கும்பகோணம் ராமசாமி கோவில்

காண்போரை அசரவைக்கும் ஆளுயர சிற்பங்கள்

தென்னக அயோத்தி என சிறப்பு பெற்ற ராமசாமி கோவில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. மூலவர் ராமரும், சீதையும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்ருகனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்கிறார்.

இக்கோவில், கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இக்கோவில் மகா மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் இருக்கும் சிற்பங்கள் காண்போரை பிரம்மிக்க வைக்கும். இந்த மகாமண்டபத்தில் காணப்படும் சிற்பங்கள் ஆளுயர சிற்பங்களாக உள்ளன. இந்த மண்டபத்தில் உள்ள 64 தூண்களிலும் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் நம்மை அசரடிக்கின்றன. இப்போது போல் எவ்வித தொழில்நுட்ப வசதிகளோ, இயந்திரங்களோ இல்லாத போதும் இங்கு செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் கலை நுணுக்கமும், வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனை உலகிற்கு பறைசாற்றுகின்றது. பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாத பெருமையை கொண்டுள்ளது இக்கோவில் சிற்பங்கள்.

இந்த மண்டபத்து தூண்களில் திருமாலின் பல அவதாரங்கள், மீனாட்சி கல்யாணம், இராமர், சீதை, லட்சுமணர், அனுமார், சுக்ரீவன் பட்டாபிஷேகம், ரதி, மன்மதன் போன்ற நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

இராமாயண ஓவியம்

இக்கோவிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில், 219 சுவர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்து கொள்ளலாம். இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும்.

சுருங்கச் சொன்னால், கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக இந்த கோவிலும், இதில் உள்ள கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்களும், இராமாயண ஓவியங்ககளும் வெகுவாக கவர்கின்றது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

தென்னக அயோத்தி - கும்பகோணம் ராமசாமி கோவில் (22.01.2024)

சீதையும் ராமரும் திருமண கோலத்தில் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து இருக்கும் அபூர்வ காட்சி

https://www.alayathuligal.com/blog/8k9gjta3w29h6jpfp96ssmllfxhgtw?rq

வாசகர்களின் கவனத்திற்கு

இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.

 
Previous
Previous

இலங்குடி பெரிய ஆண்டவர் கோவில்

Next
Next

ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில்