காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில்
ஆதிகாமாட்சி அம்மன் கோவில் - அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே, குமரக்கோட்டம் கோவிலையும் ஒட்டினாற்போல், கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு ஆதிபரமேசுவரி, ஆதிகாளிகாம்பாள் என்ற திருநாமங்கள் உண்டு.
தேவர்களுக்கு தொல்லை தந்த அசுரர்களை காளியாக உருவெடுத்து வதம் செய்தாள் அன்னை. அதனால் இத்தலம் காளி கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக அம்பிகையின் சன்னதி முகப்பில் துவாரபாலகியர்தான் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் முன் மண்டபத்தில் துவார பாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவாரபாலகியரும் இருக்கின்றனர்.
கருவறையில் ஆதிகாமாட்சி தென் திசை நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறாள். அவளுடைய நான்கு கரங்களில், மேற் கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தியிருக்கிறாள். வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் கபாலமும் ஏந்தி காட்சி தருகிறாள். காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை இருக்கிறது.
ஆதிகாமாட்சி சன்னதியின் முன் மண்டபத்தில் சக்தி லிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இது ஒரு அபூர்வமான சிவலிங்கம் ஆகும். இதை 'அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமைய, வெள்ளிக்கிழமை காலை 10.30- 12 மணிக்குள் (ராகு காலம்) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் அபிஷேகம் செய்து தீபமேற்றுகின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நைவேத்யம் செய்து வணங்குகின்றனர்.