ஏழைப் பிள்ளையார் கோவில்
ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்
திருச்சி மலைக்கோட்டை என்றாலே நம் நினைவுக்கு வருவது உச்சிப் பிள்ளையார்தான்.ஆனால் மலைக்கோட்டையை கிரிவலம் வரும்போது, உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர் கோயில்களை தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகக் காட்சி தருபவரே வடக்கு ஆண்டார் தெருவில் வீற்றிருக்கும் ஏழாவது பிள்ளையார். இவரே நாளடைவில் மருவி ஏழைப் பிள்ளையார் என்றானார். ஏழு ஸ்வரங்கள் இணைந்து இவரை வணங்கி அருள் பெற்றன என்றும் அதனால் ஏழிசை விநாயகர் என்ற திருநாமம் ஏற்பட்டு பின்னர் அது ஏழைப் பிள்ளையார் என்று மருவியது என்ற கருத்தும் உண்டு. இவர் ஸப்தபுரீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்
ஏழு இசை ஸ்வரங்களும் தாங்களே சிறந்தவர்கள் என்ற ஆணவத்தால், சிவபூஜையில் அபசுரமாக ஒலித்த காரணத்தால் கலைமகளால் சாபம் பெற்றன . இதனால் அவை ஊமையாகி விட்டன. சாபவிமோசனம் வேண்டி, ஈசனைத் துதிக்க, அவரும் 'பூலோகம் சென்று, தென் கயிலாயம் எனப்படும் திருச்சிராப்பள்ளி மலை மீது அருளும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு, அந்த மலையை வலம் வந்து, அந்த பாதையில் ஏழாவதாக எழுந்தருளி இருக்கும் விநாயகரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். அந்த ஆலயமும் உங்கள் நினைவாக ஏழிசைப் பிள்ளையார் என்ற பெயர் கொண்டு விளங்கும்' என்று அருளினார். அதேபோல் ஏழு ஸ்வரங்களும் இங்கு வந்து கணபதியை பிரதிஷ்டை செய்து, தொழுது சாப விமோசனம் பெற்றன என்று ஆலய புராணம் கூறுகிறது.
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் குணமடைய அருளும் பிள்ளையார்
இசைக் கலைஞர்கள் குரல் வளம் சிறப்பாக, பேச்சுத் திறமை உண்டாக, செல்வச் செழிப்பு உண்டாக, குழந்தைகளுக்கு ஏற்படும் பேச்சு சம்பந்தமான குறைகள் தீர, தொண்டை சம்பந்தமான நோய்கள் நீங்க இங்குள்ள விநாயகரைப் பிரார்த்திக்கிறார்கள். படிப்பில் கவனம் குறைந்த குழந்தைகளும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளும் இவரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
யம பயம் போக்கும் பிள்ளையார்
ஏழைப் பிள்ளையார் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால் இவரை வணங்குபவர்களுக்கு யம பயமோ, யம வாதனையோ இல்லை என்பது ஆன்றோர் கூற்று. திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியிருக்கும் தந்தையான ஈசனையும் தாயான அம்பிகையையும் பார்த்த வண்ணம் இருப்பதால், இந்த கணபதியை வணங்கினால் குடும்ப ஒற்றுமையும் அமைதியும் நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கணபதியை தரிசித்தாலே மலை மீது ஏறி உச்சிப் பிள்ளையாரை தரிசித்த பலனும் கிட்டும் என்கிறார்கள்.
ராஜகணபதி கோவில்
தினமும் ராஜ அலங்காரத்தில் காட்சி தரும் விநாயகர்
சேலம் கடைவீதி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது.400 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டது. மன்னர் காலத்தில் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் 'சைலதேசம்' என்ற பெயர் பெற்ற பகுதிதான் தற்போதைய சேலம். இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவதால் 'ராஜ கணபதி' என அழைக்கப்படுகிறார்.
திருமண வரவேற்ப்பு கோலத்தில் அபூர்வ காட்சி தரும் வல்லப கணபதி
பொதுவாக எல்லா விநாயகர் ஆலயங்களிலும், விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மோற்சவமாக கொண்டாடுவார்கள் ஆனால் இங்கு ஜன உற்சவம் ஆக கொண்டாடப்படுகிறது. ஜன உற்சவம் என்பது, பிறந்த நாள்(சதுர்த்தி) முதற் கொண்டு 12 நாட்கள், கால் மண்டலமாக கொண்டாடப்படுவது.
ஜன உற்சவத்தின் முதலாம் நாள் தங்க கவசம் சாற்றபட்டு ராஜ அலங்கரத்திலும் மற்ற நாட்கள் சிறப்பு அலங்காரத்திலும் காட்சி தருகிறார். 3ம் நாள் உலகில் எங்கும் இல்லாத வகையில் திருமண வரவேற்ப்பில் மணமகன் மணப்பெண் எவ்வாறு காட்சி தருவார்கலோ அவ்வாறு வல்லப கணபதி திருமண கோலத்தில் நின்ற நிலையில் காட்சி தருகிறார். 10ம் நாள் சத்தபரனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பூ சங்கம் வியாபாரிகள் மிகவும் பிரமாண்ட முறையில் சாமி வீதி உலாவிற்கு பூ அலங்காரம் செய்து தருகின்றனர்.
கேட்ட வரம் தரும் ராஜகணபதி
மிகுந்த சக்தி வாய்ந்த கேட்ட வரம் தரும் கலியுக கண் கண்ட தெய்வாமாக விளங்குபவர் ராஜகணபதி. இவருக்கு அபிசேகம் செய்து வஸ்த்திரம் சாத்தி பிரார்த்தனை செய்தால், வேண்டுதல் நிறைவேறுவதாக ஐதீகம்.
ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட் செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இவரை வேண்டலாம்.
சங்குபாணி விநாயகர் கோவில்
சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் சங்குபாணி விநாயகர்
காஞ்சிபுரத்தில் உள்ள 16 விநாயகர்களை சங்குபாணி விநாயகர் மிகவும் முக்கியமானவர் சங்குபாணி விநாயகர். காஞ்சி சங்கராச்சாரியாரான மகா பெரியவர் காஞ்சியிலிருந்து வெளியூருக்கு புறப்படும்போதும் திரும்பி காஞ்சிக்கு வரும் போதும் இத்தலத்து விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்த பின்தான் செல்வார் என்பது இத்தலத்து சிறப்பாகும். இவர் கையில் சங்கு ஏந்தி அருள்பாலிப்பதால் சங்குபாணி விநாயகர் (பாணி என்றால் கை) என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.
சங்கு பாணி விநாயகர் என்று பெயர் வந்த கதை
ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த போது தேவர்கள் வேதங்களை ஆயுதமாகக் கொண்டு அசுரர்களை தாக்கினர். இதனை முறியடிக்க அசுரர்கள், அசுரர்களில் பேராற்றல் படைத்தவனும், சங்கு வடிவில் தொன்றியவனுமான சங்காசுரனை அணுகினார்கள். சங்காசுரனும் தன் தம்பியான கமலாசுரனை அனுப்பி பிரம்மனிடமிருந்து வேதங்களை பறித்துவரச் செய்தான். பின்னர் வேதங்களை கடலுக்கடியில் மறைத்து வைத்து தானே காவல் நின்றான். இதனால் மூவுலகங்களில் வேத நெறி ஒழுக்கங்கள் மறைந்து போயின. படைப்பைத் தொடர இயலாமல் வருந்திய பிரம்மன், சிவனிடம் சரணடைந்தார். சிவன் விநாயகரால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூற, பிரம்மன் விநாயகரை வேண்டினார். விநாயகரும் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று கர்க்க முனிவரின் வேள்வியிலிருந்து தோன்றிய மயில் மீதேறிச் சென்று சங்காசுரனை அழித்தார். வேதங்களையும் மீட்டெடுத்தார். சங்காசுரனை சங்கு வடிவில் தன் கையிலேயே வைத்துக்கொண்டார். அதனாலேயே இவருக்கு சங்குபாணி விநாயகர் என்ற பெயர் வந்தது. மயில் மீதேறி வந்ததால் மயூர விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்து விநாயகரை வழிபட்டால் சகல விதமான பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகம்.
வீரட்டேசுவரர் கோவில்
அவ்வையாரை தன் தும்பிக்கையால் கைலாயத்திற்கு தூக்கிவிட்ட விநாயகர்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கோயிலூர். இறைவன் திருநாமம் வீரட்டேசுவரர். இறைவி பெரியநாயகி. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் பெரிய யானை கணபதி குறித்து தமிழ் மூதாட்டி அவ்வையார் சீதக் களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார்.
சுந்தரர், சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வையார் இந்த தலத்து விநாயகர் பெரிய யானை கணபதியை பூஜை செய்து கொண்டிருந்தார். .தானும் கயிலை செல்ல எண்ணி அவசரம், அவசரமாக பூஜை செய்தார்..உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் கபை எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி அவ்வையார் பூஜை செய்த பிறகு, விநாயகர் விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கைலாயத்தில் சேர்த்துவிட்டார். இவ்விநாயகர், விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.
இடுக்கு பிள்ளையார் கோவில்
தவழ்ந்து சென்று தரிசிக்க வேண்டிய பிள்ளையார்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தை தாண்டியதும், வலது பக்கத்தில் இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது.
இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள், படுத்த நிலையில் ஊர்ந்தபடி உடலை குறுக்கி கொண்டுதான் நுழைந்து வெளியே வரமுடியும். கோயிலில் பின் வாசல் வழியாக ஒருக்களித்துப் படுத்தவாறு உள்ளே நுழைய வேண்டும். மெதுவாக கையை ஊன்றி நகர்ந்து நகர்ந்து முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இதனால் பெண்களுக்கு கர்ப்பபை கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும்.
இந்த இடுக்கு பிள்ளையாருக்குள் இடைக்காட்டு சித்தர் மூன்று யந்திரங்களை பதித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த யந்திரங்கள் தரும் அதிர்வு காரணமாகத்தான் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர.
திருமுருகநாதர் கோவில்
கூப்பிடு விநாயகர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்.
ஒரு சமயம், தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தனது நண்பரான சேர நாட்டை ஆண்ட சேரமான் பெருமான் நாயனாரின் அழைப்பை ஏற்று சேர நாட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி அங்குள்ள கோயில்களை தரிசித்தார். பின்னர் அவர் திருவாரூருக்கு திரும்பும் போது. சேரமான் பெருமான் பல பரிசு பொருட்களைக் கொடுத்து சுந்தரரை சிறந்த முறையில் வழியனுப்பினான்.
தனக்கு வேண்டியதை இறைவனிடம் முறையிட்டு பெறுவது சுந்தரரின் வழக்கம். ஆனால் தற்போது தன்னிடம் வேண்டாமல் சேரமான் பெருமானிடம் பரிசுப் பொருட்களைப் பெற்று வருகிறானே என எண்ணிய சிவபெருமான், பரிசுப் பொருள்களுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வரும் போது, தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி, சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார்.
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சுந்தரரை, விநாயகப் பெருமான் கூப்பிட்டு சிவபெருமான் குடிகொண்டிருந்த கோவிலைச் சுட்டிக் காட்டி உதவினார். கூப்பிட்டு உதவியதால் அங்கிருந்த விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார். இன்றைக்கும் இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இவரை வணங்கிப் பலன் பெறுகின்றனர்.
பொருள் இழந்த கவலையுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி சென்று அங்குள்ள இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று சுந்தரர் சிவனைத் திட்டிப் பதிகம் பாட, அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக தவரலாறு உள்ளது.
வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.
செஞ்சடையப்பர் கோவில்
உயிர் மீட்ட விநாயகர்
கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்பனந்தாள். இங்கு வாழ்ந்தவர் 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயனார். திடீரென ஒரு நாள், இவர் மகன் இறந்து விடவே அவனை தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இத்தல விநாயகர் வழி மறித்து, அங்குள்ள நாககன்னித் தீர்த்தத்தில் நீராடி விட்டு மகனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். அங்கு சென்றதும் இறந்த மகன் உயிர்த்தெழுந்தான். இவ்விநாயகர் இன்றும் 'உயிர் மீட்ட விநாயகர்' என்ற திருநாமத்துடன் திருவீதியின் வாயுமூலையில் எழுந்தருளியுள்ளார்.
கண்ணாயிரநாதர் கோவில்
கடுக்காய் பிள்ளையார்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே தேவாரத் தலமான திருக்காரவாசல் உள்ளது. கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள பிரம்ம தீர்த்தக் கரையில், கடுக்காய் பிள்ளையர் தனிச் சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு கடுக்காய்ப் பிள்ளையார் என்று பெயர் வர ஒரு தனி வரலாறு உள்ளது.
வணிகன் ஒருவன, தன் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் வழியில் இத்தலத்தில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் கடுக்காய இருக்கிறது என்று வேண்டுமென்றெ பொய் சொன்னான். விநாயகர் அவன் பதிலை கேட்டு புன்னகை புரிந்து விட்டு சென்றுவிட்டார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க அவைகளில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம் என்று உணர்ந்த அவன் இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள் புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்..
புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில், இந்திரன், இத்தலத்து சேஷ தீர்த்தத்தில் நீராடி விநாயகரான கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம்.
ஆரண்யேசுரர் கோயில்
நண்டு விநாயகர்
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ.. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோயில். இறைவன் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவி திருநாமம் அகிலாண்ட நாயகி. இத்தலத்திலுள்ள நண்டு விநாயகர் மிகவும் விசேஷமானவர். கந்தர்வன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு விமோசனம் பெற, நண்டு வடிவம் எடுத்து இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூஷிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூஷிக வாகனம் இல்லை.கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில்
சாரமற்ற கரும்பை இனிப்பாக மாற்றிய விநாயகர்
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில். கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. வராஹ அவதாரத்தின்போது பகவான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டே பூமாதேவியை ஹிரண்யாட்சனிடமிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையாருக்கு வராஹப் பிள்ளையார் என்ற பெயரும் உண்டு.
கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாரான இவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
வணிகன் ஒருவன் கட்டுக்கட்டாக கரும்புகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு இந்த ஆலயத்தின் வழியாக சென்று கொண்டிருந்தான். அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்த பிள்ளையார் ஒரு சிறு பாலகனாக வேடம் தரித்து அவனிடம் ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்டார். வணிகன் கரும்பை கொடுக்க மறுத்தான். அங்கிருந்தவர்கள் பாலகன் விநாயகருக்காக வணிகனிடம் பரிந்துரை செய்தார்கள். அவர்களுக்கு பதில் அளித்த வணிகன், இக்கரும்புகள் ஒடித்து உறிஞ்சினால் கரிக்கும். வெல்லமாக மாற்றிய பிறகு தான் இனிக்கும் என்றான்.பாலகன் விநாயகரும் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டார். அந்த சமயத்தில் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்பெல்லாம் சாறற்ற சக்கையாக மாறின. இதைக் கண்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். விநாயகர் கோயிலுக்குள் சென்று தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். அவனை மன்னித்த விநாயகர், மீண்டும் சக்கை கரும்பை இனிப்பாக மாற்றினார். ஆயிரம் கரும்புகளுக்குள்ளும் இனிப்புச் சுவை ஊறியது. அன்று முதல் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று அழைக்கப்பட்டார்,
மீனாட்சி அம்மன் கோவில்
விநாயகப் பெருமானின் நான்காம் படைவீடு மதுரை சித்தி விநாயகர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதி, விநாயகரின் ஆறுபடைவீடுகளில் நான்காவது வீடாகும். மீனாட்சி அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக சித்தி விநாயகர் தரிசனத்தைப் பெறலாம். உருவில் சிறியவராக இருந்தாலும், அருள் தருபவரில் சக்தி மிக்கவர். தன்னை வழிபடுபவர்களுக்கு வாழ்வின் எல்லா சித்திகளையும் (வெற்றி) அருளும் சித்தி விநாயகராக இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும்.
மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் (நரியை பரியாக்கிய லீலை) இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
விநாயகப் பெருமானின் மூன்றாம் படை வீடு
கள்ளவாரணப் பிள்ளையார்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிவன் சந்நிதிக்கு வலதுபுறத்தில், நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி கள்ளவாரணப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். இவரை சமஸ்கிருதத்தில் சோர கணபதி என்பார்கள். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால், இந்தப் பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இத்தலம் விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு, விநாயகர் பூஜை செய்யும் முன்பாகவே அதை தேவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். இதனால் விநாயகப் பெருமான் அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் கள்ள வாரண பிள்ளையார் எனப்படுகிறார். அந்த குடம் லிங்கமாக மாறி அமிர்தகடேஸ்வரர் ஆனது. இதனால் தான் ஆயுள்விருத்தி தொடர்பான யாகங்கள், பூஜைகள் இங்கு செய்வது சிறப்பாகும்.கள்ள வாரணப் பிள்ளையாரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி, சுக வாழ்வினை அளிப்பார்.
பழமலைநாதர் கோயில்
விநாயகப் பெருமானின் இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் ஆழத்து விநாயகர்:
விநாயகரின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக அமைந்திருப்பது, திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில், .கோவில் நுழைவு வாயில் அருகே உள்ள முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக, ஆழத்து விநாயகர் வீற்றிருக்கிறார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மருவி வழங்கப்படுகிறது. 16 படிக்கட்டுகள் இறங்கியே இவரைத் தரிசிக்க முடியும். இவருக்கு தனியாக கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபாடு செய்தபின், படியேறி மேலேறுவது போல் கல்வியுடன் சீரான செல்வமும் தந்து நம் வாழ்வினை மேன்மை அடையச் செய்வார்."
அருணாசலேஸ்வரர் கோவில்
விநாயகப் பெருமானி ன் முதல்படை வீடு
திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர்:
விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர், பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் கிழக்கு இராஜகோபுரத்திற்குள்ளேயே அல்லல்போம் விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த வினைதீர்க்கும் விநாயகர், தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இவர், நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து, நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம்.
மீனாட்சி அம்மன் கோவில்
புலிக்கால் விநாயகர்
விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்ட தோற்றத்தில் தான் நாம் தரிசனம் செய்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் சன்னதிக்கு வெளியே உள்ள துவாரபாலகர்கள் உள்ள மண்டபத்தில் பெண் உருவ பிள்ளையார் இருக்கிறார். இவர் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி இருக்கிறார். யானை முகமும், கால் முதல் இடை வரை புலியின் உருவமும், இடை முதல் கழுத்து வரை பெண் உருவமும் கொண்டிருக்கிறார். இவருக்கு புலிக்கால் பாதங்கள் இருப்பதால், இவரைப் ‘புலிக்கால் விநாயகர்’ என்று அழைக்கின்றனர். வடமொழி நூல்களில் ‘வியாக்ரசக்தி கணபதி’ (வியாக்ரம் என்றால் புலி) என்று இவரைக் குறிப்பிடுகின்றனர். புலிக்கு இணையான சக்தி அளிப்பவர் என்று இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.
காமநாத ஈஸ்வரர் கோவில்
தலையாட்டி விநாயகர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், ஆறகளூர் கிராமத்தில் உள்ள திருகாமநாத ஈஸ்வரன் கோவிலில் 'தலையாட்டி விநாயகர்' தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். கோவில். கெட்டி முதலி என்னும் குறுநிலமன்னன் இக்கோவிலை கட்டும் பணிகளை தொடங்கும் முன்பு விநாயகரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பு, பணியைத் துவங்கினான். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, இவ் விநாயகரிடம் வந்து, கோவில் கட்டும் பணிகள் சரியாக நடந்து இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு இவர், நன்றாகவே கோவிலைக் கட்டியிருக்கிறாய் என சொல்லும் விதமாக தனது தலையை ஆட்டினார். எனவே இவருக்கு 'தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதைக் காணலாம். தொழில், கட்டடப்பணிகளைத் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பதால், இவரைக் காவல் கணபதி என்றும் அழைக்கின்றனர்.
வல்லப விநாயகர் கோவில்
திருமண தடை நீக்கும் விநாயகர்
வல்லப விநாயகர் கோவில், தஞ்சாவூர் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வெள்ளை விநாயகர் கோவில் என்ற பெயர்தான் பிரசித்தம். சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோவிலில் மூலவர் விநாயகருக்குள் வல்லபை தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக நம்பிக்கை. அதேநேரம் உற்சவர் விநாயகர் மனைவி வல்லபை தேவி சகிதமாகக் காட்சி தருகிறார்.வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனிடம் வந்து முறையிட்டனர். அவர் அரக்கியை அடக்க பாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவது போல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. விநாயகர் அவளை அப்படியே துதிக்கையால் தூக்கித் தனது மடியில் அமர்த்திக் கொண்டார. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். விநாயகரையே மணம் புரிந்தாள்.திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரசன்ன விநாயகர் கோவில்
திப்பு சுல்தானிடம் காணிக்கை கேட்ட விநாயகர்
முற்காலத்தில் உடுமலைப்பேட்டை ஊரைச்சுற்றி சக்கர வடிவில் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது. திப்பு சுல்தான் வனமாக இருந்த இப்பகுதியை ஆட்சி செய்தார். அரை வட்ட மலையினால் இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராச்சியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, 'உன் நாட்டை நான் பாது காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாய்' என்றாராம். அதைக் கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் பிரசன்ன விநாயகர் கோவில் அமைத்தார். இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜ கம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப் பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. . ஒவ்வொரு கிருத்திகை யன்றும் விநாயகர் வெள்ளித் தேரில் பவனி வருகிறார்இத்தலத்தில் காசி விசுவநாதர், அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுரநாயகி உடனாய சுவுரிராசப் பெருமாள், அருள்பாலிக்கிறார்கள். இதனால், இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.கல்வியில் சிறக்கவும்,அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் விலகவும், இத்தல விநாயகரை வேண்டிக் கொள்கின்றனர்.
சுவாமிநாதசுவாமி கோயில்
நேத்திர கணபதி
கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை. இத்தலத்தில் நேத்திர கணபதி அருள்பாலிக்கிறார்.
பிறவியில் பார்வை இல்லாத ஒருவர் கொங்கு நாட்டில் இருந்து இத்தலம் வந்து, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நேத்திர கணபதியை வணங்கியபோது பார்வை பெற்றார். பக்தருக்கு பார்வை கொடுத்ததால் இவர் 'கண் கொடுத்த கணபதி' எனப் பெயர் பெற்றார். கண் பார்வை கோளாறு உடையவர்கள்,, இவரை பூரணமாக வழிபட்டால் கண் நோய் குணமாகும் என்று இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
தம்பிக்கு உகந்த விநாயகர்
மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. மருதமலையின் அடிவாரத்திலிருந்து நடை பயணமாகச் செல்லும்போது, பாதையின் தொடக்கத்திலேயே காட்சி தருகிறது தான்தோன்றி விநாயகர் சந்நிதி. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். இவருடைய தோற்றம் ஒரு குட்டி யானை படுத்திருப்பது போன்று இருக்கின்றது. யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவதுவிசேஷம். விநாயகரின் இந்தக் கோலம் காண்பதற்கு அரிதாகும். விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது.
முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, 'தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்."