
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோவில்
தாயார் பெருமாளைத் தாங்கியிருக்கும் திவ்ய தேசம்
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது.மூலவர் திரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்). உற்சவர் தாடாளன். தாயார் லோகநாயகி.
உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம். மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.
பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கியிருப்பது போல தாயார் லோகநாயகி, திரிவிக்கிரமரை பதக்கமாக தன் மார்பில் தாங்கியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது ஐதீகம். பெண்கள் இவரை வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.

பள்ளி கொண்ட பெருமாள் கோவில்
பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம்
வேலூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பள்ளி கொண்டான். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் 'பள்ளி கொண்டான்' எனப்பட்டது. பெருமாள் 'உத்தர ரங்கநாதர்' எனப்படுகிறார்.
பெருமாள் இங்கே தென்திசையில் முடியை வைத்து, வடதிசையில் திருப்பாதங்கள் நீட்டி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார்..மார்பில் திருமகளும், நாபியில் பிரம்மனும், பாதங்களின் பக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார் எம் பெருமான். திருக்கரம் 'வா' என்று பக்தர்களை, அன்போடு அழைக்கும் விதமாக அமைந்துள்ளது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார்.
பிரிந்த பிரம்மாவையும் சரஸ்வதியையும் இணைத்து வைத்த பெருமாள்
மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.
இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'க்ஷீரநதி' என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார்.
பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் 'பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.
அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் 'சோட்டா ரங்கநாதர்' எனப்படுகிறார்.
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய தலம்
இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை. திருமணமாகாதவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து பள்ளிகொண்ட பெருமாளை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் இத்தலத்தில் திருமணம் செய்துகொள்ளுபவர்கள் பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர் என்பதும் ஐதீகம். தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.

அதம்பார் கோதண்டராமர் கோவில்
ராமாயண நிகழ்வுகளுடன் தொடர்புடைய அதம்பார் தலம்
அதம்பார் கோதண்டராமர் கோவில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது.
பஞ்ச ராம க்ஷேத்திரங்களில் இத்தலமும் ஒன்றாகும். மற்ற நான்கு பஞ்ச ராம க்ஷேத்திரங்கள் தில்லை விளாகம் (வீர கோதண்ட ராமர்) , வடுவூர் கோதண்ட ராமர் (வில்லேந்திய அழகிய ராமன்), பருத்தியூர்(ஸ்ரீ ராமர்), முடிகொண்டான்(ராமர் கிரீடத்துடன் காணப்படுவதால் முடி கொண்டான்) ஆகியவை ஆகும்.
பொதுவாக ராம, சீதா, லட்சுமண விக்ரகங்கள் தனித்தனியாக ஒரு பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும். இங்கு மூவர் உருவமும் ஒன்றாக ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இடதுகையில் வில்லும், வலதுகையில் அம்பும் கொண்டு ராமர் நிற்கும் தோரணை நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். வேறு எங்கும் இப்படியான வடிவில் நாம் ராமனைப் பார்க்க முடியாது.
பக்கத்தில் சீதையும், லட்சுமணரும் இருக்க, ராமர் திருவடி கீழ் வாய் பொத்தி உத்தரவு கேட்கும் பணிவான தோற்றத்தில் தாச ஆஞ்சநேயர்.
ராமர் சம்பந்தப்பட்ட ராமாயண நிகழ்வுகள் நடந்த ஊர்கள் இத்தலத்திற்கு அருகே இருக்கின்றன. சீதையிடமிருந்து ராமனைப் பிரிக்க, மாரீசன் பொன்மான் உருவில் பொய்மானாக வந்தான். அந்த மாயத் தோற்றத்தில் மயங்கிய சீதா, அதைப் பிடித்துத் தரும்படி கேட்டாள். 'வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது' என்று ராமன் மறுத்தான். சீதையின் முகம் வாடிவிட்டது. 'அவள் ஆசையைக் கெடுப்பானேன்' என்று மனைவியின் மீதுள்ள அன்பின் பொருட்டு, மானைப் பிடிக்கச் சென்றான் ராமன். ஆனால், 'அது மானல்ல! மாரீசன்' என்று தெரிந்ததும், 'உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என்று அதைத் துரத்தினான். மான் பலவகையிலும் மறைந்து மறைந்து ஓடியது. இறுதியில் மானை நோக்கி ராமன் அம்பை எய்த இடம்தான் இந்த 'அதம்பார்' தலம்.
இக்கோவிலில் உள்ள கல்வெட்டில்'ராமர் வில்லின் நாணை ஏற்றி இத்தலத்திலிருந்து மானை நோக்கி 'தம் ஹந்தும் கிருத நிச்சய; ஹதம் பார்' என்று உரைத்து அம்பை எய்தார் என்றும், "ஹதம் பார்"என்பதே பின்னர் திரிந்து "அதம்பார்" ஆயிற்று' எனவும் செய்தி உள்ளது.
அந்த அம்பு, பாய்ந்த சென்று மானைத் தைத்த இடம் இத்தலத்தை அடுத்துள்ள 'மாந்தை' (மான்+தை).
மான் அடிபட்டு ஓடிப்போய் உயிர்நீத்த இடம், மாந்தையை அடுத்துள்ள 'கொல்லுமாங்குடி'.
சீதைக்கு மாரீசன் பொன் மானாக வந்தது ''ஆஹா இந்த நல்ல மான் என்று சீதை மயங்கிய இடம் 'நல்ல மான் குடி' என்ற நல்லமாங்குடி.
ராமன் தன்னை பிடிக்க வருகிறான் என்று மாரீசன் வலப்பக்கமாக ஓடியது 'வலம் கை மான்'என்ற வலங்கை மான்.
தன் பாத அணிகலன்களை சீதை கழட்டிய அடையாளம் காட்டிய இடம்
ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது சீதை தனது ஆபரணமாகிய பாதகத்தை (பாத அணிகலன்) கீழே எறிந்தது 'பாடகச்சேரி'.
ராமன், லக்ஷ்மணனிடமிருந்து தாடகை தப்பி ஓடி ஒளிந்த இந்த இடம் தாடகாந்தபுரம்.

லோகநாதப் பெருமாள் கோவில்
வசிஷ்ட முனிவரிடம் கிருஷ்ணர் நடத்திய லீலை
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணங்குடி. பெருமாள் திருநாமம் லோகநாதர். உற்சவர் தாமோதர நாரயணன். மேலும் இக்கோவில், பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். மற்ற நான்கு கிருஷ்ண க்ஷேத்திரங்கள் திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணமங்கை ஆகியவை ஆகும்.
வசிஷ்ட முனிவர் கிருஷ்ண பக்தியில் மிக சிறந்தவர். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கிருஷ்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,கிருஷ்ணனை விரட்டி சென்றார்.
திருக்கண்ணங்குடியை 'கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகின்றன. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கிருஷ்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,'வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்' என்றார். அதற்கு ரிஷிகள்,'கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்' என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் தங்கிவிட்டார். விரட்டி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. கண்ணன் கட்டுண்டு நின்ற படியால், இத்தலம் 'கண்ணங்குடி' ஆனது.
கருடாழ்வாரின் சிறப்புத் தோற்றம்
எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார்.
குழந்தை வரம் அருளும் தலம்
குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில்
பள்ளிகொண்ட பெருமாள்களில் பெரிய பெருமாள்
தமிழகத்திலுள்ள ஶ்ரீரங்கநாதா் திருமேனிகளிலேயே மிகப் பெரிய விக்கிரகத் திருமேனி, ஆதி திருவரங்கத்தில் அமைந்துள்ள அா்ச்சாவதாரத் திருமேனியாகும். இத்தலம் சத்திய யுகமான 'கிருதயுகம்' முதல் திகழ்வதாலும், திருவரங்கத்திற்கு முந்தைய திருத்தலமாக இருப்பதாலும் இத்தலம் 'ஆதி திருவரங்கம்' என்றும், இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீரங்கநாதா் 'பெரிய பெருமாள்' என்றும் வணங்கப்படுகின்றாா்.
மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்
இத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி திருவரங்கனின் சயனக் கோலத் திருமேனி சுதையால் அமைக்கப்பட்டது என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகின்றது.ஶ்ரீமந்நாராயணனின் மச்ச அவதாரத் தலமாகவும் இத்தலம் வணங்கப்படுகின் றது. மீன ராசியில் பிறந்த அன்பா்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலம் ஆதி திருவரங்கம் தலமாகும்.
ஆதி திருவரங்கம் திருக்கோயிலூரிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து 220 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

ஏரி காத்த ராமர் கோவில்
அம்பு அணையால் ஏரி உடையாமல் காத்த ராமர்
சென்னையில் இருந்து சுமார் 32 கி.மீ. தூரத்திலுள்ள திருநின்றவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது ஏரி காத்த ராமர் கோவில். திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.
திருநின்றவூர் திவ்ய தேசமான பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கும், பூசலார் நாயனாரால் மனக்கோயில் கட்டி வழிபடப்பட்ட இரு தயாலீஸ்வரர் கோவிலுக்கும் இடையே உள்ளது இத்தலம். பக்தவத்சலப் பெருமாள் கோவிலை விட, திரு நின்றவூர் ஏரிக்கரையில் உள்ள இக்கோவில் மிகப் பிரசித்தமானது என்கிறார்கள். திருநின்றவூர் ஏரியானது தமிழ்நாட்டினிலே அமைந்துள்ள ஏழாவது பெரிய ஏரியாகும்.
கருவறையில் கிட்டத்தட்ட எட்டடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி, இதழோரத்தில் குறுநகை பொலியக் காட்சி தருகிறார் ராமபிரான். உடன் ஆயுதமின்றி லக்ஷ்மணர் தனது வலது கரம் வில்லைப் பிடிப்பதைப் போன்ற பாவனையிலும், சீதா பிராட்டி கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் விளங்குகின்றனர். இந்த விக்கிரகங்கள் அனைத்தும் சுதையால் செயப்பட்டுள்ளன.
ஒருமுறை திருநின்றவூரில் மிகப்பெரிய மழை பெய்தது. இதனால் அவ்வூர் ஏரி நிரம்பி, உடைந்து ஊரே அழியக்கூடிய தறுவாயில் மக்கள் ராமரிடம் முறையிட்டனர். தங்கள் ஊரை சேதத்தில் இருந்து காத்தால் கோவில் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டனர். ஆனால், மழையோ விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில், 'எப்படியும் இன்று இரவு ஏரி உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்து விடும். ராமா, நீயே துணை' என்று ஜபித்தவாறே அவரவர் தத்தமது வீடுகளை அடைந்தனர். நேரமானதால் கண்ணயர்ந்தும் விட்டனர்.
பொழுது புலர்ந்தது. திடுக்கிட்டு எழுந்த மக்கள் வெள்ளத்தின் நிலைமையைக் காண வெளியே வந்தனர். அப்போது சிலர் ஏரிக்கரையில் இருந்து, 'ராமர் நம்மைக் கைவிட வில்லை. பாருங்கள் இந்த அதிசயத்தை'என்று கூவியவாறு தலை மேல் கரம் குவித்து ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட மற்றவர்களும் ஏரியை நோக்கி ஓடினர். அங்கு அவர்கள் கண்டகாட்சி அவர்களை உவகையில் ஆழ்த்தியது. கரை முழுவதும் ஒரே சீராக அம்புகள் தைக்கப்பட்டிருந்தன. அம்பு அணைக்குள், தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது. ராமரின் கருணையை எண்ணி, மக்கள் பேரானந்தம் அடைந்தனர். உடனே ஏரிக்கரையில் ராமபிரானுக்குக் கோவில் அமைக்கும் பணிகளைத் துவக்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
சூடிக்கொடுத்த நாச்சியார்
திருவில்லிப்புத்தூர் தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிக்கிறார்கள். உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தும், முக்கிய விழாக்காலங்களில் வெள்ளை வேஷ்டி அணிந்தும் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்த போது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு அருகில் கருடாழ்வார் இருக்கிறார்.
திருவில்லிப்புத்தூர் தலத்தில்தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்தார். பெரியாழ்வாரின் மகளாக பிறந்த ஆண்டாள், பெருமாளுக்கு சாற்றப்படும் பூவை, அவள் ஒவ்வொரு முறையும் அவள் தலையில் வைத்து அழகு பார்த்ததற்கு பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு பூவை போட்டிருக்கிறார். ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதை தவிர்த்து வேறு பூவை சூட்டினார்.உடனே இறைவன், 'ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு' என்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது. மேலும் இந்த நகரம் திருமகளே, தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான 'திரு' என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்படுகிறது.
ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது.ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருப்பாவை என்ற பாசுரத்தால் பாமாலை பாடி பூமாலை சூடிக்கொடுத்ததால் 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற பெயரும் உண்டு. பெரியாழ்வார், பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய திருத்தலம்.
திருப்பதி பெருமாளுக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு, ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார்.
தமிழ்நாடு அரசு சின்னத்தில் போடப்பட்டுள்ள கோபுரம், இக்கோவிலின் கோபுரம் என்பது இத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு.

பள்ளிகொண்ட பெருமாள் கோவில்
மூன்று வாயில்கள் வழியாக தரிசனம் தரும் பெருமாள்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17 கி.மீ. தொலைவில் மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோவிலாகும்.
அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். கருவறையில் இரு தூண்கள் உள்ளன. இதை ஹரி நேத்திர தூண்கள் என்கிறார்கள். இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை, நாம் தரிசிக்கலாம்.
பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு, நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம், மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர். பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு ஆசி வழங்குகிறார். பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார். பெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால் அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு.
கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி நிவர்த்தியடையும் தலம்
'கண் நிறைந்த பெருமாள்' என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் என்கிறார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி எல்லாம், இப்பெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர். இத்தலத்து குளத்தில் நீராடி, கண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமமிட்டு பூஜித்து ஆரத்தி காட்ட அறுவை சிகிச்சை செய்து பார்வை சரிவர கிடைக்காதவர்களுக்கும் பரிபூரண பார்வை கிட்டும் என்பது அனுபவ நம்பிக்கை.
பித்ரு சாபம், தோஷங்கள் போக்கும் பெருமாள்
முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது உறுதி.
பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி குபேர சம்பத்துக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வானமாமலை பெருமாள் கோவில்
கருவறையில் உள்ள மூர்த்தஙகள் அனைத்தும் சுயம்புவாகத் தோன்றிய திவ்ய தேசம்
திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.
கோயிலின் கருவறையில் மூலவர் வானமாமலை என்கின்ற தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடிக்க , பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அமர்ந்திருப்பது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசிக் கொண்டும், சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோர் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.
இத்தலத்தில் பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடியும், மற்றொரு கையை மடியில் வைத்தும் காட்சி அளிக்கிறார். யார் தன் பாதத்தை சரணடைகிறார்களோ அவர்களுக்குத் தன் மடியில் இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள். இத்தகைய பெருமாள் கோலத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
சில தலங்களில் மூலவர் மட்டும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கருவறையிலுள்ள தோதாத்ரி நாதர், பூதேவி, ஸ்ரீதேவி, சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி, ஊர்வசி, திலோத்தமா ஆகிய ஒன்பது பேரும், அர்த்த மண்டப்பத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக 11 மூர்த்தங்களும் சுயம்புவாக உருவானவர்கள். இப்படி கருவறையில் உள்ள அனைத்து மூர்த்தஙகளும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்
கா்ண குண்டலம் அணிந்த ஆஞ்சநேயரின் அபூர்வ தோற்றம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழைய சீவரம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு 'திருமுக்கூடல்' என்ற பெயரும் உண்டு. இத்தலத்து பெருமாள் திருநாமம் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். இக்கோயில் பெருமாள், திருமலை பெருமாளுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார்.
இத்தலத்தில் வீர ஆஞ்சநேயருக்குத் தனி சந்நதி அமைந்துள்ளது. வீர ஆஞ்சநேயர் இங்கு பிரார்த்தனா மூர்த்தியாய் விளங்குகிறார். அவர் 'கா்ண குண்டலம்' அணிந்து வித்தியாசமாகக் காட்சி தருகின்றார். ஆஞ்சநேயரின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வித்தியாசமான தேன்குழல் மாலை
பொதுவாக ஆஞ்சநேயருக்கு வடை மாலைதான் சாத்துவார்கள். ஆனால் இத்தலத்து வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது.
பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், வீர ஆஞ்சநேயரையும் பக்தியோடு வழிபடுகின்றனா்.

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்
சந்தனக்கட்டை வடிவில் பெருமாள்
திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ள கருங்குளத்தில் இருக்கும் வகுளகிரி என்ற சிறிய மலைக் குன்றின் மீது அமையப் பெற்றுள்ளது கருங்குளம் வெங்கடாசலபதி கோவில். மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளும், சாலை வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
திருப்பதியிலிருந்து பெருமாள் இங்கு வந்தமையால் இந்த கோவில் 'தென் திருப்பதி' என்று சிறப்பிக்கப்படுகிறது. திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்த வகுளகிரி பெருமாள் கோவிலில் நிறைவேற்றலாம்.
பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது. இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும், பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.
சந்தனக்கட்டை வடிவில் பெருமாள் எழுந்தருளிய வரலாறு
முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு முறை கண்ட மாலை என்னும் கொடிய நோய் பீடித்தது. தனது அந்த கொடிய நோய் நீங்க அவன் பெருமாளை பல கோவில்கள்தோறும் சென்று வழிபட்டு வந்தான். அப்படி அவன் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலபதி பெருமாளை வணங்கி தன் நோய் தீர மனமுருக வேண்டி நின்றான். அவனது பக்திக்கு இறங்கிய திருப்பதி பெருமாள், அன்று இரவு சுபகண்டனின் கனவில் தோன்றி, எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்வாயாக அப்படி செய்யும் போது அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மிச்சமாக இருக்கும். அந்த சந்தன கட்டைகளை தெற்கே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வகுளகிரி மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் நோய் நீங்கப் பெறுவாய் என கூறி அருள் புரிகிறார்.
கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த மன்னன் சுபகண்டன், மறுநாளே திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான். அவன் தேரை செய்து முடிக்கும் தருவாயில் அவனது கனவில் பெருமாள் கூறியவாறே, இரண்டு சந்தன கட்டைகள் மிச்சமாகின்றன. அந்த சந்தன கட்டைகளை எடுத்துக் கொண்டு, தென் பாண்டி நாட்டை அடைந்த சுபகண்டன், அங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த வகுளகிரி பகுதியை கண்டறிந்து கனவில் பெருமாள் கூறியபடியே தான் கொண்டு வந்திருந்த சந்தன கட்டைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்து தாமிரபரணியில் மூழ்கி பெருமாளை வழிபட அவனது நோய் நீங்கப் பெற்றதாக இக் கோவில் வரலாறு கூறப்படுகிறது.
இங்கு மலை மீது உள்ள கோவிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.

உலகளந்த பெருமாள் கோவில்
பெருமாள் மூன்றடி மண் தானம் கேட்ட திவ்ய தேசம்
பெருமாள் விண்ணையும் மண்ணையும் அளந்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்த தலம் தான் திருக்கோவிலூர் திவ்ய தேசம். இத்தலத்து பெருமாளின் திருநாமம் உலகளந்த பெருமாள். இவருக்கு உலகளந்த திருவிக்கிரமன் என்ற திருநாமமும் உண்டு. கருவறையில் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். நெடிய திருமேனியுடைய இப்பெருமாள் மரத்தால் ஆனவர். இவர் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். பெருமாளின் காலடியில் தாயார், மிருகண்டு, மகாபலி ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

வான்முட்டி பெருமாள் கோயில்
மூன்று பெருமாள்களை தரிசித்த பலன் தரும் கோழிகுத்தி வான்முட்டி பெருமாள்
கும்கோணத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோழிகுத்தி என்னுமிடத்தில் வான்முட்டி பெருமாள் ஆலயம் உள்ளது. இத்தலத்து பெருமாள் பெயருக்கேற்றார் போல 16 அடி உயரத்தில், 6 அடி அகலத்தில் மிக பிரமாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார். வேருடன்கூடிய ஒரு அத்தி மரத்தில் சீனிவாச பெருமாள் விசுவரூப தரிசனம் தருவது காணக் கிடைத்தற்கரிய ஒரு காட்சி.
கோழிகுத்தி வான்முட்டி பெருமாளை தரிசித்தால், திருப்பதி சீனிவாசப்பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும்.
இந்த திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த அனுமன் சிலையின் உடலை தட்டினால், ஏழுவித சப்தங்கள் கேட்கின்றது. ஆஞ்சநேயரின் உடலின் பல்வேறு இடங்களில் தட்ட, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சப்தம் கேட்கின்றது.

விஜயராகவ பெருமாள் கோவில்
வறுத்த பயறு முளைக்க வைக்கும் மரகதவல்லித் தாயாா்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருப்புட்குழி என்னும் திவ்ய தேசம். பெருமாள் திருநாமம் விஜயராகவ பெருமாள்.
திருப்புட்குழி தலத்தின் தாயாா் 'மரகதவல்லி' எனும் திருநாமத்துடன் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாா். 'குழந்தைப் பேறு' இல்லாத அன்பா்களுக்கு மழலை பாக்கியம் அளிப்பதில் மிகச் சிறந்த வரப்ரசாதியாக விளங்குகின்றாா் இந்த அன்னை.
திருப்புட்குழி தலத்தில் உள்ள 'ஜடாயு தீா்த்தத்தில்' குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் நீராடி இரவில் வறுத்த பயறினைத் தங்கள் மடியில் கட்டிக்கொண்டு படுக்க, மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவா்களுக்கு மழலைப் பேறு ஏற்படுவது உறுதி என்ற நம்பிக்கை உள்ளது. இதனாலேயே மரகதவல்லித் தாயாருக்கு 'வறுத்தபயறு முளைக்க வைக்கும் தாயாா்' என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது.

நின்ற நாராயணன் கோவில்
ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரன் திருமணம் நடந்த திவ்யதேசம்
திருத்தங்கல் திவ்ய தேசம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் நின்ற நாராயணன் பெருமாள் கோவில் 'தங்காலமலை மீது அமைந்துள்ளது. மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு. இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு.
மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தனது தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி ஓவியமாக வரையக் கூறினாள். ஓவியம் வரைந்த பிறகு தான், அந்த வாலிபன் பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம்பிடித்தாள். சித்ரலேகை துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிகொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு வாணாசுரனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்தவற்றை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான். அப்போது அசரீரி தோன்றி,"வாணா! இத்தம்பதிகளை கொன்றால் நீயும் அழிந்து போவாய்," என ஒலித்தது. இதைக்கேட்ட வாணாசுரன் அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின்பு முறைப்படி துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்தார். ஆனால் திருத்தங்கலில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பப்படி இத்தலத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து, நின்ற நாராயணப்பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.

வானமாமலை பெருமாள் கோவில்
நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் திவ்ய தேசம்
திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நான்குவழிச் சாலையில் சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 8 சுயம்புத் தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. மிகவும் பழைமைவாய்ந்த இத்தலத்தின் பெருமைகள் பற்றி நரசிம்ம புராணம், ஸ்கந்த புராணம், பிரம்ம புராணம் போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் பெருமாள் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில், சுவாமியை இத்தலத்தில் தரிசிக்கலாம். அதனால் இந்தக் கோயில் பூகோல வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தாயாரின் திருநாமம் ஸ்ரீவரமங்கை. தன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருவதாக இவரை கொண்டாடுகின்றனர்.
பெருமாளுக்கு தினசரி நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம்
இத்தலத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் வானமாமைலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் திருக்கோவில் வளாகத்துக்குள் இருக்கும் 25 அடி நீளம், 15 அடி அகலமுள்ள கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட இந்த எண்ணெய், மழைக்கும், வெயிலுக்கும் திறந்த வெளியாக கிணற்றில் இருந்தாலும் கெட்டுப் போகாமல் இருப்பது விசேஷம் ஆகும். இந்த எண்ணெய் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
நோய்களைத் தீர்க்கும் எண்ணெய் பிரசாதம்
இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி நாள்தோறும் சிறிது பருகுவதுடன், கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்களும் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.
இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். எண்ணெய் பிரசாதத்தின் மகிமை பற்றி அகத்தியர் தான் இயற்றிய 'அகத்தியம்' என்ற நூலில் புகழ்ந்து பேசியுள்ளார்.

லட்சுமி நரசிம்மர் கோவில்
சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் நரசிம்மர்
கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவில் உள்ள தவளக்குப்பம் வழியாக, மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் லட்சுமி நரசிம்மர். தாயார் கனகவல்லி.
உக்கிர நரசிம்மரின் பிரம்மாண்டமான கம்பீரத் தோற்றம்
இங்கு பிரகலாதனின் விருப்பப்படி, நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் கோலத்தில், சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறார். நரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும், நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் காட்சியளிக்கிறார்.
பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார். குழந்தை பிரகலாதன், ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதி, அசுர குரு சுக்ராச்சாரியார், வசிஷ்ட மகரிஷி ஆகியோர் நரசிம்மரின் அருகில் காட்சியளிக்கிறார்கள்.
இரணியனை வதம் செய்யும் கோலத்தில் நரசிம்மர் காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர்களின் அரிதான காட்சி
இச்சன்னதியில் சிறிய வடிவில் பால நரசிம்மரும், யோக நரசிம்மரும் உடன் எழுந்து அருளியுள்ளார்கள். இப்படி ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர்களை தரிசிப்பது என்பது மிகவும் அரிதான காட்சியாகும்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் திருப்பணிகள் பல செய்துள்ளார். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.
நவக்கிரக தோஷ நிவர்த்தி தலம்
இத்தலத்தில் வழிபட்டால் .நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் எள்பது ஐதீகம். திருமண தடை, பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள், சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது.

பாடலாத்ரி நரசிம்மர் கோவில்
நெற்றிக்கண் உடைய நரசிம்மர்
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோவில். இத்தலத்தில் சிறிய குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார் பாடலாத்ரி நரசிம்மர். 'பாடலாத்ரி' என்றால் செந்நிறக் குன்று என்று பொருள்.
இரணியனை வதம் செய்து விட்டு காட்சி தந்த தலம்
நரசிம்ம அவதாரக் காலத்தில், ஜபாலி என்னும் முனிவர் இத்தலத்தில் தவம் செய்து வந்தார். பெருமாளை நரசிம்மராகக் காண வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவு செய்யும் வகையில் நரசிம்மர் இரணியனை வதம் செய்தவுடன் உக்கிர நரசிம்மராக முனிவருக்குக் காட்சி கொடுத்தார். ஜபாலி முனிவரின் ஆசைப்படி நரசிம்ம வடிவத்தோடு சிவனைப் போன்று முக்கண்ணுடன் (நெற்றிக்கண்) காட்சி கொடுத்தார் நரசிம்மர். மூலவரான நரசிம்ம மூர்த்தியின் நெற்றியிலுள்ள நாமத்தை விலக்கும் பொழுது நெற்றிக்கண்ணைத் தரிசனம் செய்யலாம். மூலவர் பஞ்ச மூலிகைகளால் உருவாக்கப் பட்டதால் அபிஷேகம் கிடையாது.
மிளகு தோசைப் பிரசாதம்
இத்தலத்தின் மிளகு தோசைப் பிரசாதம் மிகவும் பிரசித்தம். எண்ணெய்ப் பொடியுடன் வழங்ககப்படும் இப்பிரசாதத்தின் சுவையே அலாதியானது.
நரசிம்மரின் திருமேனியே மலையாக இருக்கும் தலம்
பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சுவாதி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்து நரசிம்மரை வழிபடுவது நல்லது.
இங்குள்ள பெருமாளை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகள் விரைவில் அனுகூலமாக தீரும். கடன் தொல்லைகள் அகலும். மகப்பேறு உண்டாகும். திருமணத்தடை நீங்கும். பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் குன்றினை ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள்.

கல்யாண வேங்கடரமணர் கோவில்
தான்தோன்றிமலையில் திருப்பதி வெங்கடாஜலபதி எழுந்தருளிய கதை
கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை. இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே 'கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் குன்றின் மேல் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் தென்திருப்பதி என்று போற்றப்படுகிறது.. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அரரசவையில் டங்கணாச்சாரி என்ற சிற்பி இருந்தார். சிறந்த சிவபக்தர். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
ஒரு நாள் சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தபோது, தெருவில் ஒரு கூட்டம் 'கோவிந்தா... கோவிந்தா' என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.
சுந்தராம்பிகை கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக் கொண்டு பெருமாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்’ என்றாள்.
இதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. சுந்தராம்பிகை பிரார்த்தனையை நிறைவேற்ற நினைத்தாள். இதுவரை சுந்தராம்பிகை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள்
அதைக் கேட்ட டங்கணாச்சாரி கோபமடைந்தார். 'சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்' என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.
குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, காரணத்தைக் கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள். அதைக் கேட்ட குண்டலாச்சாரி, 'அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்' என்றான். மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான். மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, 'குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்?' என்று கேட்டார். குண்டலாச்சாரி, 'நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்' என்று கூறினான்.
இதனை கேட்ட சந்நியாசி, 'உன்னால் இக்காரியம் முடியக் கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா!' என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான்.
எப் போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார். அங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 'ஒரே நாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே' என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார். மன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான்.
டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார். கோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.
அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, 'கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்' என்று கூறினார்.
அதைக் கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு 'நான் துளசியை கையால் தொடமாட்டேன்' என்றார். இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து 'இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல' என்று சொல்லவும், அரை மனதுடன் துளசியை பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.
அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.
சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.
அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.
குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ;குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
கம்பருக்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடல்
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண், ஆண்டாள் நாச்சியார். அவர் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். பெருமாளின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமி பிராட்டியின் அம்சமாக அவதரித்தவர்ஆண்டாள் நாச்சியார். ஸ்ரீரங்கம் ரங்கநாதனுக்கு சூட்ட வேண்டிய பூமாலையை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள்.
இக்கோவிலில் நடைபெறும் 'மார்கழி நீராடல்' உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது. அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை 'மார்கழி நீராடல்' உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ' என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, 'எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும். ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்' என்று பதில் அளித்தனர்.
உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, 'இதுவா பாருங்கள்?' என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். 'ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?' எனக் கேட்டனர். கம்பர். 'திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!' என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.
கூடாரவல்லித் திருநாள்
மார்கழி மாதம் 26 நாட்க பாவை நோன்பிருந்த ஆண்டாள், அரங்கநாதனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில் அவருடன் இரண்டறக் கலந்தாள்.
.