
திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில்
குளம் வெட்டிய விநாயகர்
வைத்தீஸ்வரன் கோவிலிருந்து சுமார் 4 கி மீ தொலைவில் உள்ள தேவார தலம் திருப்புன்கூர். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர். இறைவியின் திருநாமம் சொக்க நாயகி, சௌந்தர நாயகி. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம் இது. அதனால்தான் இன்றுவரை திருப்புன்கூர் ஆலயத்தில் நந்தி விலகியே நிற்கிறது என்கிறது தலபுராணம்.
திருநாளைப்போவார் கோவிலின் மேற்குபுறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணினார். அந்த பரந்து விரிந்த குளம் எத்தனை மண்ணை தோண்டினாலும் சீர்படவே இல்லை. தனியாளாக முயற்சி செய்ததால் அந்த பணி நிறைவடையாமல் நீண்டு கொண்டே இருந்தது. நாள்கள் பல கடந்தன. குளத்தை சீர்படுத்தும் பணிக்கு தனக்கு யாரும் துணை இல்லாததால் சிவபெருமானை வேண்ட, அவர் திருநாளைபோவாருக்கு உதவி செய்ய, கணபதியை செல்லுமாறு பணித்தார். விநாயகர், குளத்தை சீர் செய்யும் எல்லா பணிகளிலும் போவாருக்கு உதவினார். அவர் துணையால் திருநாளைப்போவார் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். திருக்குளம் முழுவதுமாக சீர்படும் வரை, விநாயகர் தினமும் பணியாற்றி, எந்த கூலியும் வாங்காமல் தொண்டாற்றினார். அதுவே கணபதி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். இந்தக் குளம் வெட்டிய விநாயகர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்.

கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்
இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்திய சூதவன விநாயகர்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோவிலூர். இறைவன் திருநாமம் மந்திரபுரீசுவரர், இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு.
கருடன் ஒரு முறை அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு இத்தலம் மீது வந்து கொண்டிருந்தபோது, அமுதத் துளிகள் சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றின. இங்கே வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால் அவர் வெண்னம நிறமாக காட்சி தருகிறார்.
சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள விநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இந்த விநாயகர் இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் . இப்படி மாவிலை கொத்துக்களையும், மாங்கனியையும் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்
பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடிய பாலச்சந்திர விநாயகர்
திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில். எறும்பு ஈசனை வழிபட்ட தலம் இது. இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி. இங்கு விநாயகர் பாலச்சந்திர விநாயகராக அருள்புரிகிறார். தன் அழகினால் அகங்காரம் கொண்டு அவமதித்த சந்திரனை விநாயகப் பெருமான் சாபமிட்டார். சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இதனால் கலக்கமடைந்து ஓடி ஒளிந்த சந்திரனுக்கு விநாயகப்பெருமானை வழிபட்டு நன்னிலை அடையுமாறு தேவர்கள் அறிவுருத்தினர். அதன்படி சந்திரனும் விநாயகரைப் பூஜித்து தன் சாபம் நீங்கப்பெற்றார். அதன் அடையாளமாக பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடி பாலச்சந்திர விநாயகராக, விநாயகப் பெருமான் காட்சி கொடுக்கும் தலம் இது.
பிரார்த்தனை
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள அகந்தை நீங்கி எப்போதும் சுடர்விடும் ஞான ஒளி மனதில் பிறக்கும் என்பது நம்பிக்கை.

கண்டரமாணிக்கம் மருதம் விநாயகர் கோவில்
அனுமனைப் போல வடை மாலை ஏற்கும் மருதம் விநாயகர்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் மிகமிக வித்தியாசமாக தோற்றம் அளிக்கிறார். இந்த விநாயகருக்கு தும்பிக்கை கிடையாது. மனித முகத்துடன் காணப்படும் இந்த விநாயகர், மருதம் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் வேண்டியதைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த இந்த கணபதிக்கு, அனுமனைப்போல வடை மாலை அணிவித்து, பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.
தோல் நோய் அகற்றும் விநாயகர்
மகாகவி முத்தப்பர் (1767 - 1829) என்ற கவிஞர் நகரத்தார் மரபில், செட்டிநாட்டில் பிறந்தவர். இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர், குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார். தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். முருகனின் அருளால் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது. தான் பாடும் பாடல்களால், மழையை வரவைக்கும் கவித்துவம் பெற்றவர்.
மகாகவி முத்தப்பர், இந்த கணபதியை வேண்டி மனமுருகி பாடிய பத்து பாடல்கள் காரணமாக, அவருக்கு இருந்த தோல் நோய்கள் நீங்கினார். இதனால் இன்றும் தோல் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து மருதம் விநாயகரிடம் வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டி இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்
பிரச்சனைகளை தீர்க்கும் கரையேற்று விநாயகர்
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருக்கோடிக்காவல். இறைவன் திருநாமம் கோடீசுவரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
`திரிகோடி' என்றால், மூன்று கோடி என்று அர்த்தம். மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இந்தத் தலத்தில் நீங்கியதால் `திருகோடிகா' என்று பெயர் உண்டாயிற்று. முக்தி வேண்டி மூன்று கோடி மந்திர தேவதைகள் இங்கே தவம் இருந்தனர். அப்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகரைத் துதித்து வேண்டினர். அவரும் அவர்களைக் கரையேற்றி அருள் பாலித்தார். `மந்திர தேவதைகளை வெள்ளத்தில் இருந்து கரை ஏற்றியதால் இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற பெயர் பெற்றார்.
அகத்தியர் மந்திர தேவதைகளுக்கு உபதேசித்து மணலால் விநாயகரைப் பிடித்து வைத்து பிரதிஷ்டை செய்தார். முக்கோடி மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்து பூஜித்தனர்.
கரையேற்று விநாயகர் இத்திருக்கோயிலில் தென் மேற்கு திசையில் அருள்பாலிக்கிறார். இன்றுவரை மணலால் ஆன இந்த விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது, எண்ணை மட்டுமே சாற்றி வழிபட்டு வருகின்றனர்.இவருக்கு ஆயிரம் மலர்களால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, எல்லாவிதமான சாபங்களும் தோஷங்களும் நீங்கும். இன்றைக்கும் நம் வாழ்க்கைக்கான கரையை, வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார் இந்த பிள்ளையார். ஜன்ம வினைகள் நசிந்து, உயிர்கள் கடைத்தேற அருளுபவர் என்பதாலும், இவர் 'கரையேற்று விநாயகர் என்று போற்றப்படுகிறார். வாழ்வில் பிரச்னைகளால் தத்தளிப்போர் இத்தலத்து விநாயகரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆனேகுட்டே விநாயகர் கோவில்
நெற்றியில் நாமம் தரித்த விநாயகர்
கர்நாடகா மாநிலம், உடுப்பியிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் உள்ள கும்பாசி என்னும் ஊரில் ஆனேகுட்டே விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆனே என்றால் யானை, குட்டே என்பது சிறுகுன்றைக் குறிக்கிறது. யானை முகத்துடன் விநாயகர் குடியிருக்கும் குன்று என்பதே ஆனேகுட்டே என்றானது. கோவில் கருவறையில் விநாயகர் ஒரே கல்லிலான யானை முகம் கொண்ட 12 அடி உயரம் கொண்ட திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த விநாயகர் திருமேனியானது தமிழகத்தில் உள்ள விநாயகரின் வடிவமைப்பு போல் இல்லாமல், யானை போன்ற உருவ அமைப்பில் உள்ளது. இங்கு அமைந்துள்ள விநாயகரின் நான்கு கரங்களில், மேலிரு கரங்கள் வரம் தரும் வரஹஸ்தத்துடனும், கீழ் இரு கரங்கள் சரணடைந்தோரை காக்கும் அபயஹஸ்தத்துடனும் அமைந்திருக்கின்றன. இந்த விநாயகருக்கு நெற்றியில் திருநீறுக்குப் பதிலாக நாமம் அணியப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள விநாயகருக்கு விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்ற பெயர்களும் உண்டு. தினமும் இவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப் படுகின்றது.இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாக பக்தர்களிடம் ஒரு நம்பிக்கையுள்ளது
திருவிழாக்கள்
இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மார்கழி பிரம்மோற்சவம் ஆகியவை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பறவைகளின் ஒலி கேட்டு தான், அதிகாலையில் நாம் எழுவோம். அந்தப் பறவைகளையே அதிகாலையில் எழுப்பவும், பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்கவும் கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பிரார்த்தனை
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திர பாக்கியம் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.

மும்பை சித்தி விநாயகர் கோவில்
நெற்றியில் கண் உள்ள விசித்திர விநாயகர்
மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். இக்கோவில் 1801-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் என்றால் கேட்டதை, வேண்டியதை அப்படியே அருளும் விநாயகர் என்பது பொருள். மும்பை சுற்றுலாவின் தவிர்க்க முடியாத ஒரு இடம் சித்தி விநாயகர் கோவில்.
இந்த கோவிலில் உள்ள சித்தி விநாயகர் ஒற்றை கருங்கல்லால் ஆனவர். அவர் 2 அடி 6 அங்குல உயரமும், 2 அடி அகலமும் கொண்டவர். மற்ற விநாயகர் கோவிலில் உள்ளது போன்று இல்லாமல், இந்த சித்தி விநாயகர், தனது தும்பிக்கையை இடது பக்கம் வைத்திருப்பதற்கு பதிலாக, வலது பக்கம் வைத்திருப்பது மிகவும் சிறப்பு. இந்த விநாயகரின் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி இருக்கின்றார். கீழே உள்ள இடது கையில் ஒரு கிண்ணம் நிறைய மோதகம் உள்ளது. வலது கீழ் கையில் ஜெப மாலை வைத்துள்ளார். விநாயகர் பூணூலை ஒத்த, ஒரு பாம்பு உருவம் பூணல் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட விநாயகரின் நெற்றியில் கண் உள்ளது மிகவும் விசித்திரமாக பார்க்கப்படுகின்றது. சித்தி விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர் உள்ளனர். விநாயகரின் இருபுறமும் சித்தி மற்றும் ரித்தி(புத்தி) என்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன. இவர்கள் விநாயகரின் பின் பகுதியிலிருந்து முளைத்து இருப்பது போன்றும், வளைந்து முன்பகுதியில் காட்சியளிக்கும் வண்ணம் விக்கிரகம் அமைந்துள்ளது. இரு பெண் தெய்வங்களுடன் காட்சி அளிப்பதால் இந்த விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகின்றார். இவரை மராட்டியில் நவசாக கணப்தி, நவச பவனார கணபதி என அழைக்கின்றனர்.
இக்கோவில் மிக நவீன பாணியில் கட்டப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்தாலும் கோவிலின் கோபுரம் தெரியும் வகையில், மிக உயரமாக, 5 அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதம், பிரத்தியேக லிஃப்ட் மூலம் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அர்ச்சகர்களால் கணபதிக்கு படைக்கப்படுகின்றது.
சித்தி விநாயகர் கோவிலின் மிக முக்கியமான நாள் செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் கூட்டம் அலை மோதும். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து விடுவார்கள். அடுத்த நாள் புதன்கிழமை அதிகாலை 12.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே செவ்வாய் கிழமைகளில் சங்கடஹர சதுர்த்தி வரும். இதை அங்காரக சதுர்த்தி என்பர். அந்த நாளில் விநாயகரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.
பிரார்த்தனை
குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்தவராக இந்த சித்தி விநாயகர் திகழ்கின்றார். வேண்டியது நிறைவேறினால், கோயிலுக்கு வந்து விளக்கேற்றி, எருக்கம்பூ, இலை மாலையை அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் பணக்காரராக மாறிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்தியாவின் மிக பணக்கார கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்
ஸ்ரீரங்கம் கோவில் உருவாகக் காரணமான உச்சிப்பிள்ளையார்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் தலங்களில் முதன்மையானது, திருச்சி மாநகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகும். பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் 275 அடி உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மலையானது தென்தமிழகத்தின் கைலாயம் என்று போற்றப்படுகின்றது. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன.
இந்த மலைக் கோவிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.உச்சிப் பிள்ளையார் கோவிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.
தல வரலாறு
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் இராவணனின் சகோதரன் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக ராமர், விபீசணனுக்கு ரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் ராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.
விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், ரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், ரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் குட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.
விபீசணன் குட்டியதால் ஏற்பட்ட வீக்கத்தை இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் காணலாம்.
ரங்கநாதரின் சிலை வைக்கப்பட்டிருந்த இடம் நீண்ட காலமாக தீவு பகுதியான அடர்ந்த காடுகளுக்குள் மூடப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகள் கடந்து ஒரு சோழ மன்னன் கிளியைத் தேடிக் கொண்டு வரும் போது தற்செயலாக அந்த சிலை இருந்ததைக் கண்டுபிடித்தார். பின்னர் பிரம்மாண்டமான ஸ்ரீரங்கம் கோவிலை கட்டினார்
விநாயகர் சதுர்த்தி விழா - 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம்
விநாயக சதுர்த்தியன்று மலைக்கோட்டை கீழ் சன்னதியில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டை மேல் எழுந்தருளி இருக்கும் உச்சிப் பிள்ளையார் ஆகிய இரு சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை என 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஒருநாள் முன்பே கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள். இந்தக் கொழுக்கட்டை சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்படும். பின்னர் இரண்டு விநாயகருக்கும் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோவில்
விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் தேன் அபிஷேகத்தை உறிஞ்சும் அதிசய விநாயகர்
கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ . தொலலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்புறம்பியம். இறைவன் திருநாமம் சாட்சிநாதேசுவரர். இறைவியின் திருநாமம் கரும்பன்ன சொல்லம்மை.
தல வரலாறு
ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால், இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயர் பெற்றது.
இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப்பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை, வருண பகவான் உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் முழுக்க முழுக்க தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மாலை 6:30 மணிக்கு தொடங்கப்படும் அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். .அபிஷேகம் செய்யப்பெறும் தேன்யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். இந்தத் தேன் அபிஷேகம் நடைபெறும் வேலையில் விநாயகர் செம்பவளத் திருமேனியராய் காட்சித் தருகிறார் வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
விநாயகர் சதுர்த்தி அன்று பிரளயம் காத்த விநாயகரை வணங்கினால் சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும்.

தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில்
ராகு- கேது உடன் இருக்க அருள் பாலிக்கும் ஸ்ரீசக்தி விநாயகர்
திருநெல்வேலி தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேது உடன் இருக்க ஸ்ரீசக்தி விநாயகர் அருள் பாலிக்கிறார் . ஸ்ரீவிநாயகருக்கு வலப்பக்கம் உள்ள ஐந்து தலை நாகத்தைப் பெருமாளாகவும், ஒற்றைத் தலை நாகத்தை சிவலிங்கமாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.
ஒருகாலத்தில், இந்த ஊரில் கோவிலே இல்லாமல் இருந்ததாம். இதனால் அங்கே அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்ததாக எண்ணிய ஊர்மக்கள் அதையடுத்து கூடிப் பேசி, இந்த விநாயகர் கோவிலைக் கட்டினார்கள்.விநாயகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும்போது, மக்கள் கூடவே ராகு-கேது (நாக) விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் .
பிரார்த்தனை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மாங்கல்ய தோஷம், புத்திர பாக்கிய தோஷம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், இங்கு நாக பிரதிஷ்டையுடன் அருள் தரிசனம் தரும் ஸ்ரீவிநாயகரை வழிபட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருடந்தோறும் ராகு-கேது பெயர்ச்சி அன்று ஸ்ரீகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், ஆயுளை விருத்திப்படுத்த ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை இங்கே விமரிசையாக நடைபெறும்.

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்
விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து மாங்கனியை பெற்ற தேவாரத்தலம்
வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. முழு முதல் கடவுளான விநாயகப் பெருமான், நாரதர் மாங்கனியை சிவபெருமானிடம் தந்த பொழுது அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்று கூறி உலகிற்கு அறிவித்து சிவபெருமானையும், அம்பாளையும் வலம் வந்து வணங்கி கனியைப் பெற்றுக் கொண்டது இத் திருத்தலத்தில்தான். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இத் திருத்தலம் திருவலம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி திருவல்லம் என்றானது.
இக்கோவிலில் விநாயகர், கருவறையில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். அதனால் இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். முருகப் பெருமானுடன் நடந்த போட்டியில் விநாயகப் பெருமான் ஞானப் பழத்துடன் இத்திருத்தலத்தில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவரை வணங்கும் பேறு பெறுவோர், பிறப்பற்ற நிலையை அடைவர் என்று சொல்கிறார்கள்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில்
ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில். விநாயகர் மூலவராக எழுந்தருளி இருக்கும் கோவில்களில், இக்கோவில் ஆசியாவிலேயே மிகப் பெரியது ஆகும். 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் சுமார் 80 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் உடையது.
முற்காலத்தில், நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரமாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இந்தக் கோவிலில் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் 'மணிமூர்த்தீஸ்வரம்' என்று வழங்கலாயிற்று.
இக்கோவில் மூலவருக்கு உச்சிஷ்ட கணபதி என்பது திருநாமம். விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. அவரது மனைவியான நீலவாணியைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி கொடுக்கிறார். மூலவர் உச்சிஷ்ட கணபதியைச் சுற்றிய பிரகாரத்தில் 16 வகை விநாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில், காலையில் சூரியபகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்தலம் கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றிற்கான நிவர்த்தித் தலமாகும். விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தேவியோடு விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும்.

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில்
நீரிழிவு நோயை குணப்படுத்தும் நீலகண்ட பிள்ளையார்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் நீலகண்ட பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த பிள்ளையாருக்கு தீராத வினை தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார் என்று சிறப்பு பெயரும் உண்டு.
விநாயகர் மூலவராக தனிக்கோவில் கொண்டு எழுந்தருளிய, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் வரிசையில் பேராவூரணியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோவிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது. பேராவூரணியில் உள்ள ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தல வரலாறு
கிபி 1825 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் . இதற்காக சிகிச்சைக்காக திருப்பெருந்துறை செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரசு பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில் தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையாருக்கு இரண்டு பேர் பூஜை செய்வதையும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார்.
உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்குள்ள நோயைப் பற்றி பூஜை செய்பவர்களிடம் கூறினார். உடனே அவர்கள் இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு நீலகண்ட பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்று அவர்கள் கூறியபடி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில் கோவில்குளத்தில் குளித்துவிட்டு நீலகண்ட பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரிழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
பிரார்த்தனை
இக்கோவில் நீரிழிவு நோய்க்கான பரிகாரத்தலமாக விளங்குகின்றது. புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு தங்கள் தொழிலை தொடங்கினால் அவர்கள் தொடங்கிய தொழில் பல மடங்கு வளர்ச்சி அடைந்து அதிக லாபம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .

தகடி அழகியநாதேசுவரர் கோவில்
வேத கோஷத்தை ஒய்யாரமாக அமர்ந்து கேட்கும் ஆனந்த விநாயகர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள தகடி என்னும் ஊரில் அமைந்துள்ளது அழகியநாதேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் அழகியநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை.
இக்கோவிலில் விநாயகர் வேத கோஷத்தை கேட்கும் ஆனந்த நிலையில் நமக்கு தரிசனம் தருகிறார். விநாயகர் நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடித்து வலது காலை ஊன்றி, ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் கண் மூடி தலையை சாய்த்து வேத மந்திரங்களை ஊன்றி கவனிக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். விநாயகரின் இந்த ஒய்யார தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோவில்
ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் நேமம் உள்ளது. இறைவன் திருநாமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர். இறைவியின் திருநாமம் சவுந்தர நாயகி. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.
கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார். இப்படி ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் பைரவர் இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோவில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது. இக்கோவில் சிற்பங்கள், யாவரும் வியக்கும்படியான நுட்பமான சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.
பிரார்த்தனை
சிவன் மன்மதனை வெற்றி கொண்ட தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடக்கவும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர்

அருப்புக்கோட்டை படித்துறை விநாயகர் கோவில்
ஜடாமுடியுடன், தவக்கோலத்தில் தோற்றமளிக்கும் அபூர்வ விநாயகர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் படித்துறை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் விநாயகர் ஜடாமுடியோடு வித்தியாசமாக காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பாண்டிய மன்னன் ஒருவனுக்கு, சாபத்தினால் உடலில் தீராத நோய் ஒன்று ஏற்பட்டது. அந்த சாப நிவர்த்திக்காகவும், தனது நோய் நீங்கிடவும் , அந்த பாண்டிய மன்னன் அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோவில் அருகிலேயே ஒரு திருக்குளத்தினை வெட்டினான். அந்த திருக்குளம் வெட்டிய இடத்தில், புதையுண்டுக் கிடந்த அழகிய விநாயகர் சிலை ஒன்றுக் கிடைத்தது. எல்லா விநாயகர் சிலை போன்று அல்லாமல் , அந்த விநாயகர் சிலை தலையில் கிரீடம் இல்லாமல், ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் காணப்பட்டதாம்.எனவே இந்த விநாயகர் சிலை காலத்தால் , பாண்டிய ஆட்சிக்கும் முற்பட்டது எனவும் , தவக்கோலத்தில் இருப்பதால், சித்தர்களாலும், முனிவர்களாலும் இவர் பூஜிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள்.
பாண்டிய மன்னன் இந்த சிலையை , திருக்குளத்தின் ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்,.காலங்கள் பல மாறிய பின்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை முன்பு இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அதே ஈசான்ய மூலையில் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
மாங்கல்ய பாக்யம் வேண்டுவோர் வழிபட சிறந்த கோயிலாகும். விநாயகர் சதுர்த்தி, மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருவாரூர் ஐநூற்று விநாயகர் கோவில்
மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்த விநாயகர் கோவில்
திருவாரூர் அருகே விஜயபுரம் காந்தி சாலையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலவர் ஐநூற்று விநாயகர்.
கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் வரலாறு கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோவில் கொண்டதால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோவில் எனப் பெயர் வந்தது. அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் என்றும், இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் என்றானது. ஐநூற்று விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவருக்கு மட்டுமே கருவறையில் தினசரி பூஜை நடக்கும். ஆனால் இக்கோவிலில் மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்துள்ளது. தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இருவருக்குமே தினமும் ஆராதனைகள் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் உள்ள உற்சவர். திருவிழா நாட்களில் நான்கு வீதிகளில் வீதியுலா வருகிறார். மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர்.
ஐநூற்று விநாயகரை வணங்கினால் ஐஸ்வர்யம் பெருகும். அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில்
உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ள, தமிழகத்திலேயே உயரமான விநாயகர்
தஞ்சாவூர்-வல்லம் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஹரித்ரா விநாயகர் கோவில். காரைக்குடியில் ஒரு பிள்ளையார்பட்டி இருப்பதால் இக்கோவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஹரித்ரா என்றால் மங்களம் என்று பொருள்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மாமன்னன் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக்கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் விக்கிரகங்களை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்தான். அப்படி வரும் வழியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து, தேர் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. தேரின் அச்சு முறிந்ததால் விநாயகர் சிலையின் இடது பக்க தந்தம் உடைந்து விட்டது. இதனால் பின்னம் அடைந்த சிலை, தஞ்சை பெரிய கோவிலுக்கு வேண்டாம் என்று ராஜராஜ சோழன் முடிவு செய்து விட்டான். இருப்பினும் விநாயகர் சிலையை, அதே பகுதியில் பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதுவே பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் ஆகும். பெரிய பிள்ளையாரை தரிசிக்க, மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவுவாசல் அமைக்கப்பட்டிருப்பது. பொதுவாக விநாயகருக்கு, எலிதான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு நந்தியே விநாயகரின் முன்புறம் வாகனமாக இருப்பது கவனிக்கத்தக்கது.
இங்குள்ள விநாயகர் சிலை, தமிழகத்திலேயே உயரமான சிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் 11 அடி. தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள அடிபீடம் 5 அடி கொண்டது. இந்த சிலையில் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. பிள்ளையாரின் முதுகு பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகரின், நாபி அருகில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி உள்ளது. அது விநாயகரின் உடலை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.
கேது நிவர்த்தி தலம்
ஹரித்ரா விநாயகரின் உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ளது. எனவே இந்த தலம் கேது நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்
சாளக்கிராம கற்களாலான நிறம் மாறும் அதிசய விநாயகர்
தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது கைலாசநாதர் சுவாமி கோவில். இக்கோவிலை முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன், கி.பி. 944-ல் நிர்மாணித்தார். கும்பகோணத்திற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை, உப்பிலியப்பன் கோவில் வழியாக சென்று அடையலாம்.
இங்குள்ள விநாயகர் சிற்பம் தெய்வீக சிறப்புடையது. இவரை கொங்கணச் சித்தர் 'தபசு மரகத விநாயகர்' எனப் போற்றுகின்றார். இந்த விநாயகர், கையில் தபசு மாலை ஏந்தி, நாகாபரணத்தை வயிற்றில் தாங்கி வழவழப்பான சாளக்கிராம கற்களால் ஆனவர். விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது. இவரின் துதிக்கை, உடல் மீதே படாத வண்ணம் இருக்கும் அமைப்பானது சகல வளங்களையும், ஞானத்தையும் நமக்கு தரவல்லது,
இந்த விநாயகரின் மீது, சூரிய ஒளி காலையில் விழுகையில் பச்சை வர்ணமாகவும், மதியம் நீல வர்ணமாகவும், மீண்டும் மாலை வேளையில் பச்சை வர்ணமாகவும் இவர் நிறம் மாறி காட்சி தருகிறார். இந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இந்த கணபதியை அனைத்து சித்தர் புருஷர்களும் தொழுது இன்புற்றனர் என்கிறார் அகத்தியர்.
யாமறிந்த சித்தரெல்லாம் கேரளாந்தக
சதுர்வேத மங்களங்குடி நின்ற
தனித் துதிக்கையானை - சாளக்
கிராம மேனியனை சிசுவடிவான
அருணனோடு ஆடிப்பாடி தொழ
கண்டோமே
என அவர் போற்றி இருக்கிறார்.
நாக தோஷம் கொண்ட மனிதர்களுடைய தோஷம் நீக்க, பூமியில் பற்பல தலங்கள் உண்டு. ஆனால், தேவர்களுக்கு நாகதோஷம் நீங்க வேண்டுமாயின் அவர்கள் வழிபட வேண்டிய தலம், இந்த சாளக்கிராம விநாயகர் தலமாகும்.

காரைக்குடி நூற்றியெட்டு பிள்ளையார் கோவில்
ஒரே கோவிலில், பல கோலங்களில் காட்சிதரும் நூற்றியெட்டு பிள்ளையார்கள்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் அமைந்துள்ளது நூற்றியெட்டு பிள்ளையார் கோயில். இக்கோவிலில் 108 பிள்ளையார் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 54 பிள்ளையார் விக்ரகங்கள் மேல் வரிசையிலும், மீதி 54 விக்கிரகங்கள் கீழ் வரிசையிலும் அமைந்துள்ளன. மேல் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை இடது பக்கம் சுழித்தும், கீழ் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை வலது பக்கம் சுழித்தும் இருக்கின்றன.
தாமரை மலர் மேல் நிற்கும் பிள்ளையார், வல்லப கணபதி, மகா கணபதி, சித்தி புத்தி விநாயகர், மூஷிக கணபதி, சிம்ம வாகனத்தின் மேல் வீற்றிருக்கும் ஹேரம்ப கணபதி, சங்கு சக்கரம் ஏந்திய விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகியவை இங்கு எழுந்தருளி இருக்கும் விநாயகரின் சில கோலங்கள் ஆகும். நூற்றியெட்டு பிள்ளையார்களை ஒரு சேர தரிசிக்க முடியும் என்பதால், பல வெளியூர் மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றார்கள்
பிள்ளையார், அவரை வழிபடுவோரின், வாழ்வில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும், தீர்க்கவல்லவர் என்று நம்பப்படுவதால், இங்கு உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருகின்றனர். அதனால், மக்கள் புது முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கு முன், இங்கு வந்து பிள்ளையாரை பிரார்த்தித்து விட்டு, அதற்குப் பின்பே ஆரம்பிக்கின்றனர். புது முயற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் பிள்ளையாரை வழிபட்டால், அம்முயற்சிகள் தடங்கல்கள் ஏதுமின்றி, நல்ல பலனைக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
இங்கு பிள்ளையாரை குளிர்விப்பதற்கு, பக்தர்கள், அவருக்கு மிக விருப்பமான லட்டு மற்றும் மோதகம் ஆகியவைகளை காணிக்கையாகப் படைக்கின்றனர்.