நத்தம் வாலீஸ்வரர் கோவில்
தலை சடை விரித்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
இக்கோவிலில் இறைவன் கருவறையின் சுற்று சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தன் தலை சடையை விரித்த கோலத்தில் காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். இதற்கு பின்னணியில் உள்ள சம்பவம் என்னவென்றால், தேவர்கள் சிவபெருமானிடம் தாட்சாயணியின் மறைவுக்குப் பின் தங்களுக்கு சக்தி இல்லையே என்று வினவியபோது, சிவபெருமான் என்னிடம் கங்கா சக்தி உள்ளது என்று சடா முடியிலிருந்து கங்கையை விடுவித்து, கங்கையின் பிரவாக சக்தியைக் தேவர்களுக்கு காட்டினார். அந்தக் கோலத்தில் தான் நாம் அவரை இக்கோவிலில் தரிசிக்கிறோம்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
சூரசம்ஹாரம் நடைபெறாத முருகன் தலம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணி ஆகும். முருகப் பெருமான் சூரனை வதம் செய்தப் பின்னர் சினம் தணிந்து இத் தலத்தில் வந்து அமர்ந்ததால் 'திருத்தணிகை' என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி 'திருத்தணி' ஆனது.
முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும்.
ஆனால் திருத்தணி,முருகன், சினம் தணிந்து ஓய்வெடுத்த தலம் என்பதால் இங்கு சூரசம்ஹார பெருவிழா நடைபெறுவதில்லை. மேலும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் வேல் இல்லாமல் வஜ்ராயுதம் தாங்கியிருக்கிற திருக்கோலத்தை காணமுடியும். திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்தன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.
திருச்செந்தூரின் இலை விபூதி போன்று திருத்தணியிலும் சிறப்பு பிரசாதம் ஒன்று உண்டு. இரண்டாம் பிராகாரத்தில் யாக சாலைக்கு எதிரில் உள்ள சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை 'ஸ்ரீபாதரேணு' என்கிறார்கள்.
நத்தம் வாலீஸ்வரர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த அம்பிகை
காலில் பாதச்சலங்கையுடன், பரத நாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் அம்பிகையின் அபூர்வ தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
அம்பிகை ஆனந்தவல்லிக்கு, நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அம்பிகை அபய, வரத முத்திரையுடனும், கைகளில் அங்குசம் பாசம் ஏந்தி, காலில் பாதச்சலங்கையுடன், பரதநாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
இத்தலத்தில் சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில், அதாவது லிங்கோத்பவர் காலத்தில், சிவபெருமானும் பார்வதி தேவியும் நாட்டியமாடியதாக ஐதீகம், அதனால் தான் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்று பெயர்.
அன்னப்பாவாடை நெய்க்குள தரிசனம்
தை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று, அம்மனுக்கு அன்னப் பாவாடை வைபவம் நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் முதலிய அன்ன வகைகள், பட்சணங்கள், பழவகைகள் ஆகியவை அம்பிகைக்கு முன் படையலிடப்படும். சர்க்கரை பொங்கல் முதலில் அன்ன வகைகள் பாத்தி போல் கட்டப்பட்டு அதில் நெய் ஊற்றப்படும். நெய்க்குளத்தில் அம்மன் உருவம் தோற்றமளிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
ராகு, கேது தோஷ நிவர்த்தி தலம்
ஒரு சமயம் அம்பிகைக்கு ஏற்பட்ட சர்ப்ப தோஷத்தை, இத்தலத்து இறைவன் வாலீசுவரர் நிவர்த்தி செய்தார். அதனால் இத்தலம் ராகு கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் முதலியவற்றுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
பிரார்த்தனை
கலைகளில் சிறந்து விளங்க இந்த அம்பிகை அருள் புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு தேனாபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், கலைகளில் உன்னத நிலையை அடைய முடியும்.
நெடியமலை செங்கல்வராய சுவாமி கோவில்
திருத்தணிகை செல்வதற்கு முன்பு வணங்க வேண்டிய திருப்புகழ் தலம்
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள நெடியம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது செங்கல்வராய சுவாமி கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 600 படிக்கட்டுகள் உள்ளன. யானை படுத்துக் கொண்டிருப்பது போல் இந்த மலை உள்ளதால், யானை மலை, கஜகிரி என்ற பெயர்களும், நெடியமலைக்கு உள்ளன. .அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது..
முருகனை இத்தலத்தில், இந்திரன் 'செங்கல்வம்' என்னும் நீலோத்பல மலரால் வழிபட்டமையால், முருகன் 'செங்கல்வராய சுவாமி' என்று போற்றப்படுகிறார். இங்கே முருகப்பெருமான் ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு இருபுறமும் தேவிமார் சூழ, கடிஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
முருகப்பெருமான் வேடர்கள் அறியாமல் வள்ளியைக் கவர்ந்து வர, வேடர்கள் அவருடன் போருக்கு வர, முருகன் போர் புரிந்து சினம் அடங்காமல் நின்ற இடம் தான் இத்தலம். அவரது சினத்திற்கு இம்மலை தாங்காமல் ஆடவே, அருகிலுள்ள தணிகைமலையில் சென்று கோபம் தணிந்தாராம்.. முருகப்பெருமான் திருத்தணிக்கு செல்வதற்கு முன்பு சில காலம் இங்கு தங்கியிருந்ததால், பக்தர்கள் முதலில் செங்கல்வராய சுவாமியை வணங்கிவிட்டு பின்னர் திருத்தணிக்கு செல்லலாம்.
பிரார்த்தனை
கல்வித்துறை சார்ந்தவர்களும், வாகனத் துறையில் இருப்பவர்களும் வழிபட நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்
கருணை மழை பொழியும் தேவி கருமாரியம்மன்
சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது, மிகப் பிரசித்தி பெற்ற அம்மன் தலமான திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில். ஆதிகாலத்தில் வேப்பமரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் 'வேலங்காடு' என்று அழைக்கப்பட்டது இந்த இடம். நாளடைவில் திருவேற்காடு ஆகியது. கரிய மழை மேகம் போல் அம்மன் தன் அருளை வாரி வழங்குவதால் கருமாரி என்று பெயர் பெற்றாள். சகலமுமாய் இருப்பவள் தேவி கருமாரியம்மன். எனவேதான் அவளை,
'காற்றாகி, கனலாகி கடலாகினாய், கருவாகி, உயிராகி உடலாகினாய்
நேற்றாகி, இன்றாகி நாளாகினாய் நிலமாகிப் பயிராகி உயிராகினாய்...'
என்று நெகிழ்கிறது கருமாரியம்மன் பதிகம்.
கருவறையில், கருமாரியம்மன் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், தங்க விமானத்தின் கீழ் பராசக்தி அம்சமாக விளங்குகிறாள்.
இவளுக்குப் பின்புறம் ஓர் அம்பிகை சிலை உள்ளது. இவள் அக்னி ஜ்வாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி பத்ம பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். அம்மனின் சந்நிதியில், ஒரு விளக்கு அணையாமல் எரிகிறது. இதைப் 'பதி விளக்கு' என்கிறார்கள். அம்மனையும், இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் எந்தக் குறையும் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒருமுறை ஈசன் தேவர்களின் துன்பம் நீக்கச் சென்றபோது, இறைவன் அம்பிகையிடம் 'நீயே சிவனும், சக்தியுமாகி ஐந்தொழில்களையும் செய்யவேண்டும்!' என்று கூற, அம்பிகை சம்மதித்து அகத்தியரிடம் தான் ஆட்சி செய்யத் தகுந்த இடம் கேட்க, அகத்தியர் 'வேற்காட்டை'க் காட்டுகிறார். மாயாசக்தியான அவளிடம் மகாவிஷ்ணு 'நீ பாம்பு உருவாக புற்றில் இருந்து அருளாட்சி செய். கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவாய்!' என்று கூற அன்னை கருமாரியாக கருநாக வடிவம் எடுத்து புற்றில் அமர்ந்தாள். அந்தப் புற்று இன்றும் திருக்கோயில் அருகே உள்ளது. ஈசனிடமிருந்து திருநீற்றைப் பெற்றே அம்பிகை ஐந்தொழில்களையும் செய்தாள். அதுவே தீர்த்தமாக உருமாறி விட்டது.
பிரார்த்தனை
சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக இங்கு வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. கடன், வியாதி, வழக்கு, திருமணத்தடை, குழந்தையின்மை என்று அனைத்துவித பிரச்சனைகளுக்கும் பக்தர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், தேர் இழுத்தல், முடி காணிக்கை, குங்கும் அபிஷேகம், உப்பு காணிக்கை என்று பலவித பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகிறது.
ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்
திருமணத்தடை நீங்க சீதா தேவிக்கு மஞ்சள் கிழங்கு மாலை
சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் தொடர்வண்டி பாதையில், கடம்பத்தூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது ராமர் கோவில் என்னும் ஊர். இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாசரதி கல்யாணராமர் அமைந்துள்ளது.
ராமரும் அவரது வானரப் படையினரும் சீதையைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தலத்துக்கு வந்தனர். அப்போது குஸஸ்தலை ஆற்றங்கரை ஓரத்தில் வானரப்படைகளுக்காக உணவு சமைத்திட மடம் அமைத்து சமைக்கும் பணி நடந்தது. அந்த மடம் அமைந்த இடம் மடத்து குப்பம் என்று இன்று அழைக்கப்படுகிறது. சீதையைத் தேடுவது குறித்து சற்றுத் தொலைவில் கவலையுடன் ராமர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவ்வாறு ராமர் நின்ற இடமே இன்று ஊராகி, ராமர் கோவில் என வழங்கப்படுகிறது.
ராமாவதாரம் நிறைவடைந்து கிருஷ்ணர் அவதரிக்க வேண்டிய காலம் வந்தது. விசுவாமித்திரர் மற்றும் சப்தரிஷிகள் ராமனின் திருக்கல்யாணக் காட்சியைக் காண விரும்பினர். அதற்காக குஸஸ்தலை ஆற்றின் கரையில் ஒரு பெரிய யாக வேள்வி நடத்தினர். ராமனும் சீதையும் திருமணக் கோலத்தில் காட்சிதர, அருகில் லட்சுமணன் துணை நிற்க, அனுமன் கைபொத்தி வணங்க, அங்கிருந்த அனைவருக்கும் காட்சி தந்தனர். பின்னர் உலக மக்கள் அனைவரும் வழிபட வேண்டி, இத்தலத்திற்கு அருகில் பர்ணசாலையில் தவம் செய்து கொண்டிருந்த சாலிஹோத்ர மஹரிஷி, ஸ்ரீலட்சுமணன் உடனுறை சீதாதேவி சமேத தாசரதி கல்யாணராமர் பிரதிஷ்டை செய்து கோவிலை உருவாக்கினார். முன்பு ராமன் நின்ற அந்த இடம், திருமணக்கோல ராமன் காட்சி தந்த அந்த கிராமமே,பின்பு ராமன் கோவில் என்று ஆனது.
கருவறையில் மூலவராக, ஸ்ரீ ராமர், ஸ்ரீலட்சுமணன், சீதாபிராட்டி, அனுமன் ஆகியோர் உள்ளனர். ஆனால் மற்ற ராமர் கோவில்களில் உள்ளது போல் இல்லாமல், இங்கே சீதை ராமனுக்கு வலது புறத்திலும், லட்சுமணன் இடது புறத்திலும், அனுமன் ராமருக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கிறார். வலது புறத்தில் சீதையுடன் கல்யாணக்கோலத்தில் நின்றதால் தந்தை பெயருடன் சேர்த்து தாசரதி கல்யாணராமன் சந்நிதி என்று அழைக்கிறனர்.
பிரார்த்தனை
இக்கோவிலில் ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வோருக்கு திருமணம் கைகூடும். திருமணத் தடை, குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இங்கு சீதைக்கு மஞ்சள் கிழங்கு மாலை சாற்றி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கருவறையில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமிக்கு செந்தூரக்காப்பு பிராத்தனை செய்து கொண்டால், வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில்
சுவாமி கருவறை விமானத்தின் மேல் அறுபத்து மூவர் நாயன்மார்கள் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
சென்னைக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில்,பூந்தமல்லியை அடுத்து உள்ள திருமழிசையில் அமைந்துள்ளது ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குளிர்ந்த நாயகி. கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார்.
அறுபத்து மூவர் நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சிவனடியார்கள் ஆவர் . நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை நமக்கு தரும் பாடமாக உள்ளது.
பல சிவாலயங்களில்அறுபத்து மூவர் நாயன்மார்களின் சிலைகள், இறைவன் கருவறையின் சுற்றுப்பிரகாரத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த அறுபத்து மூவர் நாயன்மார்கள் இறைவனோடு எழுந்தருளும் வீதி உலா அந்தந்த கோவில் பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும். இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், 63 நாயன்மார்களும், இறைவன் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் இடம் பெறவில்லை. அதற்கு மாறாக சுவாமி கருவறை விமானத்தின் மேல் அவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி 63 நாயன்மார்களும் சுவாமி கருவறை விமானத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் காட்சியானது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்
முருகப்பெருமானின் முன்பு சிவலிங்கம் இருக்கும் திருப்புகழ் தலம்
சென்னையில் பிரசித்தி பெற்ற திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை . நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலம் இது. சிவலிங்கத்தின் பின்னால் ஈசனும் அம்பாளும் திருமணக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
முருகப் பெருமான், ஈசனை வழிபட்டு தனது தவறுக்குப் பரிகாரம் தேடிய தலம்
முருகப் பெருமான், பாலமுருகனாகத் திருவிளையாடிய போது, திருக்கயிலாயத்துக்குச் சென்ற பிரம்மாவிடம், பிரணவப் பொருள் கேட்க, அதற்கு பிரம்மா விடை அளிக்காததால், அவரை சிறையில் இட்டார். அவரைச் சிறையிலிட்ட குற்றத்துக்காக முருகப் பெருமான் சிவனாரை வழிபட முடிவு செய்தார். இத்தலத்திற்கு வந்து வேதபுரீஸ்வரை வழிபட்டார். பின்னர், அவருக்கு அருகில், மரகதலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்குக் கிழக்கில் மந்தாகினி தீர்த்தத்தையும், மேற்கில் தமது கூர்வேலால் வேலாயுத கூபத்தையும் (கிணறு) ஏற்படுத்தினார். மரகதலிங்கம், கந்தன் ஸ்தாபித்தது என்பதால் ''ஸ்கந்த லிங்கம்" ஆனது. இப்படி முருகப்பெருமானின் முன்பு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்திருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். திங்கட்கிழமைகளில் வேலாயுத கூபத்தில் நீராடி, முருகரையும் வேதவனநாதரையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்று தலபுராணம் விவரிக்கிறது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
விஷம் தீண்டா பதி
திருமால் இத்தலத்துக்கு அருகில் உள்ள கண்ணபாளையம் என்ற இடத்தில் சிவபெருமானை பூஜித்து தான் இழந்த சக்கராயுதத்தை திரும்ப பெற்றார். இதனைப் பார்த்து அதிசயித்த ஆதிசேஷன், 'இனி இந்த திருத்தலத்தில், யாரைப் பாம்பு கடித்தாலும் அவர் மீது விஷம் அணுக விட மாட்டேன். வேறெந்த விஷப் பூச்சி கடித்தாலும் அப்படியே' என்றாராம். எனவேதான், திருவேற்காடு 'விஷம் தீண்டா பதி' ஆகி விட்டது. இங்கு பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை
பிரார்த்தனை
இங்கு சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும்.
பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில்
மரகத திருமேனியுடன், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் சத்ருசம்ஹார கோலம் கொண்ட அம்பிகை
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், 31 கி.மீ தொலைவில், செங்குன்றம், காரனோடை ஊர்களைக் கடந்தால் வரும் தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் இறைவனுக்கு, அகத்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி, இடது காலை முன்வைத்து நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள்.அம்பிகையின் திருமேனி பச்சை மரகதக்கல்லால் ஆனது. அம்பிகையின் நெற்றியில், சிவபெருமானைப் போல் மூன்றாவது கண் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
அகத்திய முனிவர், சுகேது என்ற அரக்கனுடைய சாப விமோசனத்திற்காக இத்தலத்தில் ஐந்து யாகங்கள் செய்தார். அவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி. அதுவே இத்தலப் பெயரானது.
அந்த யாகத்துக்கு அசுரர்கள் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் அம்பிகையிடம் காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து, மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளை எரித்துச் சாம்பலாக்கினாள். தீய சக்திகளை அழிக்க புறப்பட்டதினால், அம்பிகை இங்கு இடது காலை முன்வைத்து காட்சி தருகிறாள். அம்பாளின் இத்திருக்கோலம் சத்ருசம்ஹார திருக்கோலம் ஆகும். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மகா யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.
அம்பாள் ஆனந்தவல்லியாக ஆனந்தத்தையும், அதே நேரத்தில் நம்மை வாட்டி வதைக்கும் தீய சக்திகளைப் பொசுக்கிக் காத்தருளும் முக்கண்ணுடையவளாகவும் அருள் பாலிக்கிறாள்.இங்கு யாகங்கள் செய்தால் பலன்கள் பல மடங்காக கூடும் என்று கூறப்படுகிறது. அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில், அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும் , உயர் பதவிகள் தேடி வரும் என்பது ஐதீகம். அம்பாளின் அருள் நம் செயல்களில் ஏற்படும் தடங்கல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி விடும்.
அம்பாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ராஜகோபுரம் தெற்கு நோக்கி அம்பாளின் முன் அமைந்திருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும். இவ்வாறு தெற்கு நோக்கி ராஜகோபுரம் அமைந்திருந்தால் அத்தலத்தை பரிகார தலம் என்பார்கள. ராஜகோபுரத்தில் இருக்கும் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள் ஆகியோர், அம்பாளுக்கு எதிரில் கட்டுப்பட்டு இருக்கின்றனர். அதனால் திருமண தோஷம் ,நவக்கிரக தோஷம் ,சத்ரு தோஷம் ,வாஸ்து தோஷம் ஆகியவைகளுக்கு பரிகார தலமாக இக்கோவில் விளங்குகின்றது.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
ராஜபோக வாழ்க்கை அருளும் ராஜமாதங்கி அம்மன்
சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோவில். கோவிலுக்குள் நுழைந்தவுடன் விநாயகரை தரிசித்து விட்டு செல்லும்போது தனி சன்னதியில் நமக்கு காட்சி தருபவள் ஸ்ரீ சர்வ சந்தோஷ சக்தி மாதங்கி அம்மன். இவள் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகின்றாள். மாதங்கி அம்மனை வணங்கிவிட்டு தான், கருவறையில் உள்ள பவானி அம்மனை வணங்கத் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லே ராஜ மாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது.
குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத் தருவதால் இந்த அம்மனுக்கு ராஜமாதங்கி என்ற சிறப்பு பெயர் வந்தது. கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரின் அம்சமும் கொண்டவள் ராஜ மாதங்கி. அம்மன் ஒரு கரத்தில் வீணையும் , மறுகரத்தில் கிளியுடனும் காட்சி தருபவள். வீணையின் அம்சம் கலைகளில் வெற்றியும் , கிளியின் அம்சம் வாக்கு வன்மையும் குறிக்கும் . மதுரை மீனாட்சி அன்னையே ராஜ மாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே, ராஜ மாதங்கியை வணங்குவது போல்தான். இதனால் அரச பதவி வேண்டுவோர், அன்னை ராஜ மாதங்கியை முக்கிய தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை தோறும். ராஜமாதங்கி அம்மனை வழிபட்டால் கலைகளில் மேன்மையும் , ராஜபோக வாழ்க்கையும் கிடைக்கும். இந்த அம்மனை நாம் மனதில் உருகி வழிபட ,செல்வத்திற்கு அதிதேவதையான குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத்தருவதற்கும்,கல்வி, கலை ,ஞானம்,வீரம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதற்கும் பாக்கியம் கிட்டும்.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்
காணும் பொங்கலன்று மாட்டு வண்டியில் வீதி உலா வரும் திருத்தணி முருகன்
திருத்தணி முருகன் கோவிலின் உற்சவர் காணும் பொங்கலன்று, வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக இறங்கி வருவார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தர நகர வீதிகளில் உலா வருவார். திருவீதி உலா வரும் தெருக்களில் வண்ணக்கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் முருகனை வழிபடுவர். பொதுவாக காணும் பொங்கல் அன்று பக்தர்கள் கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால், திருத்தணியில்
பக்தர்களுக்கு தரிசனம் தர, முருகப்பெருமானே மலையில் இருந்து இறங்கி வருவது தனிச்சிறப்பாகும்.
காணும் பொங்கல் சிறப்புகள்
பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுகக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் ’போகி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப்பொங்கல் கொண்டாடாப்படுகிறது. இடண்டாவது நாளில் உழவுக்கு உதவும் மாடுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம். நான்காவது நாள்தான் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். காணும் பொங்கல் (கன்னி பொங்கல்) அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென்று மார்கழி மாதம் முழுவதும் விரதம் எடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வது கன்னி பொங்கலாகும்.
காணும் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும் என்பதே சம்பிரதாயமாகும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும். முதல் நாள் பொங்கிய சாத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து , சக்கரைப் பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும் ,குருவிக்கும் படையல் வைக்க வேண்டும். 'காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்' என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும்.
காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் பெரும்பாலோரின் நடைமுறையாக உள்ளது. முக்கியமான பண்டிகை ஆகும். இந்நாள் பெண்களுக்கு, பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.டக்கும்.
நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில்
குழந்தை வடிவில் இருக்கும் ஆஞ்சநேயர்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவில் உள்ள நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் பால ஆஞ்சநேயர் கோவில் என்று பிரசித்தி பெற்றுள்ளது. கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவர் எழுநூற்று முப்பத்திரண்டு ஆஞ்சநேயர் கோவில்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கட்டியுள்ளார்.
ஒரு சமயம், துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள், தனது வியாச பூஜை மற்றும் சதுர் மாச விரதத்தைக் கடைப்பிடிப்பதற்காக திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தார். அங்கு வீர ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக, தன்னுடன் அந்த சிலையை எடுத்துச் சென்றார். ஆனால் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அதனால், ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள் நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேய சிலையை நிறுவினார்,
கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர், வீர மங்கள ஆஞ்சநேயரின் தோற்றம், சிறு குழந்தையின் உருவத்தை ஒத்திருப்பதால் அவர் பால ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். அவர்,திருப்பதி வேங்கட நாதன் வீற்றிருக்கும் வடக்கு திசையை நோக்கி நடக்கும் பாவனையில் இருக்கின்றார். அவரது வலதுகரம் அபயமுத்திரை தாங்கியும், இடது கரம் தாமரை மலர் ஏந்தியும் காணப்படுகிறது. நரசிம்மரைப் போல் இவருக்கும் கோரப்பற்கள் உள்ளன. தலைக்கு மேல் செல்லும் அவரது வாலின் முனையில் ஒரு மணி தொங்குகிறது.
ஓட்டல் நிர்வாகியின் மூலம் தன் கோவிலை சீரமைத்த ஆஞ்சநேயர்
துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோவில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிதிலமடைந்தது. 1997-ம் ஆண்டு, தென்னகத்தில் பிரபலமாக விளங்கும் ஒரு ஹோட்டல் குழுமத்தின் நிர்வாகியின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, கோவிலை சீரமைக்கும்படி உத்தரவிட்டார். தன் நிர்வாகப் பணியிலே கவனம் செலுத்தி வந்த அவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆஞ்சநேயரின் இந்த உத்தரவு அவருக்கு வியப்பளித்தது. அவருடைய முயற்சியால் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலின் முகப்பில் ஆஞ்சநேயரின் மிகப்பெரிய சுதை சிற்பம் நிறுவப்பட்டது.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தின் நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான். திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும்.
கோவில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவில்
கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து ஓசிஎப் வழியாக செல்லும் பாதையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கோவில்பதாகை என்ற ஊரில் அமைந்துள்ளது சுந்தரராஜப் பெருமாள் கோவில். சோழர்களால் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழைமையான வைணவத் தலம் இது. இத்தலத்தின் புராணப் பெயர் சேதாரண்ய க்ஷேத்ரம் ஆகும்.
பிருகு மகரிஷிக்கும், மார்கண்டேய மகரிஷிக்கும் இத்தலத்தில், பெருமாள் அழகிய தோற்றத்தில் பூரண சேவை சாதித்து அருளினார். அவருடைய பேரழகு தரிசனத்தின் காரணமாக இத்தலத்துப் பெருமாள் சுந்தரராஜப் பெருமாள் என்றழைக்கப்படுகிறார். கருவறையில் சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மற்றொரு கருவறையில் மேற்கு திசை நோக்கியவாறு ஸ்ரீவைகுண்டநாதப்பெருமாள் பிரயோக நிலையில் சக்கரத்தை வைத்தபடி ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரோடு காட்சி தருகிறார். அருகில் மார்கண்டேய மகரிஷி அமைந்துள்ளார். இந்த கருவறைக்கு எதிரில் கருடாழ்வார் கைகூப்பிய நிலையில் அமர்ந்தவாறு காட்சி தருகிறார். பொதுவாக அனைத்து வைணவத் தலங்களிலும் பெரிய திருவடி எனும் கருடாழ்வார் பெருமாளை நோக்கி கைகூப்பி நின்றவண்ணம் காட்சி தருவார். ஆனால், கருடாழ்வார் கைகளைக் கூப்பி அமர்ந்தவாறு காட்சி தருவது, வேறெங்கும் காண முடியாத காட்சியாகும். இத்தலத்தில் பலிபீடம், கொடிமரம் இவற்றைக் கடந்தால், மேலும் ஒரு கருடாழ்வார், சிறு சன்னிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இப்படி இரண்டு மூலவர்கள், இரண்டு கருடாழ்வார்கள், இரண்டு மகரிஷிகள் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில்
திருமேனியில் அஷ்ட லட்சுமிகளை தாங்கி இருக்கும் அபூர்வ பெருமாள்
சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. பொதுவாக, பெருமாளை அமர்ந்திருந்த கோலத்தில் நாம் பார்ப்பது மிக அரிது. இங்கே பெருமாள் வீற்றிருந்த பெருமாளாக அஷ்டலட்சுமியுடன் எழுந்தருளியிருக்கிறார். அவரின் வலப்பக்கம் ஸ்ரீதேவி, இடப்பக்கம் பூதேவி, பெருமாளின் சிரசில் பொருத்தப்பட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர், மார்பில் 2 லட்சுமிகள் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும ஐக்கியமாகி இருப்பதால், சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
வெளிநாடு செல்லும் பக்தர்களின் விசா பிரச்சனைகளை தீர்க்கும் விநய ஆஞ்சநேயர்
இக்கோவிலில் விநய ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்து இருப்பதால் இந்த விநய ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவர். பொதுவாக ஆஞ்சநேயர் மேற்கு திசை பார்த்து இருப்பார். அதாவது ராமரைப் பார்த்து நின்றிருப்பதாக ஒரு ஐதீகம். ஆனால் இங்கு வடக்கு நோக்கி அதாவது குபேரனை நோக்கி நின்று நமக்கு நோய்களை நீக்கி மற்றும் செல்வங்களை வழங்குகிறார். பக்தர்களின் குறையைத் தீர்த்து வைப்பதாலும், உடல்ரீதியான பிரசனைகளை தீர்ப்பதால் இவர் வைத்தியர் எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் இவரிடம் வெளிநாடு செல்லும் பக்தர்கள் முழு மனதுடன் வேண்டினால் விசாவில் ஏற்படும் பிரசனை, தடைகள் நீங்கி விசா கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு குறை தீர்வதால் இவர் விசா ஆஞ்சநேயர் என்றும் புகழ்பெற்றுள்ளார். வடக்கு முக ஆஞ்சனேயரை தரிசனம் செய்து வடைமாலை சாற்றினால், காரிய சித்தி மற்றும் வியாபாரத்தில் வெற்றி அடைய வாய்ப்புண்டு.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
வள்ளியும், முருகனும் கைகோர்த்து திருமணக் கோலத்தில் நிற்கும் அபூர்வ காட்சி
சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் அமைந்துள்ளது சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். ராமனிடம், அவருடைய மைந்தர்களான லவனும், குசனும் சண்டை போட்ட இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்று இத்தல வரலாறு கூறுகின்றது. சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும். அருணகிரி நாதரால் போற்றி பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.
மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க, பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
முருகனுக்கு வலது பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும், முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை மற்ற முருகன் தலங்களில் காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்தது. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடக்கின்றது.
மரகதக்கல்லால் ஆன மயில் மற்றும் தெய்வச்சிலைகள்
இக்கோவில் சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலவர், நவக்கிரகம் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். கொடிமரத்துக்கு அருகில் இந்த மரகத மயில் வீற்று இருக்கின்றது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதக்கல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
பிரார்த்தனை
பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
வேண்டியதை உடனுக்குடன் நிறைவேற்றும் லட்சுமி நரசிம்மர்
சென்னையிலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவிலும், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ள பேரம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது, சுமார் 1400 வருடங்கள் பழமையான, நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தாயார் திருநாமம் மரகதவல்லி. சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம், துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. இவரிடம் வேண்டிக்கொண்டால், உடனுக்குடன் நிறைவேற்றி விடுவார் என்பது ஐதீகம். எனவே 'நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்' என்று போற்றப்படுகிறார்.
கல்யாண லட்சுமி நரசிம்மர்
கருவறையில் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் சிரித்த முகத்துடன் கம்பீரமான தோற்றம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார். எல்லா லட்சுமி நரசிம்மர் கோவில்களிலும் , லட்சுமி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால், இங்கே மகாலட்சுமி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி நரசிம்மரை அணைத்தபடி அமர்ந்திருக்கிறார். இது ஒரு அபூர்வ அமைப்பாகும். இதனால் இந்த லட்சுமி நரசிம்மருக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு. இவரை தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பிரார்த்தனை
இங்கு நான்கு அடி உயரத்தில், பதினாறு நாகங்களை அணிகலனாக கொண்ட கருடாழ்வார் அருள்புரிகின்றார். இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
.நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அந்திப் பொழுதில் அவதரித்தவரானதால், இவரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், பிணி, திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். இங்கு மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை முப்பத்திரண்டு முறை வலம் வந்தால் திருமணத் தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
அமாவாசை தினத்தன்று வழிபட வேண்டிய திவ்ய தேசப் பெருமாள்
சென்னை - அரக்கோணம் ரயில் தடத்தில், சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருவள்ளூர். பெருமாளின் திருநாமம் வீரராகவ பெருமாள். தாயாரின் திருநாமம் கனகவல்லி . அரக்கர்களை வதம் செய்ததால் வீரராகவப் பெருமாள் என்றும் இராமலிங்க அடிகளாரின் வயிற்று வலியைப் போக்கியதால்,வைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள் இவருக்கு ஏற்பட்டது.
கருவறையில் 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் வீரராகவ பெருமாள், தன் வலது கரத்தால் சாலிஹோத்ர முனிவர் சிரசில் கை வைத்து, நாபிக்கமலத்தில் இருக்கிற பிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் . இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.
இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு நீராடிப் பெருமாளைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும்! முக்கியமாக, தை அமாவாசை நாளில் நீராடி, பெருமாளை ஸேவித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
ஒரு தை அமாவாசை நன்னாளில், சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே உள்ள 'ஹிருதாபநாசினி' எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில் உள்ள துர்சிந்தனைகள் நீங்கும் என்று எண்ணினார். குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவது கண்டு வியந்து போனார். கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்று தேவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள்.
முனிவர், குளத்தில் நீராடி, கடும் தவத்தில் மூழ்கினார். அதில் மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே தங்கி, கோயில் கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் என்கிறது தல புராணம்.
தீராத நோய்களைத் தீர்க்கும் பெருமாள்
தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் அமைந்துள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூன்று அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். நோய்களை வீரராகவர் குணப்படுத்துகிறார் என்றால், சிகிச்சையின்போது ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் இத்தல தாயார் மெல்ல வருடிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறார் என்கின்றனர்.
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்
ஆஞ்சநேயர் வீணையை இசைத்து சிவபெருமானை வழிபட்ட தலம்
சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் மப்பேடு. இறைவனின் திருநாமம் சிங்கீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பகுஜாம்பாள்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, தன் உண்மையான ரூபத்தை மீண்டும் பெற இங்கு வந்து சிவனை வழிபட்டார். பெண் வடிவில் திருமால் வழிபட்டதால், (மால் - திருமால்; பேடு - பெண்), `மால் பேடு' என்றும், மீண்டும் சுய உருவம் பெற்றதால் (மெய் உருக் கொண்டதால்) `மெய்ப்பேடு' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் சிவபெருமான் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். தன் இசையில் கவனம் செலுத்திய அவரால், ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயல வில்லை. இந்தக் குறை தீர, மப்பேடு திருத் தலத்தில் சிங்கிக்குத் திருநடனக் காட்சியைக் காட்டினாராம் ஈசன். ஆகவே அவருக்கு இத்தலத்தில், சிங்கீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமைந்திருக் கும் ஒரு சிறிய மாடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சீதையைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது வழி தெரியா மல் தவித்ததாகவும், பின்னர் இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வீரபாலீஸ்வரரை, வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைத்து வழிபட்டதாகவும், இறைவனின் அருளால் இலங்கைக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் சந்தியா காலத்தில் ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வந்து வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத்துறையில் பெயரும் புகழும் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வீரபாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பு அமர்ந்து பயிற்சி செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு
இக்கோவில், கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் நவ வியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷக் காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.
மூல நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவில்
அருள்மிகு சிங்கீஸ்வரர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயிலாக விளங்குகிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையவும் தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில்
மத்திய ஜெகந்நாதம் என்று போற்றப்படும் திருமழிசை
சென்னை திருவள்ளூர் சாலையில், சுமார் 25 கி.மீ. தொலைவில், பூந்தமல்லியை அடுத்து உள்ள தலம் திருமழிசை. திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம். அதனால் ஊருக்கும் அதே பெயர். இக்கோவிலில், மூலவர் ஜெகந்நாத பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் ருக்மணி சத்யபாமா சமேதராக சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் திருமங்கைவல்லித் தாயார்.
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில், மூன்று ஜெகன்நாதர் ஷேத்திரங்களில் 'மத்திய ஜெகந்நாதம்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. வடக்கே உள்ள பூரி, உத்திர ஜெகந்நாதம்' என்றும் திருப்புல்லாணி 'தக்ஷிண ஜெகந்நாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. பூரியில் நின்ற திருக்கோலத்திலும், திருப்புல்லாணியில் சயன திருக்கோலத்திலும், திருமழிசையில் வீற்றிருந்த திருக்கோவத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார்.
தலத்தின் சிறப்பு
அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது. மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார்
திருமழிசையாழ்வார்
இந்த தலத்தில்தான் திருமழிசையாழ்வார் , திருமாலின் சகராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். அவருக்கு இக்கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. திருமழிசை ஆழ்வாரின் வலது பாத கட்டை விரலில் மூன்றாவது கண் இருக்கின்றது.இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய கற்று சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி, பிறகு வைணவத்திற்கு வந்தார். இவரின் சொல்வன்மையைக் கண்ட சிவபெருமான், இவரை 'பக்திசாரர்' என்ற திருநாமத்தால் வாழ்த்தினார்.
ராகு , கேது தோஷ நிவர்த்தி தரும் துந்துபி விநாயகர்
பெருமாளின் கருவறை கோஷ்டத்தில் உள்ள துந்துபி விநாயகர் தனது வயிற்றில் ராகு , கேது பின்னியபடி காட்சி தருகிறார் , ஆதலால் இவரை வணங்கினால் ராகு , கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
மாங்கல்ய பலம் அருளும் பவானி அம்மன்
சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்று பொருள். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். இக்கோவிலில் குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.
பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.
ஆலய வரலாறு
முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்கு வந்து வியாபாரம் செய்து வந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, அவருடைய வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடியபோது ஒரு புற்றுக்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், 'நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா' என்று கூறி மறைந்தார்.
மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.
பிரார்த்தனை
வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில், பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும், பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்தும், பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.