பாரிஜாதவனேசுவரர் கோவில்

நடராஜ பெருமானின் இரண்டாவது தாண்டவ தலம்

திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருக்களர். இறைவன் திருநாமம் : களர்முளை நாதர், பாரிஜாதவனேசுவரர். இறைவி : இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேசுவரி

துர்வாச முனிவர், சிவபெருமானின் ஆனந்த தாண்டவ தரிசத்தைப் பெற விரும்பினார். திருக்களர் தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை கொண்டு வந்து இங்கு வளர்க்கலானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் பிரதிஷ்டை செய்து, தேவதச்சன் மூலமாக இக்கோயிலை எடுப்பித்தார். இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரம்ம தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது. சிவபெருமான் நர்த்தனக் கோலம் காட்டிய இடம் என்பதனால் களரி (நடன சபை) என இத்தலம் அழைக்கப்பட்டு, பின்பு களர் என மருவியது.

இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

 
Previous
Previous

சுப்பிரமணிய சுவாமி கோவில்

Next
Next

மீனாட்சி அம்மன் கோவில்