
பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்
ஒரே மண்டபத்தில் இரண்டு நந்திகள்
கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் வழியில் கீழக்கொருக்கை அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை. பூக்களை பூமியில் சிருஷ்டித்ததால், உமையவள் புஷ்பவல்லி எனும் திருநாமம் கொண்டாள். அம்பிகை சன்னதி தனியாக தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் கருவறையின் முன் இருக்க வேண்டிய நந்தியும் அம்மன் சன்னதி முன் இருக்க வேண்டிய நந்தியும் ஒன்றாக வெளி மண்டபத்தில் அமர்ந்து இருக்கின்றன. இப்படிப்பட்ட அமைப்பை வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாது. முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

தான்தோன்றீஸ்வரர் கோவில்
மான் வாகன துர்க்கை
பொதுவாக துர்க்கையம்மன் சிம்ம வாகனத்துடன் தான் காட்சி தருவாள் ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகில் உள்ள பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் துர்க்கையம்மனை மான் வாகனத்துடன் தரிசிக்கலாம். கோவில் வளாகத்தில் ஒரு பாறையில் புடைப்பு சிற்பமாக இந்த துர்க்கை அருளுகிறாள் அம்பிகைக்கு பின்புறத்தில் மான் நின்றிருக்கிறது இந்த துர்க்கையின் பின் இடுப்பிலிருந்து செல்லும் சூலாயுதம் காலுக்கு கீழே உள்ள எருமைதலையின் (மகிஷாசுரன்) மீது குத்தியபடி இருக்கிறது

தயாநிதீசுவரர் கோவில்
சிவன் கோவிலில் விஷ்ணு துர்க்கை
அபிஷேகத்தின் போது நீல நிறமாக மாறும் பால்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர் ..
பொதுவாக சிவாலயத்தில் இருக்கும் துர்க்கையை சிவதுர்க்கை என்றே அழைப்பார்கள். ஆனால், இத்தலத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை, கையில் சங்கு- சக்கரத்துடன் பெருமாள் அம்சமாகத் திகழ்வதால், ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை என்று போற்றப்படுகிறாள். எட்டுத் திருக்கரங்களுடன் அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்தத் துர்க்கைக்குப் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீலநிறத்தில் காட்சியளிக்கும் அதிசயத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம்
நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

தண்டுமாரியம்மன் கோவில்
திப்பு சுல்தான் படை வீரர்களின் அம்மை நோய் தீர்த்த அம்மன்
ஒரு சமயம், திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்மனை தினமும் வழிபடுபவன். அப்போது,ஒருநாள் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக் கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
கனவில் மாரியம்மனை தரிசித்த அவ்வீரன், மறுநாள் காலையில், அம்மன் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்ப மரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட அம்மன் வீற்றிருந்தாள். அங்கேயே அம்மனை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, காலப் போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். 'தண்டு' என்றால் 'படை வீரர்கள் தங்கும் கூடாரம்' என்று பொருள். படைவீரர்கள் தங்கும் இடத்தில் கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் 'தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்பட்டாள். தண்டு என்பதற்கு 'தங்கு' என்பது பொருள். தங்கும் (தண்டு) இடமாக இருந்ததால் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என பெயர் உண்டானது. ஆங்கிலத்தில் 'டென்ட்' என்பது கூடாரத்தை குறிப்பதால் 'டென்ட்' மாரியம்மன் என்றும் பெயருண்டு.
படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்மனை வணங்கி, தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை நோய் குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியும் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று.
தண்டு மாரியம்மன்: கருவறையில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உற்சவரின் பெயர், அகிலாண்ட நாயகி. தினமும் மாலையில் தங்கத்தேர் பவனி நடக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். திருமணம் நிறைவேற கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அடிப்பிரதட்சணம் செய்கின்றனர். சித்திரை மாதத்தில் அக்னி (பூ) சட்டி ஊர்வலம் நடக்கும்.
அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இந்த அம்மனை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்..

கண்ணாயிரநாதர் கோவில்
சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
தேவாரத் தலமான திருக்காரவாசல் இறைவன் பெயர் கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் கைலாச நாயகி. கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இக்கோவிலில், ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சன்னதிகள் அமைந்துள்ளன.இத்தலத்து அம்பிகை "பஞ்ச்சதசா ஷர" சொரூபிணியாக விளங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. மக்கள் செய்த பாவங்களால் உலகில் தலங்கள் மகிமை குன்றிய காலத்தில் பராசக்தியே இத்தலத்தை உயர்த்தினார் என்பது புராண வரலாறு. கைலாசநாயகிக்கு நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் வைத்துத்தரும் சேஷ தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர தீராத நோய்களும் , முக்கியமாக சரும நோய்களும் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில்
கம்பருக்கு அருளிய துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவில். கதிராமங்கலம் தலத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர். கம்பர் வசித்த ஊர் இது. தேரழுந்தூரில் வாழ்ந்து வந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அன்னை வனதுர்க்கையின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்த ஒரு செயலையும் துவங்குவதில்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. வீட்டுக்குள் மழை நீர் கொட்டியது. அப்போது கம்பர் மனமுருகி, "அம்மா! அடைமழை இடைவிடாது பெய்கிறதே. ஒரு கூரைகூட இல்லாமல் நீயே நனைந்தபடி நிற்கிறாய்! உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்' என்று மழையைப் பொருட்படுத்தாது ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்ததைக் கண்டு வியந்து, "கதிர்தேவி, கதிர்வேய்ந்த மங்களநாயகி' என பாடிப் பரவினார். கதிர் வேய்ந்த மங்கள நாயகி இருக்குமிடம் கதிர் வேய்ந்த மங்களம் என்று அழைக்கபடலாயிற்று. பின்னர், கதிர் வேய்ந்த மங்களம் என்பதே கதிராமங்கலம் என மருவியது.

கண்ணாத்தாள் கோவில்
கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்
சிவகங்கையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ளது கண்ணாத்தாள் கோவில். இக்கோவில் கருவறையில் அன்னை கண்ணாத்தாள் சற்றே தலை சாய்த்து, சிலம்பணிந்த பாதத்தின் கீழ் அரக்கனை மிதித்தபடியும், மற்றொரு காலை மடித்து உயர்த்தியபடி காட்சி தருகிறாள். அம்மன், தன் எட்டு கரங்களில் கபாலம், அக்னி, சூலம், உடுக்கை, குறுவாள், கிளி, கேடயம், மணி ஆகியவற்றை தாங்கி இருக்கிறாள்.அம்மனுக்கு கண்ணாத்தாள் என்று பெயர் வரக் காரணம்பல ஆண்டுகளுக்கு முன், நாட்டரசன் கோட்டை ஊருக்கு வெளியில் காட்டுப் பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க, யாதவர் பலர் நாட்டரசன்கோட்டை வருவார்கள். அப்படி வரும்போது பிரண்டகுளம் கிராம எல்லையில் விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தாங்கள் வியாபாரத்திற்கு கொண்டு வந்ததை விற்க முடியாமல் போனதால் அவர்கள் வருமானமின்றி கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது. அதனால் இந்த பிரச்சனையை சிவகங்கை மன்னரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். சிவகங்கை மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன் எனக் கூறி மறைந்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில், மக்களிடம் தரையை தோண்டிப் பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது பள்ளம் தோண்டுபவரின் கடப்பாரையின் நுனி அவர் கண்ணில் பட்டு இரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியைத் தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், அம்மன் 'கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்' எனப் போற்றப்பட்டாள். பக்தர்கள் கண்ணுடைய நாயகி என்றும் அழைக்கத் தொடங்கினர்.கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரத் தலம்கண் பார்வை குறைபாடு உடையவர்கள், நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து அம்மனை தினமும் வழிபட்டு, அம்மனின் அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண் பார்வை குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை.

கோடீசுவரர் கோவில்
வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கோடிக்காவல் எனும் தேவாரத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.ஒரு சமயம், ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு வெங்கடாஜலபதி, அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, ;திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்மன், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.அப்போது திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன் கைகளில் இருந்த பாசமும் அங்குசமும் மறைந்து, சங்கும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப்போனது. மார்பினில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டு விட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்து போய் பீதாம்பரம் மிளிறியது. அம்மன் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் பளிச்சிட்டது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்மன் திருப்பதி பெருமாளாக மாறி விட்டாள்.இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திரிபுரசுந்தரி வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறாள்,

தான்தோன்றீஸ்வரர் கோவில்
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள்.. காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள். அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.
கோயில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.
குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.
விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.
இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோயிலுக்கு வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வெக்காளி அம்மன் கோவில்
வெட்டவெளியில் அமர்ந்து பக்தர்களின் வேதனையை தீர்க்கும் அம்மன்
திருச்சி மாநகரின் மையப் பகுதியான உறையூரில் அருள்பாலிக்கிறாள் வெக்காளி அம்மன். உறையூர் பகுதியின் காவல் தெய்வமான அன்னை வெக்காளி அம்மன், முற்காலத்தில் சோழர்களின் இஷ்ட தெய்வமாகவும் விளங்கினாள். பொதுவாக ஆலயங்களில், மூலவரின் கருவறையின் மேல் விமானம் அமைந்திருக்கும். ஆனால், வெக்காளி அம்மன் வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள். வெக்காளி அம்மன் வெட்ட வெளியில் உள்ள ஒரு பீடத்தில் சாந்த சொரூபியாய் கருணை ததும்பும் முகத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். சிரசில் அக்னிச் சுவாலையுடன் கூடிய கிரீடமும்,, அதில் நாகமும் அமைந்துள்ளது. சிவந்த வாயில் துருத்திக் கொண்டிருக்கும் கோரை பற்களில் சீற்றம் கிடையாது. நான்கு கரங்களில், மேற்கரங்கள் இரண்டில் உடுக்கை, பாசம், கீழே வலது கரம் சூலம் ஏந்தியிருக்கிறாள். வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்த விதமாக காட்சி தருகின்றாள். பொதுவாக, இடதுகாலை மடித்து காட்சிதரும் கோலத்திற்கு மாறாக, வலது காலை மடித்து காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இது 'வீர ஆசனம்' என்று அழைக்கப்படுகிறது.
வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்தற்கான காரணம்
வன்பராந்தகன் என்னும் சோழ மன்னன் ஆட்சிக்காலத்தில், சாரமா முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபக்தரான இவர், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிகள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தாயுமான சுவாமிகளின் பூஜைக்கு என்று நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார்.பிராந்தகன் என்னும் பூ வணிகன் இவரது நந்தவனத்து பூக்களை பறித்து அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான். நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை அறிந்த சாரமா முனிவர், மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னனோ முனிவரை அலட்சியம் செய்தான். பின்னர், முனிவர் தான் வணங்கும் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத் தாங்காமல், தாயுமான சுவாமிகள், அதுவரை கிழக்கு நோக்கி எழுந்தருளியிருந்த தன் நிலையை மாற்றி. மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.சிவபெருமானின் கோபத்தினால் அப்போது உறையூரில் மண் மாரி பொழியத் தொடங்கியது. ஊரிலிருந்த அனைத்து உயிரனங்களும் தப்பியோடிப் பிழைக்க வழி தேட முற்பட்டன. உறையூரை மண் மூடியது. மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள தங்களின் காவல் தெய்வமான வெக்காளியம்மனை தஞ்சமடைந்தனர்.வெக்காளியம்மன் தாயுமானவ சுவாமிகளை வேண்டினாள். அதற்குப் பிறகு, மண் மாரி நின்றது. ஆனால் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியில் தங்கும் நிலை உருவானது. மக்களின் துயர் கண்டு வெக்காளியம்மன், ஊர் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை, நானும் உங்களைப்போல வெட்ட வெளியிலேயே இருப்பேன் என்று அருள் வாக்கு கூறினாள்.அதனால்தான், அன்னை வெக்காளி, இன்றும் வானமே கூரையாக வெட்ட வெளியில் இருந்து, காற்று, மழை, வெய்யில் இவைகளைத் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வருகிறாள்.பொதுவாக ஒரு கோவில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு பரிகாரத் தலமாக விளங்கும். ஆனால் உறையூர் வெக்காளியம்மன் பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவளாகவும் அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவளாகவும் விளங்குகின்றாள். அம்மன் சன்னிதியின் எதிரே சூலங்கள் நடப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி அதனை அம்மனின் பாதங்களில் வைத்து எடுத்து, பின்னர் அதனை அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் கட்டி விடுகின்றனர். இதனால் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது.

ஏகௌரியம்மன் கோவில்
இரண்டு திருமுகங்கள் கொண்ட அம்மன்
தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகௌரியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள். இந்த தேவி அக்னி கிரீடம் அணிந்து, எட்டு திருக்கரங்களுடன், பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப் பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சி அளிக்கிறாள். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது.
அம்மனுக்கு ஏகௌரி என்ற பெயர் வந்த வரலாறு
முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து, ஒரு பெண்ணை தவிர யாராலும் தன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை பெற்றான். பின்னர் தஞ்சன், ஆணவத்தால் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். தேவிக்கும், தஞ்சனுக்கும் கடும்போர் ஏற்பட்டது. போரின் இறுதியில், தஞ்சன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். தேவி எருமைக் கடாவாக வந்த அரக்கனை வாளால் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள். உயிர் பிரியும் நேரத்தில் தஞ்சன் தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். தேவி, அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் . அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை ;ஏ கவுரி; சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகௌரி அம்மனாக அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்கு எலுமிச்சை பழச்சாறு பிரசாதம்
குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வரும் பெண்களுக்கு எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறை பிரசாதமாகத் தருகிறார்கள் வேறு எந்த தலத்திலும் இப்படி ஒரு நடைமுறை இல்லை.
ஏகௌரி அம்மனின் இருபுறமும் ராகு கேது எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் கால சர்ப்ப தோஷம் , களத்திர தோஷம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.

சிவலோகத் தியாகேசர் கோவில்
அம்பிகையே நேரில் வந்து திருநீறு அளித்த தேவாரத்தலம்
சிதம்பரம் சீர்காழி இடையிலான சாலையில் அமைந்துள்ள கொள்ளிடம் என்ற ஊரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருநல்லூர்பெருமணம். தற்போது ஆச்சாள்புரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் தன் திருமணத்திற்கு பின் தனது சுற்றத்தாருடன் இறைவனின் ஜோதியில் கலந்தார்.ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு, திருநல்லூர்பெருமணம் தலத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை.

நாகநாதசுவாமி கோவில்
கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய மூவரும் ஒரே சன்னதியில் காட்சி தரும் தலம்.
கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தில் அம்பிகை கிரிகுஜாம்பாள் என்ற திருநாமத்துடன், கலைமகள் மற்றும் அலைமகளுடன் ஒரே சன்னதியில் காட்சி தருகிறார். இப்படி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இவர்கள் மூவரையும் ஒரே சன்னதியில் தரிசிப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத காட்சியாகும். பிருங்கி முனிவருக்காக முப்பெரும் தேவியரும் ஒன்றாக காட்சி தந்ததாக ஐதீகம்.

ஞானபுரீஸ்வரர் கோயில்
அம்பாள் நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில் காட்சி தரும் தலம்
செங்கல்பட்டில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவடிசூலம். இறைவன் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவி இமயமடக்கொடி.
பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக, ஒன்றோடு ஒன்று இணைத்து நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் திருவடிசூலம் தலத்தில் அம்பாள் இமயமடக்கொடி, தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும்.
சிவபெருமான், இடையன் வடிவில், திருவடிசூலம் வந்த திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு!” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர்.
காலில் ஊனம் உள்ளவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.

இராமனாதீஸ்வரர் கோயில்
அம்பாள் கையில் குழந்தையாக காட்சி தரும் நந்தி தேவர்
நன்னிலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் இராமநந்தீஸ்வரம்.இத்தலத்து இறைவன் திருநாமம் இராமனாதீஸ்வரர்.இராமபிரான் இத்தலத்திற்கு வந்தபோது, சிவபெருமான் சுயம்புவாக தோன்றினார். இராமபிரானை சாதாரண மனிதர் என்று நந்தி தேவர் அவரைத் தடுத்தார். அம்பாள் தோன்றி உண்மையை உணர்த்த, நந்தி இராமபிரானை வணங்கி, இருவரும் வழிபாடு செய்தனர். அதனால் இத்தலம் 'இராமநந்தீஸ்வரம்' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் 'இராமனதீஸ்வரம்' என்று மருவியது.நந்தியை அம்பாள் அணைத்ததால் சோமாஸ்கந்த மூர்த்தத்தில், அம்பாள் கையில் நந்தி குழந்தையாக காட்சி தருகிறார்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்
தேன் அபிஷேகத்தின்போது சிவலிங்கத்தில் தெரியும் அம்மன்
விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு இடை நெளித்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்து விட்டாள். பால் குடங்களைக் காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிசேக பூசையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக காட்சி தருகிறார். மற்ற அபிசேகம் நடக்கும் போது இலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.

கொற்றவாளீசுவரர் கோவில்
வயலுக்கு காவலாக நின்ற அம்பிகை
ஒருசமயம் கோவிலூர் தலத்தில் சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லிøயக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள். அங்கே, அவளது மகள் வடிவில், கோவிலூர் தலத்து அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா! பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது. நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள்,பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
கருவறை கதவிற்கு பூஜை நடக்கும் அம்மன் கோவில்
தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கருகில் தேவதானபட்டி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வித்தியாசமானது. அந்தக் கோவிலின் கருவறையில் அம்மன் சிலை இல்லை. கருவறை மூடப்பட்டு கதவிற்குத்தான் பூஜை நடைபெறுகிறது. கதவிற்கு முன் நாகபீடத்தில் சூலம் வைத்து வழிபடுகின்றனர். கருவறைக்குப் பின்னால் ஒரு கூரை வீட்டில் மூங்கில் பெட்டிக்குள் காமாட்சி அம்மன் இருப்பதாக ஐதீகம். இந்தக்கோவிலில் உடைக்காத தேங்காயும் உரிக்காத வாழைப்பழமும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

பாடலீஸ்வரர் கோவில்
பார்வதி தேவி அரூபமாக தவம் செய்த இடம்
பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத் தலமான கடலூரில் அமைந்துள்ளது பாடலீஸ்வரர் கோவில். இத்தலத்தின் முற்காலத்திய பெயர் திருப்பாதிரிப்புலியூர். பாதிரியை தலவிருட்சமாக கொண்டதாலும் ,புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர் ) வழிப்பட்டதாலும் (பாதிரி + புலியூர் ) இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது .ஒருமுறை பார்வதி தேவி தன் திருக்கரங்களால் இறைவனின் கண்களை மூடினாள். இதனால் உலகம் இருண்டு அணைத்து இயக்கங்களும் நின்று போயின.இதனை கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் .இறைவன் தாயாரை பூலோகம் சென்று, அங்குள்ள சிவதலங்களில் பூஜிக்கும்படியும் அவ்வாறு பூஜை செய்யும் போது எந்த தலத்தில் இடது கண் மற்றும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார் .அதுபோல் தாயார் பூலோகம் வந்து சிவத்தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்துவந்தார் . அப்போது பாதிரி வனமாக திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண் மற்றும் தோள் துடித்தது ,பார்வதி தேவி இத்தலத்திலேயே தங்கி அரூபமாக தவம் செய்த இடம், இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் 'அருந்தவநாயகி' சன்னதியாக உள்ளது . இச்சந்நதியில் விக்கிரகம் ஏதும் இருக்காது .பீடம் மட்டுமே இருக்கும்.

நாடியம்மன் கோவில்
பக்தர்களின் உயிர்நாடியாக இருக்கும் அம்மன்
தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது, நாடியம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும், தன் பக்தர்களின் உயிர்நாடியாக இருப்பதாதாலும் அவளை இப்பெயரிட்டு அழைக் கிறார்கள். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாகக் காட்சி தருகிறாள். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மம் உள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். அவர் பெயரால் விளங்கி வந்த கோட்டை இருந்த இடத்தின் பெயர் பட்டு மழவராயர் கோட்டை. அது நாளடைவில் சுருங்கி பட்டுக்கோட்டை ஆகிவிட்டது. மழவராயர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட, அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவள் ஓடிச் சென்று ஒரு புதரில் மறைந்து விட்டாள். புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே ஓர் அழகான அம்மன் சிலை இருந்தது. பட்டு மழவராயர், தங்களை நாடி வந்த அம்மனுக்கு அங்கு கோவிலை எழுப்பினார்.இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு 'நாடி' என்கிற பெயர் சூட்டப்படுகிறது. பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும் பல்லாயிரக்கணக்கானோர், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடும் அதிசயம் நடப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.