ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் (மிட்டாய் முருகன்) கோவில்
முருகனுக்கு மிட்டாய்களை நைவேத்தியமாக செலுத்தும் வினோத நடைமுறை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி செல்லும் வழியில், இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் கோவில். மிகவும் பழமையான இந்த கோவில், பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவில்களில் ஒன்றாக விளங்குகின்றது. கருவறையில், குழந்தை வடிவில் கையில் வேலுடன் திகழ்வதால், முருகப் பெருமானுக்கு குழந்தை வேலப்பர் என்று பெயர். இவருக்கு மிட்டாய் முருகன் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
ஒரு பக்தர் தனக்கு மழலைச் செல்வம் வேண்டி, இத்தலத்து முருகனிடம் பிரார்த்தனை செய்தார், அவருடைய விருப்பம் நிறைவேறியதும், அவர் இங்குள்ள முருகனை வணங்கி, தன்னுடன் வந்த உறவினர்களுக்கு சாக்லேட்களை விநியோகித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் தோன்றி, எனக்கு ஏன் மிட்டாய் கொடுக்கவில்லை என்று கேட்டார். உடனே அந்த பக்தர் கோவிலுக்கு விரைந்து வந்து, முருகனுக்கு மிட்டாய்களை வழங்கினார். அன்றிலிருந்து மிட்டாய் கொடுத்து முருகனை வழிபடும் வினோத நடைமுறை இங்கு வாடிக்கையாகிவிட்டது. கோவிலுக்கு வெளியே மிட்டாய்கள் விற்க கவுண்டர்கள் உள்ளன.
பிரார்த்தனை
இங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர்.
திருமணம், பிள்ளைவரம் முதலான வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள், குழந்தை வேலப்பருக்கு மிட்டாய்களை நைவேத்தியமாகச் செலுத்துகின்றனர். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று, குழந்தை வேலப்பருக்கு செந்நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைத்து, மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தால், கல்வித் தடை நீங்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.
பழநி பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள், குழந்தை வேலப்பரை தரிசித்து, மிட்டாய் வழங்கிவிட்டே பழநிக்குச் செல்கின்றனர்.
வேடசந்தூர் நரசிம்ம பெருமாள் கோவில்
சிங்கமுகமின்றி, சாந்த முகத்துடன் தோற்றமளிக்கும் நரசிம்ம பெருமாள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ளது நரசிம்ம பெருமாள் கோவில்.இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது.
இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி பெருமாள் சாந்த முகத்துடன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம்.
பிரார்த்தனை
விபத்து மற்றும் எம பயம் நீங்க, ஆயுள் அதிகரிக்க, திருமணத் தடைகள் நீங்க இங்கு நரசிம்ம பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
கோட்டைப்பட்டி சென்றாயப் பெருமாள் கோவில்
சின்னஞ்சிறு பாலகனாக, தாடி மீசையுடன் காட்சி தரும் பெருமாள்
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில், 500 படிகள் கொண்ட மலையின்மீது அமைந்திருக்கிறது சென்றாயப் பெருமாள் கோவில். இக்கோவிலில் சின்னஞ்சிறு பாலகனாக, அதே நேரம் முறுக்கு மீசையும் தாடியுமாகப் பெருமாள், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். தாடி மீசையுடன் இருக்கும் பெருமாளுக்கு சங்கும் சக்கரமும் இல்லை. ஆனால் அவருக்கு, சங்கும், சக்கரமும் ஏந்திய திருப்பதி வேங்கடாசலபதி போன்று அலங்காரம் செய்யப்படுகிறது.
பெருமாள் தாடி மீசையுடன் காட்சி தருவதற்கான காரணம்
பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் கிருஷ்ணதேவராயர் வம்சத்தை சேர்ந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார். அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பாலகன் பால் அருந்திக் கொண்டு இருந்தான்.
இயற்கைக்கு மாறாக நடைபெற்ற அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போனார் சென்னம நாயக்கர். அவருக்கு, தான் சென்றாயப் பெருமாளே என்பதை உணர்த்தி, அங்கேயே கோவில் கொள்ள விரும்புவதாகவும், அவரும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுமே தனக்குப் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறினான் அந்த பாலகன்.
வம்சமே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சென்னம நாயக்கருக்கு, இறைவனின் அருளால் ஒன்றல்ல, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பிள்ளையே கோவிலில் பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவர். குழந்தை வடிவில் வந்து, சென்னம நாயக்கருக்கு அருள்புரிந்த இறைவன், அவர்களின் அடையாளமான தாடி மீசையுடனே காட்சி தருகின்றார்.
இக்கோவிலில், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பங்குனித் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, மூலவரே உற்சவராக வீதி உலா வருகிறார். மேலும், பெருமாள் குழந்தைத் திருவுருவம் ஏற்றிருப்பதால், கிருஷ்ண ஜயந்தி இங்கு மிகவும் விசேஷம். ஓணம் பண்டிகையன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலையை இவருக்கு அணிவிக்கிறார்கள்.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, குடும்பம் தழைக்க பெருமாளிடம் மக்கள் வேண்டிக்கொள்கின்றனர். சென்றாயர் சன்னதிக்கு வலப்புறம், சுவாமி பசுவிடம் பால் குடித்த இடத்தில் சித்திர ரத மண்டபத்தில் கிருஷ்ண மேடை என்ற பெயர் கொண்ட ஒரு மேடை உள்ளது பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த மேடையின் இரு மூலைகளில் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர் சற்று நேரத்தில் அவர்களது இரு கைகளும் ஒன்றாக கூடிவிடும். இதை, அச்செயல் நடக்க சுவாமி தரும் உத்தரவாகவே கருதுகின்றனர்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட, உயிரோட்டமுள்ள அபூர்வ சிற்பங்கள்
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
தாயார் சன்னதியின் முன் உள்ள மண்டபத்தில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக்கலைக் கூடமாக திகழ்கின்றது. இங்குள்ள தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, மன்மதன், கார்த்தவீரியார்ஜூனன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூணில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். சிற்பங்களில் தெரியும் நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம், இமைகள் என்று ஒவ்வொரு அங்கமும் சிற்பங்களில் மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால் இந்த சிற்பங்கள் கல்லினால் செதுக்கப்பட்ட வையா அல்லது உயிரோட்டமுள்ள உருவங்களா என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும். இரண்டு இசைத் தூண்களையும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
திருமணத் தடை நீக்கும் ரதி மன்மத பூஜை
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
திருமண தடை நீக்கும் தலங்களில் மிகவும் சிறப்பான தனித்துவம் கொண்ட தலமாக தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்குள்ள தாயார் சன்னதி மண்டபத்தில், ரதி மன்மதன் சிலைகள் உள்ளன. திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு பிரதி வியாழக்கிழமைதோறும் ரதி மன்மதன் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்கான சங்கல்பம், காலை முதல் நண்பகல் வரை, சூடிக் கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாள் உற்சவர் திருமேனி முன் செய்யப்படுகிறது. ரதி, மன்மதன் ஆகிய இருவரின் கைகளிலும் ஐந்து விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமை பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆண்கள் தங்களின் திருமண தடை நீங்குவதற்கு ரதி தேவிக்கும், பெண்கள் தங்களின் திருமண தடை நீங்குவதற்கு மன்மதனுக்கும் பூஜை செய்கிறார்கள்.
ஆண்களுக்கு ரதி பூஜை
திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு ஐந்து-வியாழக்கிழமைகள் தொடர்ந்து.முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவி, பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும் . அடுத்து வரும் வாரங்களில் ஒரு மாலை கொண்டு சென்றால் போதும்.
பெண்களுக்கு மன்மதன் பூஜை
திருமணம் தாமதமாகும் பெண்கள் மன்மதனுக்கு மேற்கண்ட பூஜையை செய்ய வேண்டும். திருமணமாகத கன்னி பெண்கள் மன்மதனுக்கு ஐந்து வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும்.
திருமணமானவுடன் புதுமணத் தம்பதியர் வந்து பெருமாளை வணங்க வேண்டும். இக்கோவிலில் நடைபெறும் திருமண தடை நீக்கும் ரதி, மன்மதன் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. பல வெளி ஊர்களில் இருந்தும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் வந்து இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
திண்டுக்கல் அபயவரத ஆஞ்சநேயர் கோவில்
மார்பில் சிவலிங்கமும், கால்களில் பாதரட்சையும், இடுப்பில் கத்தியும் கொண்டு காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்
திண்டுக்கல் நகரில், மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் அபயவரத ஆஞ்சநேயரின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகிக் கொண்டு போர்க்கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார்.
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் ஆஞ்சநேயரின் பக்தனாக இருந்தான். போருக்குச் செல்லும் போது இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் செல்வார். அவருக்கு இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் கோயில் கட்டுவதற்கான சரியான இடம் எது என்பது தெரியாமல் தவித்தார். அந்த மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் இந்த மலைக் கோட்டையை பகுதியை சுட்டிக் காண்பித்து, அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு கூற, அதன்படி மன்னன் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, இங்கே பிரதிஷ்டை செய்தார்.
ராமாவதாரத்தின் போது, விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயர் உருவில் அவதரித்து, சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்பதால் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் ஒரு வடிவம் என்பதாலும் இத்தகைய வழிபாடு செய்யப்படுகிறது.
கிரக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வழிபாடு
தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு செய்யப்பட்டு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பல ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இங்கே ஜாதகத்தில் கிரக தோஷ நிவர்த்திக்காக, இளநீர் கட்டி வேண்டும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இளநீரின் மேற் பகுதியில் ஜாதகரின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுகின்றனர். அர்ச்சகர் அந்த இளநீரை அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுகிறார். ஆஞ்சநேயருக்கு வாலில் வலிமை அதிகம். தனது தாயாக கருதும் சீதைக்கு துன்பம் விளைவித்த ஒரு ஊரையே ஆஞ்சநேயர் எரித்தது போல், நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் தனது வாலால் பொசுக்கி விடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
சகல செல்வங்களையும் தந்தருளும் சொர்ண ஆகர்ஷண பைரவர்
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
அஷ்ட பைரவர்களில், சொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோவிலில், சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும். இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து வழிபாடு செய்கின்றனர். அந்த நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்; தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம். தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது ஆயிரம் லிட்டர் அளவில் பாலபிஷேகம் சிறப்புற நடைபெறும். அந்த நாளில், தீபமேற்றி அவரை வழிபட்டால், சொத்துப் பிரச்னைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்
பெருமாளின் தசாவதாரக் கோலத்தில் காட்சி தரும் மாரியம்மன்
திண்டுக்கல் மலைப்பகுதி திண்டு போல் இருப்பதால்தான் இவ்வூர், திண்டுக்கல் என்று பெயர் பெற்றது என்பது ஒரு வரலாறு. திண்டுக்கல் மலைக்கோட்டை உருவான போதே அம்மனும் அவதரித்ததால் இங்கிருக்கும் அம்மன் 'திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்' என்று அழைக்கப்படுகின்றாள்.தமிழகத்தின் 300 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றாக இக்கோவில் இருக்கின்றது. 1700ம் ஆண்டுகளில் திப்பு சுல்தான், தன் படை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கிய இம்மாரியம்மனின் வழிபாட்டிற்கு என்று ஒரு பீடம் அமைத்து கொடுத்தார். திண்டுக்கல் பகுதிவாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக இக்கோவில் விளங்குகின்றது. எனவே இந்து, முஸ்லீம், கிருஸ்துவர் என மும்மதத்தவர்களும் இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
இக்கோவில் கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். எட்டு கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கைகளில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.
இந்த அம்மன் சிலையின் அடிப்பகுதி மற்ற தெய்வங்களை காட்டிலும் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இருபது நாட்கள் நடைபெறும். இக்கோவில் மாசி திருவிழாவின் போது, வேறு எந்த அம்மன் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்வாக மாரியம்மன், பெருமாளின் தசாவதாரக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருவார். அம்மனின் காளி, மச்ச,கூர்ம,கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி உள்ளிட்ட கோலங்கள் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.
அம்மனிடம் கேட்ட வரங்களுக்கு நன்றியாக பக்தர்கள், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், திருவிழாவின் போது உருண்டு கொடுத்தல் , பூக்குழி இறங்குதல் , தீச்சட்டி எடுப்பது , பால் குடம் எடுத்தல் , முளைப்பாரி எடுத்தல் , மாவிளக்கு போடுவது போன்ற நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர்.
ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நரசிம்மர்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ராமகிரி என்ற ஊரில் அமைந்துள்ளது கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் . 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில். நீண்டகாலமாக திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.
ஆந்திர மாநிலம் குத்தி பல்லாரி என்ற இடத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரணியனை வதம் செய்த போது ஏற்பட்ட ரத்தக் கறைகளை அஹோபிலத்தில் சுத்தம் செய்தார். மிகுந்த கோபத்துடன் இருந்த உக்கிர நரசிம்மர் அங்கிருந்து கிளம்பி தெற்கு நோக்கி பயணப்பட்டு திண்டுக்கல் வந்த போது, சிவபெருமானும் தேவர்களும் அவரை வழிமறித்து கோபம் தணிக்க முயற்சித்தனர். ஆனால் அதிலும் முழுமையாக சாந்தம் அடையாத நரசிம்மர், பின்னர் கரூர் மாவட்டம் தேவர் மலையை அடைந்தபோது பிரகலாதனின் வேண்டுகோளை ஏற்று கோபம் தணிந்து தேவர்மலை தீர்த்தத்தில் தன் அங்கங்களை சுத்தம் செய்து சாந்தமடைந்தார். சாந்தமடைந்த நரசிம்மர், திண்டுக்கல் மாவட்டம் பழைய அய்யலூருக்குச் சென்று கருணாகிரி நரசிங்க பெருமாளாக எழுந்தருளினார். பின்னர் கோபம் தணிந்து, தனியாக இருக்கும் பெருமாளுக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராமகிரி தலத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனால் இங்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத 'ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாளாக' திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
முன்ஜென்ம பாவத்தில் ஏற்பட்ட இரணியனின் கர்மாவை அழித்து, அவன் பெற்ற வரங்களுக்கு ஏற்ப இரணியனை வதைத்து நரசிம்மர் இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பதால், நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தடை நீங்கும். திருமணமாகாதவர்கள் இவரை வேண்டி வணங்கிட உடனடியாக திருமணம் நடைபெறும். மேலும் தனி சன்னதியில் உள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் குடும்பத்தில் உள்ளவரை வணங்கினால் பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி, பணவரவு ஏற்படும். கோவிலின் வாசலில் உள்ள ஆஞ்சநேயர் வடை மாலை, துளசி மாலை நெய்வேத்தியம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்குள்ள பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து வணங்கினால் நாக தோஷம், விலகி வாழ்வில் சுகம் உண்டாகும்.
பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
ஆங்கிலேய அதிகாரியின் வயிற்று வலியை தீர்த்த பழனி ஆண்டவர்
பழனிமலை தண்டாயுபாணிக்கு, ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகி றது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. தினமும் ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி ஆறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அந்த அலங்காரங்கள்
விளாபூஜை - காலை 6.40 மணிக்கு சன்யாசி அலங்காரம்
சிறுகாலசந்தி - காலை 8 மணிக்கு வேடர் அலங்காரம்
காலசந்தி - காலை 9 மணிக்கு பாலசுப்ரமணியர் அலங்காரம்
உச்சிகாலம் - பகல் 12 மணிக்கு வைதீகாள் அலங்காரம்
சாயரட்சைபூஜை - மாலை 5.30 மணிக்கு இராஜ அலங்காரம்
அா்த்தஜாம பூஜை - இரவு 8 மணிக்கு புஷ்ப அலங்காரம்
வெண்ணெய்யும், கோதுமை ரொட்டியும் நைவேத்தியம்
சிறுகாலச்சந்தி பூஜையின் போது ( காலை 8.00 - 8.30 மணி ) பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் முடிந்தபின் வேடர் அலங்காரம் செய்யப்படுகிறது. பழனி ஆண்டவருக்கு நைவேத்தியமாக மிளகு, சாம்பார்சாதம், வெண்ணெய், கோதுமை ரொட்டி படையலாகப் படைக்கப்படுகின்றது. அவருக்கு வெண்ணையும், கோதுமை ரொட்டியும் படைக்கப்படுவதின் பின்னணியில் அவர் ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இருக்கின்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பழனிப் பகுதியை நிர்வகித்த ஆங்கிலேய அதிகாரிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வயிற்றுவலியைத் தீர்த்தருளுமாறு பழனியாண்டவரை அவ்வதிகாரி வேண்டிக் கொண்டார். வலி தீர்ந்தால்தாம் உண்ணும் உணவை பழனியாண்டவருக்குப் படைப்பதாகவும் வேண்டிக்கொண்டார். இறைவன் அவ்வதிகாரியின் தீராத வயிற்று வலியைத் தீர்த்து அருளினார். அன்று முதல் சிறுகாலபூஜையின்போது வெண்ணெய்யும், நெய்யால் சுடப்பட்ட கோதுமை ரொட்டியும் ஆண்டவருக்கு படையாலகச் சேர்த்துப் படைக்கப்படுகிறது.
பிரார்த்தனை
நெடுநாட்களாக முடியாமல் இழுத்தடிக்கும் வழக்கு தீராத நோய் போன்ற பிரச்சினைகள் தீர பழனி ஆண்டவரை, அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பது நல்லது. வீட்டில் நடைபெறப்போகும் திருமணம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.
திண்டுக்கல் அபிராமி கோவில்
இரண்டு மூலவர் சன்னதிகள் கொண்ட கோவில்
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அபிராமி கோவில். பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் பழைய காலத்து பெயர். இதற்கு திண்டீச்சுரம் என்ற பெயரும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.
பொதுவாக கோவில்களில் ஒரு மூலவர் சன்னதிதான் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில், இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இரண்டு இறைவன்களின் திருநாமம் காளகத்தீசுவரர் , பத்மகிரீசுவரர். அம்பிகைகளின் திருநாமம் ஞானம்பிகை, அபிராமியம்பிகை.
ஆரம்பத்தில் இங்குள்ள மலையில் பத்மகிரீஸ்வரர் கோவில் இருந்தது. விழாக்காலங்களில் அடிவாரத்திற்கு சுவாமி வருவார். இதற்காக தற்போதைய அபிராமியம்மன் கோயில் இருக்குமிடத்தில், ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட அச்சுத தேவராயர், காளஹஸ்தியில் அருளும் காளஹஸ்தீசுவரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரை தன் இருப்பிடத்தில் வழிபட எண்ணிய அவர், 1538ல் இம்மண்டபத்தில் காளஹஸ்தீசுவரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்தார். 1788ல் அன்னியர்கள் இப்பகுதியில் இருந்தபோது, மலை மீதிருந்த பத்மகிரீசுவரர், அபிராமி அம்பிகையை இம்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் இந்த மண்டபமே கோவிலாகக் கட்டப்பட்டது. தற்போது இங்கு இரண்டு சிவன், இரண்டு அம்பிகையர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
சிவத்தலம் என்றாலும் இங்கு அம்பிகையே பிரதானம் பெற்றிருக்கிறாள். இப்பகுதியில் 'அபிராமி கோயில்' என்றால்தான் தெரியும். இவளது உண்மையான பெயர், 'அபிராமா அம்பிகை' என்பதாகும். அபிராமம் என்றால் அழகு என்று பொருள். இப்பெயரே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என்ற பெயர் மந்திர அட்சரத்துடன் அமைந்ததாகும். இப்பெயரைச் சொல்லி அம்பிகையை வழிபடும்போது, அம்பாளுக்குரிய அத்தனை மந்திரங்களையும் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.
பிரார்த்தனை
ராகு, கேது தோஷம் நீங்க, செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
திருஆவினன்குடி வேலாயுத சுவாமி கோவில்
பழனியில் மூன்று கோலங்களில் அருள் பாலிக்கும் முருகன்
முருகன், தனக்கு மாம்பழம் கிடைக்காததால் தாய் தந்தையரிடம் கோபித்து முதலில் வந்து நின்ற தலம் என்பதால், பழனி மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே 'மூன்றாம் படை வீடு' ஆகும். குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், ‘திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. பழனிக்கு செல்பவர்கள் முதலில் திருஆவினன்குடியில் இருந்து 4 கி. மீ, தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோவிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
பழனியில் முருகப்பெருமான் மூன்று கோலங்களில் அருள்பாலிக்கிறார். பெரியநாயகி கோவிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோவிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது மிகவும் அபூர்வம்.
ஆனி மாதத்தில் நடக்கும் அன்னாபிஷேகம்
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால்,பழனி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோவிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோவிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோவிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அருணகிரியார் வேலாயுத சுவாமியை வணங்கி, திருப்புகழ் பாடியபோது முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் .
பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்தின் சிறப்பு அம்சங்கள்
பழனிமலை தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.
இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக தகவல் உண்டு.
அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனமும், பன்னீரும் மட்டும்தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம். அது கிடைப்பது மிக புண்ணியம்.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்கிரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதபாணி விக்கிரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமைதான் என்பது பலரின் எண்ணம்.
பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு தகவல் உண்டு.
பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
பழனி மலைக்கு அன்னக்காவடி எடுத்த சென்னைக் கவிஞர்
45 நாட்கள் சாதத்தை சூடாக வைத்திருந்த முருகனின் அருட் கருணை
பழனிமலை தெய்வம் தண்டாயுதபாணிக்கு பிரார்த்தனை செய்து கொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருநாளில், மற்ற விசேஷ நாட்களைவிட, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து வருவார்கள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. தனக்கு காவடி எடுக்க விரும்பிய பக்தனுக்கு, முருகன் செய்த அருள் லீலைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலின் அருகில், துரைசாமிக் கவிராயர் என்பவர் வாழ்ந்தார். பரம்பரையாக கவிபாடும் ஆற்றலும், பக்தியும் கொண்ட குடும்பம் அவருடையது. தினமும் பழனியாண்டவர் மீது பாடல் பாடி வழிபட்ட பிறகு துறவி, ஏழைகள் என அனைவருக்கும் உணவளித்து விட்டு, அதன் பிறகே உண்பது வழக்கம். இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில், கடன் தருவார் யாருமின்றி வருந்தினார். என்றாலும், தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்துவந்தார். அப்படியிருக்கையில் ஒரு சமயம் அவரைக் கடுமையான நோய் தாக்கியது. ஒவ்வொரு நாளும் அவர் உடல் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் பழனி முருகனை நினைந்து அரற்றிவிட்டுப் பின்பு உறங்கி விடுவார். ஒரு நாள் இரவில் அழகிய இளைஞன் ஒருவன் அவர் முன் தோன்றினான். தனது கையிலிருந்த ஒரு தைலத்தைப் பஞ்சில் தோய்த்து, அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கை குவித்தபோது, ”அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தான். கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழனிப் பரம்பொருளை எண்ணிக் கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பழனிமலை முருகன் அருளால் கவிராயரது நோயின் கடுமை குறைந்து, இரண்டொரு நாளில் நன்கு குணம் பெற்றார்.
மகிழ்ச்சி அடைந்த துரைசாமிக் கவிராயர், பழனி முருகனுக்கு 'அன்னக்காவடி' எடுத்து வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார். ரயில் வசதிகூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படிச் செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே! எனினும், அன்னக்காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து, அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டித் துதித்தார். துரைசாமிக் கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழனிக் குமரன் திருவுளம் கொண்டான். அதையொட்டி, கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். 'துரைசாமிக் கவிராயர் பழனிக்கு அன்னக்காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்குச் சோறு வடிக்க பானை செய்து கொடு!' என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். 'பானையும் அரிசியும் வரும்; பெற்றுக்கொள்' என்று கவிராயர் கனவிலும் அருளினான் முருகன். அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன. சோறு வடித்து, அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி, அன்னக் காவடியாகக் கட்டினார் கவிராயர். பழனி முருகனைப் பிரார்த்தனை செய்துகொண்டு, அன்னக்காவடியுடன் புறப்பட்டார்.
அவர் பழனி சென்றடைய 45 நாட்களாயிற்று.'துரைசாமிக் கவிராயர் அன்னக்காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம், கோயில் மரியாதைகளுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க!' என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழனியாண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழனிமலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது; நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமிக் கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக் காவடியைச் சுமந்துகொண்டு படியேறி பழனி தண்டாயுதபாணியின் சந்நிதியை அடைந்தார் கவிராயர்.
'பழனிப் பரமனே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது, அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது! எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உன் கருணைக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்!' என்று கூறி, அன்னக் கலயத்தைத் திறந்தார். ஆஹா! ஆஹா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்த அன்னம் போல் சூடாக இருந்தது. பழனி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர்.
அப்போது துரைசாமிக் கவிராயர் பக்திப் பரவசம் பொங்க பின்வரும் பாடலைப் பாடினார்.
#பல்லவி
மகிமை பொய்யா? மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)
#அனுபல்லவி
உன் மகிமை என் அளவினில் செல்லாதா? என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)
#சரணம்
சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்- நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய
அமைத்து நாள் சென்றும் அப்போது சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)
இந்த நிகழ்வை கண்ட அனைவரது உள்ளமும், உடலும் சிலிர்த்தது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
நான்கு முகம் கொண்ட சதுர்முக முருகன்
திண்டுக்கலில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கருவறையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.
மகா மண்டபத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். இத்தகைய நான்கு முகங்கள் கொண்ட முருகனின் தோற்றத்தை நாம் வேறு எந்த தவத்திலும் தரிசிக்க முடியாது. அருகில் பாலதிரிபுரசுந்தரி அம்பிகையும், விஸ்வாமித்திரரும் காட்சியளிக்கிறார்கள்.
முருகப் பெருமான் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்னர் முருகப்பெருமானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அதை நினைவு கூறும் வகையில் இங்கே, முருக பெருமான் சதுர்முகத்துடன் இருப்பதாக தல புராணம் கூறுகின்றது.
குங்குமத துகள்களில் தோன்றிய சதுர்முக முருகன்
விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்காக கடும் தவம் செய்து கொண்டிருந்தார் . அப்போது விசுவாமித்ரர் முன்பாக சிறுமி வடிவில் தோன்றிய பாலதிரிபுரசுந்தரி அம்பிகை, தனக்கு குங்குமப் பொட்டு வைக்கும்படி கேட்க, அந்த சிறுமியின் நெற்றியில் விசுவாமித்திரர் குங்குமப் பொட்டு வைத்தார். அவர் குங்குமம் இட்டதை சரி பார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில், சிறுமி பாலதிரிபுரசுந்தரி தன் பிம்பத்தைப் பார்த்தாள்.
குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. இதனையடுத்து அந்த குளத்தில் இருந்து சதுர்முக முருகன் தோன்றினார்.'இந்த சதுர்முக முருகனே நீ வேண்டும் வரத்தை அருள்வான்' என்று விசுவாமித்ரரிடம் தெரிவித்து விட்டு அந்த சிறுமி மறைந்தாள்.
சதுர்முக முருகனும், சிறிது தொலைவில் உள்ள கோயிலுக்கு வரும்படி தெரிவித்து விட்டு மறைந்தார். விசுவாமித்திரரும் அருகில் உள்ள அந்த கோயிலுக்கு சென்றார். அங்கு பாலதிரிபுரசுந்தரியும், சதுர்முக முருகனும், ஒன்றாகக் காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ந்தார். பின் இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேன் என்று வருந்தினார். அப்போது அங்கு வந்த வசிஷ்டர், விசுவாமித்ரருக்கு 'பிரம்மரிஷி' பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார்.
செம்பால் அபிஷேகம்
இத்தலத்தில் செவ்வாய்கிழமைகளில் காலை சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த 'செம்பால் அபிஷேகம்' செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இப்படிப்பட்ட அபிஷேக நடைமுறை வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கும்; சத்ரு பயம் விலகும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். மற்றும் இங்கே உள்ள பாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்.