திருவிடைமருதூர்  மகாலிங்கேசுவரர் கோவில்

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்க தலத்தின் பரிவார தலங்கள்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இறைவியின் திருநாமம் பிரகத் சுந்தரகுஜாம்பிகை.

இத்தலம் மகாலிங்கத் தலம் எனவும் இதனைச் சுற்றியுள்ள ஒன்பது தலங்களை இதன் பரிவாரத் தலங்கள் என்றும் சொல்வர். ஒரு சிவாலயத்தில் மூலவராக விளங்கும் லிங்கம், அவருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் நந்தி, சுற்றுப்பிரகாரத்தில் பிரதட்சணமாகச் சென்றால் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ் கந்தர், சண்டேச்வரர், பைரவர், நடராஜர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. ஐதீகப் பிரகாரம் மூலவரைத் தரிசித்து வணங்கியபின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோஷ்ட தெய்வங்களைத் தரிசித்தால்தான் சிவதரிசனம் பூர்ணமாகப் பூர்த்தியாகும் என்பது நமது பண்டைய மரபு மற்றும் சாஸ்திரமாகும்.

இந்த ஆகம முறைப்படி, ஒரு ஆலயம் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டுமோ அதேபோல் சோழ நாட்டையே ஒரு சிவாலயமாக்கி, அதன் நடுநாயகராகத் திருவிடை மருதூர் உறை மகாலிங்கத்தை மூலவராக்கி இருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் மூலவரான மகாலிங்கத்தை கர்ப்பக்கிரகமாக நோக்கினால், இவ்வாலயத்தின் ஏனைய பரிவார மூர்த்திகள் இருக்க வேண்டிய திசைகளில் உள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திவ்ய ஷேத்ரமாக விளங்குவதைப் பார்க்கலாம். இவை அனைத்துமே ஆகம விதிப்படி எந்தெந்தப் பரிவார மூர்த்திகள் எந்தெந்தத் திசைகளில் இருக்க வேண்டுமோ, அவ்வூரில் உள்ள அந்த ஆலயம் அவ்வாறே விசேஷ தலமாக அமைந்திருக்கிறது. அந்த பரிவாரத் தலங்களும், அத்தலத்து மூர்த்தியும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1 - நந்தி - திருவாவடுதுறை.

2- சோமாஸ்கந்தர் - திருவாரூர்.

3- தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.

4 - விநாயகர் - திருவலஞ்சுழி.

5 - முருகன் - சுவாமிமலை.

6 - சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.

7 - நடராசர் - தில்லை.

8 - பைரவர் - சீர்காழி.

9 - நவக்கிரகம் - சூரியனார் கோயில்.

இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக விளங்குகிறது.

Read More
மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்கேசுவரர் கோவில்

ராஜ அலங்காரத்தில் தன் மனைவியுடன் தட்சிணாமூர்த்தி இருக்கும் அபூர்வக் காட்சி

பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் சுற்றுச் சுவரில் தென்திசையை நோக்கியபடி புன்னகை பூக்கும் முகத்துடன் வலது காலைத் தொங்கவிட்டு அதன்மீது இடது காலை மடக்கி வைத்து, வலது பாதம் முயலகனை மிதித்தவாறு அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். அவருடைய காலடியில் சனகாதி முனிவர்கள் நால்வரும் ஞானோபதேசம் கேட்டபடி அமர்ந்திருப்பார்கள்.

கும்பகோணத்தில் இருந்து 9 கி..மீ.தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூரில் அம்பிகையுடன் ராஜ அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி, ராஜ சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.

இவருக்கு 'சாம்ப தட்சிணாமூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சன்னதியின் முன் மண்டபத்தில் இவர் சுதை சிற்பமாக விளங்குகிறார். இத்தகைய ராஜ அலங்கார கோலத்தில் துணைவியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்தத் தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.

Read More
மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்கேசுவரர் கோவில்

திருவிடைமருதூர் மூகாம்பிகை அம்மன்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குப் பக்கம் மூகாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் மூகாம்பிகைக்கு சிறப்பு வாய்ந்த சன்னிதி உள்ளது. ஒன்று கர்நாடக மாநிலம் கொல்லூர், மற்றொன்று திருவிடைமருதூர்.

மகாலிங்கேசுவரரை கரம் பிடித்த மூகாம்பிகை அம்மன்

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் மூகாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட உக்கிரம் தணியவும், பிரம்மஹத்தி தோஷம் விலகவும், அவள் திருவிடைமருதூர் தலத்திற்கு வந்து மகாலிங்கேசுவரரை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். மேலும் அவள் மகாலிங்கேசுவரர் மேல் கொண்ட மோகத்தினால், அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் அவளது தவத்தின் நோக்கமாக இருந்தது. அவளது தவத்தை மெச்சிய மகாலிங்கேசுவரர், மூகாம்பிகை அம்மனின் தோஷத்தை நிவர்த்தி செய்து, அவளை பிரகத் சுந்தரகுஜாம்பிகை என்ற திருநாமத்தடன் திருமணம் செய்து கொண்டார். இதனால்தான் இத்தலத்து அம்பாள் பிரகத் சுந்தரகுஜாம்பிகை நமக்கு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

இத்தலத்து மூகாம்பிகை அமமனின் சன்னதி வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது. கருவறையில் மூகாம்பிகை அம்மன் கோரைப் பற்களுடன், கபாலம்,அங்குசம்,பாசம் முதலியவற்றைக் கரங்களிலேந்தி பத்மாசனத்தில் அமர்ந்து சாந்த சொரூபியாய் தவக் கோலத்தில் நமக்குக் காட்சி தருகின்றாள்.

அம்மனின் முன் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாஸ்கரராயர் எனும் அம்பாள் உபாசகர், தான் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய 'சௌபாக்கிய பாஸ்கரம்' என்னும் நூலை இந்த மூகாம்பிகை அம்மனின் முன்தான் அரங்கேற்றினார்.

மழலை வரம் அருளும் அம்மன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். அவளை வேண்டினால் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால், பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்மனை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள், தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர். அதற்காக அவர்கள் இத்தலத்தில் தொட்டில் கட்டி தங்களுக்கு மழலை வரம் வேண்டுகிறார்கள். அதுபோல் திருமண வரம் வேண்டியும், சுகப் பிரசவம் அடைவதற்காக கர்ப்பிணி பெண்களும் ஏராளமானோர் பிரார்த்திக்கிறார்கள்.

Read More
மகாலிங்கேஸ்வரர்_கோயில்

மகாலிங்கேஸ்வரர்_கோயில்

கரத்துடன் கூடிய அதிசய சிவலிங்கம்

கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்து மூலவரின் சிவலிங்க திருமேனியிலிருந்து வலது கரம் வெளியில் வந்து ஆசி தரும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றது. இது ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்று நீருபணம் செய்தபோது,அதை ஆமோதிக்கும் வகையில் சிவபெருமான் தன் வலது கரத்தை நீட்டி ஆசி வழங்கியதைக் குறிப்பிடுவதாக உள்ளது.

Read More