பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
ஆங்கிலேய அதிகாரியின் வயிற்று வலியை தீர்த்த பழனி ஆண்டவர்
பழனிமலை தண்டாயுபாணிக்கு, ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகி றது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. தினமும் ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி ஆறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அந்த அலங்காரங்கள்
விளாபூஜை - காலை 6.40 மணிக்கு சன்யாசி அலங்காரம்
சிறுகாலசந்தி - காலை 8 மணிக்கு வேடர் அலங்காரம்
காலசந்தி - காலை 9 மணிக்கு பாலசுப்ரமணியர் அலங்காரம்
உச்சிகாலம் - பகல் 12 மணிக்கு வைதீகாள் அலங்காரம்
சாயரட்சைபூஜை - மாலை 5.30 மணிக்கு இராஜ அலங்காரம்
அா்த்தஜாம பூஜை - இரவு 8 மணிக்கு புஷ்ப அலங்காரம்
வெண்ணெய்யும், கோதுமை ரொட்டியும் நைவேத்தியம்
சிறுகாலச்சந்தி பூஜையின் போது ( காலை 8.00 - 8.30 மணி ) பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் முடிந்தபின் வேடர் அலங்காரம் செய்யப்படுகிறது. பழனி ஆண்டவருக்கு நைவேத்தியமாக மிளகு, சாம்பார்சாதம், வெண்ணெய், கோதுமை ரொட்டி படையலாகப் படைக்கப்படுகின்றது. அவருக்கு வெண்ணையும், கோதுமை ரொட்டியும் படைக்கப்படுவதின் பின்னணியில் அவர் ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இருக்கின்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பழனிப் பகுதியை நிர்வகித்த ஆங்கிலேய அதிகாரிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வயிற்றுவலியைத் தீர்த்தருளுமாறு பழனியாண்டவரை அவ்வதிகாரி வேண்டிக் கொண்டார். வலி தீர்ந்தால்தாம் உண்ணும் உணவை பழனியாண்டவருக்குப் படைப்பதாகவும் வேண்டிக்கொண்டார். இறைவன் அவ்வதிகாரியின் தீராத வயிற்று வலியைத் தீர்த்து அருளினார். அன்று முதல் சிறுகாலபூஜையின்போது வெண்ணெய்யும், நெய்யால் சுடப்பட்ட கோதுமை ரொட்டியும் ஆண்டவருக்கு படையாலகச் சேர்த்துப் படைக்கப்படுகிறது.
பிரார்த்தனை
நெடுநாட்களாக முடியாமல் இழுத்தடிக்கும் வழக்கு தீராத நோய் போன்ற பிரச்சினைகள் தீர பழனி ஆண்டவரை, அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பது நல்லது. வீட்டில் நடைபெறப்போகும் திருமணம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.
காஞ்சிபுரம் ஜுரஹரேஸ்வரர் கோவில்
உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களை தீர்க்கும் தலம்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஜுரஹரேஸ்வரர் கோவில். இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.
ஒரு சமயம் தேவர்கள் அனைவரையும் வெப்ப நோய் தாக்கியது. வெப்பம் தாக்கியதில் அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் ஜுரம் ஏற்பட்டது போல் உடல் வெப்பம் மிகுந்து துடித்தனர். பின்பு சிவனை தேவர்கள் சரணடைந்த போது, சுரன் என்கிற அசுரனை அழித்து பின்பு காஞ்சி நகரில் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் லிங்க வடிவில் தான் கோவில் கொண்டுள்ளதாகவும், அந்த லிங்கத்தை வழிபட்டால் ஜுரம், காய்ச்சல் தீர்ந்து உடல் வெப்பம் தணியும் எனக் கூறி அருளினார் சிவபெருமான்.
சிவபெருமான் பைரவர், வீரபத்திரர், சோமாஸ் கந்தர், தட்சிணாமூர்த்தி என்பது போன்ற 64 வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அவற்றில் ஒரு திருமேனி வடிவம்தான் ஜுரஹரேஸ்வரர். இந்த வடிவில் சிவபெருமான் இரண்டு தலைகள், ஏழு கைகள், நான்கு கொம்புகள், மூன்று கால்கள் கொண்ட தோற்றத்தில் காட்சி தருகிறார்.
ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் போன்று இக்கோவிலிலும் பிரணவாகார விமானம் கோபுரம் இருக்கிறது. இந்த கோபுரத்தில் நான்கு புறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல், ஜுரம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது இந்த கோபுர ஜன்னல் வழியே வருகிற காற்று, வெளிச்சம் போன்றவை பக்தர்களின் காய்ச்சல் போன்ற பல நோய்களை போக்குவதாகக் கூறப்படுகிறது. கோயிலின் கருவறையில் கருங்கல்லாலான ஜன்னல் இருக்கிறது.
சிற்பக்கலை பொக்கிஷம்
மிகப் பழமையான கோவில் என்பதாலும் மிக அழகிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாலும், இக்கோவில் தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இக்கோவிலில் உள்ள சிரிக்கும் தோற்றத்தில் உள்ள நந்தி, கோவில் விமானம் மற்றும் கருவறையின் அமைப்பு, கோவில் விமானத்தின் அடிச் சுற்றில் உள்ள சிற்பங்கள், படிக்கட்டுகள், கோவில் விமானம் மற்றும் கருவறையில் உள்ள கருங்கல் ஜன்னல்கள் ஆகியவற்றின் அழகும், கலை நுணுக்கமும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். காஞ்சிபுரத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. இக்கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.
பிரார்த்தனை
ஜுரம், காய்ச்சல் போன்ற பல நோய்கள் தீர இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.
கோவிலூர் சென்னகேசுவர பெருமாள் கோவில்.
பெருமாளுக்கு பொரிகடலை மாவு நைவேத்தியம்
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைந்துள்ளது கோவிலூர் சென்னகேசுவர பெருமாள் கோவில். கருவறையில் மூலவர் சென்னகேசுவரப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சென்னகேசுவர பெருமாளின் விக்ரகம் சில சமயங்களில் நரசிம்மரைப் போன்றே காட்சி தருகிறது. பொதுவாக பெருமாள்கோவில்களில் பைரவர் இருப்பதில்லை. ஆனால், இந்தக் கோவிலில் மூலவருக்கு அருகாமையிலேயே பைரவர் குடி கொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் காட்சி தருகிறார். ஆகையால், இந்த ஆஞ்சநேயர் வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
திருமலை வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர்
பதினேழாம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இந்த ஊர் இருந்த போது இந்தக் கோயிலுக்கு மைசூர் மன்னர்களால், ஸ்ரோத்ரியம் எனப்படும் மானியம் வழங்கப்பட்டது. ஆகையால் இந்த ஊஞக்கு ஸ்ரோத்ரியம் கோவிலூர் என்று பெயர் ஏற்பட்டது. மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வர் பெருமாளிடம் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தனர். அதன் பலனாக ஆண் சந்ததிகளை பெற்றனர். இவரை திருமலை வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர் என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக இவர் விளங்குகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் விதவிதமான நைவேத்தியங்கள் செய்யப்படும். ஆனால் இக்கோவிலில் வித்தியாசமாக, பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிமாவு கடலையை நைவேத்தியமாக படைக்கிறார்கள்
பிரார்த்தனை
கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத் தடை நீங்கவும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும் இந்தக் கோவில் பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
பட்டீஸ்வர கோபிநாதப் பெருமாள் கோவில்
தென்னாட்டின் துவாரகை
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீசுவரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது கோபிநாதப் பெருமாள் கோவில். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர் இக்கோவிலை தென்னாட்டின் துவாரகை என்று குறிப்பிட்டார். மூலவர் கோபிநாதப் பெருமாள், ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சியளிக்கிறார். இந்த கோவிலின் தல புராணத்தின்படி, பெருமாள் ராமாயணத்தில் அனுமனுக்கு ராமனாக தனது வடிவத்தை காட்டியது இங்குதான்.
1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை ஏந்தி இருக்கும் இரட்டை ஆஞ்சநேயர்
இத்தலம் மகாபாரதத்துடனும் தொடர்புடையது. இங்கு ஒரு காலத்தில் அழகான நீர் அல்லிகள் கொண்ட ஒரு பெரிய குளம் இருந்தது. அல்லி மலர்கள் 1000 இதழ்களுடன் மலர்ந்து காணப்பட்டன. திரௌபதி ஒருமுறை பீமனை அல்லி மலர்களை கொண்டு வர அனுப்பினாள். பீமன் இங்கு அல்லி மலர்களைப் பறிக்க வந்த போது, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்த அனுமனை எதிர்கொண்டான். அவன் அனுமனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அனுமனை ஒரு குரங்காக பாவித்து அவருடைய வாலை நகர்த்தி வழி விடச் சொன்னான். ஆனால் அதற்கு பதிலாக அனுமன் தனக்கு வயதாகிவிட்டதாகக் கூறி, பீமனை தன்னுடைய வாலை நகர்த்தச் சொன்னார் பீமன் பலமுறை முயற்சித்தும் தோல்வியுற்றான், அது சாதாரண குரங்காக இருக்காது, மாறாக அனுமன் என்பதை உணர்ந்தான். பீமன் தன் தவறை உணர்ந்து கொண்டதை அனுமன் அறிந்து, தன் விஸ்வரூபத்தின் மூலம் பீமனுக்கு தன்னை வெளிப்படுத்தினான். பீமன் அவரை வணங்கிய பிறகு, அனுமன் திரௌபதியிடம் திரும்ப எடுத்துச் செல்ல 1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை அவருக்கு வழங்கினார்.
இக்கோவிலில் தனி சந்நிதியில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். இரண்டு ஆஞ்சநேயகளும் தங்கள் கையில் 1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை வைத்திருக்கிறார்கள்.
சென்னை சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில்
ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தரும் காமாட்சி அம்மன்
சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று, தங்கசாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரேசுவரர் கோவில். இக்கோவில், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரிமுனையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் காமாட்சி.
இத்தலத்து அம்பாள் காமாட்சி, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தின் மூலம் உணர்த்தியது போல, இத்தலத்து காமாட்சி அம்பாள் ஆவுடையார் மேல் நின்றபடி சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். அதனால் இங்கு அம்மனே பிரதானமாகவும் கருதப்படுகிறார். அம்பாளின் பாதத்திற்கு முன் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆலயத்தில் அம்பாளுக்கு எதிராக சனீஸ்வரர் வீற்றிருப்பதால், இத்தல அம்மனை வழிபட்டால் சனியின் கெடு பார்வையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பிரார்த்தனை
திருமண வரம், வீடு வாங்கும் யோகம் ஆகியவற்றை தருவதால் இக்கோவில் பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்குகிறது.
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.
திருச்செங்கோடு தலத்தில் சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி தருவது போல, இத்தலத்தில் கிருஷ்ணனும், ருக்மிணியும் இணைந்த 'சம்மோகன கிருஷ்ணர்' எனும் அபூர்வ கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவரும் இணைந்திருக்கும் கோலத்திற்கு கோபால சுந்தரி என்ற பெயரும் உண்டு.
இக்கோவில் மகாமண்டபத்தின் வலது புற விளிம்பில் ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில், இந்த இருவரும் இணைந்த கோலத்தில் வலப்புறம் ஆண் உருவமும், இடப்புறம் பெண் உருவமும் கொண்டு, சங்கு, சக்கரம் அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், சம்மோகன கிருஷ்ணர் தோற்றமளிக்கிறார்.
பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழை பொழியும் கண்களோடு அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர் திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்யங்களும் வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.அனைத்து சம்பத்துக்களும் சேரும். இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.
சம்மோகன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) ஸ்லோகம்
மரிசீ மகரிஷி இயற்றிய கீழ்க்கண்ட அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) ஸ்லோகம் நிம்மதியற்ற குடும்பங்களில் மன நிம்மதியையும் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும்.
“ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!”
காலையில் நீராடிய பின்பு மூன்று முறையும், இரவில் உறங்கப் போகும். முன்பு ஒரு முறையும் இந்த ஸ்லோகத்தை சொல்வது அளவற்ற நன்மையைத் தரும். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தரும். திருமணமாகாத பெண்களுக்குக் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.
இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களுக்காக நடத்தப்படும் லட்சார்ச்சனை
இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டிறுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இத்தலத்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எங்கும் இப்படிப்பட்ட லட்சார்ச்சனை நடத்தப்படுவதில்லை.
வடசேரி கிருஷ்ணன் கோவில்
சந்தான வரம் அருளும் பாலகிருஷ்ணன்
நாகர்கோவில் நகரத்தின் வடசேரி பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். இத்தலம் தென் திசையின் குருவாயூர் என்று அழைக்கப்படுகிறது. குருவாயூர் கிருஷ்ணனைப் போலவே, இத்தலத்து மூலவர் பாலகிருஷ்ணன் குழந்தை வடிவில், தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்றபடி காட்சி அளிக்கிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜகோபாலரையும் வடித்துள்ளனர். உற்சவர் ராஜகோபாலர் ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.
இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார். தினந்தோறும் பாலகிருஷ்ண சாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக, குழந்தை போலவே காட்சியளிப்பார்.
தல வரலாறு
கி.பி. 13-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்ம மகாராஜா, குருவாயூர் கிருஷ்ணனின் சிறந்த பக்தர். ஒருமுறை கிருஷ்ணர் இவரது கனவில் கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக காட்சி தந்தார். அது மட்டுமன்றி தனக்கு கோயில் அமைய இருக்கும் இடத்தையும் குருவாயூரப்பனே கூறியுள்ளார். நாளை காலை சூரிய உதயத்தின் போது அருகே இருக்கும் கானகத்திற்கு செல். அடர்ந்த மரச்சோலைக்குள் சிறிய குளம் ஒன்றின் அருகே கருடன் இருப்பான்.அவ்விடமே எனக்கு கோவில் அமைய ஏற்ற இடம் என்று கூறியுள்ளார். அதன்படி மறுநாள் காலை அவ்விடம் வந்த ஆதித்தவர்ம மகாராஜா கருடனை கண்ட இடத்திலேயே கோயில் எழுப்பினார். அதுதான் இப்பொழுது கோவில் அமைந்திருக்கும் இடம். தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினார்.
குழந்தை கிருஷ்ணருக்கு வெள்ளி தொட்டிலில் தாலாட்டு
ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ணன் சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.
தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி, பால் பாயாசம், உன்னியப்பம், பால்,பழம்,அரிசிப்பொரி,வெண்ணெய்,அவல்,சர்க்கரை படைக்கின்றனர். தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து பால கிருஷ்ணனை வழிபட்டு வெண்ணையும், பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில்
பீடத்தின் வடிவில் காட்சி தரும் அபூர்வ முருகன்
விருத்தாச்சலம் – சேலம் சாலையில், விருத்தாசலம் நகருக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். குளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே முருகன் தோன்றியதால் இவர் 'குளஞ்சியப்பர்' எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் 'கொளஞ்சியப்பர்' என திரிந்தது.
கருவறையில் எழுந்தருளி இருக்கும் முருகன், உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் – அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்டவர். ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார். 3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலிபீடப் பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.
பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்குப் பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேடம். குழந்தை பிறந்ததிலிருந்து இந்தக் கோவிலுக்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்; பொட்டு கூட வைக்க மாட்டார்கள். இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு, பொட்டு வைக்கிறார்கள்.
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மருந்தாகும் முருகனின் விபூதி பிரசாதம்
ப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க, அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபட்டு, முருகனின் பிரசாதமான விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன. ஆறாத புண்கள், கட்டிகள், முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும், மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக் கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ்வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது. இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.
புதுமையான 'பிராது கட்டுதல்' என்ற பிரார்த்தனை நடைமுறையும், பின்னர் நேர்த்திக்கடன் நிறைவேற்ற ராஜினாமா கட்டணம் செலுத்தும் முறையும்
இத்தலத்தில் பக்தர்கள் தம்குறை தீர்க்க வேண்டி செய்யும் பிராது கட்டுதல் என்ற நேர்த்திக்கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது. இந்த பிராது கட்டுதல், நாம் நமது மேலதிகாரிகளுக்கு எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போல அமைந்துள்ளது. பிராது கட்டுவதற்காக கோயிலின் பிரகாரத்தில் முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். நியாயமான கோரிக்கைகள், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில், முருகக் கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எந்த ஊரிலிருந்து வருகிறோமோ, அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 25 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.
கோரிக்கை நிறைவேறினால், இந்த தேதியில் நான் வந்து வைத்த பிராது கட்டுதல் நிறைவேறியதால், அதை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தலாம்.
குழந்தை வரம், கடன் தொல்லை, திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம், பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்
நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டுவோருக்கு பலன் தரும் தலம்
காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கிலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கிலும் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. குழந்தையற்ற தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் பிரதான வழிபாட்டுத் தலமாக இக்கோவில் விளங்குகிறது. கருவறையில் மூலவர் புத்திரகாமேட்டீசுவரர் ஒன்பது தலை நாகத்தின் கீழ் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தி நீண்ட நாட்களாக தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கவலை கொண்டிருந்தார். குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, இத்தலத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்பின்னர், அவருக்கு ராமர், பரதன், லட்சுமணன். சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் புத்திரகாமேட்டீசுவரர் என்றே பெயர் சூட்டினார். கோவிலுக்கு நேரே, வெளியில் தசரதருக்கும் சன்னதி உள்ளது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில், முனிவர் போல கைகளில் ருத்ராட்ச மாலை. கமண்டலம் வைத்து காட்சியளிக்கிறார். தசரதர் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரார்த்தனை
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் புத்திரகாமேட்டீசுவரரை வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வேண்டி, புத்திரகாமேட்டீசுவரரை வணங்குவோர், ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள் மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில் ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைக்கு அள்னதானம் பரிமாறி விரதமிருக்க வேண்டும். ஏழாவது திங்கள்கிழமையன்று இங்கு புத்திரகாமேட்டீசுவரருக்கு செவ்வலரிப்பூ மற்றும் கோயிலில் உள்ள பவன் மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று சிவனுக்கு சிவாச்சாரியார்கள், புத்திரகாமேஷ்டி யாகம் நடத்துவர். இதிலும் கலந்து கொள்ளலாம். ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் உண்டாகும் புத்திர தோஷம் நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.
தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில்
ராகு- கேது உடன் இருக்க அருள் பாலிக்கும் ஸ்ரீசக்தி விநாயகர்
திருநெல்வேலி தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேது உடன் இருக்க ஸ்ரீசக்தி விநாயகர் அருள் பாலிக்கிறார் . ஸ்ரீவிநாயகருக்கு வலப்பக்கம் உள்ள ஐந்து தலை நாகத்தைப் பெருமாளாகவும், ஒற்றைத் தலை நாகத்தை சிவலிங்கமாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.
ஒருகாலத்தில், இந்த ஊரில் கோவிலே இல்லாமல் இருந்ததாம். இதனால் அங்கே அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்ததாக எண்ணிய ஊர்மக்கள் அதையடுத்து கூடிப் பேசி, இந்த விநாயகர் கோவிலைக் கட்டினார்கள்.விநாயகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும்போது, மக்கள் கூடவே ராகு-கேது (நாக) விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் .
பிரார்த்தனை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மாங்கல்ய தோஷம், புத்திர பாக்கிய தோஷம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், இங்கு நாக பிரதிஷ்டையுடன் அருள் தரிசனம் தரும் ஸ்ரீவிநாயகரை வழிபட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருடந்தோறும் ராகு-கேது பெயர்ச்சி அன்று ஸ்ரீகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், ஆயுளை விருத்திப்படுத்த ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை இங்கே விமரிசையாக நடைபெறும்.
திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்
விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து மாங்கனியை பெற்ற தேவாரத்தலம்
வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. முழு முதல் கடவுளான விநாயகப் பெருமான், நாரதர் மாங்கனியை சிவபெருமானிடம் தந்த பொழுது அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்று கூறி உலகிற்கு அறிவித்து சிவபெருமானையும், அம்பாளையும் வலம் வந்து வணங்கி கனியைப் பெற்றுக் கொண்டது இத் திருத்தலத்தில்தான். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இத் திருத்தலம் திருவலம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி திருவல்லம் என்றானது.
இக்கோவிலில் விநாயகர், கருவறையில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். அதனால் இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். முருகப் பெருமானுடன் நடந்த போட்டியில் விநாயகப் பெருமான் ஞானப் பழத்துடன் இத்திருத்தலத்தில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவரை வணங்கும் பேறு பெறுவோர், பிறப்பற்ற நிலையை அடைவர் என்று சொல்கிறார்கள்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தரும் பகவதி அம்மன்
கன்னி்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டு வந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர். அதுவே காலப்போக்கில் மருவி'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது.
பகவதி அம்மன் பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தருகிறார். 15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோவிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.
பெண்களின் சபரிமலை
கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.. சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கில் வந்து தரிசனம் செய்வார்கள். மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.
பிரார்த்தனை
செவ்வாய்,வெள்ளிக் கிழமை, பௌர்ணமி நாட்களில் மண்டைக்காடு அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசி மாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்ட பிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.
சென்னை சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில்
ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் விநாயகரும், முருகப்பெருமானும் காட்சியளிக்கும் அபூர்வ கோலம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. சென்னையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இத்தலம் நிலத்திற்கு உரியது.
பல்லாண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக ஒருவர் வசித்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று அவர் காஞ்சிபுர கோவிலுக்கு செல்ல எண்ணியபோது, பல தடைகள் ஏற்பட்டது. பணியில் ஏற்பட்ட சிறிய சுணக்கம் காரணமாக அவரது முதலாளியும் கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்தார். பக்தரோ அதை மீறிக் கோவிலுக்கு சென்றார். வழியில் களைப்படைந்த அவர் இத்தலத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது, சிவன் அம்பாளுடன் காட்சிதந்து, 'இனி என்னை வழிபட நெடுதூரம் வரவேண்டாம்; நீ ஓய்வெடுத்த இடத்திலேயே நான் சுயம்புவாக இருக்கிறேன்; என்னை இங்கேயே வழிபடு, என்றாராம். அதன்பின், இவ்விடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.
கோவிலுக்கு வெளியே அரசமரத்தின் அடியில் ஒரு இலிங்கம் தனி சன்னதியில் உள்ளது. கருவறைக்குள் சென்று நாமாக பாலாபிஷேகம், வில்வஇலை அர்ச்சனை செய்து வழிபடலாம். இங்கு, சப்தநாகத்தின் கீழ் சகோதர விநாயகர் தனிச்சன்னதியில் உள்ளார். இதே சிலையின் பின்புறத்தில் மயில்வாகனத்துடன் நின்ற கோலத்தில் முருகன் இருக்கிறார். இப்படி விநாயகரும், முருகப்பெருமானும் ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் எழுந்தருளியிருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.
கொடுமுடி மகுடேசுவரர் கோவில்
மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் தேவாரத்தலம்
கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில்,, காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி.
இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடு கோபுர வாயிலின் வழியாக சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மனை தரிசனம் செய்யலாம். நடுவாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால் மூலவர் மகுடேசுவரரை தரிசிக்க முடியும். அகத்தியர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்ததற்கு அடையாளமாக லிங்கத்தின் மீது விரல் தடயங்கள் உள்ளதை காணலாம்.
பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காத அதிசய வன்னி மரம்
இந்தக் கோவிலில் இருக்கும் மற்றொரு சிறப்பு தல விருட்சமான வன்னி மரம் தான். இந்த வன்னி மரத்தின் அடியில் மூன்று முகம் கொண்டவராக பிரம்மா அருள் புரிகிறார். இந்த வன்னிமரம் மிகவும் பழமையானது. இந்த மரத்தில் பூக்கள் பூக்கிறது. ஆனால் காய் காய்க்காது. மரத்தின் ஒரு பக்கத்தில் முள் இருக்கும். மறுபக்கத்தில் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தண்ணீரில் இந்த இலையை போட்டு வைத்தால் தண்ணீரானது எத்தனை நாட்கள் ஆனாலும் கெடுவதில்லை. பழனியில் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு இங்கு ஓடிக்கொண்டிருக்கும் காவிரி நதியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் தீர்த்தத்தில், இந்த வன்னி மரத்தின் இலையை போட்டுத்தான் பக்தர்கள் பாதயாத்திரையாக எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவிட்டம் நட்சத்திரத்திற்கான பரிகாரத் தலம்
பிரம்மாவுக்கு அவிட்டம் நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தலமானது. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இந்த கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில்
தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன்
நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில். இக்கோவிலில் ராஜராஜேஸ்வரி, கற்பகவல்லி என்று இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சிவபெருமான், ராஜராஜேஸ்வரி அம்பிகையை சதுரங்க ஆட்டத்தில் வென்று மணம் புரிந்தார். அதனால் இத்தல இறைவனுக்கு சதுரங்க வல்லபர் என பெயர். சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும், 64 நாட்டிய நிலைகளையும் குறிக்கின்றது என்பதனை அம்பிகை மூலம் இறைவன் உணர்த்தி உள்ளார்.
மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது. இத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் போல் இந்த அம்மனும் வடக்கு நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள். இவள் தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.இந்த அம்மன் விசேஷமான சக்தி உடையவள். சாமுண்டேஸ்வரி அம்மனிடம் பெண்கள் பிரார்த்தனை சீட்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அந்த பிரார்த்தனையானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்கும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள்.
எலிக் கடியினாலும், பிற விஷக் கடியினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது. ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய, அகத்தியர் பிரானின் ஆசியோடு, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகை வேர் ரட்சை கட்டப் பெறுகின்றது. இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது.
சர்க்கரை பாவாடை விழா
ஆடி மாதத்தில் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை போடப்பட்டு நிவேதனம் செய்ப்படுகிறது அப்போது அம்மனின் முகம் அந்த சர்க்கரை பாவாடையில் தெரியும்போது தீபாராதனை நடக்கிறது. அவ்விழாவின் போது சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
குதிரை முகத்துடன் காட்சி தரும் நந்தி
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, முறப்பநாடு கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன்.
தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ள ஒன்பது கைலாய தலங்களில், இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, 'நடுக்கைலாயம்' என்கின்றனர். நவக்கிரகத்தில் குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய தலம் முறப்பநாடு ஆகும். இத்தலத்தில் தாமிரபரணி ஆறு காசியில் உள்ளது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை எனப் பெயர்.இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம்.
இக்கோவிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான். சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகாக தோன்றினாள். இங்குள்ள நந்தி, மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சியளிக்கிறது. மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோவில் கட்டினான். மன்னன் மகளின் குதிரை முகம் மாறியபோது, அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக் கொண்டதாம். எனவே இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள்.
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
அந்தரத்தில் தொங்கும் 2000 கிலோ எடையுள்ள அதிசய கல் தூண்
தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் கல்யாண காமாட்சி கோவில். இந்த கோயில் கோட்டை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.
சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்ட இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை 2000 கிலோ. இதனால் இத்தூண் 'தொங்கும் தூண்' என்று அழைக்கப்படுகின்றது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்து சொல்வதுபோல் உள்ளது . மண்டபத்தின் விதானத்தில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே கால் மாறி ஆடும் நடராஜர் அருள்புரிகிறார். மதுரையை அடுத்து இந்த தலத்தில் தான் நடராஜரின் கால்மாறி ஆடும் கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும்.
ஸ்ரீசக்கரத்தின் மீது எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது, ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில் சிற்ப வடிவில் யானையின் தலை மட்டும் உள்ளது. 18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கிகொண்டுருக்கிற மாதிரி ஒரு அற்புதமான தோற்றம். இந்த 18 யானைகளுக்கு நடுவில், சன்னதியின் வெளிசுவற்றின் அடிப்பாகத்தில் இராமாயண காவியம் சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கோவிலின் வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனுக்கும் அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
சன்னதியின் மேற்கூரையில் தங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், கரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். பெருமாளின் சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கின்றன. இந்த நவக்கிரகங்கள், அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்களுக்குரிய மரங்கள்/ தாவரங்கள் சூரியன் - எருக்கு மரம்; சந்திரன் - பலாசு மரம்; செவ்வாய் - கருங்காலி மரம்; புதன்- நாயுருவி, சுக்கிரன் - அத்தி மரம்; குரு- ஆல மரம்; சனி- வன்னி மரம்; ராகு - அருகம்புல்; கேது- வெற்றிலைக்கொடி ஆகியவை ஆகும்.
திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில்
திருமேனியில் அஷ்ட லட்சுமிகளை தாங்கி இருக்கும் அபூர்வ பெருமாள்
சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. பொதுவாக, பெருமாளை அமர்ந்திருந்த கோலத்தில் நாம் பார்ப்பது மிக அரிது. இங்கே பெருமாள் வீற்றிருந்த பெருமாளாக அஷ்டலட்சுமியுடன் எழுந்தருளியிருக்கிறார். அவரின் வலப்பக்கம் ஸ்ரீதேவி, இடப்பக்கம் பூதேவி, பெருமாளின் சிரசில் பொருத்தப்பட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர், மார்பில் 2 லட்சுமிகள் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும ஐக்கியமாகி இருப்பதால், சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
வெளிநாடு செல்லும் பக்தர்களின் விசா பிரச்சனைகளை தீர்க்கும் விநய ஆஞ்சநேயர்
இக்கோவிலில் விநய ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்து இருப்பதால் இந்த விநய ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவர். பொதுவாக ஆஞ்சநேயர் மேற்கு திசை பார்த்து இருப்பார். அதாவது ராமரைப் பார்த்து நின்றிருப்பதாக ஒரு ஐதீகம். ஆனால் இங்கு வடக்கு நோக்கி அதாவது குபேரனை நோக்கி நின்று நமக்கு நோய்களை நீக்கி மற்றும் செல்வங்களை வழங்குகிறார். பக்தர்களின் குறையைத் தீர்த்து வைப்பதாலும், உடல்ரீதியான பிரசனைகளை தீர்ப்பதால் இவர் வைத்தியர் எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் இவரிடம் வெளிநாடு செல்லும் பக்தர்கள் முழு மனதுடன் வேண்டினால் விசாவில் ஏற்படும் பிரசனை, தடைகள் நீங்கி விசா கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு குறை தீர்வதால் இவர் விசா ஆஞ்சநேயர் என்றும் புகழ்பெற்றுள்ளார். வடக்கு முக ஆஞ்சனேயரை தரிசனம் செய்து வடைமாலை சாற்றினால், காரிய சித்தி மற்றும் வியாபாரத்தில் வெற்றி அடைய வாய்ப்புண்டு.
ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோவில்
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சுவர்ண பைரவர்
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆடுதுறை. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேசுவரர். இறைவியின் திருநாமம் பவளக்கொடியம்மை. இத்தலம் காவிரிதென்கரையில் இருப்பதாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்றும் வழங்கப்படுகிறது.
அனுஷம் நட்சத்திரத்தின் சிறப்புகள்
முற்பிறவிகளில் அளவற்ற தான தர்மங்களைச் செய்தவர்கள், இப்பிறவியில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறப்பார்கள். முற்பிறவியில் சிறிது பூர்வ புண்ணியம் சேர்த்தவர்களும் இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குருவை அடைவது அனுஷத்தில் பிறந்தவர்களே. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முற்பிறவியில் சிறிது பூர்வ புண்ணியம் சேர்த்திருந்தாலும் கூட, இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குருவை அடைவார்கள்.
சுவர்ண பைரவர் வழிபாடு
அகத்தியர் இந்த தலத்தில் சுவர்ண பைரவர் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனாலேயே பல வரங்களைப் பெற்றார். அவருக்கு ஈசன் நடனகோலம் காட்டியருளினார். சுவர்ணபைரவர் இங்கே சக்தி வாய்ந்தவராக அருள்பாலித்துவருகிறார். சுவர்ண பைரவரைச் சிறப்போடு பூஜை செய்து அன்புடன் வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். தீராத நோய்கள் தீரும்; தனம் தானியம் பெருகும்; புகழ் உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாதம் ஒருமுறை தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வர வேண்டும்;ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு,ராகு காலத்தில் சுவர்ண பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்து வர இறையருளும்,குருவருளும்,பைரவ அருளும் சித்திக்கும்.