பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்

உடல் ஊனத்தை குணமாக்கும் பெருமாள்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். பெருமாளின் திருநாமம் பிரசன்ன வேங்கடாசலபதி. தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை.

பெருமாள் செங்கோலுடனும் காட்சி தருகிறார். இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி.

குணசீலம் என்று பெயர் ஏற்பட்ட பின்னணி

குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசீலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசீலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உருவான வரலாறு

குணசீலரின் சேவை மற்றொரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது. அப்போது ஞானவர்மன் என்ற மன்னன் அந்தப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்தான் அரண்மனையின் பசுக்கள் அந்த காட்டில், புல் மேய்வதற்காக விடப்படும். தொடர்ச்சியாக அந்த காட்டினுள் சென்ற மாடுகளில் மடியில் இருந்து பால் கரப்பது இல்லை. இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அந்த காட்டிற்குச் சென்ற மன்னனுக்கு ஒரு அசரீதி குரல் ஒலித்தது. அந்தக் குரலின் மூலம் புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்ந்த மன்னன் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோவில் எழுப்பினான்.

தீராத நோயையும் தீர்த்தருளும் தலம்

உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் ஒருமண்டலம் தங்கி, இங்கே வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு, பெருமாளை ஸேவித்து வந்தால், மன நலம் குணமாகித் திரும்புவர் என்பது ஐதீகம். மதியம் ஒருமணி உச்சிக்கால பூஜையில், பெருமாளுக்கு பூஜைகள் நடந்த பின்னர், பக்தர்களின் முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுவது வழக்கம்.

 
Previous
Previous

திருவாரூர் தியாகராஜர் கோவில்

Next
Next

வீரட்டானேசுவரர் கோவில்