ராமேசுவரம் அபய(வாலறுந்த) ஆஞ்சநேயர் கோவில்
பக்தர்களின் பயத்தைப் போக்கும் வாலறுந்த ஆஞ்சநேயர்
ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அபய ஆஞ்சநேயர் கோயில். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது. பக்தர்களின் பயத்தைப் போக்கி காத்தருள்பவர் என்பதால் அபய ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றார். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வால் அறுந்த ஆஞ்சநேயர் என்று இரண்டு மூர்த்திகள் உள்ளனர். சிவலிங்கத்தை உடைக்க முயன்று வால் அறுந்ததால் இங்குள்ள ஆஞ்சநேயர் வால் அறுந்த கோலத்திலேயே காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் கடல் மணலில் உருவான ஒரு சுயம்பு ஆஞ்சநேயர் என்பது கூடுதல் சிறப்பு. அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே கோடி ராமாரக்ஷச மந்திர எழுத்துகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.
ராவணனை வென்று சீதையை மீட்டு வந்த ராமபிரானுக்கு தோஷம் பிடித்தது, இந்த தோஷம் நீங்க ராமர் அக்னி தீர்த்தம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய லிங்கம் எடுத்து வர, ஆஞ்சநேயர் கைலாயம் சென்றார். கைலாயம் சென்ற ஆஞ்சநேயர் திரும்பி வர தாமதமானதால் சீதாப்பிராட்டி மணலினால் ஆன லிங்கம் பிடித்து பூஜை செய்து வழிபட்டனர். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர் அதனை கண்டு கோபமுற்றார். கோபமடைந்த ஆஞ்சநேயர் தனது வாலால் லிங்கத்தை சுற்றி அதனை பெயர்த்து எடுக்க முற்பட்டார், அதனால் அவரது வால் அருந்ததுதான் மிச்சம். லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை. தான் செய்த தவறை உணர்ந்த ஆஞ்சநேயர் சிவ அபச்சாரம் செய்த குற்றம் நீங்க இவ்விடத்தில் தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஆலயத்தின் ஆஞ்சநேயர் வாலறுந்த நிலையில் மூலவராக காட்சி அளிக்கிறார். இதற்காக வாலறுந்த ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆஞ்சநேயர் உருவாக்கிய 'அனுமன் தீரத்தம்' கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் கடல் மண்ணில் உருவான சுயம்பு மூர்த்தியாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.
பிரார்த்தனை
இக்கோயிலில் இருக்கும் தல விருட்சமான அத்தி மரத்தில் இளநீரை கட்டி ஆஞ்சநேயரை வேண்டிக்கொள்கின்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது. உக்கிரமடைந்து சிவலிங்கத்தை உடைக்க முயன்ற ஆஞ்சநேயர் என்பதால் இவரை குளிர்விக்கும் விதமாக இவ்வாறு இளநீர் கட்டி வைத்து வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை பாக்கியம், பயம் மற்றும் மனக்குழப்பம் நீங்க, ஆபத்துகளிலிருந்து காத்து கொள்ள போன்ற பல காரணங்களுக்காக பக்தர்கள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
கருடசேவையின் போது இராபர்ட் கிளைவின் ஆணவத்தை அடக்கிய வரதராஜப் பெருமாள்
வைணவத்தில் கோவில் என்றால் அது திருவரங்கம், மலை என்றால் திருமலை. பெருமாள் கோவில் என்றால் திருக்கச்சி என்பது சிறப்பு. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு உண்டு, திருமலையிலே ரதோற்சவம், திருவரங்கத்தில் குதிரை வாகன ஒய்யாளி, திருமாலிருஞ்சோலையிலே குதிரை வாகனம் சிறப்பு, திருக்கச்சியில் வரதருக்கு கருட சேவை சிறப்பு.
காஞ்சிபுரம் நகரில் வருடத்திற்கு மூன்று முறை கருட சேவை கொண்டாடப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய விழாக்களின்போது கொண்டாடப்படுகிறது.
தனது யாகத்தில் தோன்றிய ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்கு பிரம்மனே உற்சவம் நடத்தியதாகவும், அதன் வழியாக வருடாவருடம் வைகாசி பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேதாந்த தேசிகரை பெருமாள் வைகுந்தத்திற்கு அழைத்தபோது, இங்கு காஞ்சியில் மிகவும் கோலாகலமாக கருட சேவை நடைபெறுவது போல வைகுந்தத்தில் நடைபெறாதே என்று காஞ்சியிலேயே இருக்கின்றேன் என்று பதிலிறுத்தாராம்.
15ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவி காளமேகம் அவர்கள் இந்த அத்தி வரதனின் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது ஓளி மிக்க கருடன் மீது பொன் வண்ணத் திருமேனியுடன் அத்திவரதன் திருவீதி வலம் வரும் அழகைக் கண்டு இகழ்வது போல் புகழும் நிந்தாஸ்துதி வகையில் பாடியுள்ளார்.
இராபர்ட் கிளைவ் (1725 -1774) என்னும் ஆங்கில அதிகாரி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக காரணமாக இருந்தவர். காஞ்சிபுரத்தில் ஒரு கருடசேவையின் போது வரதராஜப் பெருமாள், இராபர்ட் கிளைவின் ஆணவத்தை நீக்கி தன் பக்தனாக்கிய நிகழ்வு மிகவும் சுவையானது. ஒரு வருடம், வரதராஜப் பெருமாள் கருடனில் ஆரோகணித்து பக்தருக்கு அருளிக்கொண்டு பவனி வரும் போது குதிரையில் வந்த இராபர்ட் கிளைவ், பவனியை நிறுத்துமாறு ஆணையிட்டான். அதற்கு பட்டர்கள் வெயில் அதிகமாக உள்ளதால் பெருமாளுக்கு ஆகாது. அவர் உடனடியாக திருக்கோவிலுக்கு திரும்ப வேண்டும் என்று பதிலிறுத்தனர். இதைக் கேட்ட இராபர்ட் கிளைவ், எள்ளி நகையாடினான். இது ஒரு சிலை, இதற்கு என்ன வெயில் என்று பரிகாசம் செய்தான். கோபம் கொண்ட ஒரு பட்டர் அவனிடமிருந்து ஒரு துணியைப் பெற்று பெருமாளின் திருமேனியை ஒற்றி அவனிடம் திருப்பித் தந்தார். சொத சொத என்று பெருமாளின் வியர்வையால் நனைந்த அந்த துணியைத் தொட்ட இராபர்ட் கிளைவ், மின்னல் தாக்கியது போல் அதிர்ந்தான். அவன் மனம் மாறியது. பெருமாளின் பக்தனானான். பெருமாளுக்கு ஒரு விலையுயர்ந்த மகர கண்டிகையை சமர்ப்பணம் செய்து வணங்கினான். இன்றும் இந்த மகரகண்டி பெருமாளுக்கு சிறப்பு நாட்களில் அணிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 22.5.2024 புதன்கிழமையன்று நடைபெறுகின்றது.
திருவாலி அழகிய சிங்கர் கோவில்
பத்ரிகாசிரமத்துக்கு இணையான திவ்ய தேசம்
108 திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலி அழகிய சிங்கர் கோவில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோவில் ஆகியன இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன. இவ்விரு கோவில்களும் ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகின்றன.
மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
நரசிம்ம அவதாரம் எடுத்த திருமாலுக்கு இரணியனை வதம் செய்த பிறகும் கோபம் தணியவில்லை. மகாலட்சுமி, அவரின் தொடையில் சென்று அமர்ந்ததும் நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்தமானார். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த கோலத்தில் நரசிம்ம பெருமாள், அழகிய சிங்கர் என்ற திருநாமத்துடன் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில் பெருமாளின் இடது புறத்தில் தான் லட்சுமி அமர்ந்திருக்கும் தோற்றம் இருக்கும். ஆனால் மிக அரிதாக இந்த தலத்தில், மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த காரணத்தால், இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும்.
பத்ரிநாத்தில் பெருமாளே குருவாகவும், தானே சீடனாகவும் இருந்து (நாராயணனாகவும், நரநாராயணனாகவும்) திருமந்திரத்தை உபதேசித்தார். பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. மகாலட்சுமி பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது, திருமங்கை மன்னை பெருமாளை வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கை மன்னனுக்கு காதில் அஷ்டாட்சர மந்திரத்தை ஓதி, உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில், திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெரும் விழா நடக்கின்றது.
அரியலூர் கோதண்டராமசாமி கோவில்
தேர் போன்ற வடிவில் கருவறை அமைந்திருக்கும் கோவில்
அரியலூர் நகரில் அமைந்துள்ளது மிகப்பழமையான கோதண்டராமசாமி கோவில். இந்த நகரத்தின் பெயர், அரி (விஷ்ணு)+இல் (உறைவிடம்)+ஊர் (பகுதி) . அதாவது, விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்று பொருள். இந்தப் பெயரே, பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
இந்தக் கோவிலில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஒரே பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் எழுந்தருளி இருக்கும் கருவறையானது தேர் போன்ற வடிவில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
பெருமாளின் தசாவதார கோலங்கள்
இந்தக் கோவில் தசாவதார மண்டபத்தில் காட்சி அளிக்கும் பெருமாளின் தசாவதாரம் கோலங்கள் நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். ஒவ்வொரு தசாவதார கோலமும் ஆறரை அடி உயரத்தில், தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தசாவதாரம் மண்டபத்தில், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர்,
இரண்யவத நரசிம்மர், பிரகலாத நரசிம்மர் என்று நான்கு வித தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.
பிரார்த்தனை
இந்த கோவிலில் உள்ள கோதண்ட ராமரை தரிசித்தால் நம் வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமணம் கை கூடாதவர்கள் வழிபட்டால் விரைவில் வரன் கைகூடி வரும்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்
ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் பூவராகப் பெருமாள். தாயார் திருநாமம் அம்புஜவல்லி. பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் தோன்றிய எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களில் ஒன்று இத்தலம்.
பல நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இது. இக்கோவிலில் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட புருஷசூக்த மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம் உள்ளது. சிற்ப அழகு மிளிரும் நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. 72 பரதநாட்டிய நிலைகளுக்கான சிற்பங்கள் நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தின் பிற இடங்களில் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் பெண்களின் நீளமாகப் பின்னலிட்ட ஜடையும், ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் போன்ற அலங்கார அணிகலன்களின் அழகும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில்
அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் செந்தூர நிறத்திற்கு மாறும் அபூர்வ ஆஞ்சநேயர்
தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில். இக்கோவில், தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் (குரு பரிகார தலம்) அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ராம பக்த காரிய ஆஞ்சநேயர், மிகவும் பிரசித்தி பெற்றவர். இத் தலத்தில், வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு இவர் காட்சி தருகின்றார். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் செந்தூர நிறத்திற்கு மாறுவதை காணலாம். அப்போது அவர் முகத்தில் ஓடும் நரம்புகளையும் நாம் தெள்ளத்தெளிவாக தரிசிக்க முடியும்.
வேண்டும் வரம் உடனடியாக அருளும் ஆஞ்சநேயர்
மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு, இந்த ஆஞ்சநேயரின் சன்னதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள், இனிதே நிறைவேறும். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நீண்ட நாட்களாக,நிறைவேறாமல் தடைபட்டு வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது. கோவிலில் நுழையும்போதே, ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்தி விடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.
நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் கோவில்
தீபாராதனை காட்டும் போது கண் திறந்து பார்க்கும் அதிசயப் பெருமாள்
சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் நெற்குன்றம் வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளதுகரிவரதராஜ பெருமாள் கோவில்.
400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் கருவறையில், மூலவர் கரிவரதராஜ பெருமாள், ஐந்து அடி உயரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மற்றும் மார்பில் மஹாலக்ஷ்மியுடன் காட்சி தருகிறார். வலதுகரம் அபய ஹஸ்தம் உள்ளது. மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும், நாபியிலே சிம்ம முகம் இருப்பதும் தனிச்சிறப்பாகும்.
மூலவர் கரிவரதராஜ பெருமாளுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்டுவதற்குமுன் கருவறையில் உள்ள மின்விளக்குகள் அணைக்கப்படுகிறது. தீபாராதனை ஒளியில் பெருமாளின் திருமுகத்தை தரிசிக்கும் போது தீப ஒளியில் அதுவரை மூடியிருந்த இறைவனின் கண்கள் சற்றே திறந்து இரு கண்களும் வெண்மையாக, பெருமாள் நம்மைப் பார்ப்பது போன்ற அதிசயம் நிகழ்கிறது. பெருமாளின் இந்த தோற்றம் பார்ப்பவர்களை மெய்சிலிரிக்க வைக்கும்.
பிரார்த்தனை
இப்பெருமானிடம் தரிசிக்க வரும் பக்தர்கள் எத்தகைய பாவங்களைப் செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வரத்தினை இங்கு தனி சந்நிதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் பெற்றுள்ளாள். எனவே மூலவர் பெருமாளும் தன்னை சேவிக்க வரும் பக்தர்களின் பாவங்களைப் போக்கி அபயஹஸ்தத்தில் நமக்கு அருள்புரிகிறார்.
புத்திர பாக்கியம் வேண்டி வருவோர், திருமணத் தடையால் கவலையடைந்தோர் இப்பெருமானிடம் வேண்டி தமது வேண்டுதல்களை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். கரி வரதராஜ பெருமாள் 27 நட்சத்திரங்களின் இறைவன். தங்கள் பிரார்த்தனைகளை மனதில் நினைத்து பக்தர்கள் 27 ரூபாயை இறைவனின் பாதத்தில் வைக்கின்றனர். இதேபோல் ஒன்பது நாள், ஒன்பது வாரம் என்று வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் செய்தால் வேண்டுதல் நிறைவேறி விடும். தங்கள் ஜன்ம நட்சத்திரத்தில் 27 மாதங்கள் வந்து வழிபட, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. இங்குள்ள இறைவனின் ஜன்ம நட்சத்திரம் ஹஸ்தம். எனவே, ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.
இக் கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சம் சந்தான கோபாலகிருஷ்ண விக்கிரகம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து சந்தானகோபாலகிருஷ்ணனை மடியில் ஏந்தி சீராட்டி மகிழ்ந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.
காஞ்சிபுரம் நிலா துண்டப் பெருமாள் கோவில்
பெருமாளின் நாபிக் கமலத்தில் மகாலட்சுமி எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு கோவில்கள் தான் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், திவ்ய தேசமாகவும் அமைந்திருக்கின்றன. ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில். மற்றொன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலில் அமைந்திருக்கும் திவ்யதேசம் நிலா துண்டப் பெருமாள் கோவில். ஏகாம்பரேசுவரர் கோவிலின் முதல் பிரகாரத்தில், ஒரு சிறிய சன்னதியில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். மகாலட்சுமி. மகாவிஷ்ணுவின் இடது மார்பில் காட்சி தருபவள். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் மகாலட்சுமி பிரம்மாவின் அம்சத்துடன் இருக்கின்றாள். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள். இதனால் இங்கு பெருமாளையும் மகாலட்சுமியும் வழிபடுவதால், பக்தர்களின் விதியை எல்லா வகையிலும் சிறப்பாக மாற்ற முடியும் என்பது ஐதீகம்.
பெருமாளுக்கு நிலா துண்டப் பெருமாள் என்ற பெயர் வந்த காரணம்
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாக பயன்பட்ட மேருமலையை தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப, மகாவிஷ்ணு நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால், வருத்தம் கொண்ட வாசுகி பாம்பு, அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இக்கலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ‘நிலாத்திங்கள் துண்டத்தாய்’ என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். ‘சந்திர சூடப் பெருமாள்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. சிவனை வணங்கி குணமாகியவர், என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.
மகாவிஷ்ணு தன்னுடைய நோய் நீங்குவதற்காக இத்தலத்திற்கு தனியே வந்ததால், தாயாருக்கு இங்கு சன்னதி கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே 'நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது.
பிரார்த்தனை
பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தோல் வியாதிகள், வயிறு சம்பந்தமான நோய்கள், தோஷங்கள் நீங்கும், உடல் உஷ்ணம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக் கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை.
மானாமதுரை வீர அழகர் கோவில்
மானாமதுரை சித்திரைத் திருவிழா
மதுரை கள்ளழகரை போல், வைகை ஆற்றில் இறங்கும் மானாமதுரை வீர அழகர்
மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 49 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரை என்ற ஊரில் அமைந்துள்ளது வீர அழகர் கோவில். இத்தலத்தில் பெருமாள், மதுரை அழகர் கோவிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். தாயார் திருநாமம் சௌந்தரவல்லி.
தல வரலாறு
900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை மாவலி வானாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மன்னர் மாவலி வாணாதிராயருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாளிடத்தில் மிருந்த பக்தி உண்டு. இந்த பெருமாளை பார்க்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். ஒரு நாள் மன்னருக்கு அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாளை பார்க்க செல்ல முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பெருமாளை பார்க்க இயலாததால் மன்னர் மிகுந்த வேதனைப் பட்டார். உடனே பெருமாள் மன்னரின் கனவில் நோன்றி, "மன்னா, நீ இருக்கும் இடத்தில் வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. இதனால் உனக்கு மதுரை அழகர்கோவிலில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என கூறி மறைத்தார். மன்னனும் பெருமாள் கூறியபடி கோவில் கட்ட நினைத்தான. ஆனால் எந்த இடத்தில் கோவில் கட்டுவது என குழம்பினான். பெருமாள், மன்னனின் குழப்பம் தீர, ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விடு. அந்த எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோவிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோவிலுககாள் குளத்தையும் வெட்டுமாறு ஆணையிட்டு மறைந்தார். எனவே தான் கோவிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
மானாமதுரை வீர அழகர் சித்திரை திருவிழா
மதுரை அழகர் கோவிலை போலவே, இக்கோவிலில் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் எதிர்சேவையும், ஐந்தாம் நாள் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி என்றால் மானாமதுரையில் ஆனந்தவல்லி. அங்கு சொக்கநாதர் என்றால் இங்கு சோமநாதர். திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி சகோதரியின் திருமணத்தைக் காண வருகிறார் கள்ளழகர். அவரைப்போலவே மானாமதுரையில் வீர அழகர், சகோதரி ஆனந்தவல்லியின் திருமணத்தைக் காண எழுந்தருள்கிறார். வீர அழகருக்கு எதிர் சேவை, திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் மதுரையில் நடப்பதுபோலவே இப்பகுதி மக்களாலும் செய்யப்படுகிறது. அழகர் கோவில் கள்ளழகரை போல், மானாமதுரை வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது எந்த வண்ண பட்டுடை உடுத்தி வருகிறாரோ, அந்த உடையின் நிறத்திற்கு ஏற்றார் போல் அந்த ஆண்டு பலன் இருக்கும்.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில், இன்று (23.04.2024) செவ்வாய்க்கிழமை, மானாமதுரை வீர அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
கம்பரின் ராமாயணத்தை கேட்டு தலையாட்டி ரசித்த நரசிம்மர்
கம்பர் நரசிம்மரின் தீவிர பக்தர். அவர் தான் எழுதிய ஶ்ரீராமகாவியம் நூலை ஸ்ரீரங்கம் கோவிலில், நரசிம்மர் சன்னதி எதிரில் அரங்கேற்ற நினைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் வேத பண்டிதர்கள் மற்றுமுள்ள புலவர்களிடம் தன்னுடைய வேண்டுதலை முன்வைத்தார். அதற்கு அவர்கள் தில்லை சன்னதியில் இருக்கும் மூவாயிரம் தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று, சான்று ஓலையை வாங்கி வந்தால் இங்கு நீங்கள் அரங்கேற்ற அனுமதிக்கிறோம் என்றார்கள்.
தில்லை சென்ற கம்பர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஸ்ரீரங்கம் கோவிலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வேண்டுகோளைக் கூறி தாம் இயற்றிய ராமகாவியத்தைச் சரிபார்த்து சான்று தர வேண்டும் என்று கேட்டார். அவர்களோ, நாங்கள் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒன்றாகக் கூடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பலர் பல இடங்களில் இருப்பார்கள். ஒருவர் குறைந்தாலும் ஓலையில் முத்திரை பதிக்கப்படாது. ஆகவே வீண் முயற்சி செய்யாதீர்கள். உமது ஊருக்கே சென்றுவிடுங்கள் என்றனர்.
கம்பர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார். தன்னுடைய ராமகாதையை அரங்கேற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பாடல்கள் சிலவற்றை, அந்தாதிகளாக எழுதினார். ஒருநாள் இரவு நித்திரையில் கம்பனின் கனவில் கடவுள் தோன்றி உடனே தில்லை செல்க என்றார். விழித்த கம்பர் உடனே தில்லை விரைந்து சென்றார். அங்கு மூவாயிரம் தீட்சிதர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி இருப்பதை கண்டார் கம்பர். ஆச்சரியத்துடன் அருகில் சென்ற போது ஒரு தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி உடனே இறந்ததால் துக்கம் விசாரிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர் என்றும் தெரிந்து கொண்டார்.
கம்பராமாயணம் நாக படலம் பாடலைப் பாடி, பாம்பு தீண்டிய சிறுவனை உயிர்ப்பித்த கம்பர்
இறைவனின் அற்புதத் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து தாம் எழுதிய ஶ்ரீராமகாதையின் ஓலைக் கட்டிலிருந்து நாகபடலம் பாடல்களின் ஒரு ஓலைச் சுவடியை எடுத்து இறந்து கிடந்த அச்சிறுவனின் நெஞ்சில் வைத்து அப்படியே அப்பாடலை இறைவனை நினைத்துக் கொண்டு பாடினார். உடனே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இவர் பாடலின் ஆற்றலைக் கண்ட அனைவரும், ஒரே முகமாக ஒப்புக்கொண்டு அரங்கேற்றத்திற்கான ஒப்புதல் ஓலை அளித்தனர். அதை வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பிய கம்பர் ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் தனது இஷ்ட தெய்வமான ஶ்ரீநரசிம்மர் பெருமாள் முன்பு தனது ராமகாவியத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.
கர்ஜனை செய்து, தலையையாட்டிய நரசிம்மர்
ஶ்ரீ ராமகாதையைக் கேட்ட ஸ்ரீரங்கத்துப் புலவர்கள் வால்மீகி எழுதிய நூலான ராமாயணத்தில் ஹிரண்ய வதைப் படலம் இல்லை. ஆனால் நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். ஆகவே இது ராமாயணத்தோடு சேராது என்பதால் இங்கே அரங்கேற்றம் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். அதற்கு கம்பர் தமக்கு இறைவனே அடி எடுத்து கொடுத்து எழுத வைத்திருப்பதால், அதைத் தன்னால் மாற்ற இயலாது என்றும், உங்களுடைய சந்தேகத்திற்கு இறைவன் தான் பதில் சொல்லி அருள வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அவர்கள் அப்படி என்றால் ஹிரண்ய வதைப் படலத்தை மட்டும் முதலில் அரங்கேற்றுங்கள். இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது உண்மையாக இருந்தால் இறைவனே வந்து சாட்சி சொல்லட்டும். அதன்பிறகு நாங்கள் முழு ராமகாதையை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். உடனே கம்பர் ஸ்ரீநரசிம்ம பெருமானை மனதில் வைத்து வேண்டிக் கொண்டு ஹிரண்ய வதைப் படலத்தை ஆரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார்.
பாடலின் நடுவே அசுரன் ஹிரண்யன் "ஆரடா சிரித்தார்" என்ற கேட்பது போலக் காட்சி வரும் போது மண்டபத்தின் தூணில் இருந்த நரசிம்மர் கடகடவென பெரிய சிரிப்பொலியுடன் கர்ஜனை செய்து கம்பரின் கூற்று உண்மை என கூறி ஆமோதித்து தன்னுடைய தலையையாட்டினார். இந்த அதிசயத்தை, பயத்தோடு கண்ட புலவர்கள் யாவரும் கம்பரின் ராமகாதையை ஏற்றுக்கொண்டனர். அங்கு சிரித்த ஶ்ரீ நரசிம்மரை, மேட்டழகிய சிங்கர் என்பதாக கூறுவார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இப்போதும் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது சக்கரம் இல்லை. இன்றும் ராமாயணம் அரங்கேற்றப் பட்ட இடமான இம்மண்டப மேடையைக் காணலாம்.
கம்பராமாயணத்தின் சிறப்புகள்
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடையது. இதில் 10589 பாடல்கள் உள்ளன. தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி, கம்பரின் காலத்தில் உச்சநிலையினை அடைந்தது என்பர். வால்மீகி ராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும், கம்பர் அவற்றை வரிக்குவரி மொழி பெயர்ப்பு செய்யவில்லை. அந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்படியே இருந்தாலும் முழுமையாக வால்மீகி ராமாயணம் போல் கம்ப ராமாயணம் இயற்றவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ராமரின் உணவு பழக்கமும், ராவணனின் திறமையும், ராவணன் சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். கம்பர் தனக்கே உரித்தான பாணியில் வால்மீகி ராமாயணத்தின் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றி உள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களைத் தனது நூலில் கையாண்ட காரணத்தால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று அழியாத ஓர் புகழினைப் பெற்றார்.
கம்பர் தனது ராமகாதையை தொல்காப்பிய நெறிப்படி வல்லினம் மெல்லினம் இடையினம் என்று காட்சிக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து சந்தத்தோடு பாடல்களில் தமிழை பயன்படுத்திய பெருமைக்கு உரியவர் ஆவார். உதாரணமாக அரக்கி ஒருத்தி நடந்து வரும் காட்சியில் வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அழகான பெண் நடந்து வரும் காட்சியில் மெல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். குதிரை வரும் காட்சிகளில் குதிரையின் காலடி சத்தம் வருவது போல வார்த்தைகள் வைத்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அதனை படிக்கும் போது குதிரை சத்தம், ரிதத்துடன் வருவது போலவே இருக்கும்.
கம்பரின் காவியத்தை படித்த 14 மொழிகளில் அறிஞரான மகாகவி பாரதியார் தான் கண்ட கவிஞர்களில் கம்பரைப் போல் வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல் வேறு யாரையும் கண்டதில்லை என்று இந்த மூன்று தலைசிறந்த கவிஞர்களில், கம்பரை முதலாவதாகக் குறிப்பிட்டு கூறுகிறார். 'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்' என்று வழங்கும் மொழிகள் அவரது சிறந்த கவித்திறனைப் பறை சாற்றும். பாரதியார் தம் பாடலில் 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று போற்றியுள்ளார்.
ராமேசுவரம் கோதண்டராமர் கோவில்
ராமர், சீதை, லட்சுமணனுடன் விபீஷணர் இருக்கும் அபூர்வ காட்சி
ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். கருவறையில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர். ராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், 'கோதண்டராமர்' என்றும், தலம் 'கோதண்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் பரிந்துரைந்த ஆஞ்சநேயர் இருக்கிறார். இலங்கையிலிருந்து சீதையை மீட்டு திரும்பிய ராமர், உடன் வந்த விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்த புனித தலமாக இப்பகுதி கருதப்படுகிறது. இராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோவில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாகும்.
விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், சீதையை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினார். இராவணன் அதை ஏற்க மறுக்கவே, விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக ராமேசுவரத்தில் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம்.
ராமர் விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்த தலம்
விபீஷ்ணன் ராமபிரானைத் தேடி வந்தபோது, ராமருடன் இருந்த வானரப்படையினர். விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர் ஆனால் ஆஞ்சநேயர் ராமனிடம் விபீஷணனின் நடவடிக்கைகளை தான் இலங்கையில் கவனித்து வந்ததாகவும், அவனது சிறப்பியல்புகளையும் எடுத்துக் கூறி அவனை ராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார். இதனால் ஆஞ்சநேயர், பரிந்துரைந்த ஆஞ்சநேயர் என பெயர் பெற்றார். இவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை ராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. விபீஷணர் பட்டாபிஷேகம் ஆனி மாத வளர்பிறை நவமியன்று நடக்கிறது.
பிரார்த்தனை
குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த ராமர். தரம் கெட்ட ராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம். தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
கோதண்டராம சுவாமி கோவிலின் சுவர்கள், ராமாயணக் கதையைச் சித்தரிக்கும் அற்புதமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்
வலது கரத்தில் ஒரு விரலையும், இடது கரத்தில் இரண்டு விரல்களையும் உயர்த்தி அபூர்வ கோலத்தில் காட்சி தரும் பெருமாள்
108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மூலவரின் திருநாமம் உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள். தாயாரின் திருநாமம் அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி.
கருவறையில் உலகளந்த பெருமாள், 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்டு, நெடிய திருமேனியுடன் தனது வலது காலை தரையில் ஊன்றி, இடதுகாலை விண்ணோக்கி தூக்கியும், வலது கரத்தில் ஒரு விரலை உயர்த்தியும், இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தியும், மேற்கு நோக்கி திரிவிக்கிரம வடிவத்தில் காட்சியளிக்கிறார். இப்படி நெடிதுயர்ந்த திருமேனி கொண்டு, இரு கைகளிலும் விரல்களை உயர்த்திய நிலையில் காட்சி தரும் பெருமாளை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது. பெருமாளின் இத்தகைய கோலத்திற்கு பின்னணியில் ஒரு வரலாறு உண்டு.
பிரகலாதனின் பேரனும், அசுரர்களின் அரசனுமான மகாபலி, தேவலோக பதவி அடைய வேண்டும் என்பதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அப்போது பெருமாள், வாமன ரூபத்தில் வந்து அவனிடம் மூன்றடி நிலம் கேட்டார் .
மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்துக் கொள்ளக் கூறினான். உடனே திருமால், திரிவிக்கிரம வடிவம் எடுத்து, வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்து நின்று, தன்னுடைய ஒரு திருவடியால் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்தார். இத்தலத்தில் பெருமாள் தனது இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டுவது, பூலோகத்தையும், விண்ணுலகையும் அளந்ததை சுட்டிக் காட்டுவதாகவும், வலது கையில் ஒரு விரலை உயர்த்தி இருப்பது மூன்றாவது அடிக்கு எங்கே தனது திருவடியை வைக்க வேண்டும் என்பது போல் அமைந்துள்ளது.
மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம் வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூறி தனது தலையைக் கொடுத்தான். திரிவிக்கிரமர் தன் பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனை பாதாள லோகத்தில் கொண்டு சேர்த்தார். மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரனிடம் இருக்குமாறு செய்தார்.
அப்போது மகாபலி, பகவான் திருக்கோலத்தை முழுமையாகக் காண இயலவில்லை என்றெண்ணி பாதாள உலகத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தான். தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள், இந்தத் தலத்திலேயே மகாபலிக்கு, உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாகத் தந்தார்.
திரு ஊரகத்தான்
மகாபலியோ நிரந்தரமாக, தான் அந்த உருவை தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேராவல் கொண்டதால், பாதாள உலகத்து ஜீவன்களில் ஒன்றான ஐந்து தலை நாகமாக காட்சி தந்தார் திருமால். இந்த நாகத் தோற்றத்தைத் தான் இந்த கோவில் வளாகத்தில், திரு ஊரகத்தானாக (திவ்ய தேசப் பெருமாளாக) தரிசிக்கிறோம்.
தெற்கு நோக்கி காட்சிதரும் திரு ஊரகத்தானுக்கு பால் பாயசம் நிவேதித்தால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், ராகு கேது தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
இக்கோவிலின் பிரகாரத்திலேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இப்படி ஒரே இடத்தில் 4 திவ்ய தேச பெருமாளைக் காணலாம். இது மிகவும் சிறப்பான ஒன்றாகும். வேறு எங்கும் இதைப்போல் ஒரே கோவிலில் 4 திவ்ய தேசங்களைக் காண முடியாது.
திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்
தாயார் வெள்ளி கருடி வாகனத்தில் எழுந்தருளும் திவ்ய தேசம்
நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவில், சோழ நாட்டு திவ்யதேசங்களில் ஒன்று. மூலவரின் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் சௌந்தர்யவல்லித்தாயார். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது.
கருவறையில் நின்ற கோலத்தில், நெடியோனாக மார்பில் பெரிய பிராட்டியாருடன், சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன் திருமங்கையாழ்வாரை மயக்கிய 'நாகை அழகியாராக' நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்க கவசத்தில் பெருமாளை சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரித்தான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம் .
ஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு 'கருடி வாகனம்'(பெண் கருட வாகனம்) இருப்பது வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இத்திருக்கோயிலில் கருடபகவானை ஸ்ரீசௌந்தரராஜ பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன் கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். அதன் படி, ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாள் மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோவில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். பெருமாள் கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. தாயார் கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.
இக்கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை, சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள், வெள்ளிக் கருடி வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் .
ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்
திருமணத்தடை நீங்க சீதா தேவிக்கு மஞ்சள் கிழங்கு மாலை
சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் தொடர்வண்டி பாதையில், கடம்பத்தூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது ராமர் கோவில் என்னும் ஊர். இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாசரதி கல்யாணராமர் அமைந்துள்ளது.
ராமரும் அவரது வானரப் படையினரும் சீதையைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தலத்துக்கு வந்தனர். அப்போது குஸஸ்தலை ஆற்றங்கரை ஓரத்தில் வானரப்படைகளுக்காக உணவு சமைத்திட மடம் அமைத்து சமைக்கும் பணி நடந்தது. அந்த மடம் அமைந்த இடம் மடத்து குப்பம் என்று இன்று அழைக்கப்படுகிறது. சீதையைத் தேடுவது குறித்து சற்றுத் தொலைவில் கவலையுடன் ராமர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவ்வாறு ராமர் நின்ற இடமே இன்று ஊராகி, ராமர் கோவில் என வழங்கப்படுகிறது.
ராமாவதாரம் நிறைவடைந்து கிருஷ்ணர் அவதரிக்க வேண்டிய காலம் வந்தது. விசுவாமித்திரர் மற்றும் சப்தரிஷிகள் ராமனின் திருக்கல்யாணக் காட்சியைக் காண விரும்பினர். அதற்காக குஸஸ்தலை ஆற்றின் கரையில் ஒரு பெரிய யாக வேள்வி நடத்தினர். ராமனும் சீதையும் திருமணக் கோலத்தில் காட்சிதர, அருகில் லட்சுமணன் துணை நிற்க, அனுமன் கைபொத்தி வணங்க, அங்கிருந்த அனைவருக்கும் காட்சி தந்தனர். பின்னர் உலக மக்கள் அனைவரும் வழிபட வேண்டி, இத்தலத்திற்கு அருகில் பர்ணசாலையில் தவம் செய்து கொண்டிருந்த சாலிஹோத்ர மஹரிஷி, ஸ்ரீலட்சுமணன் உடனுறை சீதாதேவி சமேத தாசரதி கல்யாணராமர் பிரதிஷ்டை செய்து கோவிலை உருவாக்கினார். முன்பு ராமன் நின்ற அந்த இடம், திருமணக்கோல ராமன் காட்சி தந்த அந்த கிராமமே,பின்பு ராமன் கோவில் என்று ஆனது.
கருவறையில் மூலவராக, ஸ்ரீ ராமர், ஸ்ரீலட்சுமணன், சீதாபிராட்டி, அனுமன் ஆகியோர் உள்ளனர். ஆனால் மற்ற ராமர் கோவில்களில் உள்ளது போல் இல்லாமல், இங்கே சீதை ராமனுக்கு வலது புறத்திலும், லட்சுமணன் இடது புறத்திலும், அனுமன் ராமருக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கிறார். வலது புறத்தில் சீதையுடன் கல்யாணக்கோலத்தில் நின்றதால் தந்தை பெயருடன் சேர்த்து தாசரதி கல்யாணராமன் சந்நிதி என்று அழைக்கிறனர்.
பிரார்த்தனை
இக்கோவிலில் ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வோருக்கு திருமணம் கைகூடும். திருமணத் தடை, குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இங்கு சீதைக்கு மஞ்சள் கிழங்கு மாலை சாற்றி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கருவறையில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமிக்கு செந்தூரக்காப்பு பிராத்தனை செய்து கொண்டால், வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேளச்சேரி யோக நரசிம்மர் கோவில்
மூலவர் நரசிம்மருக்கு எதிரில் கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதன் இருக்கும் அபூர்வ காட்சி
சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் கோவில். மூலவரின் திருநாமம் யோக நரசிம்மர். தாயாரின் திருநாமம் அமிர்தபாலவல்லி. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சதுர்வேதிமங்கலம் /வேதநாராயணபுரம், அதாவது நான்கு வேதங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்ட இடம் இத்தலம் ஆகும். வேள்விகள் நிறைய நடந்ததால் வேதஸ்ரேணி, வேள்விச்சேரி என்ற பெயர் கொண்ட இந்த இடம், பிற்காலத்தில் வேளச்சேரி என மறுவியதாம்.
மூலவர் யோக நரசிம்மர் மிக அழகாக கம்பீரமான தோற்றத்துடன், நான்கடி உயர திருமேனி உடையவராய். நான்கு கரத்துடன் யோக நிலையில் அருள் செய்கிறார் . இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரம் வைத்துள்ளார் , மற்ற இரு கைகளையும் தன் கால்களின் முட்டியின் மீது வைத்துள்ளார். இங்கு மூலவர் யோக நரசிம்மர், சிறுவன் பிரகலாதனுடன் உரையாடுவதற்கு வசதியாக, சந்நிதிக்கு எதிரே கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதன் நிற்கிறார். இப்படி மூலவருக்கு எதிரே பிரகலாதன் எழுந்தருளி இருப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
இங்குள்ள வேதநாராயணப் பெருமாள் தன கையில் உள்ள சுதர்சன சக்கரத்தை, அசுரர்களின் மீது வீசுவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதும் ஒரு அரிய காட்சியாகும். இக்கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ள ராமபிரானின் உற்சவ மூர்த்திக்கு, வில்லில் பூ முடிந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
பொன்மார் தியாக வினோதப் பெருமாள் கோவில்
பொன்மார் பெருமாள் சக்கரத்தை பிரயோகிக்கும் நிலையில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ கோலம்
சென்னை மேடவாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில், 9 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மார் கிராமத்தில் அமைந்துள்ளது தொலைவில் தியாக வினோதப் பெருமாள் கோவில். இத்தலம் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விஜயநகர மன்னர்களின் காலத்தில் இவ்வூரானது 'ஜெயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர் கோட்டத்து கால்வாய் நாட்டு தியாக வினோத நல்லூரான பொன்மாறு' என்று வழங்கப்பட்டதாக, கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இத்தலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் பெரியதிருவடி எனும் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது சிறப்பானது.
கருவறையை அடைய 10 படிக்கட்டுகளைக் கடக்க வேண்டும். கருவறையில் தியாக வினோதப் பெருமாள் பெருமாள், சதுர்புஜனாக தனது திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் தாங்கி, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார். பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரமானது பிரயோக நிலையில் உள்ளது. இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கின்றது.
முன்பொரு காலத்தில் அம்பரீஷன் என்ற மன்னன் தீவிர பெருமாள் பக்தனாக இருந்தான். இவர் ஏகாதசி விரதத்தை தன் உயிர் போலக் கருதி தவறாமல் கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை அவர் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்த சமயத்தில், துர்வாசரின் கோபத்திற்கு ஆளானார். துர்வாசர் அம்பரீஷனை அழிக்க பூதம் ஒன்றை ஏவினார். அக்கணமே தன் பக்தனைக் காக்க திருமால் தன் பிரயோக சக்கரத்தை ஏவ, அந்த சக்கரம் பூதத்தை அழித்து, பின்னர் துர்வாசரைத் துரத்தத் தொடங்கியது. தன் உயிரைக் காத்துக் கொள்ள துர்வாசர், திருமாலிடம் சரணடைந்தார். ஆனால் திருமாலோ, அம்பரீஷனிடம் சரணடையச் சொல்ல, அதன்படியே அம்பரீஷ மன்னனிடம் சென்று, தன்னை மன்னித்துவிடும்படி துர்வாசர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சீறி வந்த பிரயோக சக்கரம், தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு பெருமாளின் திருக்கரங்களைச் சென்றடைந்தது. தன் பக்தர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் விதமாகத்தான், பெருமாளின் சக்கரம் பிரயோக நிலையில் இருப்பதாக ஐதீகம்.
கருடாழ்வார் சங்கு, சக்கரம், சர்ப்பம் ஏந்தி இருக்கும் அரிய காட்சி
இத்தலத்தில் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தல பெருமாளை வழிபடுபவர்களுக்கு, துன்பங்கள் உடனடியாக விலகும். திருமணத் தடை அகலும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
துத்திப்பட்டு பிந்து மாதவர் கோவில்
பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை மார்க்கத்தில், ஆம்பூர் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் கோவில். தாயார் திருநாமம் ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார். கருவறையில் ஆறடி உயர திருமேனியுடன் பிந்து மாதவப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கதாயுதத்தை கையில் பிடித்தபடி அருள்பாலிக்கிறார். அவருடைய நான்கு கரங்களில், மேல் இரு கரங்கள் சங்கும், சக்கரமும் தாங்கி இருக்கின்றன. கீழ் இடது கரம் கதாயுதத்தை ஏந்தியுள்ளது. கீழ் வலதுகரம் அபய முத்திரையை அளிக்கிறது.
பஞ்ச மாதவ தலங்கள்
மாதவனைக் காண்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட இவ்வுலகில் ஐந்து மாதவப் பெருமாள்களை ஐந்து திவ்ய திருத்தலங்களில் ஸ்தாபித்தான்.
முதலில் வடநாட்டில் அலகாபாத் நகரின் பிரயாகையில் வேணி மாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பித்தாபுரத்தில் குந்தி மாதவரையும், மூன்றாவதாக தமிழகத்தில் ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும், நான்காவதாக கேரளம் திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும், ஐந்தாவதாக ராமேசுவரத்தில் சேது மாதவரையும் ஸ்தாபித்து, வழிபட்டு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி அடைந்தான் என்பது ஐதீகம். அதோடு, இந்த பஞ்ச மாதவப் பெருமாள் கோவில்களுக்கு யாரெல்லாம் தலயாத்திரை செல்கிறார்களோ, அவர்களின் எல்லாவித பாப, சாப தோஷங்களும் நீங்க வேண்டுமென பெருமாளிடம் வேண்டிக்கொண்டான். அதற்கு பெருமாளும் அருள் பாலித்தார்.
மாங்கல்ய தோஷம், நாகதோஷம் நீக்கும் தலம்
வாழ்நாளில் ஒரு முறை பஞ்ச மாதவப் பெருமாள் தலங்களை தரிசனம் செய்தாலே, செய்தவர்களுக்கு சொர்க்கமும், மோட்சமும் நிச்சயம் கிட்டும் என்பது புராண வரலாறு. புத்திர பாக்யம் இல்லாதவர்கள் விரதம் இருந்து இந்த மாதவர்களில் யாரையாவது ஒரு வரை தரிசனம் செய்தால் புத்திர பாக்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் அமாவாசை, பௌர்ணமி, சனிக்கிழமை, ரோகிணி- திருவோணம் -சுவாதி நட்சத்திரங்கள் ,பிரதி மாத ஏகாதசி திதிகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள். இத் திருதலத்தில் உள்ள நாக கன்னிகைகளுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்து, ஐந்தாவது வெள்ளிக்கிழமை மாங்கல்யம் சாத்தி வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் நாக கன்னிகைக்கு நெய் தீபம் ஏற்றி, ஏழுமுறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். பின் பிந்து மாதவரை சென்று வணங்கினால் தோஷம் நீங்கி விடும்.
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்
இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிக்கும் அபூர்வ மூல கருடன்
காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான கோவில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை தாயார்.. இங்கு வழிபடுதல், திருமலையில் வழிபடுவதற்கு சமம் என்பதால் இத்தலம் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தில் இராமாநுஜர் ஆராதித்த பெருமாள் விக்கிரம், திருப்பதியிலிருந்து கொண்டு வந்த ஸ்ரீசடாரி, திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஆலபத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அக்னி ஆகிய மூன்றும் இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ளன.
அனைத்து வைணவ ஆலயங்களிலும் வெளிப் பிரகார மதில் சுவர்களின் மூலையில் சிறகுகளை விரித்த நிலையில் அமர்ந்த கோலக் கருடனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். திருக்கோவிலைக் கருட பகவான் காவல் காப்பதாக ஐதீகம். இத்தலத்தின் ஈசானிய மூலையில் எழுந்தருளியுள்ள கருடன் விசேஷமாக ஆராதிக்கப்படுகின்றார். திருமதில் சுவரில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால் இவர் 'மூலைக் கருடன், மூல கருடன், மதில் கருடன்' என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். இவர் கோபுரத்துடன் கூடிய தனி சந்நிதியில், இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி மாத மஹா சுவாதி அதி விசேஷம்.
மூல கருடனுக்கு சுவர் மீது சிதறு தேங்காய்களை உடைக்கும் வித்தியாசமான நடைமுறை
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை தரையில் உடைப்பதில்லை. வானில் வீசி உடைப்பது போலச் சுவர் மீது உயர வீசி உடைக்கின்றார். இவரைத் தரிசித்து வழிபட்டால், ஏவல் பில்லி சூனியம், மன வியாதி அகலும். சத்ருபயம் நீங்கி வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். பெரும்பாலான எல்லாக் காணிக்கைகளும் இந்த மூலக் கருடனுக்கே செலுத்தப்படுகிறது.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட, உயிரோட்டமுள்ள அபூர்வ சிற்பங்கள்
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
தாயார் சன்னதியின் முன் உள்ள மண்டபத்தில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக்கலைக் கூடமாக திகழ்கின்றது. இங்குள்ள தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, மன்மதன், கார்த்தவீரியார்ஜூனன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூணில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். சிற்பங்களில் தெரியும் நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம், இமைகள் என்று ஒவ்வொரு அங்கமும் சிற்பங்களில் மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால் இந்த சிற்பங்கள் கல்லினால் செதுக்கப்பட்ட வையா அல்லது உயிரோட்டமுள்ள உருவங்களா என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும். இரண்டு இசைத் தூண்களையும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.
கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்
ஆறடி உயர திருமேனியுடன், கண்களில், ஒளிர் விடும் பிரகாசத்துடன் தோற்றமளிக்கும் ஆஞ்சநேயர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில். . இராமர் இத்தலத்தில் யாகம் செய்ததால், இத்தலத்தில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் போன்ற திருமண் கிடைக்கிறது. இக்கோவிலில் தனிச் சன்னதியில் ஆறடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், ஒளிர் விடும் பிரகாசம், தரிசிப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும்.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.