நாகை காயாரோகணேசுவரர் கோவில்
நாகை நீலாயதாக்ஷி அம்மன்
நாகை நீலாயதாக்ஷி, நீலோற்பல மலரின் குளிர்ச்சியைப் போல தன் பார்வையை பக்தர்களுக்கு வழங்குவதால், ‘நீலாயதாட்சி’ என்ற திருநாமத்தோடு விளங்குகிறாள். அம்பிகைக்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரும் உண்டு. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார்.
அன்னை நீலாயதாக்ஷி பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கைரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், தன் இரு திருக்கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தி, மற்ற இரு திருக்கரங்களில் அபய வரத முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பூப்பெய்திய அம்பிகைக்கு காவலாக இருக்கும்படி, நந்திதேவரை சிவபெருமான் பணித்தார். அதனால் கோவில் வாசலில் அமர்ந்திருக்க வேண்டிய நந்திதேவர், அம்பிகையின் சன்னதி முன் வலது கண்ணால் அம்பிகையையும் இடது கண்ணால் சிவபெருமானையும் பார்த்தபடி இரட்டை பார்வையுடன் அமர்ந்திருக்கிறார்.
நீலாயதாக்ஷி, இத்தலத்தின் அரசியாக இருந்து பரிபாலனம் செய்வதால் அவருக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் இங்கு வீதிகளின் பெயர்கள் கூட நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு மடவிளாகம் என்று இருக்கின்றது. இதுபோல அம்மனின் பெயர் தாங்கிய வீதிகள் வேறு எந்த தலத்திலும் இல்லை. அம்பிகை இத்தலத்தில் பருவமடைந்ததால், மற்ற கோயில்களைப் போல இக்கோவிலில் திருக்கல்யாணம் ஆடிப்பூரம் வளைகாப்பு போன்ற வைபவங்கள் நடைபெறுவதில்லை.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
மாலையில் ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு அம்மனுக்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வரும் காட்சி காண்போரை பரவசப்படுத்தும்.
சங்கீத மும்மூர்த்திகள் நீலாயதாட்சி மீது பல கீர்த்தனைகள் பாடியுள்ளனர். அதில்,‘அம்பா நீலாயதாக்ஷி’ என்று முத்துச் சாமி தீட்சிதர் இந்த அம்பிகையை போற்றிப் பாடும் கீர்த்தனை மிகவும் பிரசித்தம்.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள்.
பொதுவாக சிவாலயங்களில் இறைவனின் கருவறையை சுற்றி வரும்போது, கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கிறார். இது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
ஏழு கைகள், ஏழு ஜுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் உடைய அக்னி பகவானின் அபூர்வ தோற்றம்
திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள். அப்பர் முக்தி அடைந்த தலம் இது. முருக நாயனார் அவதரித்த தலம்.
இத்தலத்தில் அகனி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பூஜித்த தலமாதலால், இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம். அக்னி தவம் செய்யும்போது ஏற்படுத்திய தீர்த்தம், கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்குகிறது.
அக்னி பகவானுக்கு பாவ விமோசனம் கொடுத்து, காட்சி தந்த தலம் இது என்பதால், அக்னிக்கு உருவச் சிலை இந்தக் கோவிலில் அமைந்திருப்பது விசேடமாகும். அக்னி பகவான் இரண்டு முகம், ஏழு கைகள், ஏழு ஜுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் உடையவராக காட்சி அளிக்கிறார். அக்னி பகவானின் இந்த தோற்றம், மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. அக்னி பகவானின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒட்டிய வயிறுடன் காட்சி தரும் விநாயகர்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். இத்தலத்திற்கு திருமெய்ஞானம் என்ற பெயரும் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை.
பிரணவ விநாயகர்
பொதுவாக விநாயகப் பெருமான் பெரிய வயிறுடன் தான் தோற்றமளிப்பார். ஔவையார் தனது விநாயகர் அகவலில் விநாயகப் பெருமானின் தோற்றத்தை விவரிக்கையில் 'பேழை வயிறு' என்று அவருடைய பெருத்த வயிற்றை குறிப்பிட்டு இருப்பார். ஆனால் இக்கோவிலில் விநாயகர், ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, 'பிரணவ விநாயகர்' என்று அழைக்கிறார்கள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை இத்தலத்தில் உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருக்கின்றது. படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் விநாயகர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோவில்
சிவசொரூபமாக, சிரசில் கங்கை, ருத்ராட்சம், மற்றும் நெற்றிக்கண்ணுடன் காட்சி அளிக்கும் அம்பிகையின் அபூர்வ கோலம்
நாகப்பட்டினம்- கும்பகோணம் சாலையில், திருபுகலூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் சீயாத்தமங்கை. இறைவன் திருநாமம் அயவந்தீசுவரர். இறைவியின் திருநாமம் இருமலர்கண்ணியம்மை. அம்பிகைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்றொரு திருநாமமும் உண்டு.
அம்பிகை இருமலர்கண்ணியம்மை சிவசொரூபமாக சிரசில் கங்கை, ருத்ராட்சம், மற்றும் நெற்றிக்கண்ணுடன் சிவபாகத்தைக் கொண்டவளாக காட்சி தருகிறாள். அம்பிகையின் இந்தக் கோலம் அபூர்வமானது. வேறு எந்த தலத்திலும் நாம் எளிதில் தரிசிக்க முடியாதது. அம்பிகை, அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பௌர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பௌர்ணமியில், இங்கேயுள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
வழி தெரியாமல் தவித்த பயணிகளுக்கு வழிகாட்டிய அம்பிகை
இந்தத் தலத்தில் ஆலயம் மிகப் பிரமாண்டமாக உருவாக காரணம், இங்கு அருள்பாலிக்கும் அம்பிகை தான். அதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து, தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி ஒரு கூட்டத்தினர் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்தப் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த வேளையில் அங்கு சிறுமி ஒருத்தி வந்தாள். பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள். "என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தைக் கண்டு சிலிர்த்தனர் பயணிகள். 'யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்' என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்தக் கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாளான இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். இயல்பாகவே கோவில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட அந்த அன்பர்கள், அம்பிகை வழி காட்டிய கோவிலுக்கும் திருப்பணிகள் செய்து முடித்து பிரமாண்டமான ஆலயமாக எழுப்பினர்.
நாகப்பட்டினம் காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோவில்
காக்கா பிள்ளையார்
நாகப்பட்டினம் சட்டநாத சுவாமி கோவிலின் உப கோயிலாக, அதன் எதிரே நீலா மேல வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோவில்.
இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை அடைய எண்ணம் கொண்டு, முனிவரின் குடிலின் அருகே காக்கை உருவெடுத்து கரைந்தான். கௌதம முனிவரும் பொழுது விடிந்ததாக எண்ணி வெளியே சென்றுவிட இந்திரன் கௌதம முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை நாடினான். கௌதம முனிவர் அகலிகை, இந்திரன் ஆகியோரை சபித்து விடுகிறார். பின் இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி சாப விமோசனம் பெற காக்கை உருவிலேயே நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோவிலின் தென்மேற்கு பகுதியில் ஒரு தீர்த்தம் அமைத்து விநாயகப் பெருமானை முதலில் வழிபட்டான்.
இந்திரனின் சாபம் தீர்க்க வழி செய்ததால், சாபம் தீர்த்த விநாயகர் என்றும், இந்திரன் காக வடிவத்தில் அமைத்த குளத்தின் அருகே உள்ளதால் காக்காகுளம் பிள்ளையார் என்றும், தற்போது அதுவே மருவி காக்கா பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
திருநள்ளாற்றில் சனி தோஷம் முழுமையாக நீங்கப் பெறாத நள மகாராஜா பின் இக்கோயில் காக்காகுளத்தில் நீராடி, விநாயகரை வழிபட்டு சனியினால் காலில் ஏற்பட்ட தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். சூரிய பகவானும் இந்த விநாயகரை வழிபட்டு குழந்தை பாக்கியத்தை பெற்றதால் மார்ச் மாத இறுதி வாரங்களில் அஸ்தமனத்தின் போது சூரிய கதிர்கள் விநாயகரின் மீது படும்படி சூரிய பூஜை நடைபெறுகிறது.
மேலும் இந்திரனும், சூரிய பகவானும் அஞ்சலி முத்திரையில் கை கூப்பி விநாயகரை தொழுத வண்ணம் அமைந்திருப்பது வேறெந்த திருக்கோயில்களில் காணமுடியாத அமைப்பாகும்.
திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்
தாயார் வெள்ளி கருடி வாகனத்தில் எழுந்தருளும் திவ்ய தேசம்
நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவில், சோழ நாட்டு திவ்யதேசங்களில் ஒன்று. மூலவரின் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் சௌந்தர்யவல்லித்தாயார். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது.
கருவறையில் நின்ற கோலத்தில், நெடியோனாக மார்பில் பெரிய பிராட்டியாருடன், சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன் திருமங்கையாழ்வாரை மயக்கிய 'நாகை அழகியாராக' நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்க கவசத்தில் பெருமாளை சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரித்தான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம் .
ஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு 'கருடி வாகனம்'(பெண் கருட வாகனம்) இருப்பது வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இத்திருக்கோயிலில் கருடபகவானை ஸ்ரீசௌந்தரராஜ பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன் கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். அதன் படி, ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாள் மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோவில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். பெருமாள் கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. தாயார் கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.
இக்கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை, சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள், வெள்ளிக் கருடி வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் .
திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில்
குளம் வெட்டிய விநாயகர்
வைத்தீஸ்வரன் கோவிலிருந்து சுமார் 4 கி மீ தொலைவில் உள்ள தேவார தலம் திருப்புன்கூர். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர். இறைவியின் திருநாமம் சொக்க நாயகி, சௌந்தர நாயகி. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம் இது. அதனால்தான் இன்றுவரை திருப்புன்கூர் ஆலயத்தில் நந்தி விலகியே நிற்கிறது என்கிறது தலபுராணம்.
திருநாளைப்போவார் கோவிலின் மேற்குபுறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணினார். அந்த பரந்து விரிந்த குளம் எத்தனை மண்ணை தோண்டினாலும் சீர்படவே இல்லை. தனியாளாக முயற்சி செய்ததால் அந்த பணி நிறைவடையாமல் நீண்டு கொண்டே இருந்தது. நாள்கள் பல கடந்தன. குளத்தை சீர்படுத்தும் பணிக்கு தனக்கு யாரும் துணை இல்லாததால் சிவபெருமானை வேண்ட, அவர் திருநாளைபோவாருக்கு உதவி செய்ய, கணபதியை செல்லுமாறு பணித்தார். விநாயகர், குளத்தை சீர் செய்யும் எல்லா பணிகளிலும் போவாருக்கு உதவினார். அவர் துணையால் திருநாளைப்போவார் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். திருக்குளம் முழுவதுமாக சீர்படும் வரை, விநாயகர் தினமும் பணியாற்றி, எந்த கூலியும் வாங்காமல் தொண்டாற்றினார். அதுவே கணபதி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். இந்தக் குளம் வெட்டிய விநாயகர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்.
ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோவில்
திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருக்கும் 'ஆபரண தாரி' பெருமாள்
நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ஆவராணி அனந்த நாராயண பெருமாள்கோவில். தாயார் திருநாமம் அலங்காரவல்லி. பஞ்ச நாராயணத் தலங்களில் இத்தலமும் ஒன்று.
திருவரங்கத்தில் ரங்கநாதப் பெருமாள் 18 அடி நீள திருமேனியுடன், ஐந்து தலை ஆதிசேஷன் மேல் வானத்தைப் பார்த்தவண்ணம் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து கருவறையில், மூலவரான அனந்த நாராயண பெருமாள், தென் திசை முடியை வைத்து, வட திசை பாதம் நீட்டியுள்ளார். 21 அடி நீளத்தில், ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, பக்தர்களை பார்த்த வண்ணம் சயனம் கொண்டுள்ளார். இந்த காட்சியை, இங்கு மட்டுமே நாம் தரிசிக்க முடியும். வேறு எந்த தலத்திலும்காண முடியாது.
சயன கோலத்தில் இருக்கும் அனந்த நாராயண பெருமாள் தன்னுடைய ஒரு கையால் தன்னுடைய தலையைத் தாங்குகிறார். பெருமானுடைய இன்னொரு கை முழங்கால் வரை நீண்டுள்ளது. கன்னங்கரிய வடிவத்திலே தைலக்காப்புக்குள்ளே இருக்கிறார்.
இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவர் தலை முதல் கால் வரை அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். சிரத்தின் மேல் மணிமகுடம், அழகான நீண்ட காது வளையங்கள், திருமார்பில் நலங்கிளர் எனும் ஆரம் ,தண்டம், தாரணம், சிரேஷணம், கடகம் போன்ற ஆபரணங்கள், மார்பின் குறுக்கே கவசம், இடுப்பில் உத்தரியம், உடல் முழுவதும் யஜ்ஞோபவிதம். அவரது காலில் தண்டை, கொலுசு அணிந்தபடி காணப்படுகிறார். அவரது கைகளின் விரல்களிலும், கால்களின் கால்விரல்களிலும் ஒவ்வொரு மோதிரம் காணப்படுகிறது. இப்படி இத்தலத்துப் பெருமாள் திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருப்பதால், இவருக்கு ஆபரண தாரி என்கிற பெயரும் வந்தது. அதுவே இந்த ஊரின் பெயராகி பின்னர் ஆவராணி என்று மருவியது.
கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில்
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் கீழரங்கம்
நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் சுமார் 24 கி.மீ., தொலைவில் கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில் உள்ளது. பெருமாள் தன் பக்தனுக்க கிருஷ்ணனாகக் காட்சி தந்து, பின் அரங்கனாகப் பள்ளி கொண்ட திருத்தலம் இது. பூர்வ என்றால் வடமொழியில் முழுமையான குறைவில்லாத எனப்பொருள். அதனால் இத்தலம் பூர்வாங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. பூர்வஜன்ம வினைப்பயனால் உண்டான தோஷங்களைக்கூட தரிசித்த மாத்திரத்தில் தீயினில் இட்ட தூசு போல காணாமல் போக்கும் பெருமாள் அருளும் தலம், கீழையூர்.
பஞ்சரங்க ஷேத்ரங்கள் என்ற ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று. திருவரங்கம் - மத்தியரங்கம், கர்நாடகத்து ஸ்ரீரங்கப்பட்டினம் - மேலரங்கம், மாயவரம் - வடரங்கம், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கட்டிமேடு - ஆதிரங்கம், இத்தலம் கீழரங்கம்.
தல வரலாறு
மார்க்கண்டேய மகரிஷி தான் மகளாக வளர்ந்த மகாலட்சுமியை பெருமாளுக்கு திருமணம் செய்து கொடுத்த பின் ஐந்து ரங்கத் தலங்களுள் நான்கிற்குச் சென்று பெருமாளையும் மகாலட்சுமியையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக பூர்வரங்கம் அல்லது கீழை அரங்கம் என அழைக்கப்படும் அரங்கத்தில் உறையும் அரங்கனைத் தேடி அலைந்தார். அரங்கனைக் காண முடியாததால் அங்கேயே தவம் இருக்கத் தொடங்கினார். கால ஓட்டத்தில் மெதுவாக புற்று வளர்ந்து அவரை மூடியது. ஒருநாள், அந்தக் கானகத்தில் எழுந்த குழல் ஓசை, தவம் செய்த முனிவரையும் கவர்ந்திழுத்தது. அதனால், உள்ளேயிருந்து வெளிப்பட்ட ரிஷி, குழலோசை வந்த திக்கை நோக்கிச் சென்றார். அங்கே கால்நடை மேய்க்கும் சிறுவன் ஒருவன் குழலிசைப்பதைக் கண்டார்.சிறிது நேரத்தில் சிறுவன் உருமாறி கண்ணனாகக் காட்சியளித்தான். வணங்கிய முனிவர். 'அரங்கன் வடிவில் தரிசனம் தந்து வரங்கள் அருள வேண்டும்' என்று வேண்டினார். உடனே, திருவரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் குண திசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி யோக நித்திரையில் காட்சிதந்தார். பெருமாள் மார்க்கண்டேய மகரிஷிக்கு பெருமாள் காட்சி கொடுத்தது. தை மாதம் இரண்டாம் நாளாகும். பெருமாள் அன்று முதல் தன்னருகே மார்க்கண்டேய மகரிஷி கருவறையிலேயே இருக்குமாறு செய்தார்.
கருவறையில் ஆனந்த விமானத்தின் கீழ் இடக்கை பக்கவாட்டில் இருக்க வலக்கையைத் தலை அருகில் வைத்து யோக சயனத்தில் ஐந்து தலை ஆதிசேஷன் மேல் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள். பெருமாளின் தலையருகே மார்க்கண்டேய மகரிஷியும், திருவடி அருகே பூதேவியும் உள்ளனர் யோக மூர்த்தியாக இருப்பதால் நாபிக் கமலத்தில் பிரம்மா கிடையாது. மார்க்கண்டேய மகரிஷிக்கு முதலில் ஆயன் உருவில் காட்சி தந்ததால், உற்சவர் ஆயனார் என்ற திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
கோயிலில் வடக்கே உள்ள புஜ்கரணியின் அருகே ரங்கநாயகித்தாயார் தவம் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருமணங்குடி என்னும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு உள்ளது. எனவே இங்கு ரங்கநாயகித் தயாரிடமும், பெருமாளிடமும் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு பாலும் பழமும் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு கொடுத்தால் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை. வாழைப்பழம், உலர்திராட்சை, முந்திரி, கல்கண்டு போன்றவற்றை தாயாருக்கு நைவேத்யம் செய்து சிறுகுழந்தைகளுக்குத் தந்தால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகம்.
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் இத்தலத்தில் அனைத்து திருவிழா, உற்சவங்களும் திருவரங்கத்தினைப் போலவே நடைபெறுகின்றன.
வைத்தீஸ்வரன் கோவில்
செவ்வாய் தோஷம் நீக்கும் பரிகாரத் தலம்
சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் வைத்தீஸ்வரன் கோயில். இறைவன் திருநாமம் வைத்தீஸ்வரன். இறைவியின் திருநாமம் தையல்நாயகி. வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்பது ஐதீகம்.
பொதுவாக, சிவாலயங்களில் சிவ சன்னதிக்கு முன் இடது பக்கமாக நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயிலில் நவக்கிரகங்கள் நேர்க்கோட்டில் வக்கிரமில்லாமல், வரிசையாக ஈஸ்வரன் சன்னதிக்கு பின்புறம் தத்தம் நோய் தீர ஒரே வரிசையில் நேர்க்கோட்டில் நின்று வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். முன்னொரு காலத்தில் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்து விட்டு வைத்தியநாத சுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதை அடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைலநாயகி என்று பெயர் வந்தது.அங்காரகனின் வெண்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாயிற்று. அங்காரகன் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். குஷ்ட நோயினால் அவதியுற்ற அங்காரகனுக்கு சிவ பெருமான் வைத்தியராக வந்திருந்து, நோய் நீக்கிய தலம் என்பதால் இக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் என்றாயிற்று.
செவ்வாய் தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்தாலே தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, துவரை அன்னம் நைவேத்தியம் செய்து வழிபடுவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும். இதனால் தோஷம் நீங்கும். குறிப்பாக, செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணத் தடைகள் அகலும். கல்யாண வரம் கைகூடி வரும்.
வரம் தரும் அங்காரக ஸ்தோத்திரம் :
பூமிபுத்ரோ மஹாதேஜா ஜகதாம் பயக்ருத்ஸதா
வ்ருஷ்டிக்ருத் வ்ருஷ்டி ஹாதாச பீடாம் ஹரதுமே குஜ;
இதை, தினமும் சொல்லி வந்தாலே தோஷங்கள் விலகிவிடும். செவ்வாய் பகவானின் பலத்தையும் அருளையும் பெற்றுவிடலாம். முக்கியமாக, செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகனை, முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண வரன் தேடி வரும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. முருகப்பெருமானும் யானையும் விளையாடும் நரி ஓட்டம் நிகழ்ச்சி
https://www.alayathuligal.com/blog/la2rny36apf65rfnws4fzwcbfkpk6r
2. தையல்நாயகி அம்மன்
https://www.alayathuligal.com/blog/gchp68lgler8gnn79yt582zf62s6wr
வைத்தீசுவரன் கோவில்
தையல்நாயகி அம்மன்
சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், 'வைத்தியநாதர்'. அம்பாள் பெயர் 'தையல்நாயகி' என்பதாகும்.
வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார். அம்பாளும், இறைவனுக்கு உதவியாக தனது கையில் தைல பாத்திரம், அமிர்த சஞ்சீவி, வில்வ மரத்தடி மண் ஏந்தி இருக்கிறார். இப்படி அம்பாளும், சுவாமியும் தீவினை தீர்க்கும் சக்தி படைத்தவர்களாக அருள்பாலிக்கிறார்கள். சூரபத்மனை வெல்வதற்காக, இத்தல அம்பிகையை முருகப்பெருமான் வழிபாடு செய்தாராம்.
தையல்நாயகிக்கு புடவை சாத்துதல், அபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு செய்வது பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது. மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் தாயாருக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வார்கள். இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் என்ற குறை நீங்கும்.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த மேற்கொள்ளும் பாதயாத்திரை
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக,காரைக்குடி,கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி,மானாமதுரை,திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றி நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தங்கள் வேண்டுதல்களுக்காகவும், வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்துகின்றனர். . மேலும் விளக்கேற்றியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற வேண்டி அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஏழாம் நாளன்று வெளியான பதிவு
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்
https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8