பல்லடம் அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழம் வைத்து வேண்டுதல் வைக்கும் பெண் பக்தர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் நகரில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில், அப்பகுதி பெண்களிடையே மிகவும் பிரசித்தம். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் பெண்கள்.இக்கோவிலில் மஞ்சள் மற்றும் குங்குமம் வாசனை எப்பொழுதும் நிறைந்திருக்கும்.
பெண்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை, தங்கள் பிரார்த்தனையை வேண்டிக் கொண்டு, அம்மனின் பாதத்தில் வைத்துவிட்டு தங்கள் புடவை தலைப்பை அம்மனின் பாதத்தருகில் பிடிப்பார்கள். புடவையில் பழம் உருண்டு விழுந்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
கேட்டை நட்சத்திர பரிகாரத்தலம்
இந்தக் கோவில் கேட்டை நட்சத்திர பரிகாரத்தலமாக விளங்குகின்றது. அதனால் இக்கோவிலுக்கு பூராடம் கேட்டை கோவில் என்ற பெயரும் உண்டு.
ஜென்ம நட்சத்திரம் கேட்டை நட்சத்திரமாக இருப்பவர்கள், வருடத்திற்கு இரண்டு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இரண்டரை மணி நேரம் கோவிலில் அல்லது கோவில் வளாகத்தில் இருக்க வேண்டும்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மாசி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில், பெரியவர்கள், கைகுழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில்
கையில் கிளி ஏந்திய அபூர்வ துர்க்கை அம்மன்
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாளப்புத்தூர். இறைவன் திருநாமம் மாணிக்கவண்ணர். இறைவியின் திருநாமம் வண்டமர்பூங்குழல் நாயகி.
இறைவன் மாணிக்கவண்ணர் எழுந்தருளி இருக்கும் கருவறையின் வெளிச் சுற்றுச் சுவரில் துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன், நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை அம்மன் இத்தலத்து இறைவனை வணங்கி தோஷ நிவர்த்தி அடைந்தாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும், புன்முறுவல் பூத்த முகத்தோடு சாந்த துர்க்கையாக அருளுவதும் இத்தலத்தின் சிறப்பாகும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும். மேலும், துர்க்கை அம்மனின் காலடியில் கிடக்கும் மகிஷாசுரனின் முகத்தில் நாசித் துவாரங்கள் தெரிவதும் ஒரு அபூர்வமான தோற்றம் ஆகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் துர்க்கை அம்மனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பெற்றதால், இந்த துர்க்கையை வழிபடுபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரக தோஷங்கள் விலகும். திருமண தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.
திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்
மாசி பௌர்ணமியன்று தீர்த்த நீராடும் அம்பிகை
சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள்.
கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் மாசி பௌர்ணமியின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி பௌர்ணமியன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கின்றது. முற்காலத்தில் இக்கோவிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே, அவருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வயிற்றுவலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக் கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை மாசி பௌர்ணமியன்று ,அவளது பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.
மேலூர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
இச்சா சக்தியாய் விளங்கும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை மீஞ்சூர் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மேலூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது திரிபுரசுந்தரி அம்மன் கோவில். இறைவன் திருநாமம் திருமணங்கீசர்,. அம்மனின் மற்றொரு திருநாமம் திருவுடை அம்மன்.
ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள். கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.
மிளகு பயிறு ஆன அதிசயம்
அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுர சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள்.அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம்.
மூன்று அம்மன்களின் பௌர்ணமி தரிசனம்
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதி பரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, 'வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டாராம்.
இத்தலத்து ஈசன் திருமணங்கீசரையும் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனையும் வணங்கினால் திருமண வரம், மக்கட் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.