நாகை காயாரோகணேசுவரர் கோவில்
நாகை நீலாயதாக்ஷி அம்மன்
நாகை நீலாயதாக்ஷி, நீலோற்பல மலரின் குளிர்ச்சியைப் போல தன் பார்வையை பக்தர்களுக்கு வழங்குவதால், ‘நீலாயதாட்சி’ என்ற திருநாமத்தோடு விளங்குகிறாள். அம்பிகைக்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரும் உண்டு. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார்.
அன்னை நீலாயதாக்ஷி பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கைரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், தன் இரு திருக்கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தி, மற்ற இரு திருக்கரங்களில் அபய வரத முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பூப்பெய்திய அம்பிகைக்கு காவலாக இருக்கும்படி, நந்திதேவரை சிவபெருமான் பணித்தார். அதனால் கோவில் வாசலில் அமர்ந்திருக்க வேண்டிய நந்திதேவர், அம்பிகையின் சன்னதி முன் வலது கண்ணால் அம்பிகையையும் இடது கண்ணால் சிவபெருமானையும் பார்த்தபடி இரட்டை பார்வையுடன் அமர்ந்திருக்கிறார்.
நீலாயதாக்ஷி, இத்தலத்தின் அரசியாக இருந்து பரிபாலனம் செய்வதால் அவருக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் இங்கு வீதிகளின் பெயர்கள் கூட நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு மடவிளாகம் என்று இருக்கின்றது. இதுபோல அம்மனின் பெயர் தாங்கிய வீதிகள் வேறு எந்த தலத்திலும் இல்லை. அம்பிகை இத்தலத்தில் பருவமடைந்ததால், மற்ற கோயில்களைப் போல இக்கோவிலில் திருக்கல்யாணம் ஆடிப்பூரம் வளைகாப்பு போன்ற வைபவங்கள் நடைபெறுவதில்லை.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
மாலையில் ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு அம்மனுக்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வரும் காட்சி காண்போரை பரவசப்படுத்தும்.
சங்கீத மும்மூர்த்திகள் நீலாயதாட்சி மீது பல கீர்த்தனைகள் பாடியுள்ளனர். அதில்,‘அம்பா நீலாயதாக்ஷி’ என்று முத்துச் சாமி தீட்சிதர் இந்த அம்பிகையை போற்றிப் பாடும் கீர்த்தனை மிகவும் பிரசித்தம்.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.