
ஐராவதீஸ்வரர் கோவில்
விருச்சிக விநாயகர்
கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆடுதுறை என்ற ஊரில் இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவக்குடி என்ற தலத்தில் அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேவார வைப்புத் தலமாகும். இங்குள்ள விநாயகரின் திருமேனி தேளின் செதில் போன்ற அமைப்பில் இருப்பதால் இவரை ‘விருச்சிக விநாயகர்’ என்கின்றனர். விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து இவரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம்.

வேதபுரீஸ்வரர் கோவில்
வேதம் கேட்கும் விநாயகர்
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவேதிக்குடி. பிரம்மன்(வேதி) வந்து தங்கி சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம், திருவேதிக்குடி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தன் நான்கு முகங்களால் நான்கு வேதங்களையும் அருளி செய்ததால்,அவருக்கு வேதபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. இத்தலத்து விநாயகர், இடது காலை உயர்த்திக் கொண்டு, உள்ளே வேதபுரீசுவரரால் அருளப்படும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்து கூர்மையாக கேட்டுக் கொண்டிருக்கும் தோரணையில் இருக்கின்றார். அதனால் இவர், வேத விநாயகர் என்பதோடு செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

மீனாட்சி அம்மன் கோவில்
முக்குறுனி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், எட்டடி உயரத்தில், நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த கோலத்தில் பிரமாண்டமாகக் காணப்படுபவர் முக்குறுனி விநாயகர். மதுரை தெப்பக்குளத்தில், திருமலை நாயக்கரால் கண்டெடுக்கப்பட்ட இந்த விநாயகருக்கு முக்குறுணி அரிசியில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை தயாரித்து படைக்கிறார்கள் (ஒரு குறுணி என்பது 6 படி. முக்குறுணி என்பது 18 படி) எனவே இவர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

தாணுமாலயன் கோவில்
பெண் தோற்றத்தில் காட்சி தரும் விநாயகர்
பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில், ஒரு தூணில் விநாயகியின் சிற்பமுள்ளது. விநாயகி, அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் இருக்கின்றார். தலையில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய மகுடம் விளங்குகிறது. மேற்கைகளில் அங்குச, பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய, வரத ஹஸ்தங்களாக விளங்குகின்றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம் கொண்ட இவர், கழுத்தணியும், கால்களில் சிலம்புகளும், இடையில் புடவை அணிந்தும் காட்சி தருகிறார்.

மாணிக்கவண்ணர் கோயில்
ரிஷப வாகனத்தில் விநாயகர்
மயிலாடுதுறை அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருவாழ்கொளிபுத்தூர் ரத்தினபுரீஸ்வரர் ஆலயத்தில் காட்சி தரும் நடன விநாயகர், ரிஷப வாகனத்தில் இருக்கிறார். இது விநாயகரின் ஓர் அபூர்வமான காட்சியாகும்,
விருத்தபுரீசுவரர் கோயில்
ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்புரியும் திருத்தலம்
அறந்தாங்கியில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புனவாசல் தலத்தில, ஒரே சந்நிதியில் ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.

உத்தராபதீசுவரர் கோயில்
கணபதி சிவபெருமானை வழிபட்ட தலம்
கணபதி, கஜமுகாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொண்ட தலம்தான, கணபதீச்சுரம் என்னும் பெயருடைய திருச்செங்காட்டங்குடி. அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆனதனால் இத்தலத்திற்கு 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. .கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான், ‘கணபதீஸ்வரர்' என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோஷங்களும், நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
சிறுத்தொண்டர் நாயனார் வாழ்ந்த தலம். இவர் இயற்பெயர் பரஞ்சோதி. இளம் வயதில் இவர், நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியாகப் பணிபுரிந்தார். நரசிம்ம பல்லவன் கிபி 642 ஆம் ஆண்டு சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவர்கள் தலைநகர் வாதாபியைக் கைப்பற்றினான்.அப்போது பரஞ்சோதி அங்கிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் வாதாபி கணபதி என்ற பெயரில். தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்

சத்தியவாகீசுவரர் கோயில்
செவிசாய்க்கும் பிள்ளையார்
திருச்சிக்கு அருகில் இருக்கும் தேவாரப் பாடல் பெற்ற அன்பில் தலத்தில், பிள்ளையார் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில் இருக்கிறார. கொள்ளிடத்துத் தென்கரையில் நின்று திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைச் செவிசாய்த்துக் கேட்டதால், இவ்விநாயகர் 'செவிசாய்க்கும் பிள்ளையார்' எனப் பெயர் பெற்றார். பக்தர்களின் குறைகளைச் செவிசாய்த்துக் கேட்டுத் தீர்த்து வைப்பார் என்பதும், இப்பெயர் வரக் காரணமாகும்.

கச்சேரி விநாயகர் கோயில்
கச்சேரி விநாயகர்
மதுராந்தகம் அருகே செய்யூர் என்ற ஊரின் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் வீற்றிருக்கும். விநாயகருக்கு கச்சேரி விநாயகர் என்று பெயர். இந்தப் பிள்ளையார் ஒருபுறம் சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் காணப்படுவதால் இவருக்குக் கச்சேரி விநாயகர் எனும் பெயர் வந்தது. ‘கோடை அபிஷேகம் ’என்ற பெயரில், இவருக்கு சித்திரை மாதம் முழுவதும் தினசரி இளநீர்அபிஷேகமும் தயிர் அபிஷேகமும் நடைபெறுகிறது.

மகாதேவர் கோயில்
நிறம் மாறும் அதிசய விநாயகர்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில், சிவபெருமானுக்கு கோவில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார, ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது. இவர் நிறம் மாறுவதற்கேற்ப அங்குள்ள அரச மரமும் கிணற்று நீரும் நிறம் மாறும் அதிசயம் நிகழ்கிறது. இந்த விநாயகர் வெள்ளை நிறத்தில் உள்ள போது, இங்குள்ள கிணற்று நீர் கருப்பு நிறமாக மாறுகிறது. விநாயகர் கருப்பு நிறமாக மாறும் போது, கிணற்று நீர் நுரை நுரையாக பொங்கி வெண்மையாக மாறி விடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்த கிணற்றில் தரையை தெளிவாக பார்க்க முடியும்.
மத்தங்கரை விநாயகர் கோயில்
கோடரி ஏந்திய விநாயகர்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள பூலாம்பட்டி மத்தங்கரையில் உள்ள விநாயகர்,கோடரி ஏந்திய நிலையில் உள்ளார். உழைப்பின் அவசியத்தை உணர்த்தும்வகையில் இவர் கோடரி ஏந்தி உள்ளார்.ஒரு மரத்தையே கோடரி சுள்ளிகளாக நொறுக்குவது போல்,இவர் பக்தர்களின் குறைகளை அடித்து நொறுக்குபவராக உள்ளதால், இந்த ஆயுதத்தை ஏந்தியுள்ளார்.
தலைவெட்டி விநாயகர் கோயில்
தலைவெட்டி விநாயகர்
திண்டுக்கல் அருகேயுள்ள மேலைக் கோட்டையூர் ஆலயத்தில் 'தலை வெட்டி விநாயகர்’ உள்ளார்.ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரின் சிரசில்'தன் தலையை நீக்கித் தனத்தை எடு' என்று ஒரு வாசகம் இருந்ததாம்.அதன் படி விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதாம்.அதற்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து குளம்,கோவில் கிணறு வெட்டப் பயன்படுத்தினார்களாம்.அதனால் அவர் தலைவெட்டி விநாயகர் எனப் பெயர் பெற்றார்.
சிரட்டைப் பிள்ளையார் கோயில்
சிரட்டைப்(கொட்டாங்குச்சி) பிள்ளையார்
நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது.இங்கு தேங்காய் விடலை போட்டால்,சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும்,தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்
சர்ப்ப விநாயகர் கோயில்
சர்ப்ப விநாயகர்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது. ஸ்ரீசர்ப்பவிநாயகர் கோவில்.இவருக்கு சர்ப்பம்,தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது.விநாயகரின் உடலில் ஐந்து பாம்புகள் அணிகலன்களாக உள்ளன.ராகு கேது தோஷங்கள் இவரை வழிபட நீங்கும்.

பகவத் விநாயகர் கோயில்
நவக்கிரக விநாயகர்
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார்.இவர் சூரியனை நெற்றியிலும்,சந்திரனை நாபிக் கமலத்திலும்,செவ்வாயை வலது தொடையிலும்,புதனை வலது கீழ்க் கையிலும்,வியாழனை சிரசிலும்,வெள்ளியை இடது கீழ்க் கையிலும்,சனியை வலது மேல் கையிலும்,ராகுவை இடது மேல் கையிலும்,கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார்.இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் தீரும் என்பர்.
முந்தி விநாயகர் கோயில்
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர்
கோயம்புத்தூர் டவுனில் புலிக்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள முந்தி விநாயகர்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் ஆவார்.இவர் 10 அடி 10 அங்குலம் உயரத்துடனும்,11அடி10 அங்குலம் அகலத்துடனும்,8 அடி சுற்றளவுடனும்,190 டன் எடை உள்ளவராகவும் இருக்கிறார்.இவர் வலம் சுழித்த தனது தும்பிக்கையில் அமுத கலசம் ஏந்தி இருக்கிறார்
மாணிக்க விநாயகர் கோயில்
முப்பத்திரண்டு விநாயகர்கள் காட்சி தரும் கோவில்
திருச்சி மலைக்கோட்டை நுறைவாயிலுள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.
மணக்குள விநாயகர் கோயில்
விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ள கோவில்
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வேறு எந்த விநாயகர் கோவிலிலும் இல்லாத வகையில்,விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ளது. தினமும் நைவேத்தியம் முடித்தவுடன் விநாயகர் இந்த பள்ளியறைக்குச் செல்வார்.
செல்வ விநாயகர் கோயில்
ஓங்கார வடிவில் விநாயகர்
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் என்ற தலத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோவில் . இங்கு பதினோரு சுயம்பு பிள்ளையார்கள், ஓங்கார வடிவில் காட்சி தருகிறார்கள். அதனால் இத்திருக்கோயிலை ‘பிள்ளையார் சபை’ என்று போற்றுகிறார்கள். பதினாறு செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் தேவையான பதினோரு செல்வங்களை இந்த விநாயகர்கள் அள்ளித் தருகிறார்கள்
ஹேரம்ப விநாயகர் கோயில்
ஹேரம்ப விநாயகர்
திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வாகனத்தின் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.