வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்
கலை அழகு மிளிரும் சிற்பங்கள்
வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ளது ஜலகண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. 16-ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னரால் கட்டப்பட்டது இக்கோவில்.
நம் முன்னோர்கள் பக்தியை செலுத்துவதற்காக, ஆண்டவனின் இருப்பிடமாக அமைத்த கோவில்கள், கலைகளையும் சேர்த்து அளிக்கும் கலைக்கூடங்களாகவும் விளங்கின. சிற்பங்களையும் ஓவியங்களையும், சேர்த்து அளிக்கும் கலைக் கோவில்களாயின. அத்தகைய கலைக் கோவில்களில் ஒன்றுதான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்.
இக்கோவிலுக்குள்ளே நுழைந்தால், வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோவிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கல்யாண மண்டபத்தில் வித்தியாசமான பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மண்டபத்தில் வித்தியாசமான பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் வெளித்தூண்களில் இரண்டு ஆள் உயரத்திற்கான யாழி, குதிரை மீதமர்ந்த வீரர்களின் சிலைகள் நம் கண்களையும், கருத்தையும் கவர்கின்றன.
வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர் வரலாறு, வில்லுடன் இராமர், ஆஞ்சநேயர், நரசிம்மரின் பாதம் அருகில் வணங்கியபடி கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், மகரிஷி யோகாசனம் செய்யும் சிற்பம் என கண்ணைக் கவரும் பலவிதமான சிற்பங்கள் இருக்கின்றன. மண்டபத்தின் மத்தியில் அழகான மேடையொன்று ஆமையின் முதுகில் இருப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளது. அந்த மேடைக்கருகில் உள்ள தூண்களில் சாளரம் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ளன. மண்டபத்தின் கூரையில் மூன்று சுற்றுகளாக கிளிகள் தேங்காயை கொத்த அமர்ந்திருப்பது போல அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த மண்டபத்தின் அழகில் லயித்த வெள்ளையர் தளபதி ஒருவர். தூண்களோடு பெயர்த்துச் செல்ல விரும்பினார் இதற்காக வெளிநாட்டிலிருந்த கப்பலையும் வரவழைத்தார் ஆனால் அக்கப்பல் வழியிலேயே விபத்தைச் சந்தித்ததால் இத்திட்டத்தைக் கைவிட்டார்.
குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்
சங்கீத வித்வான்கள் அவசியம் காண வேண்டிய கோவில்
எங்கும் காண முடியாத இசைக் கல்வெட்டு
புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்.
குடைவரைக் கோவில் அமைப்பைச் சேர்ந்த இக்கோவிலில், எங்கும் காண முடியாத இசையின் வடிவத்தை விளக்கும் வண்ணம் அமைந்த இசைக் கல்வெட்டு ஒரு தனி சிறப்பாகும். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இது கருதப்படுகிறது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில், இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன.
சங்கீதக் கலை வித்தகர்கள் நிச்சயம் காணவேண்டிய, இசைத் தகவல்களைக் கொண்ட கல்வெட்டு இது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில், இக்கல்வெட்டு அமைந்துள்ளது. தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன.
இந்தக் கல்வெட்டு 38 கிடையாக அமைந்த இசைக் குறியீடுகளைக் கொண்ட வரிகளைக் கொண்டது. இடமிருந்து வலமாக வாசிக்கப்படக்கூடிய ஒவ்வொரு வரியிலும் 64 எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்கள் 16 குழுக்களாக அமையும் வகையில் ஒவ்வொரு நான்கு எழுத்துக்களுக்கும் அடுத்து ஒரு சிறு இடைவெளி விடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு வரிகள் கிடைக் கோடுகளால் 7 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு முதல் ஏழு வரையான வரிகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் ஏழு இராகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரம மகேஸ்வரன் என்ற மன்னன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ராகங்களைப் பாடியுள்ளதாக வரலாறு கூறுகிறது.இசைக் குறியீடுகளுக்கு 34 வெவ்வேறு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் கொண்ட திருப்பரங்குன்றம் கோவில்
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். முருகன் தெய்வானையை திருமணம் புரிந்த தலம் இது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஆன்மீக பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பு தலமாகும். இக்கோவிலில் கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
கோவில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ளது ஆஸ்தான மண்டபம். இம்மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட சிற்பங்களுடன், 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது..
மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன.
பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு குதிரைகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இந்த குதிரைகளின் உடலில் காணப்படும் அணிகலன்கள் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு அழகிய, தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன.
இறைவன் சத்தியகிரீசுவரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன.
குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்
சிற்பக்கலையின் பொக்கிஷமாக திகழும் குடுமியான்மலை
புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்.
10-ம் நூற்றாண்டில் திருநலக்குன்றம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிகாநல்லூர் எனவும், தற்போது குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
நம் தமிழகத்தில், சிற்பத்திலும், கட்டிடக்கலையாலும் சிறப்பு பெற்ற கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் உலகப் பிரசித்தி பெற்ற கோவில் குடுமியான் மலை. இன்றும் உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆய்வுமாணவர்கள் குடுமியான் மலையில் காணப்படும் சிற்பங்களை ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர்.
குடுமியான்மலை ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நுழைந்தால், மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றுவிதமாக அமைந்துள்ள ஏராளமான சிற்பங்களை நாம் காணலாம். இவற்றில் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், ஆஞ்சநேயர், விபீடணன், வாலி, சுக்ரீவன் சிலைகள் காணப்படுகின்றன்.
இக்கோவில் வசந்த மண்டபத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளும், அற்புதமான அமைப்புகளுடனும் காணப்படுகின்றன.
இங்குள்ள சிற்பங்களின் முகத்தில் காணப்படும் தெய்வீக அழகு, அவைகளின் கைவிரல்கள், கால்விரல்கள் போன்றவற்றில் அணிந்துள்ள அணிமணிகளின் நுணுக்கமான வேலைப்பாடு, அங்கங்களின் துல்லியமான அம்சங்கள், ஆபரணங்களின் சிறந்த அம்சங்கள், மேலும் அவை வெளிப்படுத்தும் காவியக்காட்சிகள், அனைத்திலும் பெருகியுள்ள பேரெழில் நம்மை மீண்டும், மீண்டும் வியந்து போற்றும் வண்ணம் உள்ளது.
சங்கர நாராயணர் சிலையில் ஒருபாதியில் சிவபெருமானையும், மறுபாதியில் நாராயணைனையும் அவரவர்களுக்குரிய அடையாளங்களையும் சிற்பி வேறுபடுத்தி காட்டியிருப்பது மிகுந்த நுணுக்கமான வேலையாகும்.
ஊர்த்துவ தாண்டவர் சிற்பத்தில் அவர்முகத்தில் ஆவேச பாவத்தையும், கோதண்ட ராமர் சிற்பத்தில் அவர் முகத்தில் சாந்த பாவத்தையும் வேறுபடுத்தி காட்டியுள்ள இச்சிற்பங்களின் பெருமைக்கு ஈடுஇணையே இல்லை.
மோகினி அவதாரம் குறித்த சிலையும், அதற்கு எதிர்புறம் பெண்சிலையும் உயரத்திற்கு தக்கவாறு மாறுபட்ட சாமுத்திரிகா லட்சணங்களை சித்தரிப்பது சிந்திக்க வேண்டிய செயலாகும்.
ரதி சிற்பத்தில் அவள் கையில் அணிந்திருக்கக்கூடிய மோதிரங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் விதமாக அழகுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரதியின் நெற்றிசுட்டு, காதணி, கழுத்தில் உள்ள நகைகள் உடலை மறைத்துள்ள மெல்லிய துணி போன்றவை மிகமிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.
பிரகாரத்தில் சுற்றி வரும்போது, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் ஒரு முகத்துடன் கூடிய இரு உடல் அமைப்பு. காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இதை செதுக்கிய சிற்பியின் கற்பனைத்திறன், நம்மை பிரமிக்க வைக்கின்றது.
இக்கோவில் சிற்பங்கள் அனைத்தும் மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் உள்ளன. சுருங்கச் சொன்னால் இக்கோவில், சிற்பக்கலையின் பொக்கிஷமாக திகழ்கின்றது. சிற்பக்கலை ரசிகர்களுக்கு, இக்கோவில் தெவிட்டாக விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
தேரினை ஆமை இழுத்துச் செல்லும் வடிவமைப்பு - வியக்க வைக்கும் கலைப்படைப்பு
சுழலும் தேங்காய்
தனித்தனியாக சுற்றும் வளையங்களால் இணைக்கப்பட்ட கிளிகள்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில், மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.
இக்கோவிலில் உள்ள எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களில், பல்வேறு விதமான அழகிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடு உள்ள சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் எழுந்தருளில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் செங்கோட்டு வேலவர். அவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு, அந்தத் தேரினை ஆமை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும், நாம் காண முடியாத வியக்க வைக்கும் கலை படைப்பாகும்.
இந்த செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்திலும் மற்ற மண்டபங்களிலும் அமைந்துள்ள எல்லா தூண்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்திய சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு விளக்குகின்றன. ஒவ்வொவொரு சிற்பத்தின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்று நம்மை எண்ண வைக்கிறது. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோவிலின் மண்டப மேற்கூரையில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும், நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த சிற்பத்தில், மேலிருந்து தொங்கும் சங்கிலிகள்,தொங்கும் தாமரைப்பூ,அதன் இதழ்களில் அமர்ந்து,மகரந்தத்தை ருசிக்கும் எட்டு கிளிகள், கிளிகளுக்கு காவலாக வெளியில் நான்கு பாம்புகள் ஆகிய எல்லாமே ஒரே கல்லால் வடிக்கப்பட்டது என்று அறியும் போது நம்மை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் செல்லும்.
இந்த கோவிலின் சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது. சிற்பக் கலையின் உன்னதத்தை உணர்த்தும் எண்ணற்ற நம் கோவில்களில், இக்கோவில் தனக்கென்று தனி இடத்தை பெற்று திதழ்கின்றது
ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
பார்ப்பவர்களை வியக்க வைக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் விக்கிரகம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். .ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.
இத்தலத்தில் தேவலோகப் பசுவான காமதேனுவின் குழந்தைகளான நந்தினி, பட்டி என்கிற பசுக்களுக்கு, ஸ்ரீகிருஷ்ண பகவான் காளிங்க நர்த்தனத்தை மீண்டும் ஆடிக் காண்பித்தார். இந்த லீலையை ஸ்ரீ நாரத முனிவர் கண்ணாரக் கண்டுள்ளார். ஸ்ரீநாரதர் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்கி, இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கெல்லாம் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. இந்த விக்கிரகத்தின் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணன் நடனமாடும் கோலத்தில் அமைந்துள்ளது. இவ் விக்கிரகத்தில், கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை. கிருஷ்ணரின் இடது பாதத்திற்கும், காளிங்கனின் சிரசுக்கும் நூல் விட்டு எடுக்கும் அளவு இடைவெளி உள்ளது. அவரது வலது கால் தூக்கியபடி, நர்த்தனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும்படியாக, காளிங்கனின் வாலை பிடித்தபடி காட்சி தருகிறார். இது இரண்டு உருவங்களுக்கிடையில் உள்ள ஒரே இணைப்பாகும், மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை. மேலும் கட்டைவிரல் -பாம்பின் வாலுக்கும் இடையே உள்ள இணைப்பானது மட்டுமே, முழு சிலைக்கும், சமநிலையை வழங்குகிறது (இந்த சிலையானது இரண்டு பேர் சேர்ந்தால் தான் நகர்த்தக் கூடிய எடை உள்ளது) . காளிங்கத்துடனான போரின் விளைவாக கிருஷ்ணரின் காலில் வடுக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.
விக்கிரகத்தின் சிறப்பை உணர்த்த மத்திய அரசு வெளியிட்ட தபால் தலை
இந்த விக்கிரகத்தில், பாம்பின் வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை. இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்த்த, மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது..
தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்
கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் இயற்றிய தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765) வாழ்ந்த தல்ம் இது. ‘அலைபாயுதே கண்ணா', 'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த' போன்ற, அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் மிகவும் பிரசித்தம். இத்தலத்து கிருஷ்ணனே, வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின், ஆபோகி ராகத்தில் அமைந்த 'குரு பாதாரவிந்தம் கோமளமு' எனும் பாடலைச் சொல்கிறார்கள். அதில் அவர் சொல்லும் கருத்து: 'நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை' என்கிறார்.
ஸ்ரீநாரத் முனிவரின் மறு அவதாரமாக ஸ்ரீவேங்கடகவி கருதப்படுகிறார். இவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
பிரார்த்தனை
ரோகினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. ராகு, கேது, சர்ப்ப தோஷம் நீங்குவதற்கான பரிகார தலம். இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் தங்கள் கலைகளில் அபிவிருத்தி பெற்று பிரகாசிக்க இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவிழா
ஸ்ரீகிருஷ்ணரின் ஜயந்தித் திருவிழா இத்தலத்தில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் அன்று நடைபெறும்.
திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்
நவநாரி குஞ்சரம் - மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு
யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள்
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் சிறிய சிற்பங்கள் முதல் பெரிய ஆளுயர சிற்பங்கள் வரை மிக அற்புதமாகவும், நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்தக் கோவில் சிற்பத் தொகுப்பில், ஒரு அடி உயரமுள்ள ஒரு சிறிய சிற்பம் தான் நவநாரி குஞ்சரம்.
நவம் என்றால் ஒன்பது. நாரி என்றால் பெண். குஞ்சரம் என்றால் யானை. சிற்பக் கலையின் ஒரு வகையாக, யானை வடிவத்தில் தெரியும் இந்த சிற்பமானது, ஒன்பது பெண்களின் உருவத்தை தன்னுள் கொண்டுள்ளது. சற்று தொலைவில் இருந்து பார்க்கும் போது நமக்கு யானையின் உருவம் மட்டும் தான் தெரியும். ஆனால் அதன் அருகில் சென்று பார்க்கும் போது ஒன்பது பெண்கள் தங்கள் உடலையும், அங்கங்களையும் பல்வேறு கோணங்களில் வளைத்து, யானையின் உருவத்திற்குள் அடக்கி இருப்பது நமக்கு தெரிய வரும். மேலும் அந்த ஒன்பது பெண்களின் முகங்களில், நவரசங்களான அன்பு, சிரிப்பு, கருணை, வீரம், பயம், வெறுப்பு, ஆச்சரியம், கோபம், அமைதி என்னும் குணங்களை பிரதிபலிக்கும்படி செதுக்கி உள்ளது நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.
இதேபோல், பறவைகளைக் கொண்டு அமைந்த யானை உருவ சிற்பமும் இக்கோவிலில் அமைந்துள்ளது.
இந்த நவநாரி குஞ்சரம் சிற்பம் திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவில், திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோவில் ஆகிய இரண்டு தலங்களில் இருக்கின்றது.
பஞ்ச நாரி துரகம் - குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள்
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும். நாரி என்றால் பெண். துரகம் என்றால் குதிரை. ஐந்து பெண்களின் உருவத்தை ஒரு குதிரையின் உடலமைப்பில் அடக்கி இருப்பதுதான் பஞ்ச நாரி துரகம்.
சிற்பியின் கற்பனைத் திறனும், மிக நுணுக்கமான வேலைப்பாடும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பெற்றிருந்த கலை திறமையை நமக்கு இந்த கோவில் சிற்பங்கள் உணர்த்துகின்றன. கலையுணர்வு மிளிரும் இத்தகைய படைப்புகளைக் நாம் காணும் பொழுது நம்மை பெருமிதம் அடையச் செய்யும்.
மரக்காணம் பூமீசுவரர்கோவில்
இரண்டு துவாரபாலகியருடனும், ஆறு கரங்களுடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை
சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இறைவன் திருநாமம் பூமீசுவரர். இத்தலத்து இறைவியின் திருநாமம் கிரிஜாம்பிகை. இக்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்’ என்று குறிப்பிடுகின்றன. 'எயில்' என்பதும் 'சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு 'எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டது. இக்கோவிலில் வழக்கத்திற்கு மாறாக, அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மன், நான்கு கைகளுடன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் இரண்டு துவாரபாலகிகள் உடன் இருக்க, தலைக்கு மேல் குடையுடனும், ஆறு கரங்களுடனும் மகிஷாசுரன் மேல் நின்ற கோலத்தில் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
அனுமனை விழுங்கிய முதலை சிற்பம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷமாகவும் விளங்குகின்றது. இக்கோவிலில் இருக்கும் மண்டபத் தூண்கள், சிற்பங்கள், வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள் நம் முன்னோர்கள் சிற்பக் கலையில் அடைந்திருந்த மகோன்னத நிலையையும், பெருமையையும் உணர்த்துகின்றது.
இக்கோவில் சேசராயர் மண்டபத்தில் பல அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்மண்டபத்து தூண் ஒன்றில், முதலை ஒன்று அனுமனை விழுங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சுவாரசியமான, ஒரு ராமாயண நிகழ்ச்சி உள்ளது
ராமாயணத்தில், ராவணன் மகனான இந்திரஜித்துக்கும், லட்சுமணனுக்கும் இடையே போர் நடந்தது இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் வட்சுமணன் மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவரான சுசேனர் இமயமலையில் விளையும் சஞ்சீவினி என்னும் மூலிகையை கொண்டு வந்தால் குணப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். உடனடியாக இமயமலைக்கு விரைந்தார் அனுமன். இதையறிந்த ராவணன், தடைகளை ஏற்படுத்த அவற்றை அனுமன் முறியடித்தார். இமயமலைக்கு காலநேமி என்னும் அசுரனை அனுப்பினான் இந்திரஜித். காலநேமி மாரீசனின் மகன் ஆவார். சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அனுமன் அடைந்த போது, அங்கு முனிவர் வடிவில் நின்றிருந்தான் காலநேமி. முனிவரைக் கண்ட அனுமன் வணங்க, அருகில் இருந்த குளத்தைக் காட்டி, இதில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். உன் எண்ணம் ஈடேறும் என்றான். அனுமன் நீராடிய போது காலநேமியால் ஏவப்பட்ட மாய முதலை அவரை விழுங்கியது. அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு அனுமன் வெளியேறினார். அத்த முதலை ஒரு தேவனாக மாறியது. "என் பெயர் தான்யமாகி. சாபத்தால் முதலையாக குளத்தில் இருந்தேன். உங்களால் சாப விமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன். முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து, காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன், அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் சேசராயர் மண்டபத்தில் உள்ள தாணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
திருமண்டங்குடி திருபுவனேசுவரர் கோவில்
பெண்களின் வீரத்தை போற்றும் அபூர்வ சிற்பங்கள்
கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் திருபுவனேசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலம் இது.
பொதுவாக பல பழமையான கோவில்களில், ஆண்களின் வீரச் செயலை போற்றும் வகையிலான சிற்பங்கள் ஏராளமாக இருப்பதை காணலாம். ஆனால், இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோமுகத்தில் ( அபிஷேகத் தீர்த்தம் வெளி வரும் பாதையில்) வேறு எந்த கோவிலிலும் இல்லாத, பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான காட்சிகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு உள்ள சிற்பங்களில பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள். வனப்பகுதியில் நடக்கும் வீரமிக்க நிகழ்ச்சிகளை விவரிக்கும் வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. யாளி (பழங்கால விலங்கு) ஒன்று யானையை துரத்த, அந்த யானையோ ஒரு குதிரையை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அக்குதிரைமீது வீரன் ஒருவன் அமர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளை வேட்டையாட வந்த ஒருவர் மரத்தின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே தீரமிக்க ஒரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப் பன்றி ஒன்றை கழுத்துப் பகுதியில் குத்தி வீழ்த்தும் காட்சி மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நளின உடல் கொண்ட பெண்களின் பரத நாட்டிய அடவுகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இக்கோமுகத்தில் உள்ளன. சங்கநாதம் ஒலிக்கும் சிவ கணங்கள் சிற்பங்கள் வரிசையாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பெண்களின் கலை நயத்தையும், வீரத்தையும் அக்காலத்தில் எந்த அளவுக்கு போற்றியிருந்தால் ஒரு சிவாலயத்தின் கருவறை கோமுகியில், மக்கள் வழிபடுமிடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது.
கோட்டைமேடு பத்ரகாளி கோவில்
சிங்கத்தின் வாயில் எலுமிச்சை வடிவில் சுழலும் கல் உடைய அபூர்வ சிற்பம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - திருச்செங்கோடு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோட்டைமேடு பத்ரகாளி கோவில். 1500 ஆண்டுகள் பழமையான கோவில் இது. இந்த பத்ரகாளியம்மனுக்கு எலுமிச்சை மாலை அல்லது எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா பிரச்னைகளையும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டுகொண்டிருந்த நேரம் அது. ஒரு சமயம் மழை இல்லாமல் ஏரிகள் எல்லாம் வற்றிப் போய் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்துள்ளனர். ஒரு நாள் மன்னன் பாரியின் கனவில் தோன்றி, நான் பத்ரகாளி என்றும், நான் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை காக்க ஏரியின் வலது கரையில் மேடான பாறையின் மேல் குடிகொண்டுள்ளதாகவும், இனி ஏரியில் எப்போதும் தண்ணீர் வற்றாது எனவும் கூறி, எனக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை கட்டி உடனடியாக குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாள், காளி. அகிலத்தையும் காக்கும் நான் மேடான பாறையில் இருப்பேன், இதனால் என்னை மீறி எந்த தவறும் நடக்காது எனவும், நான் தினமும் ஏரியில் குளிக்க வேண்டும் எனவும், அதனால் என்னை தினமும் ஏரிக்கு அழைத்து சென்று குளிப்பாட்ட வேண்டும் எனவும் கூறியிருக்கிறாள்.
மன்னன் உடனடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்ட போது எலுமிச்சை பழம் இருந்துள்ளதை கண்டு, கனவில் வந்தது காளிதான் என்று மக்களிடம் கூறி, உடனடியாக பாறையின் மீது ஒரு ஆலயத்தை கட்டியுள்ளார். இதனால் கருவறையானது பாறை மீது காளி அமர்ந்தவாறு மேடான பகுதியில் அமைந்துள்ளது. எனவே கோட்டை போன்ற வடிவமைப்புடன் மேட்டில் குடிகொண்டுள்ளதால், கோட்டை மேடு பத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறாள். மேலும், இந்த பகுதியில் பலவன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி, தொந்தரவு செய்து வந்துள்ளான். மக்கள் பத்ரகாளியிடம் முறையிட்டு அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டியுள்ளனர். இதனால் அரக்கனை, பல்வேறு ஆயுதங்களை கொண்டு வதம் செய்து அழித்ததால் பத்ரகாளி எட்டு கரங்களுடன், அரக்கனை உக்கிரமாக வதம் செய்யும் காட்சியுடன், கருவறையில் வீற்றிருக்கிறாள்.
காளியின் காவலான சிங்கமானது, அடிக்கடி வனவிலங்குகளையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனை தடுக்க மக்கள் வேண்டியதை ஏற்று, சிங்கத்தின் சீற்றத்தை குறைக்க அதன் வாயில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்ததாகவும், அதனை குறிக்கும் விதமாக ஆலயத்தில் பத்ரகாளியை பார்த்தவாறு பெரிய சிங்கமானது காட்சியளிக்கிறது. சிங்கத்தின் வாயில் பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும் எலுமிச்சை வடிவில், கல் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது மிகவும் அபூர்வமானது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சிலையை காண முடியாது. இது அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக விளங்குகின்றது.
மேலும் இந்த சிங்கத்தின் மீது தினமும் இரவு வேளையில் ஊரை காக்க சலங்கை அணிந்து வலம் வந்ததாகவும், அதனை மக்கள் பார்த்துள்ளதாகவும் பரவசமாக கூறுகின்றனர். இது தவிர காளியின் இரு புறத்திலும், பூதகணங்கள் எனப்படும் இரு காவல் தெய்வங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கப்பட்ட சிலைகளாகும். யானைகள் அடிக்கடி காளியை வணங்கியதாகவும், அதனை குறிக்கும் வகையில் ஆலயத்தின் இருபுறங்களிலும் யானை சிலைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் கோதண்டராமசாமி கோவில்
தேர் போன்ற வடிவில் கருவறை அமைந்திருக்கும் கோவில்
அரியலூர் நகரில் அமைந்துள்ளது மிகப்பழமையான கோதண்டராமசாமி கோவில். இந்த நகரத்தின் பெயர், அரி (விஷ்ணு)+இல் (உறைவிடம்)+ஊர் (பகுதி) . அதாவது, விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்று பொருள். இந்தப் பெயரே, பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
இந்தக் கோவிலில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஒரே பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் எழுந்தருளி இருக்கும் கருவறையானது தேர் போன்ற வடிவில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
பெருமாளின் தசாவதார கோலங்கள்
இந்தக் கோவில் தசாவதார மண்டபத்தில் காட்சி அளிக்கும் பெருமாளின் தசாவதாரம் கோலங்கள் நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். ஒவ்வொரு தசாவதார கோலமும் ஆறரை அடி உயரத்தில், தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தசாவதாரம் மண்டபத்தில், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர்,
இரண்யவத நரசிம்மர், பிரகலாத நரசிம்மர் என்று நான்கு வித தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.
பிரார்த்தனை
இந்த கோவிலில் உள்ள கோதண்ட ராமரை தரிசித்தால் நம் வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமணம் கை கூடாதவர்கள் வழிபட்டால் விரைவில் வரன் கைகூடி வரும்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்
ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் பூவராகப் பெருமாள். தாயார் திருநாமம் அம்புஜவல்லி. பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் தோன்றிய எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களில் ஒன்று இத்தலம்.
பல நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இது. இக்கோவிலில் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட புருஷசூக்த மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம் உள்ளது. சிற்ப அழகு மிளிரும் நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. 72 பரதநாட்டிய நிலைகளுக்கான சிற்பங்கள் நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தின் பிற இடங்களில் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் பெண்களின் நீளமாகப் பின்னலிட்ட ஜடையும், ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் போன்ற அலங்கார அணிகலன்களின் அழகும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில்
மிக அற்புதமான கலைநயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட வெங்கனூர் கோவில்
பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள வெங்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் வருடங்கள் பழமையான விருத்தாச்சலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். இந்தக் கோவில் திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதில் அழகு என்ற வரிசையில் வெங்கனூர் கோவில் வேலை அழகு என்ற பெருமைக்குரியதாகும். சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோவிலில் 'கற்றளி' எனப்படும் கல்லால் ஆன 33 அம்சங்களுடன் செதுக்கப்பட்ட உயிரோட்டமான சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்திருக்கின்றன.இத்தலத்தில் உள்ள தூண்களை தட்டினால், வெண்கலத்தை தட்டுவது போல் ஒலி வந்தது. எனவே வெண்கல ஊர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் வெங்கனூர் என்று மருவியது.
இந்த கோவில் மற்ற கோவில்களைப் போல பூச்சு முறை இல்லாமல் கருங்கற்களை பொறுத்து முறையில், வடிவமைத்து கட்டப்பட்டுள்ள கோவிலாகும். இது, அக்காலத்தின் கட்டடக் கலையில் கையாளப்பட்ட நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது. இக்கோவில் கருவறை ஓம் வடிவ அமைப்பில் இருப்பது தனிச்சிறப்பாகும். கருவறை மண்டபமும், அதனைச் சுற்றியுள்ள சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள பல்லி, ஓணான், குரங்கு, கிளி உள்ளிட்ட உயிரினங்களின் சிற்பங்களும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள 2 சிற்பங்கள் எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் நான்கு விலங்குகளின் தோற்றமும், நான்கு முகங்களாகவும் தோற்றமளிக்கின்றன. இந்தக் கோவிலில் உள்ள தூண்களை விரல்களால் தட்டினால் விதவிதமான சங்கீத ஓசைகள் வருவதோடு, கோவிலினுள் கல்களால் ஆன சங்கிலி வளையம், சுழல்தாமரை போன்ற சிற்பங்களும் காண்போரைக் கவரும் விதமாக உள்ளது.
கோலார் கோலாரம்மன் கோவில்
சிற்ப கருவூலமாக விளங்கும் கோலாரம்மன் கோவில்
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கோலாரில் அமைந்துள்ளது, கோலாரம்மன் கோவில். கோலார் மக்கள் பார்வதி தேவியை, கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர். பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்று பெயர். இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்து பாதிப்பு ஏற்படும்போது, இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.
ராஜராஜ சோழன் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டிய கோவில்
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் கோலார் பகுதியை கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 - 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள், குவளாலநாடு (கோலார்), நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. கோலார் நகரை, சோழர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட நாட்கள் வைத்திருந்தமைக்கு பிரதான காரணமே அது தங்க பூமி என்பதாலேயே என்கின்றனர் சில வரலாற்று அறிஞர்கள். கோலார் நகருக்கு பெருமை சேர்பதாக இருப்பது முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் கட்டிய உலகப் புகழ்பெற்ற, இந்த கோலார் அம்மன் கோவிலாகும்.
இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டுமே சப்த மாதர்களுக்காக முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்டவை. குறிப்பாக போரில் வெற்றியை பெற்றுத்தரும் கடவுள்களான சப்த மாதர்களுக்காக (சாமுண்டி) இக்கோவில் கட்டப்பட்டதாகும்.
மிரள வைக்கும் போர்க்களக் காட்சியின் சிற்பத் தொகுப்பு
கோலார் அம்மன் கோவில் ஒரு சிறந்த சிற்ப கருவூலமாக விளங்குகிறது. குறிப்பாக இக்கோவிலின் முதல் பிரகாரத்தின் நுழைவாயிலின் வடக்கு பகுதி மண்டபத்தில் சுமார் ஐந்து அடி, உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட கற்பலகையில் இரு நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நேரடிக் காட்சி அப்படியே சிற்பமாக்கப் பட்டுள்ளது. சிற்ப தொகுப்பின் மேற்புறம் அரசன் போர்க்களம் புறப்படும் காட்சியும். பிறகு போர்களத்தில் தங்கியிருக்கும் காட்சியில் ஆடல் மகளிர் நடனம்புரியும் காட்சியும் உள்ளன. மறுநாள் போர் ஆரம்பம். இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் போர்களக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் யானை ஒன்று போர்க்களத்தில் எதிரி படையினரை நோக்கி வேகமாக தாக்குதல் நடத்த ஓடிவரும் காட்சி பார்ப்பவரை மிரளவைக்கிறது. அதைத் தொடர்ந்து குதிரை வீரனின் வாள் வீச்சில் எதிரி வீரன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு தலை வேறு உடல் வேறாக கிடக்கும் காட்சியில் போரின் உக்கிரத்தை காண முடிகிறது.
மேலும் குதிரையின் காலடியில் வீரன் ஒருவனின் உடல் இரண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி பார்ப்பவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சிற்பத் தொகுப்பின் கீழ் பகுதியில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கழுகு கொத்தி தின்னுவது போன்றும், நரியொன்று இறந்த வீரனொருவனின் உடலில் இருந்து சதைகளை பிய்த்து தின்னுவது போன்ற சிற்பங்களில் போரின் கொடூரத்தை உணரமுடிகிறது.
மொத்தத்தில் இந்த சிற்பத்தை பார்ப்பவர்களுக்கு அந்தகால போர்களத்திற்கு நம்மை கூட்டி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ஒரு போர்க் களத்தின் நேரடி காட்சியைத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ள முதல் சிற்பத் தொகுப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட, உயிரோட்டமுள்ள அபூர்வ சிற்பங்கள்
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
தாயார் சன்னதியின் முன் உள்ள மண்டபத்தில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக்கலைக் கூடமாக திகழ்கின்றது. இங்குள்ள தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, மன்மதன், கார்த்தவீரியார்ஜூனன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூணில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். சிற்பங்களில் தெரியும் நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம், இமைகள் என்று ஒவ்வொரு அங்கமும் சிற்பங்களில் மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால் இந்த சிற்பங்கள் கல்லினால் செதுக்கப்பட்ட வையா அல்லது உயிரோட்டமுள்ள உருவங்களா என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும். இரண்டு இசைத் தூண்களையும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்
தாயின் வயிற்றில், குழந்தையின் வளர்ச்சியை விளக்கும் வியப்பூட்டும் சிற்பங்கள்
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவில் தூண்களில். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, வெவ்வேறு காலகட்டங்களில், அதாவது குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இந்த விதமான நிலையில் (Position) இருக்கும் என்பதை சிற்பங்களாக தூணில் வடித்து வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஸ்கேன் கருவி போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்து, அதை சிற்பத்திலும் வடித்து வைத்திருப்பது நம் முன்னோர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் துறையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை விளக்குகின்றது. நம் முன்னோர்கள் கட்டிடக்கலை, சிற்பக்கலை, அறிவியல் துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் அடைந்திருந்த வளர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
திருமணத் தடை நீக்கும் ரதி மன்மத பூஜை
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
திருமண தடை நீக்கும் தலங்களில் மிகவும் சிறப்பான தனித்துவம் கொண்ட தலமாக தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்குள்ள தாயார் சன்னதி மண்டபத்தில், ரதி மன்மதன் சிலைகள் உள்ளன. திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு பிரதி வியாழக்கிழமைதோறும் ரதி மன்மதன் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்கான சங்கல்பம், காலை முதல் நண்பகல் வரை, சூடிக் கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாள் உற்சவர் திருமேனி முன் செய்யப்படுகிறது. ரதி, மன்மதன் ஆகிய இருவரின் கைகளிலும் ஐந்து விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமை பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆண்கள் தங்களின் திருமண தடை நீங்குவதற்கு ரதி தேவிக்கும், பெண்கள் தங்களின் திருமண தடை நீங்குவதற்கு மன்மதனுக்கும் பூஜை செய்கிறார்கள்.
ஆண்களுக்கு ரதி பூஜை
திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு ஐந்து-வியாழக்கிழமைகள் தொடர்ந்து.முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவி, பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும் . அடுத்து வரும் வாரங்களில் ஒரு மாலை கொண்டு சென்றால் போதும்.
பெண்களுக்கு மன்மதன் பூஜை
திருமணம் தாமதமாகும் பெண்கள் மன்மதனுக்கு மேற்கண்ட பூஜையை செய்ய வேண்டும். திருமணமாகத கன்னி பெண்கள் மன்மதனுக்கு ஐந்து வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும்.
திருமணமானவுடன் புதுமணத் தம்பதியர் வந்து பெருமாளை வணங்க வேண்டும். இக்கோவிலில் நடைபெறும் திருமண தடை நீக்கும் ரதி, மன்மதன் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. பல வெளி ஊர்களில் இருந்தும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் வந்து இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
சிற்பத்தின் ஒரு காதிலிருந்து மறு காது வரை மிக நுண்ணிய துளை அமைந்திருக்கும் அதிசயம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கிறார்கள். இந்து மதத்தின் முக்கியமான தெய்வங்கள் அனைவருக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கர் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் விரிவாக்கங்கள் செய்யப்பட்டன. மதுரை, ஆவுடையார் கோவில், திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம் கோவில்களைப் போல, இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் மிகவும் நுணுக்கமும், அற்புத அழகும் வாய்ந்தவை.
இக்கோவிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை
1. கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
2. இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
3. திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
4. வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
5. பல இறை வடிவ சிற்பங்களை கொண்ட சித்திர சபை.
கோவிலின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு இசைத்தூண்கள் ஆகும். 1035 நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட நடன மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்து தூண்களில் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள பாவை விளக்கு சிற்பங்கள் உள்ளன. இப்பாவை விளக்கு சிற்பங்களில் தான் அந்த காலங்களில்,இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்ற பயன்படுத்தப்பட்டது.
முருகன் சன்னதி மண்டபத்தில் உள்ள தூணில் அமைந்துள்ள தர்மராஜா சிற்பம், அதி அற்புதமான அழகுடனும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடனும், ஆச்சரியமும் பிரமிப்பும் அடைய வைக்கும் நம் முன்னோர்களின் விஞ்ஞான தொழில்நுட்பத் திறனையும் விளக்குவதாக அமைகின்றது. இச்சிற்பத்தில் நம்மை வியக்க வைக்கும் அம்சம் என்னவென்றால், ஒரு 0.5 மி.மீ. விட்டமுள்ள சிறிய குச்சியை ஒரு காதின் வழியே நுழைத்தால் அது மறு காது வழியாக வெளியே வருகின்றது. இவ்வளவு மிகச் சிறிய துளையை, சிலையின் முக அகலத்திற்கு ( சுமார் ஒரு அடி) எந்த உபகரணத்தை கொண்டு அமைத்தார்கள் என்பது இன்றுவரை விடை கிடைக்காத கேள்வியாக உள்ளது.
சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் கோவில்
இசை ஒலி எழுப்பும் அபூர்வமான இசைக்குதிரைகள்
நம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலாயன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய கோவில்களில் ஏழு ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் இருக்கின்றன. இந்த இசைத் தூண்கள் நம் முன்னோர்களின் சிற்பத் திறனையும், அறிவியல் திறனையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றன. இந்த வரிசையில், இந்த இசைத் தூண் வேலைப்பாடுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல, விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள வானிலை கண்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் இசைக் குதிரைகள் விளங்குகின்றன.
உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டரில் சேந்தமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இன்றைக்கு சிறு கிராமமாக இருக்கும் இந்த இடம் கி.பி. 12-13 நூற்றாண்டில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனின் தலை நகராக விளங்கியது. சோழ மன்னனையே கைது செய்து 6 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்த இந்த குறு நில மன்னன், தன்னுடைய தலை நகரில் கோட்டை போன்ற அமைப்பில் பெரிய மதில் சுவர் சூழ "வானிலை கண்டீஸ்வரர்" என்ற பிரம்மாண்டமான கோயிலை அமைத்தான், கோட்டை சுவரின் நான்கு புறங்களிலும் காவலாளிகள் நிற்க பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கும் இந்த கோயிலை மத்திய தொல்லியல் துறை பழைய முறைப்படி பல வருடங்களாக அழகாக புதுப்பித்து வருகின்றது.
அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நான்கு புறங்களிலும் அழகிய படிகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில் மிக்க கருங்கல் மண்டபத்தையும் கட்டியுள்ளனர். ஒரு குதிரைக்கும் மறு குதிரைக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தாலே அன்று இது எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகின்றது. இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.
பெரிய சதுரவடிவ கருங்கல் பீடம், அதன் மீத தாமரை இதழ்களைக் கொண்ட மூன்றடுக்கு பீடம், அதன்மீது ஏறி அமர்ந்து தாவிச் செல்லும் கோலத்தில் குதிரை அமைந்துள்ளது. குதிரையின் கால்களில் அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள், முதுகில் பட்டாடை விரித்த கோலம்; அதிலும் வேலைப்பாடுகள் கொண்ட தோற்றத்தில் மிளிர்கின்றது. கழுத்தில் மாலை, அழகிய மணிகளைக்கோர்த்த மணிமாலைகள், தலைக்கு அணிவரிசை, வாயில் கடிவாளம் என மொத்த குதிரையின் வடிவமும், கலைநயம் கொண்டு விளங்குகின்றது. சீறிப்பாய்வது போல் நின்றுகொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல வித ஒலிகளை எழுப்புகின்றது. இப்படி இசை ஒலி எழுப்பும் சிற்பங்களை மற்ற தலங்களில், நாம் காண்பது அரிது.