பிரசன்ன விநாயகர் கோவில்
திப்பு சுல்தானிடம் காணிக்கை கேட்ட விநாயகர்
முற்காலத்தில் உடுமலைப்பேட்டை ஊரைச்சுற்றி சக்கர வடிவில் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது.
திப்பு சுல்தான் வனமாக இருந்த இப்பகுதியை ஆட்சி செய்தார். அரை வட்ட மலையினால் இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராச்சியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, 'உன் நாட்டை நான் பாது காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாய்' என்றாராம். அதைக் கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் பிரசன்ன விநாயகர் கோவில் அமைத்தார்.
இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜ கம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப் பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. . ஒவ்வொரு கிருத்திகை யன்றும் விநாயகர் வெள்ளித் தேரில் பவனி வருகிறார்
இத்தலத்தில் காசி விசுவநாதர், அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுரநாயகி உடனாய சுவுரிராசப் பெருமாள், அருள்பாலிக்கிறார்கள். இதனால், இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.
கல்வியில் சிறக்கவும்,அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் விலகவும், இத்தல விநாயகரை வேண்டிக் கொள்கின்றனர்.