இராஜபதி கைலாசநாதர் கோவில்

லிங்க வடிவில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள்

தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் தலம்

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூர் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இராஜபதி கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள, கேதுத் தலமான கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இத்தலம், தென் காளஹஸ்தி என்று போற்றப்படுகின்றது. இத்தலத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டபோது அவர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று தனது சீடருக்கு உபாயம் சொன்னார். உரோமச முனிவர் 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அந்த மலர்களை தொடர்ந்து சென்றார். அந்த தாமரை மலர்கள் ஒதுங்கிய தலங்களில் வழிபட்டு, உரோமச முனிவர் முக்தி அடைந்தார். அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உரோமச முனிவர் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தென்திருப்பேரை 8. ராஜாதிபதி 9. சேர்ந்தபூமங்கலம் ஆகிய கோவில்கள், நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நவகிரகங்கள் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இந்த லிங்க வடிவில் இருக்கும் நவகிரகங்களுக்கு பக்தர்கள் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

Previous
Previous

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

Next
Next

பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில்