற முருகன் கோவில்களில் இருந்து வேறுபட்டு, முருகன் வேலை தலைகீழாக பிடித்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
முருகன் வேலை தலைகீழாக பிடித்து இருப்பதற்கான காரணம்
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கப் போருக்குச் செல்லும் போது முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான், அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போரிடும் போது முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது. தாரகாசுரனை அழித்த இரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த இரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலைத், தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார்.முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர்.
பிரார்த்தனை
இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.

பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வாராகி அம்மன் கோவில்
வரம் தரும் பள்ளூர் வாராகி அம்மன்
பிராமி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வாராகி எனும் சப்த மாதா்களில், வாராகி அம்மன் ஐந்தாமானவள். வாராகி அம்மன், பார்வதி தேவியின் அவதாரம் ஆவாள். மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். சப்த மாதர்களில் வாராகியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சோழர்களின் வெற்றி தெய்வம் வராஹி.தஞ்சை பெரிய கோவிலில் தனி ஆலயமுள்ளது .
காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன் கோவில் உள்ளது. மிகவும் புராதனமான வாராகி அம்மன் கோவில் இது. இங்கு தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வாராகி அம்மன் அருள்கிறாள். பெரும்பாலான அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அபூர்வமாக சில அம்மன் கோவில்கள் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். வழக்கத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவில்கள், பரிகார கோவில்கள் ஆகும். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் அளப்பரிய பலன்களை அள்ளித் தரக்கூடியவை.
வளர் பிறை மற்றும் தேய் பிறை பஞ்சமி திதி வழிபாடு
பள்ளூர் வாராகி அம்மன் சிறந்த வரப் பிரசாதி. வளர் பிறை மற்றும் தேய் பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனுக்கு, வாழை இலைபோட்டு அதில் பச்சரிசி சிறிது பரப்பி ,தேங்காய் உடைத்து அதன் இரு மூடியிலும் தூய பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர நம் கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். வாராஹிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து, அதனை வாராகி அம்மனுக்கு வைவேத்தியம் செய்து பஞ்சமி நாட்களின் பின்னிரவில் (இரவு 11 மணிக்கு மணிக்கு மேல்) அல்லது வாராகி நவராத்திரி நாட்களின் பத்தாவது நாளான நிறைவு நாள் வரையிலும் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வாராகி அம்மனுக்கு செம்பருத்தி, சிவப்பு அரளி, மரிக்கொழுந்து மாலை சூட்டி வழிபாடு செய்து வரலாம். இந்த வழிபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம்.
பில்லி, செய்வினை, மன நோய், மாந்திரீக பாதிப்பினால் உண்டான உடல்நோய்கள், தீராத எதிரி தொல்லை, முற்பிறவி கர்ம வினைகளால் உண்டான வறுமை , வழக்குகள், காரிய தடைகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாராகி அம்மனின் அம்சமான திருக்கடையூர் அபிராமி அம்மன்
திருக்கடையூர் அபிராமி அம்மன் வாராகி அம்சமே. இதனை அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியில் குறித்து உள்ளார்.
''நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
என அபிராமிபட்டர் திருக்கடையூர் அபிராமியை வாராகி திருக்கோலத்தில் தரிசித்ததை தமது அபிராமி அந்தாதியில் பதிந்து உள்ளார்.

அமிர்தபுரி நவக்கிரக விநாயகர் கோவில்
விநாயகர் திருமேனியில் நவக்கிரகங்கள்
சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டுச்சாலையில் ( திருமலைவையாவூர்,வேடந்தாங்கல் செல்லும் வழி) 4 கி.மீ. தொலைவில், அமிர்தபுரி என்ற ஊரில் நவக்கிரக விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சுமார் 8 அடி உயரமுள்ள பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். . இந்த விநாயகப் பெருமானின் உடலமைப்பில் நவகிரகங்களும் இடம் பெற்றுள்ளது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். விநாயகப் பெருமானின் நெற்றிப் பகுதியில் சூரிய பகவான், தலைப்பகுதியில் குரு பகவான், வயிற்றுப்பகுதியில் சந்திர பகவான், வலதுமேல் கரத்தில் சனி பகவான், கீழ் கரத்தில் புத பகவான், இடது மேல் கரத்தில் ராகு பகவான், கீழ் கரத்தில் சுக்கிர பகவான், வலது காலில் செவ்வாய் பகவான், இடது காலில் கேது பகவான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
நவக்கிரகங்களைப் பூஜித்த பலன் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும், நவக்கிரகத் தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவகிரக விநாயகருக்குப் பின்புறம் ஸ்ரீயோக நரசிம்மர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான சந்நிதிகள் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை எனலாம்.

ராமேசுவரம் அபய(வாலறுந்த) ஆஞ்சநேயர் கோவில்
பக்தர்களின் பயத்தைப் போக்கும் வாலறுந்த ஆஞ்சநேயர்
ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அபய ஆஞ்சநேயர் கோயில். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது. பக்தர்களின் பயத்தைப் போக்கி காத்தருள்பவர் என்பதால் அபய ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றார். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வால் அறுந்த ஆஞ்சநேயர் என்று இரண்டு மூர்த்திகள் உள்ளனர். சிவலிங்கத்தை உடைக்க முயன்று வால் அறுந்ததால் இங்குள்ள ஆஞ்சநேயர் வால் அறுந்த கோலத்திலேயே காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் கடல் மணலில் உருவான ஒரு சுயம்பு ஆஞ்சநேயர் என்பது கூடுதல் சிறப்பு. அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே கோடி ராமாரக்ஷச மந்திர எழுத்துகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.
ராவணனை வென்று சீதையை மீட்டு வந்த ராமபிரானுக்கு தோஷம் பிடித்தது, இந்த தோஷம் நீங்க ராமர் அக்னி தீர்த்தம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய லிங்கம் எடுத்து வர, ஆஞ்சநேயர் கைலாயம் சென்றார். கைலாயம் சென்ற ஆஞ்சநேயர் திரும்பி வர தாமதமானதால் சீதாப்பிராட்டி மணலினால் ஆன லிங்கம் பிடித்து பூஜை செய்து வழிபட்டனர். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர் அதனை கண்டு கோபமுற்றார். கோபமடைந்த ஆஞ்சநேயர் தனது வாலால் லிங்கத்தை சுற்றி அதனை பெயர்த்து எடுக்க முற்பட்டார், அதனால் அவரது வால் அருந்ததுதான் மிச்சம். லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை. தான் செய்த தவறை உணர்ந்த ஆஞ்சநேயர் சிவ அபச்சாரம் செய்த குற்றம் நீங்க இவ்விடத்தில் தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஆலயத்தின் ஆஞ்சநேயர் வாலறுந்த நிலையில் மூலவராக காட்சி அளிக்கிறார். இதற்காக வாலறுந்த ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆஞ்சநேயர் உருவாக்கிய 'அனுமன் தீரத்தம்' கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் கடல் மண்ணில் உருவான சுயம்பு மூர்த்தியாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.
பிரார்த்தனை
இக்கோயிலில் இருக்கும் தல விருட்சமான அத்தி மரத்தில் இளநீரை கட்டி ஆஞ்சநேயரை வேண்டிக்கொள்கின்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது. உக்கிரமடைந்து சிவலிங்கத்தை உடைக்க முயன்ற ஆஞ்சநேயர் என்பதால் இவரை குளிர்விக்கும் விதமாக இவ்வாறு இளநீர் கட்டி வைத்து வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை பாக்கியம், பயம் மற்றும் மனக்குழப்பம் நீங்க, ஆபத்துகளிலிருந்து காத்து கொள்ள போன்ற பல காரணங்களுக்காக பக்தர்கள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.

பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
சுவாமி மலையை அடுத்து முருகன் குருவாக இருந்து உபதேசம் செய்த தலம்
மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம் இது. முருகன் சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்தது போல், இத்தலத்தில் பிரம்ம தேவனுக்கும், மயிலுக்கும் உபதேசம் செய்து அருளினார்.
பொதுவாக சிவன் கோவில்களில் சிவன் சன்னதிக்கு பின்புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும் ஆனால் இந்தவத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும் ,ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுகிறார்கள். இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், ஆறு முகங்களுடனும், 12 கைகளுடனும் வள்ளி தெய்வயானை சமேதராக எழுந்தருளி இருக்கிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில், முருகனின் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். இத்தல முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறவிக்கடன் தீரும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்
முருகக் கடவுள் அவதரித்த வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். விசாகம் என்றால் ஆறு நட்சத்திரங்கள். ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கிணைந்திருப்பதால், ஆறு முகங்களுடன் முருகன் தோன்றியதாக ஐதீகம். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகக் கடவுள். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான்.
பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருமழப்பாடி என்ற ஊரில் சிவன் திருநடனம் ஆடியது வைகாசி விசாகத்தினத்திலே.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம் அவதரித்ததும் வைகாசி விசாகத்தன்று தான்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.
இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.
தர்மத்திற்கு அதிபதியான எமதர்மராஜன் அவதரித்தது ஓர் வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமாரியம்மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
கருடசேவையின் போது இராபர்ட் கிளைவின் ஆணவத்தை அடக்கிய வரதராஜப் பெருமாள்
வைணவத்தில் கோவில் என்றால் அது திருவரங்கம், மலை என்றால் திருமலை. பெருமாள் கோவில் என்றால் திருக்கச்சி என்பது சிறப்பு. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு உண்டு, திருமலையிலே ரதோற்சவம், திருவரங்கத்தில் குதிரை வாகன ஒய்யாளி, திருமாலிருஞ்சோலையிலே குதிரை வாகனம் சிறப்பு, திருக்கச்சியில் வரதருக்கு கருட சேவை சிறப்பு.
காஞ்சிபுரம் நகரில் வருடத்திற்கு மூன்று முறை கருட சேவை கொண்டாடப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய விழாக்களின்போது கொண்டாடப்படுகிறது.
தனது யாகத்தில் தோன்றிய ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்கு பிரம்மனே உற்சவம் நடத்தியதாகவும், அதன் வழியாக வருடாவருடம் வைகாசி பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேதாந்த தேசிகரை பெருமாள் வைகுந்தத்திற்கு அழைத்தபோது, இங்கு காஞ்சியில் மிகவும் கோலாகலமாக கருட சேவை நடைபெறுவது போல வைகுந்தத்தில் நடைபெறாதே என்று காஞ்சியிலேயே இருக்கின்றேன் என்று பதிலிறுத்தாராம்.
15ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவி காளமேகம் அவர்கள் இந்த அத்தி வரதனின் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது ஓளி மிக்க கருடன் மீது பொன் வண்ணத் திருமேனியுடன் அத்திவரதன் திருவீதி வலம் வரும் அழகைக் கண்டு இகழ்வது போல் புகழும் நிந்தாஸ்துதி வகையில் பாடியுள்ளார்.
இராபர்ட் கிளைவ் (1725 -1774) என்னும் ஆங்கில அதிகாரி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக காரணமாக இருந்தவர். காஞ்சிபுரத்தில் ஒரு கருடசேவையின் போது வரதராஜப் பெருமாள், இராபர்ட் கிளைவின் ஆணவத்தை நீக்கி தன் பக்தனாக்கிய நிகழ்வு மிகவும் சுவையானது. ஒரு வருடம், வரதராஜப் பெருமாள் கருடனில் ஆரோகணித்து பக்தருக்கு அருளிக்கொண்டு பவனி வரும் போது குதிரையில் வந்த இராபர்ட் கிளைவ், பவனியை நிறுத்துமாறு ஆணையிட்டான். அதற்கு பட்டர்கள் வெயில் அதிகமாக உள்ளதால் பெருமாளுக்கு ஆகாது. அவர் உடனடியாக திருக்கோவிலுக்கு திரும்ப வேண்டும் என்று பதிலிறுத்தனர். இதைக் கேட்ட இராபர்ட் கிளைவ், எள்ளி நகையாடினான். இது ஒரு சிலை, இதற்கு என்ன வெயில் என்று பரிகாசம் செய்தான். கோபம் கொண்ட ஒரு பட்டர் அவனிடமிருந்து ஒரு துணியைப் பெற்று பெருமாளின் திருமேனியை ஒற்றி அவனிடம் திருப்பித் தந்தார். சொத சொத என்று பெருமாளின் வியர்வையால் நனைந்த அந்த துணியைத் தொட்ட இராபர்ட் கிளைவ், மின்னல் தாக்கியது போல் அதிர்ந்தான். அவன் மனம் மாறியது. பெருமாளின் பக்தனானான். பெருமாளுக்கு ஒரு விலையுயர்ந்த மகர கண்டிகையை சமர்ப்பணம் செய்து வணங்கினான். இன்றும் இந்த மகரகண்டி பெருமாளுக்கு சிறப்பு நாட்களில் அணிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 22.5.2024 புதன்கிழமையன்று நடைபெறுகின்றது.

திருவாலி அழகிய சிங்கர் கோவில்
பத்ரிகாசிரமத்துக்கு இணையான திவ்ய தேசம்
108 திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலி அழகிய சிங்கர் கோவில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோவில் ஆகியன இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன. இவ்விரு கோவில்களும் ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகின்றன.
மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
நரசிம்ம அவதாரம் எடுத்த திருமாலுக்கு இரணியனை வதம் செய்த பிறகும் கோபம் தணியவில்லை. மகாலட்சுமி, அவரின் தொடையில் சென்று அமர்ந்ததும் நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்தமானார். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த கோலத்தில் நரசிம்ம பெருமாள், அழகிய சிங்கர் என்ற திருநாமத்துடன் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில் பெருமாளின் இடது புறத்தில் தான் லட்சுமி அமர்ந்திருக்கும் தோற்றம் இருக்கும். ஆனால் மிக அரிதாக இந்த தலத்தில், மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த காரணத்தால், இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும்.
பத்ரிநாத்தில் பெருமாளே குருவாகவும், தானே சீடனாகவும் இருந்து (நாராயணனாகவும், நரநாராயணனாகவும்) திருமந்திரத்தை உபதேசித்தார். பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. மகாலட்சுமி பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது, திருமங்கை மன்னை பெருமாளை வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கை மன்னனுக்கு காதில் அஷ்டாட்சர மந்திரத்தை ஓதி, உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில், திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெரும் விழா நடக்கின்றது.

கோடகநல்லூர் கைலாசநாதசுவாமி கோவில்
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை நீங்க நந்திக்கு விரலி மஞ்சள் மாலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கோடகநல்லூரில் அமைந்துள்ளது கயிலாயநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி. தாமிரபரணி கரையில் அமைந்துள்ள நவ கயிலாய தலங்களில் மூன்றாவது கயிலாயத் தலமாக கோடகநல்லூர் கயிலாயநாதர் கோவில் விளங்குகிறது. . ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துரைக்கிறார். கார்க்கோடகன் என்னும் பாம்பு இத்தல இறைவனை வழிபட்டு முக்தி அடைந்தது. அதனால் கார்கோடக க்ஷேத்ரம் என்றும் கோடகனூர் என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது.
நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறும் தலம்
இக்கோவிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை கிடையாது. இந்த ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும். ஜாதகத்தில் செவ்வாய் தசை நடைபெறும்போது இக்கோயிலுக்கு வந்து வழிபடுவது நற்பலன்கள் நடைபெற உதவுகிறது. இந்த கயிலாயநாதர் கோவிலில் அங்காரகன் சிவனை வழிபட்டதால் இது செவ்வாய் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள நந்திக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், 58 விரலி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள்.

தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
சிற்பிகளின் கனவு என்று கருதப்படும் கோவில்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஒரு அரிய விருந்தாகும் ஐராவதேசுவரர் கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோவிலே ஐராவதேசுவரர் கோவிலாகும். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்குகின்றது.
நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்
தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியது தான், இக்கோவில். இருப்பினும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், வெண்கல வார்ப்பு இவையனைத்தும் இந்த கோவில் சோழ வம்சத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என எல்லாவகை அளவுகளிலும் சிற்பங்களைக் கொண்ட அதிசய கோவில் இது. சோழர்களின் போர் முறை, சிற்பம், ஆடல், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானவியல், ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் என அனைத்தையும் சிற்பங்களாக தன்னுள் வைத்திருக்கும் பிரமாண்ட ஆலயம் இது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோவில் இது.
இக்கோவிலை, கோவில் என்று சொல்வதை விட சிற்பக் கலைக்கூடம் என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோவில் இது. சிற்பிகள் தங்கள் திறமை முழுவதையும் காண்பித்து இந்த கோவில் தலத்தின் உள்ளும், புறமும் நிறைய சிற்பங்கள் படைத்துள்ளனர். தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோவில் கொண்டுள்ளது.
இசைப் படிகள்
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சப்த ஸ்வரங்களை எழுப்பும் இந்த படிகள் மட்டுமின்றி, அங்கு இருக்கும் தூண்களும் தட்டும் போது, சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. இத்தூண்கள் வெவ்வேறு கனங்களில் இருக்கின்றன.
யானைகளும், குதிரைகளும் இழுத்துச் செல்லும் தேர் போன்ற மண்டபம்
ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும், குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில், யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மற்ற கோவில்களில் காணப்படாத ஒரு சில சிற்பங்கள் இங்கு வடிவமைக்க பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோவில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
வெளிச் சுவர் சிற்பங்கள்
கோவிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவன், குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் ஆகும்.
வல்லுனர்களால், 'சிற்பிகளின் கனவு' என்று கருதப்படும் இந்த கோவில், சிற்பக் கலைஞர்களுக்கும், சிற்பக் கலை ரசிகர்களுக்கும் ஒரு அரிய விருந்தாகும்.