துளஸீஸ்வரர் கோயில்
துளசி தீர்த்தப் பிரசாதம் தரும் சிவாலயம்
தாம்பரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கப் பெருமாள் கோவில் என்ற ஊருக்கருகில் கொளத்தூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது. இங்கு துளஸீஸ்வரர் திருக்கோவில் எனும் சிவாலயம் உள்ளது. அகத்திய முனிவர் கயிலாயததிலிருந்து தென்பகுதிக்கு செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் துளசி செடிகள் நிறைந்த வனமாக காட்சியளித்த இத்தவத்திற்கு வந்தார். அவர் சிவ வழிபாட்டிற்காக ஏதாவது சிவாலயம் இருக்கின்றதா என்று இத்தலத்தில் தேடினார். அப்போது ‘அகத்தியரே என்னைத் தேடி அலைய வேண்டாம். நான் துளசி செடிகள் சூழ இங்குதான் மறைந்து இருக்கின்றேன்’ என்று அசரீரி ஒலித்தது. அகத்தியர் அசரீரி வந்த திசையில் சென்று பார்த்தபோது, அங்கே சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அகத்தியர் அந்த சிவலிங்கத்திற்கு துளசியை சூட்டி துளசியாலேயே அர்ச்சனை செய்தார். அதனால் இத்தலத்தில் இன்றும், துளஸீஸ்வரரை துளசியால் அர்ச்சித்து துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.