நத்தம் வாலீஸ்வரர் கோவில்
தலை சடை விரித்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
இக்கோவிலில் இறைவன் கருவறையின் சுற்று சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தன் தலை சடையை விரித்த கோலத்தில் காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். இதற்கு பின்னணியில் உள்ள சம்பவம் என்னவென்றால், தேவர்கள் சிவபெருமானிடம் தாட்சாயணியின் மறைவுக்குப் பின் தங்களுக்கு சக்தி இல்லையே என்று வினவியபோது, சிவபெருமான் என்னிடம் கங்கா சக்தி உள்ளது என்று சடா முடியிலிருந்து கங்கையை விடுவித்து, கங்கையின் பிரவாக சக்தியைக் தேவர்களுக்கு காட்டினார். அந்தக் கோலத்தில் தான் நாம் அவரை இக்கோவிலில் தரிசிக்கிறோம்.
திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்
சனி, செவ்வாய் தோஷங்களுக்கான பரிகார தலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
ஒருமுறை, சனி பகவானும் செவ்வாய் பகவானும், சூரிய சந்திரர்களால் சபிக்கப்பெற்று, அதன் காரணமாக எலும்புருக்கி நோய்க்கு செவ்வாய் பகவானும், பெருநோய்க்கு சனி பகவானும் ஆளாகினர். செவ்வாய், சனி இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கூறும்படி கேட்டனர். பிரம்மாவின் அறிவுரைப்படி, இருவரும் பூலோகம் வந்து பல சிவத்தலங்களில் சிவபெருமானை வழிபட்டனர். இறுதியாக இத்தலம் வந்து கடும் தவம் புரிந்து இறைவனை வழிபட்டு தங்கள் தோஷமும், சாபமும் நீங்கப் பெற்றனர்.
சனி பகவானும் செவ்வாய் பகவானும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும். ஆகவே, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
நத்தம் வாலீஸ்வரர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த அம்பிகை
காலில் பாதச்சலங்கையுடன், பரத நாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் அம்பிகையின் அபூர்வ தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
அம்பிகை ஆனந்தவல்லிக்கு, நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அம்பிகை அபய, வரத முத்திரையுடனும், கைகளில் அங்குசம் பாசம் ஏந்தி, காலில் பாதச்சலங்கையுடன், பரதநாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
இத்தலத்தில் சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில், அதாவது லிங்கோத்பவர் காலத்தில், சிவபெருமானும் பார்வதி தேவியும் நாட்டியமாடியதாக ஐதீகம், அதனால் தான் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்று பெயர்.
அன்னப்பாவாடை நெய்க்குள தரிசனம்
தை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று, அம்மனுக்கு அன்னப் பாவாடை வைபவம் நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் முதலிய அன்ன வகைகள், பட்சணங்கள், பழவகைகள் ஆகியவை அம்பிகைக்கு முன் படையலிடப்படும். சர்க்கரை பொங்கல் முதலில் அன்ன வகைகள் பாத்தி போல் கட்டப்பட்டு அதில் நெய் ஊற்றப்படும். நெய்க்குளத்தில் அம்மன் உருவம் தோற்றமளிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
ராகு, கேது தோஷ நிவர்த்தி தலம்
ஒரு சமயம் அம்பிகைக்கு ஏற்பட்ட சர்ப்ப தோஷத்தை, இத்தலத்து இறைவன் வாலீசுவரர் நிவர்த்தி செய்தார். அதனால் இத்தலம் ராகு கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் முதலியவற்றுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
பிரார்த்தனை
கலைகளில் சிறந்து விளங்க இந்த அம்பிகை அருள் புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு தேனாபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், கலைகளில் உன்னத நிலையை அடைய முடியும்.
ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
பார்ப்பவர்களை வியக்க வைக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் விக்கிரகம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். .ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.
இத்தலத்தில் தேவலோகப் பசுவான காமதேனுவின் குழந்தைகளான நந்தினி, பட்டி என்கிற பசுக்களுக்கு, ஸ்ரீகிருஷ்ண பகவான் காளிங்க நர்த்தனத்தை மீண்டும் ஆடிக் காண்பித்தார். இந்த லீலையை ஸ்ரீ நாரத முனிவர் கண்ணாரக் கண்டுள்ளார். ஸ்ரீநாரதர் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்கி, இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கெல்லாம் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. இந்த விக்கிரகத்தின் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணன் நடனமாடும் கோலத்தில் அமைந்துள்ளது. இவ் விக்கிரகத்தில், கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை. கிருஷ்ணரின் இடது பாதத்திற்கும், காளிங்கனின் சிரசுக்கும் நூல் விட்டு எடுக்கும் அளவு இடைவெளி உள்ளது. அவரது வலது கால் தூக்கியபடி, நர்த்தனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும்படியாக, காளிங்கனின் வாலை பிடித்தபடி காட்சி தருகிறார். இது இரண்டு உருவங்களுக்கிடையில் உள்ள ஒரே இணைப்பாகும், மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை. மேலும் கட்டைவிரல் -பாம்பின் வாலுக்கும் இடையே உள்ள இணைப்பானது மட்டுமே, முழு சிலைக்கும், சமநிலையை வழங்குகிறது (இந்த சிலையானது இரண்டு பேர் சேர்ந்தால் தான் நகர்த்தக் கூடிய எடை உள்ளது) . காளிங்கத்துடனான போரின் விளைவாக கிருஷ்ணரின் காலில் வடுக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.
விக்கிரகத்தின் சிறப்பை உணர்த்த மத்திய அரசு வெளியிட்ட தபால் தலை
இந்த விக்கிரகத்தில், பாம்பின் வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை. இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்த்த, மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது..
தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்
கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் இயற்றிய தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765) வாழ்ந்த தல்ம் இது. ‘அலைபாயுதே கண்ணா', 'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த' போன்ற, அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் மிகவும் பிரசித்தம். இத்தலத்து கிருஷ்ணனே, வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின், ஆபோகி ராகத்தில் அமைந்த 'குரு பாதாரவிந்தம் கோமளமு' எனும் பாடலைச் சொல்கிறார்கள். அதில் அவர் சொல்லும் கருத்து: 'நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை' என்கிறார்.
ஸ்ரீநாரத் முனிவரின் மறு அவதாரமாக ஸ்ரீவேங்கடகவி கருதப்படுகிறார். இவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
பிரார்த்தனை
ரோகினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. ராகு, கேது, சர்ப்ப தோஷம் நீங்குவதற்கான பரிகார தலம். இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் தங்கள் கலைகளில் அபிவிருத்தி பெற்று பிரகாசிக்க இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவிழா
ஸ்ரீகிருஷ்ணரின் ஜயந்தித் திருவிழா இத்தலத்தில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் அன்று நடைபெறும்.
நாகந்தூர் பட்டாபிராமர் கோவில்
ராமர் தங்கிய ஊர்களில், அவர் மிகவும் விரும்பிய இடம்
இராமர், லட்சுமணன் வில்லில் மணி கட்டியிருக்கும் அரிய காட்சி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி. மீ., தூரத்தில், நாகந்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பட்டாபிராமர் கோவில் .இராமர் ராவண வதத்தை முடித்துக் கொண்டு சீதா தேவியுடன் அயோத்திக்கு திரும்புகையில் பல இடங்களில் தங்கி பயணித்தார். அப்படி அவர்கள் தங்கிய ஊர்களில் இத்தலமும் ஒன்று. இங்கு தங்கி இருந்தபோது, இத்தலத்தின் இயற்கை அழகில் ராமர் மிகவும் மனம் லயித்து போனார். .சீதா தேவியிடம், தங்கிய இடங்களிலே 'நான் உகந்த ஊர்’ இது என்றார். ராமர் குறிப்பிட்டதே பின்னாளில் .நாகந்தூர் என மாறியது. மேலும் இக்கோவில் கருவறையில் ராமர் அயோத்தியில் பட்டாபிஷேகத்தின் போது எந்த வகையில் காட்சி தந்தாரோ, அதே நிலையில் இங்கும் காட்சி தருகிறார். மேலும், வேறெங்கும் இல்லாதவாறு இராமர், லட்சுமணன் வில்லில் மணி வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும்.
பிரார்த்தனை
இக்கோவிலின் முக்கிய சிறப்பாக இருப்பது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட்டால், ஓரிரு வாரங்களிலேயே அவர்களது கிரக தோஷம் விலகுகிறது. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரும், இக்கோவிலில் வழிபட்டால் முன்னேற்றம் காணலாம்.
கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்
திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படும் கூர்மாங்க சனீஸ்வரர்
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்டதால், இத்தலத்து இறைவன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் கூர்மாங்க சனீஸ்வரர், திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படுகிறார். கூர்மாங்கம் என்றால் உடனே அல்லது சடுதியில் சங்கடங்களை நீக்குபவர் என்று பொருள். இவர் தெற்கு திசை நோக்கி எழுந்தருளி இருப்பதன் பின்னணியில், ஒரு ராமாயண காலத்து வரலாறு உள்ளது.
கிஷ்கிந்தையின் அரசன் வாலி மிகப்பெரிய சிவபக்தன். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் முடிவதற்குள் 1000 சிவாலயங்களில் பூஜை செய்யும் வழக்கம் உடையவன். அதைப் போலவே இங்கு அடர்ந்த வனப் பகுதியில் 100 சிவலிங்கங்களை அமைத்து மேற்கு நோக்கி தவம் செய்வது வழக்கம். இதைப்பற்றி கேள்விப்பட்ட இலங்கை மன்னன் இராவணன், தன்னைவிட சிறந்த சிவபக்தனான வாலி மீது கோபம் கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க முடிவு செய்து, தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க நினைத்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் இராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்துவிட்டான். பின் இராவணனை சிறையில் அடைத்து வைத்திருந்தான். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே, இராவணனை தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு, இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க, வாலி தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி, சனீஸ்வரரை தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார்.
பிரார்த்தனை
தெற்கு திசை எமனின் திசை. தனது சகோதரர் எமதர்மனால் ஏற்படும் ஆயுள் கண்ட பிரச்னைகள் இந்த சனீஸ்வர பகவானை வழிபடுவதால் நீங்கும். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். ஆயுள் கண்டம் ஏற்படுத்தும் இதய நோய், வலிப்பு நோய், தலைசம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு வியாதிகளில் பாதிக்கப்பட்டவர்கள். சனீஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். ஆயுள் பலம் வேண்டுவோர் நீல வஸ்திரம் அணிவித்து நீல மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தனது வயதின் எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வயது எண்ணிக்கையில் சனிதோறும் சுற்றிவந்து நீண்ட ஆயுள் பலம் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு எள் மற்றும் பிற சாதங்களை அன்னதானம் செய்யலாம்.
இந்த சனி பகவானுக்கு மாதா மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஹோமமும், சனீஸ்வர நவகிரக சாந்தி ஹோமமும், சனிக் கிழமை தோறும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில்
தலைக்கு மேல் சிவலிங்கத்துடன் இருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி
கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ.தொலைவில், கோவில் பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது காலகாலேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காலகாலேஸ்வரர். இறைவியின் திருநாமம் கருணாகரவல்லி. திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைபறிக்க எமதர்மராஜன் முயன்றபோது, சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இக்கோவிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றார்.
இக்கோவில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது.சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும், இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இக்கோவிலில், மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற மரகத நந்தி உள்ளது. மூலவர் காலகாலேஸ்வரர், மணல், நுரையால் ஆனவர் என்பதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.
ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார், தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் சிவலிங்கம் இருப்பது தனிச்சிறப்பாகும். இந்த கோவில் குரு பரிகார தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது.
பிரார்த்தனை
சுவாமி, அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது. ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இக்கோவிலில் பிரசித்தி பெற்றதாகும்.
பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில்
மரகத திருமேனியுடன், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் சத்ருசம்ஹார கோலம் கொண்ட அம்பிகை
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், 31 கி.மீ தொலைவில், செங்குன்றம், காரனோடை ஊர்களைக் கடந்தால் வரும் தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் இறைவனுக்கு, அகத்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி, இடது காலை முன்வைத்து நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள்.அம்பிகையின் திருமேனி பச்சை மரகதக்கல்லால் ஆனது. அம்பிகையின் நெற்றியில், சிவபெருமானைப் போல் மூன்றாவது கண் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
அகத்திய முனிவர், சுகேது என்ற அரக்கனுடைய சாப விமோசனத்திற்காக இத்தலத்தில் ஐந்து யாகங்கள் செய்தார். அவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி. அதுவே இத்தலப் பெயரானது.
அந்த யாகத்துக்கு அசுரர்கள் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் அம்பிகையிடம் காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து, மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளை எரித்துச் சாம்பலாக்கினாள். தீய சக்திகளை அழிக்க புறப்பட்டதினால், அம்பிகை இங்கு இடது காலை முன்வைத்து காட்சி தருகிறாள். அம்பாளின் இத்திருக்கோலம் சத்ருசம்ஹார திருக்கோலம் ஆகும். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மகா யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.
அம்பாள் ஆனந்தவல்லியாக ஆனந்தத்தையும், அதே நேரத்தில் நம்மை வாட்டி வதைக்கும் தீய சக்திகளைப் பொசுக்கிக் காத்தருளும் முக்கண்ணுடையவளாகவும் அருள் பாலிக்கிறாள்.இங்கு யாகங்கள் செய்தால் பலன்கள் பல மடங்காக கூடும் என்று கூறப்படுகிறது. அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில், அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும் , உயர் பதவிகள் தேடி வரும் என்பது ஐதீகம். அம்பாளின் அருள் நம் செயல்களில் ஏற்படும் தடங்கல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி விடும்.
அம்பாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ராஜகோபுரம் தெற்கு நோக்கி அம்பாளின் முன் அமைந்திருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும். இவ்வாறு தெற்கு நோக்கி ராஜகோபுரம் அமைந்திருந்தால் அத்தலத்தை பரிகார தலம் என்பார்கள. ராஜகோபுரத்தில் இருக்கும் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள் ஆகியோர், அம்பாளுக்கு எதிரில் கட்டுப்பட்டு இருக்கின்றனர். அதனால் திருமண தோஷம் ,நவக்கிரக தோஷம் ,சத்ரு தோஷம் ,வாஸ்து தோஷம் ஆகியவைகளுக்கு பரிகார தலமாக இக்கோவில் விளங்குகின்றது.
வாராப்பூர் அகத்தீசுவரர் கோவில்
கைகள் கட்டப்பட்ட நிலையில் அருள் பாலிக்கும் ராகு, கேது பகவான்
புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வாராப்பூர். இத்தலத்து இறைவன் திருநாமம் அகத்தீசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தராம்பிகை. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. அகத்திய முனிவர் வழிபட்ட தலம்.
இக்கோவிலில், ராகு பகவான், கேது பகவான் ஆகிய இருவரும் ஒரே திருமேனியாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். இத்தலத்து இறைவன், பக்தர்களின் ராகு கேது தோஷம் நீங்கும் வகையில் அருள்பாலிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதால், அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு, கைகளை கட்டிக்கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இதனால் இக்கோவில், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் நீங்க வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார தலமாக விளங்குகின்றது. இத்தலத்தில் வழிபட, திருமண தடை விலகும். குழந்தை பாக்கியமின்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் குணமாகும். வயிறு வலி குணமாகும். ராகு கேது பரிகாரத்திற்கு காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.
வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்
மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு 6 கி.மீ. முன்னால் உள்ள தலம் வெள்ளூர். இத்தலத்து இறைவன் திருநாமம் திருக்காமேஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.
வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி கோவில் கொண்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கோவிலின் குபேர பாகத்தில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில், ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில், மகாலட்சுமி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.
வில்வமரமாகத் தோன்றி, வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், தல விருட்சமான வில்வ மரத்தடியில் தவக்கோலத்தில் இருந்து திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.
இத்தலத்தின் பிற சிறப்புகள்
சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.
பிரார்த்தனை
தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்கிர தோஷம் உடையவர்கள்,வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் . தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்
சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தரும் வீர ஆஞ்சநேயர்
செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது 1100 ஆண்டுகள் பழமையான செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில். கருவறையில் ராமபிரான், ஸ்ரீ பட்டாபிராமன் என்ற திருநாமத்தோடு, வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் , ராமபிரானோடு ஓடும் சத்ருகனும், பரதனும் உடன் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
இக்கோவிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது தனது காலால் சனி பகவானை அழுத்திய படியும் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
சனிபகவானுக்குரிய பரிகார தலம்
அனுமன் சீதையைத் தேடி, சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு தாவ முயன்ற போது, அவரை ஏழரை சனி காலம் நெருங்க இருப்பதால் சனிபகவான் அவரை பிடித்துக் கொண்டார். அனுமன் தான் முக்கிய காரணத்திற்காக இலங்கை செல்ல இருப்பதால், தன்னை பின்னர் பிடித்துக் கொள்ளுமாறு சனி பகவானிடம் கூறினார். சனிபகவானும் அவரை அப்போது விட்டுவிட்டார். பின்னர் வானரப் படைகள், சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு கற்பாறைகளை கொண்டு பாலம் அமைத்துக் கொண்டிருந்த போது சனி பகவான் மீண்டும் வந்தார். அனுமன் சனி பகவானை தன் தலையை மட்டும் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சனியும் அவ்வாறே அனுமன் தலையை பிடித்துக் கொண்டார். ஆனால் அனுமன் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால், அவர் தலையில் தூக்கிய பாறைகளுக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்குண்டு தவித்தார். அதனால் அனுமன் தலையில் இருந்து விடுபட்டு, அனுமன் காலை பிடிக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில் அனுமன் காலால் மிதித்து தரையில் அழுத்தினார். சனிபகவான் அனுமனிடம் தன்னை விட்டுவிடும்படி மன்றாடினார். தன்னை விடுவித்த அனுமனிடம் சனி பகவான் உன் பக்தர்கள் அனைவரையும், ஏன் உங்களை ஒரு கணம் நினைப்பவர்களைக் கூட நான் நான் பிடிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அனுமாரே சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் என்றால் அவரை தரிசித்து வழிபட்டால் சனி பகவானின் கொடூர பார்வையில் இருந்து பக்தர்களை காத்து விடிவு அளிக்கிறார் என்பது உண்மை. அதனால் தான் இத்தலம் , சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக் கொள்ளும் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.
ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்
விநாயகரும் ஆஞ்சநேயரும் எதிர் எதிரே தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கில், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கில் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி.
ஆர்(அத்தி) மரங்கள் அணி, அணியாய் சேர்ந்து காடாகி இருந்த இடமாக இருந்ததால, இந்த ஊருக்கு ஆரணி என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில் கமண்டல நாகநதிக்கரையில் அமைந்துள்ளது. ஆற்றுப்பாலத்துக்கு இடப்பக்கத்திலிருக்கும் இக்கோவிலுக்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இடப்புறத்தில் படித்துறை விநாயகர் சன்னிதி அமைந்திருக்கின்றது. அவருக்கு எதிர்புறம், கோவிலின் வலப்புறத்தில் ஆஞ்சநேயர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றார். இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது அரிது. இங்கிருக்கும் ஆஞ்சனேயர் கையில் சங்கு, சக்கரம் இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கி துவங்குவதும், அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்வதும் நமது வழிப்பாட்டு முறையாகும். இந்த நடைமுறையை சுட்டிக்காட்டும் விதமாக, கோவிலை வலம் வர ஆரம்பிக்கும்போது விநாயகரில் ஆரம்பித்து, இறைவனை தரிசித்து கடைசியில் ஆஞ்சநேயரை வணங்கி நமது கோவில் தரிசனத்தை முடிக்கும் விதமாக இக்கோவில் அமைப்பு அமைந்திருக்கின்றது.
பிரார்த்தனை
ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருப்பதால் உண்டாகும் புத்திர தோஷமும், நாகதோஷமும் நீங்க, இக்கோவிலில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திரகாமேஷ்டி யாகத்தினை செய்தும் தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். பரிகார தலம் என்பதால் திருமணம் செய்ய உகந்த இடமாக விளங்குகின்றது. மேலும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலம்
கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி.
இத்தலம் சிறந்த குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலமாக விளங்குகிறது. இந்த தலத்தில் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி, இறைவனின் தெற்கு சுற்றுச் சுவரில் எழுந்தருளியுள்ளார். தட்சிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி அன்று பத்து நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.
குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து 24 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம் என்பது ஐதீகம். குருபகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாத்துதல், கொண்டைக்கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியங்களுடன் சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி அவருடைய அருள் கிடைக்கும்.
வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.