நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
சனி பகவானின் வீரியத்தை குறைக்கும் மகாலட்சுமி பார்வை
சனி பகவானுக்கு எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைக்கப்படும் வித்தியாசமான நடைமுறை
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாக்ஷி அம்மன்.
பொதுவாக சிவன் கோவில்களில் சனி பகவான் கிழக்கு அல்லது மேற்கு முகமாகத்தான் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில், இறைவன் காயாரோகணேசுவரர் சன்னதியின் ஈசானிய மூலையில், சனி பகவான் தெற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கின்றது.
அயோத்தி மகாராஜா தசரத சக்கரவர்த்தி சூரிய குல வம்சத்தை சேர்ந்தவர். பொதுவாக சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் மற்ற சமயங்களை விட அதிவேகமாக சஞ்சரிப்பார். இதற்கு ரோகிணி சகட பேதம் என்று பெயர். அப்படி அவர் ரோகினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, நாட்டில் பல சேதங்கள் விளையும். இதனை ஜோதிட வல்லுநர்கள் மூலம் அறிந்த தசரத சக்கரவர்த்தி, சனிபகவானை தடுக்க போருக்கு ஆயத்தம் ஆனார். போருக்கு கிளம்பும் முன் குலதெய்வமான சூரிய பகவானை வழிபட சென்றார். சூரிய பகவான், தசரத சக்கரவர்த்தியிடம் சனி பகவான் தன் கடமையை செய்கிறார். கடமையைச் செய்பவரை தடுக்கக் கூடாது. அதனால் நீ நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில் சென்று இதற்கான பரிகார பூஜையை செய் என்றார்.
தசரத சக்கரவர்த்தி, நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவிலுக்கு வந்து வழிபட்டார். இறைவன் அவரிடம் தனது சன்னதியின் ஈசானிய மூலையில் சனி பகவானை தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்து பரிகார பூஜையை நடத்து என்றார். இத்தலத்தில் நவகிரக மண்டபத்தில், நவக்கிரகங்கள் அனைத்தும் மேற்கு நோக்கி, ( தசரத சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த சனி பகவானை நோக்கி), எழுந்தருளி உள்ளனர். சனி பகவானை நீ வணங்கும் போது, இக்கோவிலில் வாயு மூலையில் உள்ள மகாலட்சுமி பார்வை உன் மேல் பட்டு சனி தோஷம் உன்னை அண்டாத வாறு பாதுகாக்கும் என்றும் கூறினார். மேலும் இறைவனே பரிகார பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று தசரத சக்கரவர்த்திக்கு உபதேசித்தார். முதல் சனிக்கிழமையிலிருந்து அடுத்த சனிக்கிழமை வரை உபவாசம் இருந்து, சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், சனியினால் ஏற்படும் பாதிப்புகள் விலகும் என்றார். தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறு பரிகார பூஜை செய்து சனி பகவானை வழிபட்டார்.
தசரதரின் பூஜையால் மகிழ்ச்சி அடைந்த சனி பகவான், அவரது ராஜ்யத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் தனது பாதையை மாற்றி செல்வதாக கூறினார். தசரத சக்கரவர்த்தி சனி பகவானிடம், இங்கு வந்து வழிபடுபவர்கள் எல்லாருக்கும் எந்த பாதிப்பும் தரக்கூடாது என்று வேண்டினார். அதற்கு சனி பகவானும், இங்கு வந்து தனக்கு பரிகார பூஜை செய்பவர்களுக்கு ஏழரை சனி, கண்டக சனி, பாத சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி முதலியவைகளால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்று உத்தரவாதம் அளித்தார்.
இத்தலத்தில் சனி பகவானை வழிபடும் போது மகாலட்சுமி பார்வை நம் மீது விழுவது ஒரு தனிச்சிறப்பு ஆகும். மேலும் வழக்கமாக எள்ளு சாதம் படைத்து வழிபடும் சனி பகவானுக்கு எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைப்பது வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறை ஆகும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
ஏழு அடி உயர திருமேனி உடைய அபூர்வ மகாலட்சுமி (04.04.2025)
மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும்,சங்க நிதியும், பதும நிதியும் இருக்கும் அரிய காட்சி
தகவல், படம் உதவி : திரு. மணி குருக்கள், ஆலய அர்ச்சகர்
நீலாயதாக்ஷி அம்மன்
மகாலட்சுமியுடன் இரண்டு ஐராவதங்கள், சங்க நிதி, பதும நிதி
தசரத சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த சனி பகவான்