ஏழைப் பிள்ளையார் கோவில்
ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்
திருச்சி மலைக்கோட்டை என்றாலே நம் நினைவுக்கு வருவது உச்சிப் பிள்ளையார்தான்.ஆனால் மலைக்கோட்டையை கிரிவலம் வரும்போது, உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர் கோயில்களை தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகக் காட்சி தருபவரே வடக்கு ஆண்டார் தெருவில் வீற்றிருக்கும் ஏழாவது பிள்ளையார். இவரே நாளடைவில் மருவி ஏழைப் பிள்ளையார் என்றானார். ஏழு ஸ்வரங்கள் இணைந்து இவரை வணங்கி அருள் பெற்றன என்றும் அதனால் ஏழிசை விநாயகர் என்ற திருநாமம் ஏற்பட்டு பின்னர் அது ஏழைப் பிள்ளையார் என்று மருவியது என்ற கருத்தும் உண்டு. இவர் ஸப்தபுரீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
ஏழு இசை ஸ்வரங்களும் தாங்களே சிறந்தவர்கள் என்ற ஆணவத்தால், சிவபூஜையில் அபசுரமாக ஒலித்த காரணத்தால் கலைமகளால் சாபம் பெற்றன . இதனால் அவை ஊமையாகி விட்டன. சாபவிமோசனம் வேண்டி, ஈசனைத் துதிக்க, அவரும் 'பூலோகம் சென்று, தென் கயிலாயம் எனப்படும் திருச்சிராப்பள்ளி மலை மீது அருளும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு, அந்த மலையை வலம் வந்து, அந்த பாதையில் ஏழாவதாக எழுந்தருளி இருக்கும் விநாயகரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். அந்த ஆலயமும் உங்கள் நினைவாக ஏழிசைப் பிள்ளையார் என்ற பெயர் கொண்டு விளங்கும்' என்று அருளினார். அதேபோல் ஏழு ஸ்வரங்களும் இங்கு வந்து கணபதியை பிரதிஷ்டை செய்து, தொழுது சாப விமோசனம் பெற்றன என்று ஆலய புராணம் கூறுகிறது.
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் குணமடைய அருளும் பிள்ளையார்
இசைக் கலைஞர்கள் குரல் வளம் சிறப்பாக, பேச்சுத் திறமை உண்டாக, செல்வச் செழிப்பு உண்டாக, குழந்தைகளுக்கு ஏற்படும் பேச்சு சம்பந்தமான குறைகள் தீர, தொண்டை சம்பந்தமான நோய்கள் நீங்க இங்குள்ள விநாயகரைப் பிரார்த்திக்கிறார்கள். படிப்பில் கவனம் குறைந்த குழந்தைகளும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளும் இவரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
யம பயம் போக்கும் பிள்ளையார்
ஏழைப் பிள்ளையார் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால் இவரை வணங்குபவர்களுக்கு யம பயமோ, யம வாதனையோ இல்லை என்பது ஆன்றோர் கூற்று. திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியிருக்கும் தந்தையான ஈசனையும் தாயான அம்பிகையையும் பார்த்த வண்ணம் இருப்பதால், இந்த கணபதியை வணங்கினால் குடும்ப ஒற்றுமையும் அமைதியும் நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கணபதியை தரிசித்தாலே மலை மீது ஏறி உச்சிப் பிள்ளையாரை தரிசித்த பலனும் கிட்டும் என்கிறார்கள்.