திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
பைரவர், காலபைரவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் அபூர்வ காட்சி
விஷக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் விபூதி பிரசாதம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்.
இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது. இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர் அல்லது காலபைரவர் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில், கிழக்கு பிரகாரத்தில் பைரவரும், காலபைரவரும் சேர்ந்து எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். காலபைரவர் தனது திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். இந்த இரட்டை பைரவர்களுக்கு அர்த்த ஜாம பூஜை செய்த பிறகு தரப்படும் விபூதி பிரசாதமானது, விஷக்கடியால் ஏற்படும் துன்பங்களை நிவர்த்தி செய்கிறது. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
தகவல், படங்கள் உதவி: திரு. பாலசுப்ரமணியன் குருக்கள், ஆலய அர்ச்சகர்