நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில்
நந்தி தேவர் வழிபட்ட பெருமாள் கோவில்
கும்பகோணத்தில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில், மருதாநல்லூர் அருகில் அமைந்துள்ளது நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. இக்கோவில் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் மூலவர் நந்திநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நந்தி தேவர் வழிபட்ட தலம் இது. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவக் கவிஞர் காளமேகப் புலவர் இக்கோவிலில் வழிபட்டார்.
சிவபெருமானை சாந்தப்படுத்துவதற்குத் தீர்வு காணும் பொருட்டு விஷ்ணுவை வழிபட நந்தி தேவர் இங்கு வந்தார். நந்தி தேவர் விஷ்ணுவிடம் இங்கேயே தங்கி தனது (நந்தியின்) பெயரை விஷ்ணுவின் சொந்த பெயரின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினார். எனவே இத்தலத்து பெருமாள் நந்தி நாத பெருமாள் என்று பெயர் பெற்றார். இந்த இடத்திற்கு நந்திவனம் என்ற பெயரும் ஏற்பட்டது.
நந்தியாவட்டை பூ முதலில் தோன்றிய தலம்
இங்குள்ள நந்திநாதப் பெருமாளுக்கு, நந்தி தேவர் விண்ணுலகின் நந்திமணி மலரால் பூஜை செய்தார். இந்தப் பூ பூமியில் நிலைத்திருந்து, இன்று தமிழில் 'நந்தியாவட்டை' (பின்வீல் பூ) என்று அழைக்கப்படுகிறது.
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
சிவப்பு நிற கல்லால் ஆன அபூர்வ நந்தி
இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கும் அரிய தோற்றம்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. இக்கோவில் திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தேவார வைப்பு தலமாகும்.
இக்கோவில் நந்தியம்பெருமான் பல சிறப்புகளைப் பெற்றவர். இவருடைய திருமேனியானது வழக்கத்திற்கு மாறாக, கருப்பு நிற கல்லுக்கு பதிலாக சிவப்பு நிற நிற கல்லால் ஆனது. வழக்கமாக சிவாலயங்களில் நந்தியம்பெருமான் மூன்று கால்களை மடக்கியும், ஒரு காலை மட்டும் நிமர்த்தியும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஆனால், இக்கோவிலில் நந்தியம்பெருமான் தன் இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கின்றார். இது ஒரு அரிதான காட்சியாகும். மேலும் அவரது வலது காதும் மடிந்து காணப்படுவதும் சிறப்புக்குரியதாகும். அவர் தன் தலையை சற்றே சாயத்து தன் காதை இறைவன் பக்கம் திருப்பி இருப்பதும் ஒரு வித்தியாசமான தோற்றம் ஆகும்
தொடர்ந்து 11 பிரதோஷங்களில் பங்கேற்று, நந்தியெம்பெருமானை மனமுருகி வேண்டினால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் என்பது பக்தர்களின் கூற்றாக உள்ளது.
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்
மூன்று கால்கள் மட்டுமே உள்ள அபூர்வ நந்தி
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தாயம்மை. கொல்லிமலை, நாமக்கல்லில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கொல்லிமலைக்குப் போய் வர, அதிகக் கொண்டையூசி வளைவுகள் கொண்ட மலைப் பாதை உள்ளது.
திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் இது. கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார்.
கொல்லிமலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி எனும் மன்னன் ஆண்ட பகுதியாகும். மூலிகை பொருட்களுக்கு பெயர் போன கொல்லிமலையில் நிறைய மர்மமான விஷயங்கள் இருப்பதாகவும், இம்மலையில் சித்தர்கள் குகைகளில் தங்கித் தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இக்கோவில் நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உள்ளன. இவருக்கு பின்புற வலது கால் கிடையாது. இது பற்றி ஒரு புராணக் கதை உள்ளது. இந்த நந்தி, இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ் சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச் செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்கு சென்றது. இதனை அறிந்த காவலர்கள், நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து நந்தி அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி. விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக் காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.
சிவராத்திரியின் போதும், பிரதோஷ காலத்தின் போதும் இந்த நந்தீஸ்வரரை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குணசீலம் தார்மீகநாதர் கோவில்
இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கும் அபூர்வ நந்தி
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள குணசீலத்தில் அமைந்துள்ளது தார்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஹேமவர்ணேஸ்வரி.
பொதுவாக சிவாலயங்களில் நந்தியெம்பெருமான் ஒரு காலை சற்றே மடக்கியும், மற்றொரு காலை மடித்தபடியும் காட்சித் தருவார். ஆனால், இக்கோவிலில் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கிறார். நந்தியம்பெருமானின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. பொதுவாக சித்தர்கள் நடமாடிய கோவிலிலோ, அவர்கள் கோவில் அமைவதற்கு உதவியிருந்தாலோ, நந்தியெம்பெருமானின் அமைப்பு மாற்றத்துடன் காணப்படுமாம். அந்த வகையில் நந்தியெம்பெருமான் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிப்பதால், இக்கோவிலில் சித்தர்கள் நடமாட்டமும் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
உடலில் காயங்களுடன் காட்சியளிக்கும் நந்திதேவர்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.
இத்தலத்தில் சுவேதாரண்யேசுவரர் சுவாமி சன்னதி முன் உள்ள நந்தி, உடலில் காயங்களுடன் காட்சி அளிக்கிறார். அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், மருத்துவாசுரன் என்னும் அரக்கனால் ஏற்பட்டது.
மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால், தேவர்களுக்கு பல துன்பம் விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். மருத்துவாசுரன், திருவெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப் பின், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினான். நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. இது பற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றிலிருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடியில் காணலாம். காயம் பட்ட நந்திதேவரை சுவேதாரண்யேசுவரர் ஆட்கொண்டார்.
நந்திதேவர் உடம்பில் ஒன்பது இடங்களில், ஈட்டியால் குத்துப்பட்ட துளைகளை நாம் இன்றும் நந்திக்கு அபிஷேகம் நடைபெறும் போது பார்க்க முடியும்.
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்
பாதாளத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி
கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில் தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. சிவபெருமான் காத்தியாயன முனிவருக்கு மகளாக பிறந்த பார்வதி தேவியை திருமணம் புரிந்த தலம் இது. காத்தியாயன முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க கருவறையில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பு. திருமணப் பரிகாரத் தலங்களில் முக்கியமான தலம். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
இத்தலத்து இறைவனின் உற்சவ மூர்த்தி காசி யாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளைக் கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் வீற்றிருக்கும் தலங்கள் பல உண்டு. அங்கு மூலவரோ, உற்சவரோ மட்டுமே கல்யாண கோலத்தில் இருப்பர். மூலமூர்த்தி, உற்சவமூர்த்தி என இருவருமே திருமணக் கோலத்தில் விளங்கும் தலம் திருவீழிமிழலை ஒன்றே ஆகும்.
இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. திருமணத்தில் இரண்டு கால்களை முக்கியமாகச் சொல்வர். அரசனுடைய ஆணையை சாட்சியாக வைத்து திருமணம் நடக்கிறது என்ற பொருளில் ஒரு மரக் கொம்பினை நடுவர். மணமேடையில் இருக்கும் அந்தக் கொம்பு அரசாணைக்கால் எனப்படும். திருவீழிமிழலை கர்ப்பக்கிரக வாயிலில் அரசாணைக்கால் இருக்கிறது. இந்த அமைப்பு வேறெங்கும் இல்லாத விசேஷ அமைப்பாகும். மகாமண்டபம் திருமணமண்டபம் போல், பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
இக்கோவிலில் இறைவன் எழுந்தருளி இருக்கும் கருவறை மண்டபத்திற்கு செல்ல நாம் 15 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். பொதுவாக சிவாலயத்தில், நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை தரை மட்டத்தில் அமைந்திருக்கும். ஆனால் இக் கோவிலிலோ பாதாளத்தில் நந்தி அமைந்துள்ளது. முழு கோவிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இப்படிப்பட்ட பாதாள நந்தியை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
திருமண தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்
திருமண தடை உள்ளவர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோவில் இது. இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட பின் தொடர்ந்து 45 நாட்கள், தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும்,
தேவந்திராணி நமஸ்துப்யம்
தேவந்திரப்ரிய பாமினி
விவாஹ பாக்யமாரோக்யம்
என்று துவங்கும் சுலோகத்தைப் பாராயணம் செய்யவேண்டும். தினமும் காலையில் மட்டுமின்றி, மாலையிலும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்.
திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
குரங்கு முகத்துடனும், நின்ற கோலத்திலும் இருக்கும் அதிகார நந்தி
காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அதிகார நந்தி குரங்கு முகத்துடனும், நின்ற கோலத்திலும் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இவரை தரிசித்த பிறகே, மூலவரை வழிபடச் செல்ல வேண்டும் என்ற வழிபாட்டு நியதியும் இங்கே உள்ளது.
இவரின் முகம் குரங்காக மாறியதற்கு ராவணன் கொடுத்த சாபம் தான் காரணம். இத்தலத்து இறைவனை தரிசிக்க ராவணன் வரும்போது நந்தியை கவனிக்காமல் சென்றார். இராவணனிடம் நந்தி இறைவன் தியானத்தில் உள்ளார். இப்போது போகாதே என தடுத்துள்ளார். சினம் கொண்ட இராவணன் நந்தியை சபித்ததால் நந்தியின் முகம் குரங்கு முகமாக மாறியது. ராவணன் அப்படி கேட்டதும், நந்தியின் முகம் குரங்காக மாறியது. இதைக் கண்ட நந்தி ராவணா என்னை குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் ஒரு குரங்கால் அழிந்து போகும் என்று சபித்தார். நந்தி கொடுத்த சாபம் ராவணனைத் தொடர்ந்தது. அதனால்தான் ஆஞ்சநேயரால், இலங்கை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
சிவபெருமான் பார்வதி திருமணத்திற்கு சீர் வரிசை கொண்டு வந்த நந்தியம்பெருமான்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி, மாதங்கி. இக்கோவிலில் வேறு எந்த தலத்திலும் காண முடியாத வகையில், அரிய நிலையில் இரண்டு நந்திகள் எழுந்தருளிய உள்ளன. இவைகள் முன்னும் பின்னும் திரும்பிய நிலையில் காட்சியளிக்கின்றன. இவற்றில் மதங்க நந்தி இறைவனை பார்த்தபடியும், மற்றொரு நந்தியான சுவேத நந்தி கோவில் வாசலை பார்த்தபடி திரும்பியும் இருக்கின்றது. இதனை நந்தி, சிவ பார்வதி திருமணத்திற்கு சீர் பொருட்களை கொண்டு வந்த கோலம் என்கிறார்கள். இதன் பின்னணியில் சுவையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.
மதங்க முனிவரின் மகளாக அவதரித்த பார்வதிதேவி மாதங்கி என்ற திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தக்க வயது வந்ததும், மதங்க முனிவர் தம் மகளை சிவபெருமானுக்கு முடிக்க எண்ணினார். சிவபெருமான், மாதங்கியின் திருமணம் திருநாங்கூருக்கு அருகில் உள்ள திருவெண்காட்டில் நடந்தது. சிவபெருமான் திருமணத்திற்காக மதங்கரிடம் சீர் எதுவும் வாங்கவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த முக்கோடி தேவர்கள் உட்பட அனைவரும் மதங்கர் சீர் தராத்தை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தி பேசினர். அவர்களது எண்ணத்தை அறிந்த சிவபெருமான், தட்சணை வாங்குவது தவறு என்று அவர்களிடம் எடுத்துக் கூறினார். ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. எனவே சிவபெருமான் அவர்களிடம் "மாதங்கியை மணப்பதால் அவள் வேறு, நான் வேறு இல்லை. எங்கள் இருவர் பொருளும் ஒன்றுதான்" என்று சொல்லி, சிவலோகத்திலுள்ள தன் செல்வத்தின் பெரும் பகுதியை நந்தியை அனுப்பி எடுத்து வரும்படி கூறினார். அதை பார்வதிக்கு கொடுத்தார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோவிலில் முன்னும், பின்னுமாக திரும்பியபடி இரண்டு நந்திகள் இருக்கின்றன. பிரதோஷ வேளையில் இவ்விரு நந்திகளுக்கும் அபிஷேகம் நடக்கின்றது. அந்நேரத்தில் இரு நந்திகளையும் தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத்தரும்.
தஞ்சைப் பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் சிறப்பு பூஜை
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். இதன் எடை 20 டன் ஆகும். இந்த நந்தியம் பெருமான், ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். பெருந்திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திககு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள், பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்
மூலவரின் எதிரில் அமர்ந்திருக்கும் அபூர்வ இரட்டை நந்திகள்
படப்பையில் இருந்து ஒரகடம் போகும் வழியில் அமைந்துள்ள சரபணஞ்சேரி என்ற கிராமத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில். 900 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.
பொதுவாக சிவாலயங்களில் மூலவரின் முன் ஒரு நந்தி அமர்ந்திருக்கும். ஆனால் இத்தலத்து மூலவரின் எதிரில் இரண்டு நந்திகள் ஒன்றின் அருகில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன. இப்படி அருகருகே அமர்ந்திருக்கும் இரட்டை நந்திகளை, வேறு எந்த சிவாலயத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இவற்றில் ஒரு நந்தி இத்தலத்து மூலவரையும், இத்தலத்துக்கு நேர் கோட்டில் இருக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூலவரையும் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மற்றொரு நந்தி, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்கும் வண்ணம் தன் தலையை திருப்பி அமர்ந்துள்ளது. இவ்விரு நந்திகளை தரிசித்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் தலங்களை தரிசித்த பலன்கள் கிட்டும்.
காயாரோகணேசுவரர் கோயில்
நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் விசேடப் பார்வை
நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் பார்வை இரண்டு திசைகளை நோக்கியுள்ளது.வலது கண் அம்பாளைப் பார்ப்பது போலவும் இடது கண் சிவனைப் பார்ப்பது போலவும் இருக்கின்றது.இந்த நந்திக்கு அருகம்புல் சாற்றி,சிவன்,அம்பாள் மற்றும் நந்தி என மூவருக்கும் தேன் அபிக்ஷேகம் செய்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.