திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
மூலவர் சிவபெருமானை திருமால் வணங்கி நிற்கும் அபூர்வ காட்சி
காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால், இத்தலம் 'திருமாற்பேறு' என்றானது. அதுவே மருவி நாளடைவில் திருமால்பூர் என்றானது.
திருமால், சிவபெருமானிடமிருந்து சக்கராயுதம் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்து, சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி ருத்ராட்சம் அணிந்து, அம்பிகை பூஜித்த ஈசனை முறைப்படி பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு, ஆயிரம் நாமங்கள் சொல்லி ஈசனை அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூஜையின்போது, ஈசனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்தது..வழிபாட்டில் குறையேற்படலாகாது என்றெண்ணி, தன் கண்ணைப் பறித்து, கண் மலரால் ஈசனை வழிபாடு செய்தார். திருமாலின் ஆழ்ந்த பக்திக்கு ஈசன் உளம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார். தனக்கு காட்சி தந்த சிவபெருமானை மும்முறை வலம்வந்து வணங்கினார் திருமால். பின்னர் ஈசன் திருமாலைப் பார்த்து, 'நாராயணரே! தாமரை மலருக்காக உம் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால், உள்ளம் மகிழ்ந்து உமக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி நீ தாமரைக்கண்ணன், பதுமாஷன் என்று பெயர்பெற்று விளங்குவாய். நீ பேறு பெற்றதால், இத்தலம் உன் திருப்பெயரால் 'திருமாற்பேறு' என விளங்கப் பெறும். இச்சக்கரத்தால் வெல்லற்கரிய பகைவரையும் வெல்க' என்று கூறி சுதர்சன சக்கரம் வழங்கி ஆசீர்வதித்தார்.
பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம்
மூவருக்கு தீபாராதனை காட்டியபின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பாகும். திருமால் பூஜித்த காரணத்தால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாற்றப்படுகிறது. இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் என்பது வியப்புக்குரியதாகும்.
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் தன் மனைவியருடன் காட்சி தரும் சூரிய பகவானின் அபூர்வ கோலம்
சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் குறுங்காலீஸ்வரர். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலம் இது.
பொதுவாக சிவன் கோயில்களில் சூரியன் நடுவிலும், சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களும் அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்களின் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கின்றது. சதுர மேடையில் தாமரையை ஓத்தவடியில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . தாமரை நடுவில் சூரிய பகவான் தன் இரு மனைவியர்கள் உஷா மற்றும் பிரத்யுஷா உடன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் எழுந்தருளி இருக்கிறார் . அவரது தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளை பிடித்தபடி சாரதியாய் இருக்கிறரர். இவர்களைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் அமைந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நவக்கிரக அமைப்பை நாம் மற்ற தலங்களில் காண்பது அரிது.
கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில்
ஆறு சீடர்களுடன் காட்சி தரும் ராஜயோக தட்சிணாமூர்த்தி
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ.. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்ட நாயகி.
இக்கோவிலில் சுவாமி சன்னதியின் சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார் பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் "ராஜயோக தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.
உயர்ந்த பொறுப்பில் இருந்து பதவி இழந்தவர்கள், நியாயமாக செயல்பட்டும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் ஆரண்யேஸ்வரருக்கும். தட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து வழிபடுகிறார்கள் இதனால் இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில்
கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலம்
மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ்ப்பெரும்பள்ளம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இறைவியின் திருநாமம் சௌந்தர்யநாயகி. நவக்கிரக தலங்களில் இது, கேது தோஷ நிவர்த்திக்கான தலமாக விளங்குகின்றது. இறைவன் நாகநாதசுவாமி கிழக்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.
கேது பகவான் தனி சந்நிதியில் மேற்கு நோக்கி, பாம்பு தலையுடனும் மனித உடலுடனும் இரு கைகளையும் கூப்பி சிவன் சந்நிதியை நோக்கி வணங்கியபடி உள்ளார். ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் கீழப்பெரும்பள்ளம். கேதுவின் நிறம் சிவப்பு என்பதால், இவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபட வேண்டும். மேலும், கொள்ளு சாதம் படைத்து வழிபட வேண்டும். படைத்த கொள்ளு சாதத்தை இங்கேயே வரும் பக்தர்களுக்கு விநியோகித்து விட வேண்டும். வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. ஜாதகத்தின்படி கேது தசை மற்றும் கேது புத்தி நடைபெறும் காலங்களில் இத்தலம் வந்து கேதுவுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம். இத்தலத்தில் கேதுவே பிரதானமாதலால், இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது.
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம் செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து செல்கின்றனர்.
இத்தலம், கேது தோஷ நிவர்த்தி தலமாகவும், கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு, மூலவரையும் அம்பாளையும் வழிபட்டு, 7 முறை வலம் வந்து, கேது பகவானுக்கு பரிகார பூஜை மேற்கொண்டால் கேது தோஷ், நாக தோஷ நிவர்த்தி கிட்டுகிறது. நரம்பு மண்டல நோய் உள்பட பல்வேறு நோய்களும் விலகுகின்றன. நாக தோஷம் உள்ளவர்கள் கோயிலின் எதிரே உள்ள அரசும், வேம்பும் உள்ள மேடையில் நாக பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர்.
கேது தோஷ பரிகாரத்தில் பங்கேற்பவர்களுக்குக் கோவில் பிரசாதமாக விபூதி, குங்குமத்துடன் உலர் பொடி ஒன்றும் வழங்கப்படுகிறது. பரிகாரம் செய்து கொள்வோர் தொடர்ந்து 7 நாள்கள் கோயில் விபூதி, குங்குமத்தை பக்தி சிரத்தையுடன் தரித்துக் கொண்டு, பிரசாதத்துடன் அளிக்கப்பட்ட உலர் பொடியை உண்ண வேண்டும். 7-ஆம் நாளின் நிறைவில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, தேங்காய் (சிதறு காய்) உடைத்து வழிபாட்டை நிறைவு செய்தால், கேது தோஷ பரிகாரம் நிவர்த்தியாவது உறுதி என்பது இத்தல ஐதீகம்.
தாமல் வராகீசுவரர் கோவில்
பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்த அபூர்வ சிவலிங்கத் திருமேனி
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இறைவனின் திருநாமம் வராகீசுவரர், இறைவியின் திருநாமம் கௌரி அம்பாள். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சில சிவத்தலங்களை பெருமாள் தசாவதார கோலத்தில் வழிபட்டுள்ளார். அதில் இத்தலம் பெருமாள் வராக மூர்த்தி கோலத்தில் வழிபட்ட தலமாகும். இத்தலத்து சிவலிங்கத் திருமேனியில் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து. கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து. அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. வராக அவதாரம் எடுத்த திருமாலுடன் மோதிய போது, சிவபெருமானின் திருமேனியில் சங்கு, சக்கரங்கள் பதிந்தன. அதனால் தான் இக்கோவில் சிவலிங்கத் திருமேனியில் சங்கு சக்கரம் பதிந்த அடையாளங்கள் உள்ளன.
இக்கோவிலில் அஷ்ட பைரவர்களும் தூண்களில் எழுந்தருளி உள்ளது தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபட்டால் பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடை விலகும்.
இக்கோவில் காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குகின்றது, அதனால் ராகு கேது தோஷ நிவர்த்திக்கான பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன.
திருமண்டங்குடி திருபுவனேசுவரர் கோவில்
பெண்களின் வீரத்தை போற்றும் அபூர்வ சிற்பங்கள்
கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் திருபுவனேசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலம் இது.
பொதுவாக பல பழமையான கோவில்களில், ஆண்களின் வீரச் செயலை போற்றும் வகையிலான சிற்பங்கள் ஏராளமாக இருப்பதை காணலாம். ஆனால், இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோமுகத்தில் ( அபிஷேகத் தீர்த்தம் வெளி வரும் பாதையில்) வேறு எந்த கோவிலிலும் இல்லாத, பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான காட்சிகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு உள்ள சிற்பங்களில பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள். வனப்பகுதியில் நடக்கும் வீரமிக்க நிகழ்ச்சிகளை விவரிக்கும் வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. யாளி (பழங்கால விலங்கு) ஒன்று யானையை துரத்த, அந்த யானையோ ஒரு குதிரையை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அக்குதிரைமீது வீரன் ஒருவன் அமர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளை வேட்டையாட வந்த ஒருவர் மரத்தின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே தீரமிக்க ஒரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப் பன்றி ஒன்றை கழுத்துப் பகுதியில் குத்தி வீழ்த்தும் காட்சி மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நளின உடல் கொண்ட பெண்களின் பரத நாட்டிய அடவுகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இக்கோமுகத்தில் உள்ளன. சங்கநாதம் ஒலிக்கும் சிவ கணங்கள் சிற்பங்கள் வரிசையாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பெண்களின் கலை நயத்தையும், வீரத்தையும் அக்காலத்தில் எந்த அளவுக்கு போற்றியிருந்தால் ஒரு சிவாலயத்தின் கருவறை கோமுகியில், மக்கள் வழிபடுமிடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
எந்த சிவாலயத்திலும் காண முடியாத அகோரமூர்த்தி எழுந்தருளி இருக்கும் தேவார தலம்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.
திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது. சிவபெருமானின் 64 வித உருவங்களில் இது 43 வது உருவம் ஆகும். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால் அகோரமூர்த்தி எனப்படுகிறார். இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவபெருமானின் ஈசானிய முகத்திலிருந்து தோன்றியவர். இக்கோவிலின் மேலை பிரகாரத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவர் கரிய திருமேனி உடையவர். இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார். எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார். சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன், நெற்றிக்கண் நெருப்பைக் கக்க, கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு, மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
இவரை அடுத்துள்ள சன்னதியில் இவரது உற்சவ திருமேனியைக் காணலாம். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரமூர்த்தி பூஜை நடைபெற்று வருகின்றது.
இவரை வணங்கினால் முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
குரங்கு முகத்துடனும், நின்ற கோலத்திலும் இருக்கும் அதிகார நந்தி
காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அதிகார நந்தி குரங்கு முகத்துடனும், நின்ற கோலத்திலும் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இவரை தரிசித்த பிறகே, மூலவரை வழிபடச் செல்ல வேண்டும் என்ற வழிபாட்டு நியதியும் இங்கே உள்ளது.
இவரின் முகம் குரங்காக மாறியதற்கு ராவணன் கொடுத்த சாபம் தான் காரணம். இத்தலத்து இறைவனை தரிசிக்க ராவணன் வரும்போது நந்தியை கவனிக்காமல் சென்றார். இராவணனிடம் நந்தி இறைவன் தியானத்தில் உள்ளார். இப்போது போகாதே என தடுத்துள்ளார். சினம் கொண்ட இராவணன் நந்தியை சபித்ததால் நந்தியின் முகம் குரங்கு முகமாக மாறியது. ராவணன் அப்படி கேட்டதும், நந்தியின் முகம் குரங்காக மாறியது. இதைக் கண்ட நந்தி ராவணா என்னை குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் ஒரு குரங்கால் அழிந்து போகும் என்று சபித்தார். நந்தி கொடுத்த சாபம் ராவணனைத் தொடர்ந்தது. அதனால்தான் ஆஞ்சநேயரால், இலங்கை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.
தஞ்சைப் பெரிய கோவில்
நவக்கிரகங்கள் இல்லாத தஞ்சைப் பெரிய கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழன், 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் திராவிட கட்டிடக் கலையின் சிறப்புகளை உலகிற்கு உணர்த்தும் வரலாற்றுச் சின்னமாக திகழ்கின்றது. பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பல சிறப்பு அம்சங்கள் இக்கோவிலில் உள்ளன.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள், ஒரு பீடத்திலோ அல்லது தனி சன்னதியிலோ எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், பிற கோவில்களைப் போல் நவக்கிரகங்கள் அவைகளின் உருவில் இல்லாமல், கோயிலின் மேல் புற வட பகுதியில் லிங்க வடிவிலேயே காட்சி தருகின்றன. தமிழ்நாட்டில் கிரகங்கள் லிங்க வடிவில் காட்சி அளிப்பது இக்கோயிலில் மட்டுமே. மக்கள் தங்கள் குறைகளைக் களைய நவக்கிரகங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை இங்கு நவ லிங்கங்களுக்கு செய்து வழிபடுகின்றனர்.
ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில்
காசிக்கு ஈடான அஷ்ட பைரவர் கோவில்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ளது ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. மன்மதன் வழிபட்டதால் இத்தலத்து இறைவனுக்கு காமநாதீஸ்வரர் என்று பெயர். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்.
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என அஷ்ட ( எட்டு) பைரவர்கள் இக்கோவிலில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோவில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோவிலாக ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில் கருதப்படுகிறது. காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள், இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடான பலனைப் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி திதியன்று அஷ்டபைரவர்களுக்கு நடத்தப்படும் வழிபாடு
இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில், நள்ளிரவில் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது. இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து. வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.
கோடகநல்லூர் கைலாசநாதசுவாமி கோவில்
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை நீங்க நந்திக்கு விரலி மஞ்சள் மாலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கோடகநல்லூரில் அமைந்துள்ளது கயிலாயநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி. தாமிரபரணி கரையில் அமைந்துள்ள நவ கயிலாய தலங்களில் மூன்றாவது கயிலாயத் தலமாக கோடகநல்லூர் கயிலாயநாதர் கோவில் விளங்குகிறது. . ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துரைக்கிறார். கார்க்கோடகன் என்னும் பாம்பு இத்தல இறைவனை வழிபட்டு முக்தி அடைந்தது. அதனால் கார்கோடக க்ஷேத்ரம் என்றும் கோடகனூர் என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது.
நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறும் தலம்
இக்கோவிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை கிடையாது. இந்த ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும். ஜாதகத்தில் செவ்வாய் தசை நடைபெறும்போது இக்கோயிலுக்கு வந்து வழிபடுவது நற்பலன்கள் நடைபெற உதவுகிறது. இந்த கயிலாயநாதர் கோவிலில் அங்காரகன் சிவனை வழிபட்டதால் இது செவ்வாய் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள நந்திக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், 58 விரலி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள்.
தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
சிற்பிகளின் கனவு என்று கருதப்படும் கோவில்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஒரு அரிய விருந்தாகும் ஐராவதேசுவரர் கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோவிலே ஐராவதேசுவரர் கோவிலாகும். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்குகின்றது.
நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்
தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியது தான், இக்கோவில். இருப்பினும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், வெண்கல வார்ப்பு இவையனைத்தும் இந்த கோவில் சோழ வம்சத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என எல்லாவகை அளவுகளிலும் சிற்பங்களைக் கொண்ட அதிசய கோவில் இது. சோழர்களின் போர் முறை, சிற்பம், ஆடல், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானவியல், ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் என அனைத்தையும் சிற்பங்களாக தன்னுள் வைத்திருக்கும் பிரமாண்ட ஆலயம் இது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோவில் இது.
இக்கோவிலை, கோவில் என்று சொல்வதை விட சிற்பக் கலைக்கூடம் என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோவில் இது. சிற்பிகள் தங்கள் திறமை முழுவதையும் காண்பித்து இந்த கோவில் தலத்தின் உள்ளும், புறமும் நிறைய சிற்பங்கள் படைத்துள்ளனர். தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோவில் கொண்டுள்ளது.
இசைப் படிகள்
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சப்த ஸ்வரங்களை எழுப்பும் இந்த படிகள் மட்டுமின்றி, அங்கு இருக்கும் தூண்களும் தட்டும் போது, சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. இத்தூண்கள் வெவ்வேறு கனங்களில் இருக்கின்றன.
யானைகளும், குதிரைகளும் இழுத்துச் செல்லும் தேர் போன்ற மண்டபம்
ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும், குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில், யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மற்ற கோவில்களில் காணப்படாத ஒரு சில சிற்பங்கள் இங்கு வடிவமைக்க பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோவில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
வெளிச் சுவர் சிற்பங்கள்
கோவிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவன், குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் ஆகும்.
வல்லுனர்களால், 'சிற்பிகளின் கனவு' என்று கருதப்படும் இந்த கோவில், சிற்பக் கலைஞர்களுக்கும், சிற்பக் கலை ரசிகர்களுக்கும் ஒரு அரிய விருந்தாகும்.
திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்
ருத்ராட்ச மாலையணிந்து காட்சி தரும் சிவபக்த ஆஞ்சநேயர்
மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குரக்குக்கா.இறைவன் திருநாமம் குந்தளேசுவரர். இறைவியின் திருநாமம் குந்தளநாயகி.
ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. அவருடைய திருநாமம் சிவபக்த ஆஞ்சநேயர். இந்தத் திருநாமம் உடைய ஆஞ்சநேயர் வேறு எங்கும் கிடையாது. மூலவர் குந்தளேசுவரர் சன்னதி எதிரில் கூப்பிய கரங்களுடன் ருத்ராட்ச மாலையணிந்து அடக்கமே உருவாக ஆஞ்சனேயர் காட்சி யளிக்கிறார். திருமால் ராம அவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர், சிவஅம்சம் ஆகிறார் அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை. 'சிவஆஞ்சநேயர்' என்றும் 'சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள்.
பிரார்த்தனை
இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
அர்த்தநாரீசுவரர் மூலவராக இருக்கும் தேவாரத் தலம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில் மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், 'செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது. இம்மலை, ஒருபுறம் இருந்து பார்த்தால் ஆண் போன்ற தோற்றமும், வேறு ஒரு புறம் இருந்து பார்த்தால் பெண் போன்ற தோற்றமும் அளிப்பது சிறப்பாகும். 2000 ஆண்டுகள் பழமையான இம்மலை கோவிலுக்கு செல்ல 1200 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. கொங்கு நாட்டின் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
கருவறையில் மூலவராகிய அர்த்தநாரீசுவரர், ஆண்பாதி பெண்பாதி வடிவம் கொண்டு மாதொருபாகனாகக் காட்சியளிக்கிறார். இப்படி சிவனும் (வலதுபுறம்), சக்தியும் (இடதுபுறம்) சேர்ந்த ஒரே உருவாய், மாதொரு பாகனாய் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இப்படி இறைவன் மூலவராக, அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த விக்ரகம் ஒருவகை பாஷாணத்தால் உருவானது. வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீசுவரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், ‘தொன்மைக்கோலம்’ என்று அழைக்கிறார்.
வைகாசி விசாக திருக்கல்யாணம் - அர்த்தநாரீசுவரருக்கு அணிவிக்கப்படும் தாலி
அர்த்தநாரீசுவரர். மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர். சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும். பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து. பூரண சந்திரன் குடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன். சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும். இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும், மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீசுவரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.
பிரார்த்தனை
அர்த்தநாரீசுவரர் திருவுருவப் படத்தை வைத்து வேண்டிக்கொண்டால்,. கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.
அர்த்தநாரீஸ்வர மந்திரம் :
ஓம் ஹும் ஜும் சஹ
அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா
திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் வீட்டில் விளக்கேற்றி அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபட்டால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. நாகதோஷம், ராகு-தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவில்
இருதய நோய், வயிற்று நோய், வாத நோய் முதலிய நோய்களை நீக்கும் பைரவர்
மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சாலையில் 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாச்சேத்தி. இறைவன் திருநாமம் திருநோக்கிய அழகியநாதர். இறைவியின் திருநாமம் மருநோக்கும் பூங்குழலி. 1300 ஆண்டுகள் பழமையான தலம் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர், ஒரு நாய் வாகனத்துடன் தான் காட்சிய அளிப்பார். ஆனால் இக்கோவிலில், பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். இப்படி இரட்டை நாய் வாகனங்களுடன் பைரவர் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இவருக்கு கஷ்ட நிவாரண பைரவர் என்று பெயர். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால், இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது.
இசைக் கல் நடராஜர்
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நடராஜர், இசைக் கல் நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவரது திருமேனியை தட்டினால், இசை ஒலி எழும்பும் என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் வரும் தலம்
கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் ஆலங்குடி. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை. இக்கோவில் 1900 ஆண்டுகள் பழமையானது.
நவக்கிரகத் தலங்களில், ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இத்தலத்து தட்சிணாமூர்த்தி மிகவும் விசேடமானவர். இவருக்கு குரு தட்சிணாமூர்த்தி என்ற சிறப்பு பெயரும், இத்தலத்துக்கு தட்சிணாமூர்த்தித் தலம் என்ற பெயரும் உண்டு. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.
பிரார்த்தனை
14 ஜன்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, ஆலங்குடிக்கு ஒருவர் வரக்கூடும் என்பது நம்பிக்கை. பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வது வழக்கம். குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.
இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.
வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்
கருங்கல்லான அபூர்வ நடராஜர், சிவகாமி அம்மன் விக்ரகங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. ஆடுதுறை பெருமாள் கோயில் என்றும் கபிஸ்தலம் என்றும், இந்த தலம் அழைக்கப் படுகின்றது. இறைவன் திருநாமங்கள் தயாநிதீசுவரர், அழகு சடைமுடி நாதர், வாலி நாதர், சிட்டிலிங்க நாதர், குலை வணங்கீசர். இறைவியின் திருநாமங்கள் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடி அம்மை.
பொதுவாக சிவாலயங்களில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில், சற்று வித்தியாசமாக கருங்கல்லான நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகள் உள்ளன. மேலும் இவர்கள் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்
திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படும் கூர்மாங்க சனீஸ்வரர்
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்டதால், இத்தலத்து இறைவன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் கூர்மாங்க சனீஸ்வரர், திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படுகிறார். கூர்மாங்கம் என்றால் உடனே அல்லது சடுதியில் சங்கடங்களை நீக்குபவர் என்று பொருள். இவர் தெற்கு திசை நோக்கி எழுந்தருளி இருப்பதன் பின்னணியில், ஒரு ராமாயண காலத்து வரலாறு உள்ளது.
கிஷ்கிந்தையின் அரசன் வாலி மிகப்பெரிய சிவபக்தன். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் முடிவதற்குள் 1000 சிவாலயங்களில் பூஜை செய்யும் வழக்கம் உடையவன். அதைப் போலவே இங்கு அடர்ந்த வனப் பகுதியில் 100 சிவலிங்கங்களை அமைத்து மேற்கு நோக்கி தவம் செய்வது வழக்கம். இதைப்பற்றி கேள்விப்பட்ட இலங்கை மன்னன் இராவணன், தன்னைவிட சிறந்த சிவபக்தனான வாலி மீது கோபம் கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க முடிவு செய்து, தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க நினைத்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் இராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்துவிட்டான். பின் இராவணனை சிறையில் அடைத்து வைத்திருந்தான். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே, இராவணனை தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு, இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க, வாலி தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி, சனீஸ்வரரை தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார்.
பிரார்த்தனை
தெற்கு திசை எமனின் திசை. தனது சகோதரர் எமதர்மனால் ஏற்படும் ஆயுள் கண்ட பிரச்னைகள் இந்த சனீஸ்வர பகவானை வழிபடுவதால் நீங்கும். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். ஆயுள் கண்டம் ஏற்படுத்தும் இதய நோய், வலிப்பு நோய், தலைசம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு வியாதிகளில் பாதிக்கப்பட்டவர்கள். சனீஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். ஆயுள் பலம் வேண்டுவோர் நீல வஸ்திரம் அணிவித்து நீல மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தனது வயதின் எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வயது எண்ணிக்கையில் சனிதோறும் சுற்றிவந்து நீண்ட ஆயுள் பலம் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு எள் மற்றும் பிற சாதங்களை அன்னதானம் செய்யலாம்.
இந்த சனி பகவானுக்கு மாதா மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஹோமமும், சனீஸ்வர நவகிரக சாந்தி ஹோமமும், சனிக் கிழமை தோறும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில்
தலைக்கு மேல் சிவலிங்கத்துடன் இருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி
கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ.தொலைவில், கோவில் பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது காலகாலேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காலகாலேஸ்வரர். இறைவியின் திருநாமம் கருணாகரவல்லி. திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைபறிக்க எமதர்மராஜன் முயன்றபோது, சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இக்கோவிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றார்.
இக்கோவில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது.சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும், இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இக்கோவிலில், மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற மரகத நந்தி உள்ளது. மூலவர் காலகாலேஸ்வரர், மணல், நுரையால் ஆனவர் என்பதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.
ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார், தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் சிவலிங்கம் இருப்பது தனிச்சிறப்பாகும். இந்த கோவில் குரு பரிகார தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது.
பிரார்த்தனை
சுவாமி, அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது. ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இக்கோவிலில் பிரசித்தி பெற்றதாகும்.
சோழபுரம் பைரவேஸ்வரர் கோவில்
64 விதமான பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலமாக விளங்கும் பைரவேஸ்வரர்
கும்பகோணம்- சென்னை சாலையில், 13 கி.மீ. தொலைவில் உள்ளது சோழபுரம் பைரவேஸ்வரர் கோவில். இத்தலத்து இறைவனின் திருநாமம் பைரவேஸ்வரர். இத்தலத்து இறைவன் 3 அடி உயர ஆவுடையாரின் மீது இரண்டடி உயர பாணத்துடன் காணப்படுகிறார்.
உலகில் உள்ள 64 விதமான பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலமாக விளங்குபவர் தான், இந்த சோழபுரம் பைரவேஸ்வரர். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம் இது. . இதனாலேயே இத்தலத்தின் பழங்காலப் பெயர் பைரவபுரம். சிவன், பைரவரின் மூல மூர்த்தியாக இருப்பதால், பைரவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கோவிலுக்குள் 64 பீடங்கள் உள்ளன, மேலும் 64 பைரவர்களில் ஒவ்வொருவரும், இங்கு எப்போதும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது.
பிரார்த்தனை
பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர். இத்துன்பங்களில் இருந்து விடுபட, பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு,பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். சனிக்கு குருவாக விளங்குபவரர் பைரவர் என்பதால் அவரை சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு.