காஞ்சிபுரம் நிலா துண்டப் பெருமாள் கோவில்
பெருமாளின் நாபிக் கமலத்தில் மகாலட்சுமி எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு கோவில்கள் தான் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், திவ்ய தேசமாகவும் அமைந்திருக்கின்றன. ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில். மற்றொன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலில் அமைந்திருக்கும் திவ்யதேசம் நிலா துண்டப் பெருமாள் கோவில். ஏகாம்பரேசுவரர் கோவிலின் முதல் பிரகாரத்தில், ஒரு சிறிய சன்னதியில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். மகாலட்சுமி. மகாவிஷ்ணுவின் இடது மார்பில் காட்சி தருபவள். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் மகாலட்சுமி பிரம்மாவின் அம்சத்துடன் இருக்கின்றாள். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள். இதனால் இங்கு பெருமாளையும் மகாலட்சுமியும் வழிபடுவதால், பக்தர்களின் விதியை எல்லா வகையிலும் சிறப்பாக மாற்ற முடியும் என்பது ஐதீகம்.
பெருமாளுக்கு நிலா துண்டப் பெருமாள் என்ற பெயர் வந்த காரணம்
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாக பயன்பட்ட மேருமலையை தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப, மகாவிஷ்ணு நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால், வருத்தம் கொண்ட வாசுகி பாம்பு, அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இக்கலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ‘நிலாத்திங்கள் துண்டத்தாய்’ என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். ‘சந்திர சூடப் பெருமாள்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. சிவனை வணங்கி குணமாகியவர், என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.
மகாவிஷ்ணு தன்னுடைய நோய் நீங்குவதற்காக இத்தலத்திற்கு தனியே வந்ததால், தாயாருக்கு இங்கு சன்னதி கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே 'நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது.
பிரார்த்தனை
பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தோல் வியாதிகள், வயிறு சம்பந்தமான நோய்கள், தோஷங்கள் நீங்கும், உடல் உஷ்ணம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக் கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை.
மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில்
கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் ஏந்தியிருக்கும் விநாயகர்
சென்னையில் இருந்து 20 கி மீ.தொலைவில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வெள்ளீஸ்வரர் கோவில். அசுரர்களின் குருவான சுக்கிரன் இவரை வழிபட்டு பேறு பெற்றதால் இவருக்கு வெள்ளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. சென்னையை சுற்றியுள்ள நவகிரக தலங்களில் இது சுக்கிரனுக்குரிய பரிகார தலமாகும். இங்கு அம்பிகை சன்னதி கிடையாது. சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது.
இக்கோவிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருப்பது தனிச்சிறப்பாகும். இடது கீழ் கையில் மோதகத்திற்குப் பதிலாக மாம்பழத்தை வைத்திருப்பதால் இவருக்கு மாங்கனி விநாயகர் என்று திருநாமம் உண்டு. மேலும் இடது மேல் கையில் நெற்கதிர்களை ஏந்தி இருப்பதால், நெற்கதிர் விநாயகர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. இத்தலத்தைச் சுற்றி உள்ள விவசாயிகள், இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால் தங்களது விவசாயம் செழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோவில்
சிம்ம குரு தட்சிணாமூர்த்தி
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் திருப்புலிவனம். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அபிதகுசாம்பாள், மூலவர் சுயம்பு மூர்த்தி. ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது காணப்படுகிறது. சிவலிங்கத் திருமேனியில், புலியின் பாதங்கள் காணப்படுகின்றன. லிங்கத்தின் மேல் பாகத்தில் ஜடாமுடி காணப்படுகிறது.இப்படி ஜடாமுடி தரித்த சிவலிங்கத் திருமேனியை நாம் திருவையாறு, சிவசைலம் ஆகிய ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த அம்சம் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு 'சிம்ம குரு தட்சிணாமூர்த்தி' என்று பெயர். தட்சிணாமூர்த்தியின் அருகில் சனகாதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார். அதனால் இவரை அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கின்றனர். இந்தப் பெயருக்கு காரணம், இவருடைய இடது கால் அம்மனின் வாகனமான சிம்மத்தின் மீதும், வலது கால் நடராஜப்பெருமானுக்கு இருப்பதுபோல் முயலகன் மீது உள்ளதாலும், ஆகும்.பெயருக்கு ஏற்றாற்போல், இவருடைய முகத்தில், ஆண்மையின் மிடுக்கையும் பெண்மையின் நளினத்தையும் நாம் காணலாம்.
சிம்ம ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்
இத்தலம் சிம்மராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. மன வேற்றுமை உடைய தம்பதியர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் இடையே ஒற்றுமை மேலோங்கும். இத்தலத்தை வழிபட்டால் திருமண வரம்,குழந்தை பாக்கியம், பதவி உயர்வு முதலிய நற்பலன்கள் கிட்டும்.
தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில்
சிவபெருமானைப்போல் நெற்றிக் கண்ணும், மகாவிஷ்ணுவைப்போல் சங்கு சக்கரமும் உடைய ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயரின் அபூர்வக் கோலம்
ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாதிரிமேடு என்னும் இடத்திலிருந்து பிரியும் கிளைச் சாலையில் ஒரு கி.மீ. பயணித்தால் தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவிலை அடையலாம்.
ராம பக்தனான ஸ்ரீஆஞ்சநேயருக்கு பல ஆலயங்கள் தமிழ் நாட்டில் உண்டு. ஆனால் அவரை ஐந்து முகம் கொண்ட மூர்த்தியாக சித்தரித்து அமைந்துள்ள ஆலயங்கள் ஒரு சில தலங்களில்தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடன், ஸ்ரீ வராகம், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய ஐந்து திருமுகங்களோடு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பஞ்சமுகத்தின் சிறப்பு
ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயரின் திருமுகங்களும், அதன் சிறப்பம்சங்களும்
1. ஸ்ரீ கருடன்: நோய் நீக்குதல், தீராத பிணி, விஷக்கடி நீங்குதல்.
2. ஸ்ரீ வராகம்: குடும்பத்தில் வளம், சுபகாரியங்கள் தடையின்றி நடத்தல், வேலை வாய்ப்பு, முன்னேற்றம், சந்தான பிராப்தி.
3. ஸ்ரீ ஆஞ்சநேயர்: நெற்றி கண்ணுடன், ருத்திராவதார மூர்த்தியாய், எதிரிகளை அழிக்கும் தன்மை பெற்றவராய், ஆக்கிரோஷமாக விளங்குகிறார்.
4. ஸ்ரீ நரசிம்மர்: செய்வினை, பில்லி, சூனியம், இவைகள் நீங்குதல்.
5. ஸ்ரீ ஹயக்ரீவர் (குதிரை முகம் கொண்ட விஷ்ணுவின் அம்சம்): கல்வியில் முன்னேற்றம், ஞாபகத்திறன் அதிகரித்தல், வாக்கு வன்மை, புத்தி சாதுர்யம், மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை போன்றவை கிடைக்கும்.
இங்குள்ள மூர்த்திக்கு சிவபெருமானைப்போல் நெற்றியில் மூன்றாவது கண் இருப்பதும், இவரது வலது, இடது கரங்களில் மகாவிஷ்ணுவைப்போல் சங்கு சக்கரம் ஏந்தி இருப்பதும், வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அபூர்வக் கோலமாகும்..
Comments (0)Newest First
காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில்
ஆதிகாமாட்சி அம்மன் கோவில் - அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே, குமரக்கோட்டம் கோவிலையும் ஒட்டினாற்போல், கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு ஆதிபரமேசுவரி, ஆதிகாளிகாம்பாள் என்ற திருநாமங்கள் உண்டு.
தேவர்களுக்கு தொல்லை தந்த அசுரர்களை காளியாக உருவெடுத்து வதம் செய்தாள் அன்னை. அதனால் இத்தலம் காளி கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக அம்பிகையின் சன்னதி முகப்பில் துவாரபாலகியர்தான் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் முன் மண்டபத்தில் துவார பாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவாரபாலகியரும் இருக்கின்றனர்.
கருவறையில் ஆதிகாமாட்சி தென் திசை நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறாள். அவளுடைய நான்கு கரங்களில், மேற் கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தியிருக்கிறாள். வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் கபாலமும் ஏந்தி காட்சி தருகிறாள். காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை இருக்கிறது.
ஆதிகாமாட்சி சன்னதியின் முன் மண்டபத்தில் சக்தி லிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இது ஒரு அபூர்வமான சிவலிங்கம் ஆகும். இதை 'அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமைய, வெள்ளிக்கிழமை காலை 10.30- 12 மணிக்குள் (ராகு காலம்) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் அபிஷேகம் செய்து தீபமேற்றுகின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நைவேத்யம் செய்து வணங்குகின்றனர்.
காஞ்சிபுரம் கனக துர்கா கோவில்
பழ அபிஷேகம் செய்தால் நற்பலன்கள் தரும் கனக துர்கா
காஞ்சிபுரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் ஏனத்தூர் சாலையில் கோனேரி குப்பம் என்ற இடத்தில் கனக துர்கா கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கருவறையில், கனக துர்கா அமர்ந்த கோலத்தில் தனது இடது காலை மகிஷாசுரனின் தலை மீதும் வலது காலைத் தரையில் ஊன்றியும் காட்சித் தருகின்றாள். கனக துர்கையின் வலதுபுறம் சிங்கமும் இடது புறம் பூத கணமும் இருக்கிறார்கள். தன் கைகளில் சங்கு, சக்கரம்,திரிசூலம்,வில், பாசம், அம்பு,வாள், கேடயம் ஏந்தி இருக்கின்றாள்.
கனக துர்கா அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால் சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால்... நினைத்தது நடக்கும். மாம்பழ அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால் பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ கனக துர்கா அம்மன் அருள் புரிவாள் என்பது ஐதீகம்..
நித்ய கல்யாண பெருமாள் கோவில்
ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் திவ்ய தேசம்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில், கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில். இங்கு, லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள். லட்சுமியை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார். ஸ்ரீஆதிவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. தாயார் திருநாமம் கோமளவல்லி.
பெருமாளுக்கு அனுதினமும் திருமணம் நடந்த வரலாறு
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் மோட்சம் அடையவே, அவரைப் போலவே மோட்சம் அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம்,'திருமணம் செய்து கொள்ளாமல் மோட்சம் அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள். காலவ முனிவர் அந்த 360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள். இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
திருஷ்டி தோஷம் விலக்கும் தலம்
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
நாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் வழிபட வேண்டிய தலம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 16 கி.மீ.தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் பழைய சீவரம் தலத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
மூலவர் லட்சுமிநரசிமமர் மேற்குநோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும்,வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார். தாயார் அகோபிலவல்லி.
பக்தரின் வயிற்று வலியை போக்கிய லட்சுமிநரசிமமர்
300 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. பழைய சீவரம் தலத்திற்கு தாிசனம் செய்ய வந்த இந்த அன்பா் புண்ணியநதியான 'ஷீர நதியில்' (பாலாறு) நீராடி எம்பெருமானை வழிபட்டு அன்று இரவு இத்தலத்திலேயே ஓய்வெடுத்தாா் . அவரது கனவில் பிரத்யக்ஷமான எம்பெருமான் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி வழிபாடு செய்ய உடல் நோய் முற்றிலும் குணமாகும் என அருள்பாலித்தாா். நெஞ்சம் நெகிழ்ந்த அன்பா் எம்பெருமானின் திருவுள்ளப்படி இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்ய அவரது உடல் நோய் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் அருட்கடாட் சத்தை எண்ணி வியந்த இந்த அன்பா் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை செய்து மகிழ்ந்தாா். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர்.
நாள் பட்ட நோய்களை விரட்டும் லட்சுமி நரசிம்ம மந்திரம்
நாள்பட்ட வியாதிகளால் அவதியுறும் அன்பா்கள் இத்தலத்தில் வழிபட, நோயின் தாக்கம் உடனடியாகக் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள், மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம். துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில்
குருதோஷம் போக்கும் பரிகாரத் தலம்
காஞ்சீபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் பள்ளுர் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவிந்தவாடி உள்ளது.
இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார். கோவிந்தனாகிய திருமால் சிவனைத் துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் 'கோவிந்தபாடி' என்றழைக்கப்பட்ட இத்தலம், தற்போது 'கோவிந்தவாடி அகரம்' என அழைக்கப்படுகிறது.
இங்கு தனி கருவறையில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியுள்ளார். ஆறடி உயரமுள்ள இந்த தட்சிணாமூர்த்தியின் விழிகள் எவரையும் பார்க்காதது போலவும், இருக்கும் எல்லாரையும் பார்ப்பது போலவும் இரு கோணங்களில் காணப்படுகிறது. வியாக்யான வடிவ தட்சிணாமூர்த்தி இவர். பெருமாளுக்கு தனித்துக் காட்சி தந்தவர் என்பதால் இவருக்குமேல் கல்லால மரம் இல்லாமல் 'கயிலாயம்' போன்ற அமைப்பில் மண்டபம் உள்ளது. சிவனே தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து உபதேசம் செய்தார் என்பதால், இவர் நெற்றியில் மூன்று கண், தலையில் பிறைச்சந்திரன், கங்கா தேவியுடன் காட்சி தருகிறார். வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் சுவடி ஏந்தியும் எழுந்தருளியிருக்கிறார்.
தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோவில் இதுவாகும். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். குருதோஷம் போக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்க்கின்றது.பக்தர்கள் தங்கள் கரங்களாலயே தேங்காயை இரண்டாக உடைத்து அர்ச்சகரிடம் தர, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அர்ச்சனை செய்து தருவது இவ்வாலய சிறப்பு. இங்கு வழிபடுவோருக்கு தடைகள் நீங்கி உடனே திருமணம் கூடி இனிய இல்லறம் அமைகிறது. தோஷங்கள் அகன்று குருபலம் கூடுவதால் பதவி உயர்வு, தொழில் சிறப்பு கிட்டுகின்றன.
விஜயராகவ பெருமாள் கோவில்
வறுத்த பயறு முளைக்க வைக்கும் மரகதவல்லித் தாயாா்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருப்புட்குழி என்னும் திவ்ய தேசம். பெருமாள் திருநாமம் விஜயராகவ பெருமாள்.
திருப்புட்குழி தலத்தின் தாயாா் 'மரகதவல்லி' எனும் திருநாமத்துடன் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாா். 'குழந்தைப் பேறு' இல்லாத அன்பா்களுக்கு மழலை பாக்கியம் அளிப்பதில் மிகச் சிறந்த வரப்ரசாதியாக விளங்குகின்றாா் இந்த அன்னை.
திருப்புட்குழி தலத்தில் உள்ள 'ஜடாயு தீா்த்தத்தில்' குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் நீராடி இரவில் வறுத்த பயறினைத் தங்கள் மடியில் கட்டிக்கொண்டு படுக்க, மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவா்களுக்கு மழலைப் பேறு ஏற்படுவது உறுதி என்ற நம்பிக்கை உள்ளது. இதனாலேயே மரகதவல்லித் தாயாருக்கு 'வறுத்தபயறு முளைக்க வைக்கும் தாயாா்' என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது.