ஏரி காத்த ராமர் கோவில்

அம்பு அணையால் ஏரி உடையாமல் காத்த ராமர்

சென்னையில் இருந்து சுமார் 32 கி.மீ. தூரத்திலுள்ள திருநின்றவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது ஏரி காத்த ராமர் கோவில். திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.

திருநின்றவூர் திவ்ய தேசமான பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கும், பூசலார் நாயனாரால் மனக்கோயில் கட்டி வழிபடப்பட்ட இரு தயாலீஸ்வரர் கோவிலுக்கும் இடையே உள்ளது இத்தலம். பக்தவத்சலப் பெருமாள் கோவிலை விட, திரு நின்றவூர் ஏரிக்கரையில் உள்ள இக்கோவில் மிகப் பிரசித்தமானது என்கிறார்கள். திருநின்றவூர் ஏரியானது தமிழ்நாட்டினிலே அமைந்துள்ள ஏழாவது பெரிய ஏரியாகும்.

கருவறையில் கிட்டத்தட்ட எட்டடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி, இதழோரத்தில் குறுநகை பொலியக் காட்சி தருகிறார் ராமபிரான். உடன் ஆயுதமின்றி லக்ஷ்மணர் தனது வலது கரம் வில்லைப் பிடிப்பதைப் போன்ற பாவனையிலும், சீதா பிராட்டி கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் விளங்குகின்றனர். இந்த விக்கிரகங்கள் அனைத்தும் சுதையால் செயப்பட்டுள்ளன.

ஒருமுறை திருநின்றவூரில் மிகப்பெரிய மழை பெய்தது. இதனால் அவ்வூர் ஏரி நிரம்பி, உடைந்து ஊரே அழியக்கூடிய தறுவாயில் மக்கள் ராமரிடம் முறையிட்டனர். தங்கள் ஊரை சேதத்தில் இருந்து காத்தால் கோவில் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டனர். ஆனால், மழையோ விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில், 'எப்படியும் இன்று இரவு ஏரி உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்து விடும். ராமா, நீயே துணை' என்று ஜபித்தவாறே அவரவர் தத்தமது வீடுகளை அடைந்தனர். நேரமானதால் கண்ணயர்ந்தும் விட்டனர்.

பொழுது புலர்ந்தது. திடுக்கிட்டு எழுந்த மக்கள் வெள்ளத்தின் நிலைமையைக் காண வெளியே வந்தனர். அப்போது சிலர் ஏரிக்கரையில் இருந்து, 'ராமர் நம்மைக் கைவிட வில்லை. பாருங்கள் இந்த அதிசயத்தை'என்று கூவியவாறு தலை மேல் கரம் குவித்து ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட மற்றவர்களும் ஏரியை நோக்கி ஓடினர். அங்கு அவர்கள் கண்டகாட்சி அவர்களை உவகையில் ஆழ்த்தியது. கரை முழுவதும் ஒரே சீராக அம்புகள் தைக்கப்பட்டிருந்தன. அம்பு அணைக்குள், தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது. ராமரின் கருணையை எண்ணி, மக்கள் பேரானந்தம் அடைந்தனர். உடனே ஏரிக்கரையில் ராமபிரானுக்குக் கோவில் அமைக்கும் பணிகளைத் துவக்கினர்.

 
Previous
Previous

சுப்பிரமணிய சுவாமி கோவில்

Next
Next

சங்கரநாராயணர் கோவில்