கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்

சந்தனக்கட்டை வடிவில் பெருமாள்

திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ள கருங்குளத்தில் இருக்கும் வகுளகிரி என்ற சிறிய மலைக் குன்றின் மீது அமையப் பெற்றுள்ளது கருங்குளம் வெங்கடாசலபதி கோவில். மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளும், சாலை வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

திருப்பதியிலிருந்து பெருமாள் இங்கு வந்தமையால் இந்த கோவில் 'தென் திருப்பதி' என்று சிறப்பிக்கப்படுகிறது. திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்த வகுளகிரி பெருமாள் கோவிலில் நிறைவேற்றலாம்.

பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது. இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும், பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.

சந்தனக்கட்டை வடிவில் பெருமாள் எழுந்தருளிய வரலாறு

முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு முறை கண்ட மாலை என்னும் கொடிய நோய் பீடித்தது. தனது அந்த கொடிய நோய் நீங்க அவன் பெருமாளை பல கோவில்கள்தோறும் சென்று வழிபட்டு வந்தான். அப்படி அவன் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலபதி பெருமாளை வணங்கி தன் நோய் தீர மனமுருக வேண்டி நின்றான். அவனது பக்திக்கு இறங்கிய திருப்பதி பெருமாள், அன்று இரவு சுபகண்டனின் கனவில் தோன்றி, எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்வாயாக. அப்படி செய்யும் போது அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மிச்சமாக இருக்கும். அந்த சந்தன கட்டைகளை தெற்கே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வகுளகிரி மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் நோய் நீங்கப் பெறுவாய் என கூறி அருள் புரிகிறார்.

கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த மன்னன் சுபகண்டன், மறுநாளே திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான். அவன் தேரை செய்து முடிக்கும் தருவாயில் அவனது கனவில் பெருமாள் கூறியவாறே, இரண்டு சந்தன கட்டைகள் மிச்சமாகின்றன. அந்த சந்தன கட்டைகளை எடுத்துக் கொண்டு, தென் பாண்டி நாட்டை அடைந்த சுபகண்டன், அங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த வகுளகிரி பகுதியை கண்டறிந்து கனவில் பெருமாள் கூறியபடியே தான் கொண்டு வந்திருந்த சந்தன கட்டைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்து தாமிரபரணியில் மூழ்கி பெருமாளை வழிபட அவனது நோய் நீங்கப் பெற்றதாக இக் கோவில் வரலாறு கூறப்படுகிறது.

இங்கு மலை மீது உள்ள கோவிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.

 
Previous
Previous

உழக்கரிசி பிள்ளையார் கோவில்

Next
Next

வேதபுரீசுவரர் கோவில்