கண்ணாத்தாள் கோவில்
கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்
சிவகங்கையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ளது கண்ணாத்தாள் கோவில். இக்கோவில் கருவறையில் அன்னை கண்ணாத்தாள் சற்றே தலை சாய்த்து, சிலம்பணிந்த பாதத்தின் கீழ் அரக்கனை மிதித்தபடியும், மற்றொரு காலை மடித்து உயர்த்தியபடி காட்சி தருகிறாள். அம்மன், தன் எட்டு கரங்களில் கபாலம், அக்னி, சூலம், உடுக்கை, குறுவாள், கிளி, கேடயம், மணி ஆகியவற்றை தாங்கி இருக்கிறாள்.
அம்மனுக்கு கண்ணாத்தாள் என்று பெயர் வரக் காரணம்
பல ஆண்டுகளுக்கு முன், நாட்டரசன் கோட்டை ஊருக்கு வெளியில் காட்டுப் பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க, யாதவர் பலர் நாட்டரசன்கோட்டை வருவார்கள். அப்படி வரும்போது பிரண்டகுளம் கிராம எல்லையில் விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தாங்கள் வியாபாரத்திற்கு கொண்டு வந்ததை விற்க முடியாமல் போனதால் அவர்கள் வருமானமின்றி கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது. அதனால் இந்த பிரச்சனையை சிவகங்கை மன்னரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
சிவகங்கை மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன் எனக் கூறி மறைந்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில், மக்களிடம் தரையை தோண்டிப் பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது பள்ளம் தோண்டுபவரின் கடப்பாரையின் நுனி அவர் கண்ணில் பட்டு இரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியைத் தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், அம்மன் 'கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்' எனப் போற்றப்பட்டாள். பக்தர்கள் கண்ணுடைய நாயகி என்றும் அழைக்கத் தொடங்கினர்.
கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரத் தலம்
கண் பார்வை குறைபாடு உடையவர்கள், நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து அம்மனை தினமும் வழிபட்டு, அம்மனின் அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண் பார்வை குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை.