பாகம்பிரியாள் கோயில்
புற்றுநோயை குணப்படுத்தும் பாகம்பிரியாள்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டால், நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து இறைவன் திருநாமம் பழம் புற்றுநாதர். வாமன அவதாரம் எடுத்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்டார். மகாபலி அந்தத் தானத்தைக் கொடுக்க, தன் முதல் ஓரடியால் மண்ணுலகத்தையும், ஈரடியால் விண்ணுலகத்தையும் அளந்த மகாவிஷ்ணு, தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து, அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பினார். நீதி நெறி தவறாமல், தர்மத்தின்படி ஆட்சி செய்துவந்த மகாபலியை பாதாளத்துக்கு அனுப்பிய மகாவிஷ்ணுவைத் தொடர்ந்து வந்த தர்மதேவதை, அவரின் பாதத்தில் புற்றுநோய் ஏற்பட சாபம் தந்தாள். தர்மதேவதையால் சபிக்கப்பட்ட மகாவிஷ்ணு, தனது சாபம் தீர பூவுலகில் சிவாலய தரிசனம் செய்து, திருவாடானை ஆதிரத்தினேஸ்வரரை வணங்கி, பின் ஜெயபுரம் என்கிற வெற்றியூர் தலத்தை அடைந்தார். அங்கு வாசுகி தீர்த்தத்தில் நீராடி, இறைவன் பழம்புற்று நாதரை வழிபட்டு சாபவிமோசனம் அடைந்தார். பாதத்தில் ஏற்பட்டிருந்த புற்றுநோயும் தீர்ந்தது. புற்றுநோய் தீர வாசுகி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வணங்கி தீர்த்தம் வாங்கிக் குடித்து வர குணம் அடையலாம் என்று இப்பகுதி மக்கள் இன்றும் நம்பிக்கையுடன் இத்தலம் வந்து வழிபடுகின்றனர். மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர்.
கடம்பவனேசுவரர் கோயில்
கருவறையில் சிவபெருமானுடன் காட்சி தரும் சப்த கன்னியர்கள்
பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோவில்களில் உபசன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்குத் தனியாக கோவில் அமைந்திருக்கும். ஆனால், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், சப்த கன்னியர்கள் மூலவர் கடம்பவனநாதரின் பின்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இதுபோல மூலஸ்தானத்தில் சப்த கன்னியர்கள் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு வேறு எங்கும் காண முடியாது.
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில்
வெட்டுடையார் காளியம்மனிடம் பக்தர்கள் செய்யும் வினோதமான முறையீடு
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் தன் வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள. இங்கு பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனை சற்று வினோதமானது. செய்யாத தவறுக்கு பரிகாரம் தேடுவோர், தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டோர் ஆகியோர் இந்த அம்பாளிடம் வந்து வேண்டிக்கொள்கின்றனர் இங்கு வந்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என் மீது வீண் பழி சுமத்தியவர்களை பார்த்துக்கொள் என்று காசு வெட்டிப் போட்டு வேண்டிக்கொள்கின்றனர். தவறு செய்தவர்களை வெட்டுடையார் காளியம்மன் தக்கபடி தண்டிப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இப்படி வெட்டிப் போடப்பட்ட காசுகள், சன்னதிக்குப் பின்புறம் உள்ள பீடத்தில் ஏராளமாக இருக்கின்றன. ஏவல், பில்லி சூனியங்களையும், கண் திருஷ்டிகளையும் நீக்குபவளாக இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் இருக்கின்றாள்..
வேணுகோபாலசுவாமி கோயில்
குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார். சுமாா் 6 அடி உயரத்தில், இருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இருக்கரங்களில் புல்லாங்குழல் பற்றி, வலது திருப்பாதத்தை சற்றே மடித்து, ஒய்யாரமாகக் காட்சி தரும் ஶ்ரீவேணுகோபாலனின் எழிற் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்..மூங்கிலால் வேயப்பட்டதைப் போன்ற அழகிய புல்லாங்குழலில் வேணுகோபாலன் தன் விரல்களை லாவகமாக அதன் துளைகளில் பதித்து, கன்னங்கள் குவிய தன் திருப்பவளச் செவ்வாயால் குழலூதும் பேரழகுக் காட்சியைக் காண இரு கண்கள் போதாது.
கொடுங்குன்றநாதர் கோயில்
வயோதிக கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
பிரான்மலை தலத்தில், முருகப்பெருமான் தனிச்சன்னதியில் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னதி எதிரில் மயில் வாகனம்தான் இருக்கும். ஆனால், இவரது சன்னதி எதிரில் யானை வாகனம் இருக்கிறது. அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடனக்காட்சி காட்டியதாக ஐதீகம்.
நெடுங்களநாதர் கோயில்
சூரியனை நோக்கி திரும்பியிருக்கும் எட்டு கிரகங்கள்
சிவாலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் இருக்கும் பீடத்தில் சூரியன் நடுவில் இருப்பார். அவரை சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் வெவ்வேறு திசைகளை நோக்கிய வண்ணம் இருப்பார்கள். ஆனால் திருச்சியை அடுத்த தேவாரப்பாடல் பெற்ற திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஆலயத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் தன் இரு தேவியருடன் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மற்ற எட்டு கிரகங்கள், சூரியனை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். இப்படி சூரியனை நோக்கி உள்முகமாக திரும்பி இருப்பது ஒரு அரிதான அமைப்பாகும்.
மாணிக்கவண்ணர் கோயில்
ரிஷப வாகனத்தில் விநாயகர்
மயிலாடுதுறை அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருவாழ்கொளிபுத்தூர் ரத்தினபுரீஸ்வரர் ஆலயத்தில் காட்சி தரும் நடன விநாயகர், ரிஷப வாகனத்தில் இருக்கிறார். இது விநாயகரின் ஓர் அபூர்வமான காட்சியாகும்,
சிவாநந்தீஸ்வரர் கோயில்
முருகப் பெருமான் ஜெப மாலை,அமுத கலசம் தாங்கி காட்சிதரும் தேவாரத் தலம்
தேவாரத் தலமான திருக்கள்ளில் கோயிலில் உள்ள முருகப் பெருமான் வலது கையில் ஜெப மாலை, இடது கையில் அமுத கலசம் ஆகியவை தாங்கி நின்ற கோலத்தில், பிரம்ம முருகன்' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றார். முருகப் பெருமானது சன்னதி, சுவாமி சன்னதிக்கும், அம்மன் சன்னதிக்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் இருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வல்வில்ராமன் கோயில்
சயன கோலத்தில் ராமர் காட்சி தரும் திவ்ய தேசம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருப்புள்ளம்பூதங்குடி. மூலவர் வல்வில்ராமன். பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு என்னும் கழுகு, இராவணனை எதிர்த்து போரிட்டு உயிர் துறந்தது. சீதையைத் தேடிக் கொண்டு வந்த இராமபிரான், ஜடாயுவிற்கு இறுதிக் கடன்களைச் செய்தமையால் இத்தலம் 'புள்ளம்பூதங்குடி' (புள் - பறவை) என்று அழைக்கப்படுகிறது. இராமபிரான், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தபிறகு, சிரமப் பரிகாரத்திற்காக இத்தலத்தில் சயனித்திருந்ததால் 'சிரமப்பரிகார பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். அதனால் பெருமாளுக்கு அம்பு, வில் போன்ற ஆயுதங்கள் இல்லை.
துளஸீஸ்வரர் கோயில்
துளசி தீர்த்தப் பிரசாதம் தரும் சிவாலயம்
தாம்பரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கப் பெருமாள் கோவில் என்ற ஊருக்கருகில் கொளத்தூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது. இங்கு துளஸீஸ்வரர் திருக்கோவில் எனும் சிவாலயம் உள்ளது. அகத்திய முனிவர் கயிலாயததிலிருந்து தென்பகுதிக்கு செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் துளசி செடிகள் நிறைந்த வனமாக காட்சியளித்த இத்தவத்திற்கு வந்தார். அவர் சிவ வழிபாட்டிற்காக ஏதாவது சிவாலயம் இருக்கின்றதா என்று இத்தலத்தில் தேடினார். அப்போது ‘அகத்தியரே என்னைத் தேடி அலைய வேண்டாம். நான் துளசி செடிகள் சூழ இங்குதான் மறைந்து இருக்கின்றேன்’ என்று அசரீரி ஒலித்தது. அகத்தியர் அசரீரி வந்த திசையில் சென்று பார்த்தபோது, அங்கே சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அகத்தியர் அந்த சிவலிங்கத்திற்கு துளசியை சூட்டி துளசியாலேயே அர்ச்சனை செய்தார். அதனால் இத்தலத்தில் இன்றும், துளஸீஸ்வரரை துளசியால் அர்ச்சித்து துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
காயத்ரிதேவி அம்மன் கோவில்
மூன்று அம்பிகைகளின் அம்சமாகத் திகழும் காயத்ரிதேவி அம்மன்
காயத்ரிதேவி அம்மனுக்கு முதன்முதலாக கோவில் எழுப்பப்பட்ட தலம் சிதம்பரம் ஆகும். இக்கோவிலில் மூலவர் காயத்ரிதேவி அம்மன் சன்னதிக்கு வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் தனிச்சன்னதிகளில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில் காயத்ரிதேவி அம்மன் ஐந்து முகங்களுடனும், பத்து திருக்கரங்களுடனும் தாமரை மலர் மேல் அமர்ந்து இருக்கிறாள். அவரது கரங்களில் கதை, அங்குசம், சங்கு, சக்கரம், தாமரைமலர், சாட்டை, கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். பிரம்மா, விஷ்ணு, சிவன், காயத்ரி, சாவித்ரி ஆகிய ஐந்து கடவுளர்களின் வடிவமாக காயத்ரிதேவி அம்மன் திகழ்கிறாள். இவள் காலையில் காயத்ரி, மதியம் சாவித்திரி, மாலையில் சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள் என்பது ஐதிகம். காயத்ரிதேவி அம்மனை வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விருத்தபுரீசுவரர் கோயில்
ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்புரியும் திருத்தலம்
அறந்தாங்கியில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புனவாசல் தலத்தில, ஒரே சந்நிதியில் ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
கோபாலகிருஷ்ணன் கோயில்
தேவலோக பாரிஜாத பூச்செடி நடப்பட்ட திவ்ய தேசம்
சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூரின் 11 திவ்யதேசங்களில் ஒன்று திருக்காவளம்பாடி காவளம் என்றால் பூஞ்சோலை என்று அர்த்தம். மூலவர்:கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) பாமா, ருக்மணியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி, கிருஷ்ணனால் பூலோகத்தில் நடப்பட்ட இடம் தான் திருக்காவளம்பாடி
வரலட்சுமி விரதம்.
சகல செல்வங்களையும் அள்ளித் தரும் வரலட்சுமி அம்மன்
சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியத்திற்காகவும் மற்றும் குடும்ப சுபிட்சத்திற்காகவும், மகாலட்சுமிக்கு செய்யும் வழிபாட்டு பூஜையே இந்த வரலட்சுமி விரதம் ஆகும். ஒரு காலத்தில் மகத தேசத்தில், குண்டினபுரம் என்ற ஊரில் சாருமதி என்பவள் வசித்து வந்தாள். அவள் நல்ல குணங்களையும் நற்பண்புகளையும் பெற்றிருந்தாள். தன் கணவருக்கும் அவரின் பெற்றோருக்கும் பணிவிடை செய்வதையே தன் முதல் கடமையாகக் கொண்டிருந்தாள். அவள் குடும்பம் வறுமையில் வாடினாலும், இறைவனிடத்தில் மிகுந்த பக்தி செலுத்தினாள். சாருமதியின் மிகுந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு நாள் அவள் கனவில் தோன்றி, 'உன்னுடைய பக்தி என்னை நெகிழச் செய்து விட்டது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் வந்து சேரும்' என்று கூறி மறைந்தாள். மகாலட்சுமி கூறியபடி சாருமதி மேற்கொண்ட விரதமே, வரலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தினால் சாருமதி சகல சௌபாக்கியங்களையும் அடைந்து சிறப்புற வாழ்ந்தாள்.
ரவீஸ்வரர் கோயில்
சூரிய ஒளிக்கதிர்கள் மூன்று வேளையும் சிவலிங்கத்தை தழுவும் ஆலயம்
சென்னை வியாசர்பாடியிலுள்ள ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ரவீஸ்வரர் ஆலயத்தில், காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தைத் தழுவும். சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது மாலை போல விழுகின்றன.
சிவானந்தேசுவரர் கோயில்
முருகப்பெருமானின் தோஷம் நீங்கிய தலம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது.பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. மூலவர் 'பிரணவேஸ்வரர்' உயர்ந்த பாணத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 'சிவானந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. மூலவரின் சன்னதி முன்பு முருகப்பெருமான் சின்முத்திரையுடன், கண்களை மூடிக் கொண்டு தியான நிலையில் இருக்கின்றார். பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டால் அதிலிருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை
உத்தராபதீசுவரர் கோயில்
கணபதி சிவபெருமானை வழிபட்ட தலம்
கணபதி, கஜமுகாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொண்ட தலம்தான, கணபதீச்சுரம் என்னும் பெயருடைய திருச்செங்காட்டங்குடி. அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆனதனால் இத்தலத்திற்கு 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. .கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான், ‘கணபதீஸ்வரர்' என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோஷங்களும், நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
சிறுத்தொண்டர் நாயனார் வாழ்ந்த தலம். இவர் இயற்பெயர் பரஞ்சோதி. இளம் வயதில் இவர், நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியாகப் பணிபுரிந்தார். நரசிம்ம பல்லவன் கிபி 642 ஆம் ஆண்டு சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவர்கள் தலைநகர் வாதாபியைக் கைப்பற்றினான்.அப்போது பரஞ்சோதி அங்கிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் வாதாபி கணபதி என்ற பெயரில். தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்
பிரத்தியங்கிரா கோயில்
சிம்ம முகத்துடன் கூடிய அம்மன்
கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், அருள்பாலிக்கிறாள். இப்பிரத்யங்கரா தேவி, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.மனதில் தைரியம் பிறக்கவும், பில்லி,சூனியம்,தொல்லைகளில் இருந்து விடுபடவும், பக்தர்கள் இந்த தேவியை வணங்குகிறார்கள். இந்த கோவிலில் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் ஒவ்வொரு அமாவாசையன்றும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
லோகநாதப் பெருமாள் கோவில்
பெருமாள் திருநீறு அணிந்து காட்சி தரும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் கோவிலில் தீர்த்தமும், துளசியும்தான் பிரசாதமாகத் தருவார்கள, விபூதி பிரசாதம் தரமாட்டார்கள, திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் 'திருநீரணி விழா’ என்பது சிறப்பான விழாவாகும். சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நடைபெறும் இந்த விழாவின் போது, பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை(90 நிமிடம்) நேரம்தான் நடைபெறும். இதற்கு வைணவர்கள் உட்பட அனைவரும் விபூதி அணிந்தே வருவார்கள். பெருமாள் கோவிலில் விபூதி பூசுவது இங்கு மட்டும்தான.சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும். உபரிசரவசு என்ற மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்படுகின்றது, உபரிசரவசு சிறந்த சிவபக்தன. தினமும் விடியற்காலை வேளையில் சிவபூஜை செய்வது அவன வழக்கம். அவன் சித்திரை மாதம் ஒரு நாள் வான்வெளியில் பறந்து வந்து கொண்டிருந்த போது விடியற்காலை நேரம் நெருங்கிவிட்டது. சிவபூஜை செய்வதற்காக அவன் சிவாலயத்தை தேடிக் கொண்டிருந்தபோது, திருக்கண்ணங்குடி பெருமாள் கோவில் அவன் கண்ணில் பட்டது. அதை சிவன் கோவில் என்று தவறாக புரிந்து கொண்டு கோவிலினுள் நுழைந்தான். மன்னனின் சிவபூஜை தவறி விடக் கூடாது என்பதற்காக,பெருமாள் அவனுக்கு மூன்றே முக்கால் நாழிகை நேரம் சிவபெருமானாக காட்சி தந்து, சிவபூஜை செய்ய அருளினார. பெருமாள், உபரிசரவசுக்கு திருநீறு அணிந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்ததைத்தான் இத்தளத்தில், திருநீரணி விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இத்தலத்தில் கருடன் இரண்டு கரங்களையும் கட்டிக்கொண்டு காட்சியளிக்கிறார். இத்தகைய காட்சி வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
தில்லை நடராசர் கோயில்
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் ஒருசேர தரிசிக்கக் கூடிய தலம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில், மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்து அருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரையும், நாம் ஒரே இடத்தில் நின்றபடியே தரிசிக்க முடியும். இந்த மாதிரி அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் இல்லை. இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகவும், திவ்ய தேசமாகவும் விளங்குவது மற்றுமொரு தனிச்சிறப்பாகும். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற மற்றுமொரு ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜன் பெருமாள் சன்னதியும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் சன்னதியும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் ஆகும்