சிவலோகத் தியாகேசர் கோவில்
அம்பிகையே நேரில் வந்து திருநீறு அளித்த தேவாரத்தலம்
சிதம்பரம் சீர்காழி இடையிலான சாலையில் அமைந்துள்ள கொள்ளிடம் என்ற ஊரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருநல்லூர்பெருமணம். தற்போது ஆச்சாள்புரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் தன் திருமணத்திற்கு பின் தனது சுற்றத்தாருடன் இறைவனின் ஜோதியில் கலந்தார்.
ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு, திருநல்லூர்பெருமணம் தலத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை.