மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.
திருச்செங்கோடு தலத்தில் சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி தருவது போல, இத்தலத்தில் கிருஷ்ணனும் ருக்மிணியும் இணைந்த 'சம்மோகன கிருஷ்ணர்' எனும் அபூர்வ கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவரும் இணைந்திருக்கும் கோலத்திற்கு கோபால சுந்தரி என்ற பெயரும் உண்டு.
இக்கோவில் மகாமண்டபத்தின் வலது புற விளிம்பில் ருக்மிணியும், கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில், இந்த இருவரும் இணைந்த கோலத்தில் வலப்புறம் ஆண் உருவமும், இடப்புறம் பெண் உருவமும் கொண்டு, சங்கு, சக்கரம் அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், சம்மோகன கிருஷ்ணர் தோற்றமளிக்கிறார்.
பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழை பொழியும் கண்களோடு அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர் திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்யங்களும் வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.அனைத்து சம்பத்துக்களும் சேரும். இத்திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.
சம்மோகன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) ஸ்லோகம்
மரிசீ மகரிஷி இயற்றிய கீழ்க்கண்ட அரிய சக்தி வாய்ந்த சம்மோகன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) ஸ்லோகம் நிம்மதியற்ற குடும்பங்களில் மன நிம்மதியையும் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும்.
“ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!”
காலையில் நீராடிய பின்பு மூன்று முறையும், இரவில் உறங்கப் போகும். முன்பு ஒரு முறையும் இந்த ஸ்லோகத்தை சொல்வது அளவற்ற நன்மையைத் தரும். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தரும். திருமணமாகாத பெண்களுக்குக் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.
இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களுக்காக நடத்தப்படும் லட்சார்ச்சனை
இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டிறுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இத்தலத்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எங்கும் இப்படிப்பட்ட லட்சார்ச்சனை நடத்தப்படுவதில்லை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
சன்னதியின் மேற்கூரையில் தங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்
https://www.alayathuligal.com/blog/btwbz99k8pl7at8nhhmwebx49jnp5s