
இராஜபதி கைலாசநாதர் கோவில்
லிங்க வடிவில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள்
தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் தலம்
திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூர் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இராஜபதி கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள, கேதுத் தலமான கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இத்தலம், தென் காளஹஸ்தி என்று போற்றப்படுகின்றது. இத்தலத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.
அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டபோது அவர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று தனது சீடருக்கு உபாயம் சொன்னார். உரோமச முனிவர் 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அந்த மலர்களை தொடர்ந்து சென்றார். அந்த தாமரை மலர்கள் ஒதுங்கிய தலங்களில் வழிபட்டு, உரோமச முனிவர் முக்தி அடைந்தார். அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உரோமச முனிவர் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தென்திருப்பேரை 8. ராஜாதிபதி 9. சேர்ந்தபூமங்கலம் ஆகிய கோவில்கள், நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நவகிரகங்கள் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இந்த லிங்க வடிவில் இருக்கும் நவகிரகங்களுக்கு பக்தர்கள் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்
கல்யாண நவக்கிரக தலம் - நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
திருநெல்வேலியில் திருச்செந்தூர் சாலையில், 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குலசேகர நாயகி.
ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில், கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் என்னும் மன்னன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மலையைச் சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார். ஊருக்காகக் குளங்களை வெட்டினார். மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர். மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. இதற்கிடையில் குலசேகரன்பட்டினத்தைத் ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டுச் செல்லும்போது, அம்பிகை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனைக் கண்டு வணங்கி அங்கு ஒரு அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தார். குலசேகர நாதர் பிரதிஷ்டை செய்த அன்னைக்குக் குலசேகர நாயகி என்று பெயர். இதற்கிடையில் இந்த பகுதியில் முனிவர் பெருமக்களும், ரிஷிகளும் வந்திருந்து மார்த்தாண்டேஸ்வரரையும், இக்கோவிலுக்கு அருகில் உள்ள வகுளகிரி என்ற மலைமீது எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதியையும் வணங்கி நின்றனர். அப்பொழுது நவக்கிரகங்கள் அங்கே தம்பதி சகிதமாக காட்சியளித்தனர். அதைக் கண்டு முனிவர்களும், ரிஷிகளும் தங்களுக்குக் காட்சி தந்ததைப் போல மக்களுக்கும் தம்பதி சகிதமாக காட்சி தர வேண்டும் என்று வேண்டி நின்றனர். அதன்பின் இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சகிதமாக காட்சி தருகின்றனர். அதனால் இத்தலம், கல்யாண நவக்கிரக தலம் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.
இக்கோயிலில் நவகிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.
பிரார்த்தனை
கணவன் மனைவியோடு இங்கு வருபவர்களுக்குக் கேட்ட வரங்கள் கிடைக்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் நீராடி விட்டு இந்த சிவனை வணங்கி அதன்பின் வகுளகிரி வெங்கடாசலபதியை வணங்கினால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும், குழந்தை பேறு கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், அடைபடாத கடன்கள் அடைபடும். தீராத வழக்குகள் நமக்குச் சாதகமாகும்.