சித்திரகுப்தன் கோவில்

நம் பாபப் புண்ணிய கணக்கெடுக்கும் சித்ரகுப்தன்

அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் தரும் தலம்

ஒவ்வொரு வீட்்டிலும் வரவு செலவுக் கணக்கு எழுதுவது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்.ஆனால் நம் ஒவ்வொருடைய புண்ணியச் செயல்களையும் பாபக் காரியங்களையும் தனித் தனியே பட்டியலிட்டு அதை எமதர்மராஜனுக்குக் கொடுப்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர்தான் சித்திரகுப்தன். எமதர்மராஜன், சித்திரகுப்தன் தரும் நம் பாவப் புண்ணியக் கணக் கை ஆராய்ந்து, அதில், நாம் செய்திருந்த புண்ணியங்கள் அதிகமானால் நமக்கு மோட்சப் பதவியும் பாவக் காரியங்கள் மிகுதியானால் மறுபிறவியும் நமக்கு அளித்திடுவார்.

சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரகுப்தன் வலது காலைத் தொங்க விட்டும் இடது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் காட்சித் தருகின்றார்.அவர் வலக் கையில் எழுத்தாணியும் இடக் கையில் ஏடும் இருக்கின்றது.

சித்திரகுப்தனின் கதை

எமதர்மராஜன் சிவபெருமானை ஒரு நாள் கைலாயத்தில் சந்தித்து தனக்கு பூலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாவப் புண்ணியங்களைப் பரிசீலித்து அந்த ஆன்மாக்களின் அடுத்த நிலை என்ன என்பதுப் பற்றி முடிவு எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது என்றும் அதனால் பாவப் புண்ணியக் கணக்குகளை நிர்வகிக்க தனக்கு ஒரு உதவியாளர் வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சிவபெருமான் பிரம்மதேவனிடம் எமதர்மராஜனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு உத்திரவிட்டார்.

பிரம்மதேவன் எமதர்மனுக்கு ஒரு சகோதரனைப் படைத்து அச்சகோதரனே எமதர்மராஜனுக்குப் பாவப் புண்ணியக் கணக்கு எழுத உதவியாக இருக்கட்டும் என்று தீர்மானித்தார்,

பிரம்மதேவன் வானவில்லின் ஏழு வர்ணங்களிலிருந்து நீளாதேவி என்னும் பெண்ணைப் படைத்தார். பின்னர நீளாதேவிக்கும் எமதர்மராஜனின் தந்தையான சூரிய தேவனுக்கும் திருமணம் நடந்தது.இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சித்திரகுப்தன். சித்திரை மாதம் சித்ரா பௌணர்மி தினத்தன்று பிறந்ததால் முதலில் சித்திரைப்புத்திரன் என்று பெயரிட்டார்கள்.பின்னர் சித்திரகுப்தன் என்று அழைக்க ஆரம்பிததார்கள். சித்திரகுப்தன் குழந்தையாய் பிறந்தபோத, அவன் பிற்காலத்தில் நிர்வகிக்கப் போகும் கணக்குப் பணியைக் குறிக்கும் விதத்தில், இடது கை உள்ளங்கை ரேகைகளில் ஏடு போன்ற அமைப்பும் வலது கை உள்ளங்கை ரேகைகளில் எழுத்தாணிப் போன்ற அமைப்பும் இருந்ததாம்.

சித்திரகுப்தன் வளர்ந்தபின் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டான்.அதன் பின்னர் தந்தை சூரியதேவனால் பாவப் புண்ணியக் கணக்கு எழுத,எமதர்மராஐனுக்கு உதவியாக இருப்பதற்காக, அனுப்பப் பட்டான்.

சித்திரகுப்தனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

நவக்கிரகங்களில் கேது பகவான, ஒரு ஜாதகரின் மோட்சப் பதவியை தீர்மாணிப்பதால் அவருக்கு மோட்சகாரகன் என்ற பெயறும் உண்டு. நம் பாவப் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் நமக்கு மறுபிறவியா அல்லது மோட்சமா என்று தீர்மானிக்கும் சித்திரகுப்தன்தான் கேது பகவானின் அதிதேவதை ஆவார்.

எனவே சித்திரகுப்தனை வணங்கினால்,கேது பகவானால் ஏற்படக்கூடிய தீயப் பலன்களெல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாகும். ஐந்து பௌணர்மிகளில் சித்திரகுப்தனைத் தொடர்ந்து தரிசித்து அர்ச்சனை செய்தால், திருமணம் கைக்கூடும். இத்தலம் கேது நிவர்த்தி தலம் என்பதால், கேது திசை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்களும் மற்றும் அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த நற்பலன்களக் கொடுக்கும்.

 
Previous
Previous

பக்தவத்சலேஸ்வரர் கோவில்

Next
Next

மேலூர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்