மகாலிங்கேசுவரர் கோவில்

திருவிடைமருதூர் மூகாம்பிகை அம்மன்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குப் பக்கம் மூகாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் மூகாம்பிகைக்கு சிறப்பு வாய்ந்த சன்னிதி உள்ளது. ஒன்று கர்நாடக மாநிலம் கொல்லூர், மற்றொன்று திருவிடைமருதூர்.

மகாலிங்கேசுவரரை கரம் பிடித்த மூகாம்பிகை அம்மன்

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் மூகாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட உக்கிரம் தணியவும், பிரம்மஹத்தி தோஷம் விலகவும், அவள் திருவிடைமருதூர் தலத்திற்கு வந்து மகாலிங்கேசுவரரை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். மேலும் அவள் மகாலிங்கேசுவரர் மேல் கொண்ட மோகத்தினால், அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் அவளது தவத்தின் நோக்கமாக இருந்தது. அவளது தவத்தை மெச்சிய மகாலிங்கேசுவரர், மூகாம்பிகை அம்மனின் தோஷத்தை நிவர்த்தி செய்து, அவளை பிரகத் சுந்தரகுஜாம்பிகை என்ற திருநாமத்தடன் திருமணம் செய்து கொண்டார். இதனால்தான் இத்தலத்து அம்பாள் பிரகத் சுந்தரகுஜாம்பிகை நமக்கு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

இத்தலத்து மூகாம்பிகை அமமனின் சன்னதி வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது. கருவறையில் மூகாம்பிகை அம்மன் கோரைப் பற்களுடன், கபாலம்,அங்குசம்,பாசம் முதலியவற்றைக் கரங்களிலேந்தி பத்மாசனத்தில் அமர்ந்து சாந்த சொரூபியாய் தவக் கோலத்தில் நமக்குக் காட்சி தருகின்றாள்.

அம்மனின் முன் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாஸ்கரராயர் எனும் அம்பாள் உபாசகர், தான் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய 'சௌபாக்கிய பாஸ்கரம்' என்னும் நூலை இந்த மூகாம்பிகை அம்மனின் முன்தான் அரங்கேற்றினார்.

மழலை வரம் அருளும் அம்மன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். அவளை வேண்டினால் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால், பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்மனை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள், தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர். அதற்காக அவர்கள் இத்தலத்தில் தொட்டில் கட்டி தங்களுக்கு மழலை வரம் வேண்டுகிறார்கள். அதுபோல் திருமண வரம் வேண்டியும், சுகப் பிரசவம் அடைவதற்காக கர்ப்பிணி பெண்களும் ஏராளமானோர் பிரார்த்திக்கிறார்கள்.

தகவல், படங்கள் உதவி - திரு. மணி சேகர் குருக்கள், திருவிடைமரூதூர்

Previous
Previous

கைலாசநாதர் கோவில்

Next
Next

ஏழைப் பிள்ளையார் கோவில்