திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்
பாதாளத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி
கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில் தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. சிவபெருமான் காத்தியாயன முனிவருக்கு மகளாக பிறந்த பார்வதி தேவியை திருமணம் புரிந்த தலம் இது. காத்தியாயன முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க கருவறையில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பு. திருமணப் பரிகாரத் தலங்களில் முக்கியமான தலம். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
இத்தலத்து இறைவனின் உற்சவ மூர்த்தி, காசி யாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளைக் கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் வீற்றிருக்கும் தலங்கள் பல உண்டு. அங்கு மூலவரோ, உற்சவரோ மட்டுமே கல்யாண கோலத்தில் இருப்பர். மூலமூர்த்தி, உற்சவமூர்த்தி என இருவருமே திருமணக் கோலத்தில் விளங்கும் தலம் திருவீழிமிழலை ஒன்றே ஆகும்.
இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. திருமணத்தில் இரண்டு கால்களை முக்கியமாகச் சொல்வர். அரசனுடைய ஆணையை சாட்சியாக வைத்து திருமணம் நடக்கிறது என்ற பொருளில் ஒரு மரக் கொம்பினை நடுவர். மணமேடையில் இருக்கும் அந்தக் கொம்பு அரசாணைக்கால் எனப்படும். திருவீழிமிழலை கர்ப்பக்கிரக வாயிலில் அரசாணைக்கால் இருக்கிறது. இந்த அமைப்பு வேறெங்கும் இல்லாத விசேஷ அமைப்பாகும். மகாமண்டபம் திருமணமண்டபம் போல், பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
இக்கோவிலில் இறைவன் எழுந்தருளி இருக்கும் கருவறை மண்டபத்திற்கு செல்ல நாம் 15 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். பொதுவாக சிவாலயத்தில், நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை தரை மட்டத்தில் அமைந்திருக்கும். ஆனால் இக் கோவிலிலோ பாதாளத்தில் நந்தி அமைந்துள்ளது. முழு கோவிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இப்படிப்பட்ட பாதாள நந்தியை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
திருமண தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்
திருமண தடை உள்ளவர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோவில் இது. இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட பின் தொடர்ந்து 45 நாட்கள், தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும்,
தேவந்திராணி நமஸ்துப்யம்
தேவந்திரப்ரிய பாமினி
விவாஹ பாக்யமாரோக்யம்
என்று துவங்கும் சுலோகத்தைப் பாராயணம் செய்யவேண்டும். தினமும் காலையில் மட்டுமின்றி, மாலையிலும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. வியக்க வைக்கும் திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம் (28.11.2022)
https://www.alayathuligal.com/blog/gehtfgpl646ybf5g8hhrbfpyw8mbm5?rq
2. திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு (10.07.2021)
https://www.alayathuligal.com/blog/5fj3tlcrj9w49dly9czh33fnhdtaag